ஸரஸ்வதிக்கு ஆலயம் இல்லாததேன்? : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஒரு விஷயத்தை ஆலோசிப்பதில் இன்னொன்று அகப்படுகிறது என்று சொன்னதற்கு இன்னொரு த்ருஷ்டாந்தம். சிவன் – அம்பாள், மஹாவிஷ்ணு – மஹாலக்ஷ்மி என்று ஸதிபதிகளாக அவர்களின் உயர்வைச் சொல்லிக்கொண்டு போகும்போது, சட்டென்று ப்ரஹ்ம பத்னியான ஸரஸ்வதி விஷயத்தை விட்டு விட்டோமே என்று நினைவு வந்தது. ப்ரஹ்மா விஷயத்துக்குக் குறுக்கே அதைக் கொண்டு வராமல், எடுத்துக்கொண்ட விஷயத்தை நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு அப்புறம் அதை எடுத்துக்கொள்ள நினைத்தேன்.

ஸரஸ்வதியைப் பற்றி எப்படி நினைக்கிறோம்? பூர்ண ப்ரம்ம சக்தி என்று நினைக்கிறோமோ இல்லையோ வித்யாதி தேவதை, கலைமடந்தை, அறிவுத் தெய்வமென்று அவளுக்கு ரொம்பவும் உன்னதமான ஸ்தானம் கொடுத்திருக்கிறோம். வெள்ளை வெளேரென்று வீணா புஸ்தகங்களோடு அவளை நினைத்தாலே சாந்தியாயிருக்கிறது. ஸரஸ்வதி பூஜை பண்ணுகிறோம். அவளைப் பற்றி ஸ்தோத்ரங்கள் – மஹான்கள் பண்ணியிருப்பது – கம்பர், ஒட்டக்கூத்தர், குமர குருபரர், பாரதியார் போன்றவர்கள் தமிழில் அழகாகப் பண்ணியிருக்கிறார்கள், அவற்றை – ஓதுகிறோம். (முத்துஸ்வாமி) தீக்ஷிதர் முதலானவர்கள் அவள் மீது செய்திருக்கும் கீர்த்தனங்கள் பாடுகிறோம். குழந்தையாக ஸ்கூல் போக ஆரம்பிக்கும்போதே அவள்மேல் ச்லோகங்கள் சொல்லி ப்ரியத்துடன் பக்தி பண்ண ஆரம்பித்துவிடுகிறோம்.

இத்தனை இருந்தாலும், இவ்வளவு ஆயிரம் கோவில் இருந்தும் ஸரஸ்வதிக்கு ஒன்றையும் காணோம்! தமிழ்நாடு பூராவிலும் தஞ்சாவூர் ஜில்லாவில் கூத்தனூர் என்ற ஒரு இடத்தில்தான் ஸரஸ்வதி ஆலயம் இருக்கிறது. அது ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில். (ஒட்டக்) கூத்தனுடைய ஊர்தான் கூத்தனூர். காமகோட்டத்தில் (காஞ்சி காமாக்ஷி ஆலயத்தில்) ஸரஸ்வதிக்கு ஸந்நிதி உண்டு. ஆனால் அதுகூட ப்ரஹ்ம பத்னியான ஸரஸ்வதி இல்லை என்றும், ராஜ ராஜேச்வரிக்கு மந்த்ரிணியாக இருக்கும் ராஜச்யாமளையான மஹா ஸரஸ்வதி என்றும் ஒரு வித்யாஸம் சொல்வதுண்டு. ஸரஸ்வதிக்கு பிம்பம், ஸந்நிதியுள்ள மற்ற கோவில்களிலும் அவை முக்யமான இடம் பெறாமல் ஏதோ ஒரு மூலையில்தான் இருக்கின்றன. மொத்தத்தில், ப்ரஹ்மா மாதிரியே ஸரஸ்வதிக்கும் கோவில் முக்யத்வம் இல்லை. ஆனால் ப்ரஹ்மாவிடம் ஜனங்களுக்கு விசேஷ பக்தி, மரியாதைகள் இல்லாததுபோல, ஸரஸ்வதிக்கு இல்லாமலில்லை. அவளை எல்லாரும் நிரம்பப் போற்றி பக்தி செய்கிறோம். படிக்க ஆரம்பிக்கும்போதே கல்வித் தெய்வம் என்று அவளை ஸ்துதிக்கக் கற்றுக்கொடுத்து விடுவதால், அது பசுமரத்தாணியாக மனஸில் பதிந்து என்றைக்கும் அவளிடம் பக்தி நீங்காமலே இருக்கிறது. ந்யூஸ்பேப்பர் பாஷையில் சொன்னால், அவள் ‘பாபுலர்’ தெய்வம்; ப்ரஹ்மா ‘அன்பாபுலர்’ தெய்வம்! அன்பாபுலர் தெய்வத்துக்குக் கோவிலில்லை என்றால் அது ந்யாயம். நல்ல பாபுலாரிடி இருக்கிற தெய்வத்துக்கும் ஏன் அப்படியே இருக்கவேண்டும்?

இங்கேதான் நம்முடைய தேசாசாரம் வருகிறது. பதிவ்ரத்யம் என்பது நம் தேசாசாரத்தில் ஊறிப்போன விஷயம். பதிவ்ரதைகள் புருஷனுக்கு இல்லாத எதையும் தாங்கள் அநுபவிக்க மாட்டார்கள். ஸரஸ்வதி ப்ரஹ்மாவின் நாக்கிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கும் பதிவ்ரதை. அதாவது ப்ரஹ்மாவின் நாக்குதான் அவள் குடியிருக்கும் கோவில்! அவள் எப்படிப் பதிக்குக் கோவிலில்லாதபோது தான்மட்டும் கோவிலில் குடிகொள்வாள்? அதனால்தான் அவளுக்கும் அவர் மாதிரியே கோவில் இல்லை.

அகத்திலே நாம் கூப்பிட்டால் அவள் வருவாள். தாயாரல்லவா? அதனால் நம் குடும்பத்து மநுஷியாக வருவாள். நமக்கு அறிவு புகட்ட வேண்டிய ட்யூட்டியும் அவளுக்கு இருப்பதால் தனிப்பட்ட முறையில் அகத்துக்கு வருவாள்.

ஆனால் ஊர் உலகத்துக்குப் பொதுவாக அவளைப் பெருமைப்படுத்திக் கோவில் கட்டுவது என்றால், அப்போது பதியை விட்டு விட்டுத் தான் மட்டும் மஹிமை கொண்டாடிக் கொள்ள அவள் ஸம்மதிக்க மாட்டாள்! அவளுடைய அந்த உத்தம ஸ்த்ரீ குணத்தை மதித்துத்தான் அவளுக்கு ஆலயமில்லாமல் வைத்திருக்கிறது. சக்திகளை வழிபடுவதற்கென்றே நவராத்ரி என்று வைத்துப் பூஜை பண்ணும்போது துர்கா – லக்ஷ்மிகளுடன் அவளும் வந்து ஸரஸ்வதி பூஜை பெறுவாள். அதோடு ஸரி. பதியை நீக்கி பொது ஸ்தலத்தில் கோவில் என்று வைத்து ஊர் கூடி நித்ய பூஜை, உத்ஸவாதிகள் பண்ணுவதற்கு அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ப்ரம்மாவை உள்ளடக்கி த்ரிமூர்த்தியர் ஏற்பட்ட காரணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஸாவித்ரி, காயத்ரி, நாரதர் விஷயம்
Next