கணக்கிடுவது எப்படி ? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஒரு வேத மந்திரம் அல்லது வேதமல்லாத ச்லோகத்தை எடுத்துக் கொண்டால், அதை நாலாகப் பிரித்திருக்கும். முக்கால்வாசி மீட்டர்களை, ஸமமான அக்ஷரங்கள் அல்லது ஸமமான மாத்திரைகள் கொண்ட நாலாகவே பிரிந்திருக்கும். பாதத்துக்குப் பாதம் ஸமமாக இல்லாததை ‘விஷமம்’ என்பார்கள். ‘வி-ஸமம்’ என்பதே ‘விஷமம்’. ஸமம் என்பது வித்யாஸமில்லாத நிலைமையைக் காட்டுவது. இதனால்தான், நடுநிலைமை தப்பிப் பண்ணுகிற காரியங்களை ‘விஷமம்’ என்கிறோம். தந்திரமாகப் பண்ணுகிற தப்புக்கு, mischief என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தை வழக்கத்தில் வந்து விட்டது. Unequal என்பதே அதன் நேர் அர்த்தம்.

எல்லாப் பாதங்களும் ஒன்றுக்கொன்று வித்யாஸமாயிருந்தால் அது விஷம வ்ருத்தம். ஒன்று விட்டொன்று (alternate) பாதங்கள் ஒரே மாதிரி இருப்பது, அர்த்த ஸமவ்ருத்தம். அதாவது முதல் பாதத்துக்கும் இரண்டாம் பாதத்துக்கும் அக்ஷர வித்யாஸம் இருக்கும்; மூன்றாம் பாதத்துக்கும் நாலாம் பாதத்துக்கும் இப்படியே வித்யாஸம் இருக்கும்; ஆனால், முதல் பாதமும் மூன்றாம் பாதமும் ஒரே மாதிரியிருக்கும்; இரண்டும் நாலும் ஒன்றாக இருக்கும்.

அநேகமாகப் பாதங்கள் யாவும் ஸமமாகவே இருக்கும். உதாரணமாக, எல்லோருக்கும் தெரிந்த (அல்லது அப்படி அப்படி நான் நினைத்துக் கொண்டிருக்கிற)

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |

ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோபசாந்தயே | |

என்பதில் உள்ள நாலு பாதங்கள்:

ஒன்று – சுக்லாம்பரதரம் விஷ்ணும்

இரண்டு – சசிவர்ணம் சதுர்புஜம்

மூன்று – ப்ரஸந்நவதநம் த்யாயேத்

நான்கு – ஸர்வவிக்நோப சாந்தயே.

எண்ணிப் பார்த்தால் இந்தப் பாதங்கள் ஒவ்வொன்றிலும் எட்டு அக்ஷரமேயிருக்கும்.
உயிரெழுத்தையும், உயிர் மெய்யெழுத்தையும் மட்டும் தான் அக்ஷரமாகக் கணக்குப் பண்ண வேண்டும்; மெய்யெழுத்துக்களைத் தள்ளிவிட வேண்டும். அப்போதுதான் எட்டு என்ற கணக்கு சரியாகி வரும். இப்படிச் செய்தால் ‘சுக்லாம் பரதரம் விஷ்ணும்’ என்பதில் தமிழ் லிபிப்படி பதின்மூன்று எழுத்து இருந்தாலும் கூட, எட்டு அக்ஷரங்கள்தான் என்று ஆகும். 1-சு; 2-க்லாம்; 3-ப; 4-ர; 5-த; 6-ரம்; 7-வி;8-ஷ்ணும். இதே மாதிரியே மற்றப் பாதங்களிலும் எட்டெட்டுத்தான் இருக்கும்.

தமிழிலே இப்படி எழுத்துக் கணக்கும் அக்ஷரக் கணக்கும் வித்யாஸப்படுகிற மாதிரி ஸம்ஸ்கிருத லிபியில் இல்லை. அதில் கூட்டெழுத்துக்கள் உண்டு. அதனால், ‘க்லாம்’, ‘ரம்’, ‘ஷ்ணும்’ என்பவை ஒவ்வொரு எழுத்தாகவே எழுதப்படுகின்றன. கிரந்தம், தேவநாகரி முதலான ஸம்ஸ்கிருத ஆல்ஃபபெட்டுகளில் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஒவ்வொன்றும் எட்டு அக்ஷரம் கொண்ட நாலு பாதங்களை உடைய ‘சுக்லாம்பரதரம்’ போன்ற ச்லோகங்களின் மீட்டருக்கு ‘அநுஷ்டுப்’ சந்தஸ் என்று பெயர்.

இந்த மீட்டர் வேதம், பிற்பாடு வந்த காவிய இலக்கியம் இரண்டிலுமே இருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is பாதம் - அடி - FOOT
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  காவிய சந்தம் பிறந்த கதை
Next