Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

கஞ்சி குடிக்காத காமாக்ஷி! : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

காஞ்சீபுர மத்தியில் ராணியாக இருக்கிற அம்பாளையும் கஞ்சி ஸம்பந்தப்படுத்தி ஒரு இருசொல்லங்காரக் கவிதை இருக்கிறது.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அதற்கு அர்த்தம் என்னவென்றால்: காமாக்ஷியம்பிகை கஞ்சி குடிக்க மாட்டாள். ஏதோ கம்பைப் பொங்கிச் சோறாகப் போட்டாலும் சாப்பிடமாட்டாள். காய்கறி, அவியல், கூட்டு, ஊறுகாய் என்று ஏதாவது வியஞ்ஜனங்களையாவது இஷ்டப்பட்டு சாப்பிடுவாளா என்றால் அதுவும் மாட்டாள். அஞ்சு தலை பாம்புக்கு (பாம்புக்கு மரியாதை கொடுத்து ‘பாம்பார்’ என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் செய்யுளில் ‘அரவம்’ என்றில்லாமல் ‘அரவார்’ என்று வருகிறது. இப்படிப்பட்ட ஐந்துதலைப் பாம்புக்கு அம்பாள்) ஆறாவது தலையாக மானஸிகமாக ஆகிறாளாம்!

கஞ்சி குடியாளே கம்பஞ்சோ றுண்ணாளே

வெஞ்சினங்க ளொன்றும் விரும்பாளே – நெஞ்சுதனில்

அஞ்சுதலை யரவாருக் (கு) ஆறுதலை யாவாளே

கஞ்சமுகக் காமாட்சி காண்

கஞ்ச முகம் என்றால் தாமரைப் பூப்போலவுள்ள முகம். அம்பாள் முகம் அப்படி இருக்கிறது. கஞ்சி குடிக்காதவள், எதுவும் சாப்பிடாமல் கஞ்சத்தனமாயிருக்கிறாள் என்கிற மாதிரியும் த்வனிக்கிறது!

ஸரி, அம்பாளைப் பற்றி இப்படி ஏதோ அல்ப விஷயங்களைச் சொல்லி அப்புறம் ஆறுதலைப் பாம்பு என்று விஷமாக முடித்தால் என்ன அர்த்தம்?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே புரிந்து விடும் – சிலதாவது.

‘கஞ்சி குடியாள்’ என்றால் காஞ்சீபுரத்தில் குடி கொண்டிருப்பவள் என்று அர்த்தம். ‘கம்பஞ்சோறு உண்ணாள்’ என்றால் ஏகம்பன் என்றும் கம்பன் என்றும் சொல்லப்படும் ஏகாம்ரநாதனுக்கு நைவேத்யமாகிற சோற்றை உண்ணாதவள் என்று அர்த்தம். சிவாலயங்களில் முதலில் ஈஸ்வரனுக்கு நைவேத்யம் பண்ணிவிட்டு அப்புறம் அதையேதான் அவன் பிரஸாதமாக அம்பாள் முதலான மற்ற எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் செய்வார்கள். மதுரையிலே மட்டும் மீனாக்ஷிக்கு முதலில் செய்துவிட்டு அப்புறந்தான் ஸுந்தரேஸ்வரர் உள்பட மற்ற எல்லோருக்கும்! காஞ்சிபுரத்திலே நூற்றெட்டு சிவலாயங்கள் இருந்தபோதிலும் ஒன்றிலாவது அம்பாள் ஸந்நதியில்லாமல், அந்தப் பராசக்தி எல்லா மூர்த்திகளுக்கும் மேற்பட்ட பரப்ரஹ்ம ஸ்வரூபிணியாக காமாக்ஷி என்று தனிக்கோயிலில் வாஸம் செய்கிறாள்*. அங்கே அவளுக்கென்றே தயார் செய்கிற நைவேத்யம்தான் அவளுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. ஏகாம்ரேச்வரர் நைவேத்யம் அவளுக்கு வருவதில்லை. இதனாலே அவள் “கம்பஞ்சோறுண்ணாளே!”

அவள் பரம ப்ரேமையே ஒரு ரூபமாக ஆனவள். நாம் பண்ணுகின்ற தப்புகளுக்கு, அபசாரங்களுக்கு நம் மேல் அவளுக்கு எத்தனையோ கோபம் கோபமாக வர வேண்டும். ஆனால் அவளுக்குக் கோபித்துக் கொள்வது என்றால் கொஞ்சங்கூடப் பிடிப்பதில்லை. ‘வெஞ்சினங்கள் ஒன்றும் விரும்பாளே’ என்றது இப்படி வெம்மையாக, அதாவது ரொம்ப உஷ்ணமாக, சினம் கொள்வதில் அவளுக்கு இஷ்டமே இல்லை என்று, அவளுடைய தயையை, க்ஷமையை (மன்னித்தருளும் மனப்பான்மையை) தெரிவிக்கிற வாசகமாக ஆகிறது. ‘வ்யஞ்ஜனம்’ என்பதை தமிழ்ப் பாட்டில் ‘வெஞ்சினம்’ என்று சொல்லலாம்.

அப்படிச் சொல்லும்போது, கஞ்சி காமாக்ஷிக்கு வியஞ்ஜனமில்லாமல் சுத்தான்னம் மட்டும் நிவேதிக்க வேண்டுமென்று இருக்கிற அபிப்பிராயத்தை இந்தப் பாட்டு சொல்லுவதாகவும் ஆகும். அரவார் என்றால் ஹரனான சிவனைச் சேர்ந்த அடியார் என்று அர்த்தம். சிவபெருமானுக்குத் ஐந்து முகங்கள் உண்டு. அதனால் அவர் ‘அஞ்சுதலை அரன்’ ஆகிறார். அவரை மனஸிலே வைத்து உபாஸிக்கிறவர்கள் ‘நெஞ்சுதனில் அஞ்சுதலை யரவார்’. ‘ஆறுதலையாவாள்’ என்றால் ‘ஆறுதலை அளிக்கிறவள்’, “ஆறுதலாக இருப்பவள்” என்று அர்த்தம். நெஞ்சத்தில் ஈஸ்வரனை உபாஸிக்கிறவர்களுக்கு ஸம்ஸாரக் கஷ்டம் தெரியாமல் ஆறுதலாக இருப்பவள் அம்பாள்.

‘நெஞ்சுதனில் அஞ்சுதலை அறிவார்க்கு’ என்கிற பாடத்தை வைத்துக்கொண்டால் ‘மனஸிலே பயத்தை உடையவருக்கு ‘அம்பாள் அதைப் போக்கி ஆறுதல் தருகிறாள் என்று ஆகும். “அஞ்சுதலை”- அஞ்சுதல், அச்சப்படுதல் என்பதை.


*இதற்கான விருத்தாந்தத்தை “தெய்வத்தின் குரல்” முதற்பகுதியிலுள்ள “காமாக்ஷியின் சரிதை” என்ற உரையில் காண்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is கஞ்சி வரதர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தாளும் கோளும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it