பௌத்த சமண மதங்களும் ஹிந்து மதமும் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

நான் இப்போது பௌத்த, ஜைன மதங்களை ‘க்ரிடிஸைஸ்’ பண்ணிச் சொல்கிறேனென்று உங்களுக்கு வருத்தமாயிருக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஹிஸ்டரி புஸ்தகங்களில் புத்தரையும், ஜினரையும் (மஹா வீரரையும்) பற்றி உயர்வாகப் படித்திருப்பீர்கள். அந்த அளவுக்கு உயர்வாக நம்முடைய மத புருஷர்கள் யாரைப் பற்றியாவது பாட புஸ்தகத்தில் சொல்லியிருக்குமா என்பது ஸந்தேஹம். காந்தீயம், முன்னேற்றக் கொள்கைகள் என்றெல்லாம் தற்காலத்தில் சொல்லுவதில் அஹிம்ஸை, ஸகல ஜனங்களுக்கும் வர்ணாச்ரம பேதமில்லாமல் ஸமமாக எல்லா உரிமைகளும் கொடுப்பது ஆகியவற்றுக்கு பௌத்த, ஜைன மதங்கள் இடம் கொடுத்திருப்பதாலேயே அவற்றுக்கு உயர்வு கொடுக்கப்படுகிறது. யஜ்ஞத்தில் ஹிம்ஸை இருக்கிறது, ஜனங்களைப் பிறப்பினால் பிரித்து வெவ்வேறு அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறது என்பதால் ஹிந்து மதத்திடம் ஒரு குறைவான அபிப்ராயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஜன ஸமுதாயம் ஒழுங்காக வளர்வதற்குப் பல விதமான கார்யங்கள் நடக்கவேண்டியிருக்கிறது என்பதையும், ஜனங்கள் தேஹ ரீதியாகவும் மனோ ரீதியாகவும் பலதரப் பட்டிருக்கிறார்கள் என்பதையும் கவனித்துத் தான் அத்தனை பேருக்கும் ஒரே போன்ற தர்மங்களை வைக்கக்கூடாது, ஒரே போன்ற அநுஷ்டானங்களையும் பணிகளையும் கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் பண்ணி அவரவரும் இருக்கிற இடத்திலிருந்து மேலே போவதற்கு வசதியாக வர்ண விபாகம் (‘ஜாதிப் பிரிவினை’ என்று நடைமுறையில் சொல்லுவது) என்று நம் மதத்தில் பண்ணியிருப்பது. இது ஸமூஹ ஒழுங்கு. ஜன ஸமுதாயத்துக்குத் தேவையான அத்தனை பணிகளும் போட்டா போட்டியில்லாமல் தலைமுறை க்ரமமாகத் தட்டின்றி நடந்துவருவதற்கு ஏற்றபடி இந்த ஒழுங்கில் கார்யங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள். இதே மாதிரி ஒரு தனி மநுஷ்யனுக்கும் வாழ்க்கையில் ஒழுங்கான முன்னேற்றம் ஏற்படவேண்டுமென்றே அவன் ஒவ்வொரு ஸ்டேஜாகப் பக்வமாகிக்கொண்டு போவதற்கு வசதியாக ப்ரஹ்மசர்யம், கார்ஹஸ்தயம் (இல்லறம்), வானப்ரஸ்தம், ஸந்நியாஸம் என்று ஆச்ரம விபாகம் செய்யப்பட்டது.

அஹிம்ஸை போன்ற உயர்ந்த தர்மங்களை ஸகலருக்கும் உடனடி அநுஷ்டானமாக வைத்தால் எவருமே அநுஷ்டிக்க முடியாமல் தான் போகும்; அதனால் ஜனங்களுக்கு ஐடியலாக ஒரு பிரிவை வைத்து அவர்களுக்கு மட்டும் அதைத் தீர்மானமாக வைத்தால் அவர்கள் அதை ரொம்ப உஷாராக, ஒரு பெருமிதத்துடன் காப்பாற்றி வருவார்கள்; ‘இந்த ஐடியல்படி நாமும் செய்து பார்க்கணும்’ என்று மற்றவர்களும் ஓரளவுக்காகவது நிச்சயம் பின்பற்றுவார்கள் — என்று தான் தர்மங்களைப் பாகுபடுத்தியது. ப்ரத்யக்ஷத்தில் பார்த்தால் இன்றைக்கு பௌத்த தேசங்களில்தான் பிக்ஷுக்கள் கூட மாம்ஸ போஜனம் செய்கிறார்கள். அங்கேயெல்லாமும் ஸைன்யம், யுத்தம் என்று ராஜாங்க ரீதியிலும், கொலை, கொள்ளை என்று தனி மநுஷ்ய ரீதியிலும் நடந்துகொண்டு தானிருக்கின்றன. நம் தேசத்திலேயே அசோகனைத் தவிர பௌத்த, ஜைன ராஜாக்களாக இருந்தவர்கள் யாரும் சண்டையே போடுவதில்லை என்று இருந்துவிடவில்லை. ஆனாலும் தங்களுடைய மதக் கொள்கைக்கு இது ஸரியாக வரவில்லையே என்று அவர்கள் guilty-யாக feel பண்ணிக் கொண்டு, இரண்டுங்கெட்டானாக இருந்த ஸமயங்களில்தான் தேசத்திலே வலுவாய்ந்த பேரரசுகள் இல்லாமல்போய் அந்நிய தேசத்தார் படையெடுத்து வந்திருக்கிறார்கள்.

அப்புறம் அவர்களும் (பௌத்த, ஜைன அரசர்களும்) யுத்தம் செய்வது என்றுதான் ஆரம்பிக்கவேண்டி வந்தது. அதாவது, தங்களுடைய மதத்திற்கு விரோதமாகப் போக வேண்டி வந்தது. பாகுபாடு செய்யாமல் ‘எல்லா தர்மமும் எல்லாருக்கும்’ என்று வைத்த மதங்களில், இப்படிப் பாகுபடுத்திய நம் மதத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவாவது தர்மங்களை உறுதியாக நடத்திக்காட்டி, அதனாலேயே மற்றவர்களையும் ஓரளவு அவற்றில் போகச் செய்வது போலக்கூட இல்லாமல், அத்தனை பேரும் தர்மங்களை விடுவதில்தான் ஸமமாக இருக்கிறார்கள் என்று ஆகியிருப்பதோடு, அவர்கள் யாவரும் தங்களுடைய மத விதிகளைப் புறக்கணித்தார்கள் என்ற பெரிய தோஷத்திற்கு ஆளாகும்படியும் ஏற்பட்டிருக்கிறது.

வைதிக மதத்தில் அதிகாரி பேதம் என்பதாகப் பாகுபடுத்தி தர்மங்களையும் கார்யங்களையும் கொடுத்திருப்பதுதான் ஏதோ ஒரு ஜாதியாருக்கு மாத்திரமின்றி ஸகலருக்குமே நிரம்ப ஆத்ம ச்ரேயஸை அளித்திருக்கிறது என்பதற்கு ஒன்று சொன்னால் போதும்: இந்த ஒரு மதத்தில் தான் ஸகல ஜாதிகளிலும், ஒவ்வொரு ஜாதியிலுமே, மஹான்களும், ஞானிகளும் ஏகமாகத் தோன்றி, லோகம் பூராவிலுமே நம் நாட்டைத்தான் Land of saints (மஹான்களின் நாடு) என்று கொண்டாடும்படியாகப் பெருமை ஏற்பட்டிருக்கிறது. ஸமூஹ வாழ்வு நின்று நிலைத்த மஹோன்னதமான கலாசாரமாக நம் நாடு ஒன்றிலேயே எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக உறுதிப்பட்டிருப்பதும், நம் மதம் பாகுபடுத்திக் கொடுத்துள்ளபடி ஸமூஹத்தில் பல வர்க்கத்தினருக்கும் தங்கள் தங்கள் கார்யங்களை செவ்வனே செய்துகொண்டு, மொத்த ஸமுதாயமும் கட்டுக்கோப்புடன் ஒழுங்காக முன்னேறும்படி செய்ததால்தான். பாபிலோனியன் ஸிவிலிஸேஷன் (நாகரிகம்), ஈஜிப்ட் ஸிவிலிஸேஷன், க்ரீக் ஸிவிலிஸேஷன் என்று ஆதி காலத்தில் கொடிகட்டிப் பறந்த பெரிய ஸமுதாய மரபுகளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோயிருக்க, வெளியேயிருந்தும் உள்ளேயிருந்தும் எத்தனையோ தாக்குதல்களைப் பெற்றும் இந்த ஹிண்டு ஸிவிலிஸேஷன் மாத்திரம் ‘சாவேனா பார்!’ என்று ஜீவனோடேயே இருந்துகொண்டிருக்கிறதென்றால், இப்படி இதற்கு ஸ்பெஷலாகச் சக்தி ஊட்டுவதற்கு மற்ற ஸிவிலிஸேஷன்களில் இல்லாததாக என்ன இருக்கிறது? — இந்த விஷயத்தைக் கொஞ்சம் ஆற அமர நடுநிலையிலிருந்து கொண்டு ஆலோசித்துப் பார்த்தால், நம் ஸிவிலிஸேஷனில் மட்டுமே உள்ள வர்ணாச்ரம விபாகம்தான் காரணம் என்று தெரியும்.*

அதாவது இந்த ஏற்பாடுதான் ஒரு பக்கம், தனி மநுஷ்யர்களின் ஆத்மாபிவிருத்திக்கு போஷணை கொடுத்து இத்தனை மஹான்கள் தோன்றும்படிப் பண்ணியிருக்கிறது. ஐடியல் நிலைக்கு என்றே ஒரு பிரிவை மட்டும் வைத்தால் அதில் நிறைய மஹான்கள் தோன்றுவதும், அவர்களைப் பார்த்து மற்றப் பிரிவினரிலும் பலர் ப்ரயத்னம் பண்ணி அந்த மாதிரி ஆவதும் இயற்கைதானே? ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் கண்ட ஞானமும் பக்தியும் சாந்தமும் அன்பும் அந்த பிரிவுக்கு மாத்திரம் ஸொந்தமாக நின்றுவிடாமல் ஸமூஹம் பூராவும் ‘ரேடியேட்’ ஆவதால் எல்லாப் பிரிவுகளிலும் மஹான்கள் தோன்ற வழி கோலுகிறது. இன்னொரு பக்கம், வர்ணாச்ரம விபாகம்தான் இந்த தேசத்தின் பெரிய ஜன ஸமுதாயம் முழுவதையுமே ஜீவசக்தி குன்றாத பெரிய நாகரிக மரபாக வலுப்படுத்திக் காத்துக் கொடுத்திருக்கிறது.


* வர்ணா்ச்ரம தர்மங்களைப் பற்றிய விரிவான விளக்கம் “தெய்வத்தின் குரல்” முதற் பகுதியில் “நம் மதத்தின் தனி அம்சங்கள்” என்ற உரையின் இறுதிப் பாகத்திலிருந்து “என் காரியம்” என்ற உரை முடிய சுமார் நூறு பக்கங்களிலும், இரண்டாம் பகுதியில் “ ” என்ற உரையிலும் காண்க.

அனைவருக்கும் ஒரே வித தர்மங்களை விதிப்பதையும் பாகுபடுத்தி வெவ்வேறாக விதிப்பதையும் குறித்து மூன்றாம் பகுதியில் “ஆசார விஷயங்கள்” என்ற உரையில் “ஆசாரமும் வர்ணா்ச்ரமங்களும்” என்பதிலிருந்து “விதிவிலக்கின்மையின் விளைவுகள்” முடியவுள்ள உட்பிரிவுகளைப் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is புது மத ஸ்தாபகர்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  யாகத்தில் ஹிம்ஸை
Next