காவிய சந்தம் பிறந்த கதை : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேதத்திலே சப்தங்களை ஏற்றி இறக்குகிற ஸ்வரங்கள் உள்ள மாதிரி, காவியம் முதலிய மற்ற ச்லோகங்களில் அக்ஷரங்களை ஏற்றுவது என்று கிடையாது. ஸ்வரங்களோடேயே சொல்லி வந்த வைதிக அநுஷ்டுப் மீட்டரில் ஸ்வரமில்லாமல் முதன் முதலில் வந்த வாக்கு வால்மீகியுடையதுதான். அவர் வேண்டுமென்று யோசித்து இப்படி பண்ணவில்லை.

தம்பதியாக இருந்த இரண்டு பக்ஷிகளில் ஒன்றை ஒரு வேடன் அடித்துக் கொன்றதை அவர் பார்க்கும்படி நேரிட்டது. அப்போது பக்ஷிகளிடம் அவருக்கு ஏற்பட்ட கருணையே வேடனிடம் மஹா கோபமாக மாறிற்று. அவனைப் பார்த்து, ‘ஏ வேடனே! ஸந்தோஷமாகக் கூடிக் களித்துக் கொண்டிருந்த பக்ஷிகளில் ஒன்றை வதைத்த உனக்கு எந்தக் காலத்திலுமே நல்ல கதி இல்லாமல் போகட்டும்’ என்று சபித்துவிட்டார். ஸம்ஸ்கிருதத்திலே அவருடைய சாப வாக்கு இப்படி வந்தது:

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வம் அகம: சாச்வதீ ஸமா: |

யத் க்ரௌஞ்ச மிதுநாத் ஏகம் அவதீ: காம மோஹிதம் ||

அவர் யோசிக்காமலே, கருணை உணர்ச்சி பீறிக்கொண்டு வந்து இப்படி சபித்துவிட்டார். உடனே ரொம்பவும் வருத்தப்பட்டார், “நாம் ஏன் இப்படி சாபம் கொடுத்திருக்க வேண்டும்?” என்று. இதை யோசித்துப் பார்க்கும் போது அவருக்கு ஆச்சரியமாக ஒன்று ஸ்புரித்தது. ஞான திருஷ்டி வாய்த்த ரிஷி அல்லவா? அதனால் ஸ்புரித்தது. தாம் கொடுத்த சாபமே எட்டெட்டு அக்ஷரங்கள் கொண்ட நாலு பாதமாக அநுஷ்டுப் வ்ருத்தத்தில் அமைந்திருக்கிறது, என்று தெரிந்தது! “மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வம்”என்பது ஒரு பாதம். “அகம:சாச்வதீ ஸமா:” என்பது இரண்டாவது பாதம். “யத் க்ரௌஞ்ச மிதுநாத் ஏகம்” என்பது மூன்றாவது பாதம். “அவதீ:காமமோஹிதம்” என்பது நாலாவது பாதம். தன்னை மீறி உணர்ச்சி வந்தாற் போலவே, தன்னைமீறி இப்படிப்பட்ட விருத்த ரீதியான வார்த்தை ரூபமும் வந்திருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார்.

அவர் கொடுத்த சாபத்துக்கே இன்னொரு அர்த்தமும் இருப்பதையும் உணர்ந்தார். வேடனைப் பார்த்து இவர் சொன்னதே மஹா விஷ்ணுவைப் பார்த்து, “ஹே, லக்ஷ்மிபதியே! தம்பதியாக இருந்த இருவரில் ஒருவன் காம மோகத்தால் செய்த காரியத்துக்காக நீ அவனைக் கொன்றது உனக்கு எந்நாளும் கீர்த்தி தரும்” என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளும்படியாகத் தம்முடைய சாபவாக்கு அமைந்திருக்கிறது என்று கண்டு கொண்டார். ராவணன் – மண்டோதரி என்ற தம்பதியில், காமதுரனான ராவணனைக் கொன்றதால் உலகம் உள்ளளவும் கீர்த்தி பெறப்போகிற ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் பற்றியே இப்படி அவர் வாயில் அவர் அறியாமல் சந்தத்தோடு வார்த்தை வந்து விட்டது. அதிலிருந்து ஈச்வர ஸங்கல்பத்தைப் புரிந்து கொண்டு, அதே மீட்டரில் வால்மீகி ராமாயணத்தைப் பண்ண ஆரம்பித்து விட்டார்.

வேத ஸ்வரமில்லாத ச்லோக ரூபம் என்பது அப்போதுதான் ஏற்பட்டது. வேதம் மாதிரியே, இனிமேலும் உயர்ந்த விஷயங்களை எல்லோரும் நினைவு வைத்துக் கொள்ளும் படியாக சொல்வதற்கு வசதியாக இப்படி ஒரு ஸாதனம் – ச்லோகம் என்ற சாதனம் – கிடைத்ததே என்று ஸந்தோஷப்பட்டு, முதல் காவியமாக ஸ்ரீராம சரித்திரத்தைப் பாடினார்.

ப்ரோஸ் மறந்து போய்விடும். மீட்டர் அளவைகளுக்கு உட்படுத்திய பொயட்ரிதான் நினைவிலிருக்கும். இதனால் தான் ஆதியில் எல்லாம் பொயட்ரியாகவே எழுதினார்கள். ப்ரிண்டிங் ப்ரெஸ் வந்தபின், ‘நினைவு வைத்துக் கொள்ள வேண்டியதில்லை; புஸ்தகத்தைப் பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஏற்பட்ட பிறகுதான் ப்ரோஸ் வளர்ந்தது.

ஆனாலும், விஷயங்களைச் சொல்வதில் பொயட்ரிக்குத் தான் அழகும், சக்தியும் அதிகம். முதலில் உண்டான பொயட்ரி வால்மீகி ராமாயணம். அதனால்தான் வால்மீகி ராமாயணத்துக்கு “ஆதி காவியம்” என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

பகவத் பிரஸாதமாக ‘சந்தஸ்’ கிடைத்ததால்தான் ராமாயணமே பிறந்தது. மற்ற ஸ்தோத்திரங்கள், புராணங்கள், காவியங்கள் எல்லாவற்றுக்கும் வேண்டிய ச்லோகம் என்ற ரூபம் பிறக்கச் சந்தந்தான் உதவியது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is கணக்கிடுவது எப்படி ?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  சில சந்த வகைகள்
Next