Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

த்ராவிட விஷயம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

தமிழ் என்பதுதான் ‘த்ரவிட’ (‘திராவிடம்’ என்பது). முதல் எழுத்தான ‘த’ என்பது ‘த்ர’ என்று இருக்கிறது. இப்படி ‘ர’ காரம் சேருவது ஸம்ஸ்கிருத வழக்கு. மேலே சொன்ன ச்லோகத்தில் வருகிற ‘தோடகர்’ என்ற பேரைக்கூட ‘த்ரோடகர்’ என்ற சொல்லுகிற வழக்கம் இருக்கிறது. இதனால் சிலபேர் ஸம்ஸ்கிருதத்தையே “ரொம்ப’ ஸம்ஸ்கிருதமாக்கி ‘தேகம்’ என்பதைக்கூட ‘த்ரேகம்’ என்று சொல்கிறார்கள்!

த-மி-ழ் என்பதில் ‘த’, ‘த்ர’ வாயிருக்கிறது. ‘மி’ என்பது ‘வி’ என்றாயிருக்கிறது. ‘ம’ வும் ‘வ’ வும் ஒன்றுக்கொன்று மாறுவதற்கு ஃபைலாலஜிக்காரர்கள் [மொழி ஒப்பு இயல் நிபுணர்கள்] நிறைய உதாரணம் கொடுப்பார்கள். ஸம்ஸ்கிருதத்துக்குள்ளேயே இதில் ஒன்று மற்றதாகும். உதாரணமாக ‘சாளக்ராவம்’ என்பதுதான் ‘சாளக்ராமம்’ என்றாயிருக்கிறது . சம்ஸ்க்ருதத்தில் ‘மண்டோதரி’ என்பதைத் தமி்ழில் ‘வண்டோதரி’ என்கிறோம். ‘த்ரவிட’ என்பதையே ‘த்ரமிட’ என்றும் சொல்வதுண்டு. ‘ழ’ வும் ‘ள’ வும் மாறுவது சகஜம். மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் போனால் ‘வாளைப்பளத்தில் வளுக்கி விளுந்திடப்போறே’ என்று சொல்வார்கள். ‘ழ’ வுக்கும் ‘ள’ வுக்கும் ரொம்பக் கிட்டத்தில் உள்ளதுதான் ‘ட’ வும். வேதத்திலேயே ‘அக்னிமீடே’ என்று வருவது ‘அக்னிமீளே’ என்றும் மாறுகிறது. இப்படித்தான் ‘தமிழ்’ என்பதில் உள்ள ‘ழ்’ ‘த்ரவிட்’ என்பதன் ‘ட்’ ஆக இருக்கிறது.

த – ‘த்ர’வாகவும், மி – ‘வி’ யாகவும், ழ் – ‘ட்’ டாகவும் – மொத்தத்தில் ‘தமிழ்’ என்பது ‘த்ரவிட்’ என்றிருக்கிறது.

இப்போது எல்லாவற்றிலும் தமிழ் சம்பந்தம் காட்டினால் ஒரு ஸந்தோஷம் உண்டாவதால், த்ரவிடாசார்யாரைச் சொல்லும்போது அவருக்குத் தமிழ் சம்பந்தம் காட்டி நாமுந்தான் ஸந்தோஷப்படுவோமே என்று தோன்றிற்று; சொன்னேன்.

பகவத்பாதாளே ‘ஸெளந்தர்யலஹரி’யில் “அம்மா, நீ தமிழ்க் குழந்தைக்குப் பால் கொடுத்தாயே?” என்கிறபோது, “த்ரவிட சிசு” என்று பதப் ப்ரயோகம் செய்திருக்கிறார்.

‘தமிழ்’ தான் ‘த்ரவிட்’ என்றால், ஆர்யன் – திராவிடன் ‘ரேஸ் தியரி’ (இனக்கொள்கை)யை வைத்துக் கொண்டு தப்பர்த்தங்கள் பண்ணிக்கொள்ளக் கூடாது.

வேத சாஸ்திரங்களைப் பார்த்தால் ஆரிய, திராவிட என்று இரண்டு வேறு வேறு ‘ரேஸ்’ (இனம்) என்பதற்குக் கொஞ்சம் கூட ஆதாரம் இல்லை. ஆனால் வெள்ளைக்காரர்களின் Divide-and-rule (பிரித்து ஆள்கிற) கொள்கைப்படி, அவன் இந்த ரேஸ் – தியரியைக் கட்டி விட்டுவிட்டான்.

சாஸ்திரப் பிரகாரம் என்ன சொல்லியிருக்கிறது? ஆரிய இனம் என்று ஒன்றைச் சொல்லவேயில்லை. ‘ஆர்ய’ என்றால் மதிப்புக்குரிய என்று அர்த்தம். அவ்வளவுதான். இன்றைய ரேஸ் கொள்கைப்படி, ஆரியனான அர்ஜுனனைப் பார்த்தே பகவான் கீதையிலே, “நீ என்ன இப்படி பேடி மாதிரி மனத்தளர்ச்சி அடைந்து அநார்யனாகி விட்டாயே !” என்கிறார். ‘அநார்யன்’ என்றால் ‘ஆர்யன் அல்லாதவன்’ என்று அர்த்தம். (முன்னே ‘அன்’ சேர்த்தால் எதிர்ப்பதமாகிவிடும். இதையே இங்கிலீஷிலும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘ஹாப்பிக்கு’ எதிர்ப்பதம் ‘அன்-ஹாப்பி’.) ‘மதிப்பிற்குரியவனாக அல்லாமற் போய்விட்டாயே !’ என்பதுதான் இங்கு பகவான் சொல்வதன் அர்த்தமே ஒழிய, இனரீதியில் இங்கே அர்த்தம் பண்ணமுடியாது. பழங்காலக் காவியங்களை, நாடகங்களைப் பார்த்தால் ராணிகள் தங்கள் பதியான ராஜாவை ‘ஆர்ய புத்ர’ என்று அழைக்கிறார்கள். இப்போதைய கொள்கைப்படி ‘ஆர்ய’ என்பது ஒரு இனமானால், ‘ஆர்யபுத்ர’ என்று அழைக்கும் ராணிகள் அதற்கு மாறாக ‘திராவிட புத்ரி’களாக அல்லவா இருக்க வேண்டும்? ஐயர் ஜாதிப் பெண்ணொருத்தி ஒரு ஐயங்கார்ப் பையனைக் கல்யாணம் செய்து கொண்டால்தான் அவனை ‘ஐயங்கார் வீட்டுப் பிள்ளையே!’ என்று கூப்பிடலாம். இவளும் ஐயங்காரானால் அப்படிக் கூப்பிடுவாளோ ? மாட்டாள். ஸீதை ராமரை ‘ஆர்ய புத்ர’ என்று கூப்பிட்டபோது ‘ஆர்ய’வுக்கு ரேஸ் அர்த்தம் கொடுத்தால் அவள் திராவிட ஜாதி என்றாகிவிடும். இது அபத்தம். இதனால் என்ன ஏற்படுகிறது ? இங்கேயும் ஆர்ய என்றால் ‘மதிப்புக்குகந்த’ என்றுதான் அர்த்தம். ‘ஆர்ய புத்ர’ என்றால் ‘மதிப்புக்குகந்த குடிமகனே’ என்று அர்த்தம்.

ஆர்ய என்பது ஒரு இனத்தைக் குறிப்பிடுவதாக சாஸ்திரங்களில் எங்குமே வரவில்லை.

‘த்ராவிட’ என்பதும் இனப்பெயராக வரவில்லை.

ஒரே இனத்தைச் சேர்ந்த பாரத ஜனங்களைத் தான் விந்தியத்துக்கு வடக்கே உள்ளவர்களை கௌடர்கள் என்றும் தெற்கே உள்ளவர்களை திராவிடர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. ஆர்ய-திராவிட இன வேற்றுமை இல்லை, கௌடர்- திராவிடர் என்பதாக, இனத்தை வைத்துப் பிரிக்காமல், ஒரே இனக்காரர்களைப் பிரதேச ரீதியில் பிரித்திருக்கிறார்கள்.

ஆதியில் விந்திய மலைக்கு வடக்கே உள்ள தேசம் முழுதும் கௌட தேசம்; அதற்குத் தெற்கில் உள்ளது முழுவதும் திராவிட தேசம் என்று இருந்தது. கௌட தேசத்தில் வசித்த கௌடர்களை மேலும் பிரதேச ரீதியில் ஐந்தாகப் பிரித்தார்கள். அப்படியே திராவிடத்தில் வசித்தவர்களையும் ஐந்தாகப் பிரித்திருக்கிறது. இவர்களைப் பஞ்ச கௌடர், பஞ்ச த்ராவிடர் என்பார்கள். பஞ்ச கௌடர்களில் ரொம்பவும் வடக்கே காச்மீரத்தில் இருந்தவர்களை ஸாரஸ்வதர்கள் என்றும் அதற்கு தெற்கே பஞ்சாபில் இருந்தவர்களை கான்யகுப்ஜர்கள் என்றும், பிறகு கிழக்குவாக்காக உத்தரப்ரதேஷ், பிஹாரில் உள்ளவர்களை மைதிலர்கள் என்றும் அப்புறம் தெற்கே ஒரிஸாவில் இருப்பவர்களை உத்கலர் என்றும் பிரித்துவிட்டு கடைசியாகக் கிழக்குக்கோடியில் வங்காளத்தில் இருப்பவர்களுக்கு தனியாகப் பெயர் தராமல் கௌடர்கள் என்றே விட்டு விட்டார்கள். ஆக, ஸாரஸ்வதர், கான்யகுப்ஜர், மைதிலர், உத்கலர், கௌடர் ஆகிய ஐவரும் பஞ்ச கௌடர்கள். இப்படியே விந்தியத்திற்குத் தெற்கே ஐந்தாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகள், கூர்ஜரர் (குஜராத்தி) , மஹாராஷ்ட்ரர், ஆந்திரர், கர்நாடகர், கடைசியில் தெற்குக் கோடியில் வேறு பேர் இல்லாமல் திராவிடர் என்றே வைக்கபட்ட தமிழ் தேசத்தவர். இதிலே கேரளீயர்களான மலையாளிகளைச் சொல்லாததற்குக் காரணம், மலையாள பாஷை ஆயிரம் வருஷங்களுக்கு உள்ளாகத்தான் தனி ரூபம் கொண்டிருக்கிறது. அதற்கு முந்தி அதுவும் தமிழ் தேசமாகத் தான் இருந்தது.

இரண்டு வெவ்வேறு இனமில்லை; பிரதேச ரீதியில் ஒரே இனத்தில் பத்துப் பிரிவுகள். இரண்டு பாதிகளுக்குப் பேராக இருந்த கௌடம், திராவிடம் என்பன குறிப்பாக கிழக்குக்கோடி, தெற்குக் கோடிப் பிரதேசங்களுக்கு மட்டும் பேர் ஆகிவிட்டது.

இன்று கௌடர்கள் என்றாலே வங்காளிகள் என்றாகி விட்டது. ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் அந்தத் தேசத்தவர்தான். அதனால் தான் அவர்களுடைய மடத்தை கௌடீய மடம் என்கிறார்கள். அப்படியே திராவிடர்கள் என்றால் முக்கியமாகத் தமிழர்கள்தான் என்று ஆகிவிட்டது. இதிலே ஒரு வேடிக்கை. வங்காளத்திலும், தமிழ்த் தேசத்திலும் தான் வெள்ளைக்கார நாகரிகமும் இங்கலீஷ் படிப்பும் முதலிலேயே வேகமாகப் பரவிற்று; பிரிட்டிஷ் ராஜ்யத்தில் எங்கே பார்த்தாலும் குமாஸ்தாக்களாகப் போனவர்களும் இந்த இருவர்தான்.

ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொன்றுக்குப் போனவர்களை அந்தப் பிரதேசப் பேரை வைத்தே குறிப்பிடுவார்கள். மஹாராஷ்டிரத்தில் இப்போது பலருக்கு டிலாங் என்று (இயற்) பெயருக்குப் பின்னால் வருகிறதைப் பார்க்கிறோம். இவர்களுடைய முன்னோர்கள் தெலுங்கு தேசத்திலிருந்து மஹாராஷ்டிராவிற்குப் போய் அங்கேயே ‘ஸெட்டில்’ ஆகிவிட்டார்கள். ‘தெலுங்கு’ என்பதன் திரிபுதான் ‘டிலாங்’. இதேமாதிரி காசி முதலான அநேக உத்தரதேச ஸ்தலங்களில் இருக்கிற சில பிராம்மணர்களுக்கு த்ரவிட் என்று வம்சப் பெயர் இருக்கிறது. ஆதிகாலத்தில் தமிழ் தேசத்திலிருந்து அங்கே போய் குடியேறினவர்களின் வம்சத்தில் வந்தவர்களே இந்த ‘த்ரவிட்’கள். இப்படி ‘திராவிடர்’ என்று பெயர் கொண்ட வடக்கத்தியார் எல்லாரும் பிராம்மணர்களே என்பதைக் கவனிக்க வேண்டும். ரேஸ் தியரிப்படி பிராம்மணர்கள் திராவிடர்களுக்கு மாறானவர்கள், விரோதிகள், எதிரிகள் என்று கூடச் சொல்கிறார்கள். ஆனால் வாஸ்தவத்திலோ இன்றைக்கு வடதேசத்தில் தமிழ் நாட்டுப் பிராமண வம்சத்தவர்களுக்கே தான் ‘த்ரவிட்’ அடைமொழி இருக்கிறது. இதிலிருந்தே ‘திராவிட’ என்பது பிரதேசத்தைக் குறிப்பதேயன்றி இனத்தைக் குறிக்கவேயில்லை என்று தெரிகிறதல்லவா?

தமிழ் தேசத்தின் உச்சாரண வழக்குப்படி ‘த்ரவிட்’ என்பது தமிழ் என்று இருக்கிறது. ‘த்ர’ என்பது போல ஸம்ஸ்க்ருதத்தில் ஒற்றெழுத்தோடு சேர்ந்து வருகிற ‘ர’காரம் தமிழில் உதிர்ந்து விடும். ஸம்ஸ்கிருத ‘ச்ரமண’ தமிழில் ‘சமண’ ஆகிறது; ‘ப்ரவாள’ என்பது ‘பவள’மாகிறது. இப்படியே ‘த்ர’ என்பது த என்று இருக்கிறது.

திரவிடாச்சார்யாரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்ததில் இத்தனை ஊர்க்கதை வந்து சேர்ந்து விட்டது! அவர் ஆசார்யாளுக்கு முன்னால் வாழ்ந்த அத்வைத ஸித்தாந்தி என்று சொன்னேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is குரு பரம்பரை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வேடனே ராஜா; ஜீவனே பிரம்மம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it