எத்துறையிலும் சட்டம் வகுப்பதற்கு முன் அத்துறையில் ஆழ்ந்த அறிவும் தேர்ந்த அநுபவமும் பெற்ற நடுநிலையாளரான தக்கோரிடம் அது குறித்து ஆலோசனை கோரிப் பெற வேண்டியது ஓர் அரசாங்கத்தின் கடமையாகும். இதன் பொருட்டு ஒவ்வொரு துறைக்கும் ஓர் அறிஞர் குழு அமைக்கப்பட வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு என்ற இரண்டிலேயே ஒருவாறு அடங்கி விடும் ஒன்றாக அரசாங்கப் பணியானது உலகெங்கிலும் வழக்கமாகிவிட்ட இன்றைய நிலையில், மதமென்ற துறையைப் பார்க்குமிடத்தோ அது அப்பணியின் எல்லைக்கு அப்பாற்பட்ட ஆன்மா என்பதன் சம்பந்தமுள்ளதாக இருக்கிறது. ஆட்சி புரிவோர்க்கு இத்துறையில் அறிவோ, மதவுணர்ச்சி என்பதேகூடவோ, இருக்க வேண்டிய தேவையில்லை என்றும் ஆகியுள்ளது. எனவே இத்துறை, அரசாங்கம் உள்ளே பிரவேசித்துச் சட்டம் வகுக்க இடம் தராத ஒன்றாக உள்ளதென ஆகிறது.