Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

தாளும் கோளும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

காமாக்ஷி ஸகல கஷ்டத்தையும் நிவ்ருத்தி பண்ணிப் பரமானந்தத்தை அளிக்கிறவள். நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு ஜ்யோதிஷ ரீதியில் நவக்ரஹங்களைத் தானே காரணமாகச் சொல்கிறார்கள்? இந்த நவக்ரஹ பாதிப்பு எதுவும் அவள் பாதத்தை ஸ்மரிக்கிறவருக்கு ஏற்படாது என்று பொருள் படுமாறு ‘மூக பஞ்சசதி’யில் வார்த்தை விளையாட்டுப் பண்ணி ஒரு ஸ்லோகம் இருக்கிறது.

“மூக பஞ்சசதி” என்பது ஞானம், பக்தி, சாக்த சாஸ்த்ர தத்வங்கள், காவ்ய ரஸம் எல்லாம் சேர்ந்ததாகக் காமாக்ஷியைப் பற்றி மூகர் என்பவர் அநுக்ரஹித்துள்ள ஐநூறு ஸ்லோகம் கொண்ட ஸ்தோத்ரம். இவற்றிலொன்று தான் நவக்ரஹங்களில் ஒவ்வொன்றின் தன்மையும் அம்பாளின் சரணாவிந்தத்தில் இருப்பதாகச் சொல்லும் ஸ்லோகம்.

ததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு:

விநம்ரமாணாம் ஸெளம்யோ குருரபி கவித்வம் ச கலயந் |

கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம்

தம: கேதுர்-மாதஸ்தவ சரணபத்மோ விஜயதே ||

(பாதாரவிந்த சதகம்-59)

ப்ரகாசிப்பதாலே ‘பாஸ்வத்தாம்’ என்று அந்தப் பாதத்தைச் சொல்கிறார். நவக்ரஹங்களில் முதலில் வரும் ஸூர்யனின் தன்மை இதுதானே?’ பாஸ்கரன்’ என்றே அவனுக்கு ஒரு பேர். அம்பாள் சரணத்திலிருந்து அம்ருதம் கொட்டுகிறது. இதை ‘அம்ருத நிலய:’- என்கிறார். யோகிகள் சிரஸின் உச்சியில் அவளுடைய பாத பத்மத்தின் அம்ருதம் பெருகுவதில் அப்படியே ‘உச்சி குளிர்ந்து’ இருப்பார்கள். ‘சரணாம்ருதம்’ என்றே சொல்வது வழக்கம். இதேபோல அம்ருதம் பெருக்குகிற தன்மை சந்த்ரனுக்கு உண்டு. அதனால்தான் ‘ஸுதாகரன்’ என்று பெயர். ‘லோஹிதவபு:’ என்று ஸ்லோகத்தில் இருப்பதற்கு ‘சிவந்த ரூபமுள்ளது’ என்று அர்த்தம். சிவப்பாயிருப்பதுதான் செவ்வாய். ‘விநம்ரமாணாம் ஸெளம்ய:’- அந்தப் பாதத்திலே போய் நமஸ்காரம் பண்ணுகிறவர்களுக்கு அது ஸெளம்யமாயிருக்கிறது. மனஸுக்குப் பரமஹிதமாக, ம்ருதுவாக, சாந்தமாக இருப்பதெல்லாம் ஸெளம்யம். உக்ர தேவதை என்பதற்கு ஆப்போஸிட்டாக ஸெளம்ய தேவதை என்கிறோம். நேர் அர்த்தம் என்ன? ‘ஸோம’ என்ற சந்திரனிலிருந்து உண்டானதே ‘ஸெளம்யம்’. நிலவு போலக் கோமளமாக, சாந்தமும் ஹிதமும் தருவதாக இருப்பதையெல்லாம் இதனால் ஸெளம்யம் என்கிறோம். ஸோமனுக்குப் புத்ரனாக உண்டானவன் புதன். அதனால் அவனுக்கு ஸெளம்யன் என்று பேர். அம்பாள் பாதம் ‘குருரபி’- ‘குரு: அபி’ என்கிறார். ‘குருவானதும் கூட’ என்கிறார். குரு என்றால் குணவிசேஷத்தால் பெரியது என்று அர்த்தம். அதோடுகூட அந்தப் பாதம் க்ஷணகாலம் பட்டுவிட்டால் திருவடி தீக்ஷையினாலே ப்ரஹ்மஞானமே ஸித்தித்துவிடும். இப்படி ஞானம் தருவதாலும் அது குருவாயிருக்கிறது. குரு என்றால் வியாழன், குருவாரம் என்றே அந்தக் கிழமைக்குப் பேர். ‘கவித்வம் ச கலயந்’- கவித்வத்தையும் அநுக்ரஹித்துவிடுகிறது அம்பாள் பாதம். அம்பாளுடைய பாத தீர்த்தம் மூகனையும் (ஊமையையும்) கூட மஹாகவியாக்கிவிடுகிறதென்று ஆசார்யாளே சொல்லியிருக்கிறார்*. இப்படி அவளருளால் அருட்கவியாகி, ஒரு காலத்தில் தாம் மூகனாயிருந்ததை லோகமெல்லாம் அறிய வேண்டுமென்பதால் ‘மூகர்’ என்றே பெயர் வைத்துக் கொண்டவர்தான் இந்த ஸ்லோகத்தைப் பண்ணியிருப்பவரே! நவக்ரஹங்களில் கவித்வகாரகன் வெள்ளிக்கிழமைக் சூரிய சுக்ரன். குரு என்று வெறுமே சொன்னால் எப்படி அது தேவகுருவான ப்ருஹஸ்பதியைத்தான் குறிக்குமோ அப்படியே ‘கவி’ என்று வெறுமே சொன்னால் அது அஸுர குருவான சுக்ராசாரியாரைத்தான் குறிப்பிடும். கவித்வ சக்தி அருளுவதால் அம்பாளின் பாதம் சுக்ரனாக இருக்கிறது. ‘கதௌ மந்த:’ மிக மெதுவான நடை உள்ளது அம்பாள் பாதம். ‘மந்தன்’ என்று சனிக்கு பேர். அது ரொம்ப மெதுவாக ஸஞ்சாரம் செய்யும் க்ரஹம். ‘சனீச்வரன்’ என்று சொல்வது தப்பு. மற்ற க்ரஹம் எதற்கும் இல்லாத ‘ஈஸ்வர’ப் பட்டம் இதற்கு மட்டும் வருவதற்கு நியாயமில்லை. ‘சனைச்சரன்’ என்பதே சரியான வார்த்தை. ‘சனை:’- மெதுவாக, ‘சர’- ஸஞ்சரிப்பவன். அதைச் சுருக்கி சனி என்கிறோம். ‘பஜதாம் தம: கேது:’ – அம்பாள் பாதம் தன்னை பஜிக்கிறவர்களின் தமஸுக்கு உலை வைக்கும் தூமகேதுவாக இருக்கிறது. தமஸ் என்றால் இருட்டு. துக்கம், அஞ்ஞானமெல்லாம்தான் பெரிய இருட்டு. தமஸ் என்று ராஹுவுக்கும் பெயர். கேது என்பது ஒன்பதாவது க்ரஹமென்று எல்லோருக்கும் தெரியும்.

ஸ்லோகத்தில் ராஹுவின் தன்மை மாத்திரம் நேரே அம்பாள் பாதத்துக்கிருப்பதாகச் சொல்லாமல், ஆனாலும் ‘தமஸ்’ என்ற வார்த்தையை வைத்து, மற்ற எட்டு க்ரஹங்களையும் நேரே அந்தச் சரண ஸம்பந்தப் படுத்திச் சொல்லியிருக்கிறது.


*“ஸெளந்தர்ய லஹரி”-ஸ்லோ 98

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is கஞ்சி குடிக்காத காமாக்ஷி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  கொசுவும் கேசவனும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it