உயிருதாரணத்தால் உண்டான சாஸ்திரம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இப்போது நான் சொன்ன விஷயத்தை இன்னம் கொஞ்சம் எக்ஸ்ப்ளெயின் பண்ண வேண்டும். வாழ்ந்து காட்டுவது, புஸ்தகம் எழுதுவது என்று இரண்டு சொன்னேன். நம் ஆசார, அநுஷ்டானங்களுக்கு ஏகப்பட்ட சாஸ்திர புஸ்தகங்கள் இருக்கின்றன. ஆனாலும் இதிலே நன்றாகத் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த கிரந்த கர்த்தாக்கள் அந்தப் புஸ்தகங்களில் இது இது ரூல் என்று எழுதிவைத்ததற்குப் பிறகே அதைப் பார்த்து அப்படியப்படி ஜனங்கள் பண்ணினார்களா, வாழ்ந்து காட்டினார்களா என்றால் அதுதான் இல்லை. அந்த கிரந்த கர்த்தாக்களுக்கும் முன்னாலிருந்தே இந்த ஆசார அநுஷ்டானங்களை அவர்களுடைய பூர்விகர்களும் வாழ்க்கையில் அநுஸரித்துத்தான் வந்திருக்கிறார்கள். அதைத்தான் பின் ஸந்ததியாரை உத்தேசித்துப் புஸ்தகத்தில் எழுதி வைத்தார்கள். அதாவது சாஸ்திரத்தைப் பார்த்து வாழ்க்கை நடத்தவில்லை. வாழ்க்கையில் நடத்தப்பட்டதையே சாஸ்திரத்தில் எழுதினார்கள். மநுஸ்மிருதி முதலான எந்த ஸ்மிருதியைப் பார்த்தாலும் ஸரி, ஆபஸ்தம்ப-ஆச்வலாயன ஸூத்ரங்களைப் பார்த்தாலும் ஸரி, அநேக தர்ம சாஸ்திரங்களில் சிதறிக் கிடக்கும் ரூல்களைத் திரட்டிக் கொடுக்கும் நிபந்தன க்ரந்தங்களைப் பார்த்தாலும் ஸரி அந்த மநுவோ, ஆபஸ்தம்பரோ, ஆச்வலாயனரோ, நிபந்தன க்ரந்தம் பண்ணினவரோ தாங்களாக ஒரு சின்ன ‘ரூல்’ கூடப் பண்ணினதாகச் சொல்லிக் கொள்ளவில்லை; ஏற்கனவே இருக்கிற ரூல்களைத் திரும்பச் சொல்கிறதாகவே ஸ்பஷ்டமாக ஏற்படும்.

இது ஒரு பெரிய ஆச்சர்யம். “ஸநாதன தர்மம்” என்ற வார்த்தைக்கு முற்றிலும் பொருத்தமாக, புஸ்தகங்கள் தோன்றுகிறதற்கு முன்பே நம்முடைய தர்மாசார வாழ்க்கை தோன்றிவிட்டது! முதல் முதலில் யார் இப்படி பஞ்ச கச்சத்தை ஏற்படுத்தினது? நெற்றிக்கு இப்படி இப்படி இட்டுக்கொள்ள வேண்டும் என்று ‘இனாகுரேட்’ பண்ணினது யார்? எந்தக் காரியமானாலும் ஆசமனம் பண்ணுவதற்கு, நெற்றியில் குட்டிக் கொள்வதற்கு ‘ஆரம்ப விழா’ என்று என்றைக்காவது யாராவது செய்தார்களா? ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. ஆதிக்கும் ஆதிக்கும் ஆதியிலிருந்தே இப்படியெல்லாம் பண்ணியிருக்கிறார்கள். இந்த லோகத்தையெல்லாம் ஸ்ருஷ்டித்திருக்கிற ஒரு மஹாசக்தியை எப்போதும் தொட்டுக்கொண்டவர்களாக அந்த ஆதி புருஷர்கள் இருந்ததால், இந்த லோக வாழ்க்கைக்கு எது நல்லது, இதற்கும் நல்லதாக இருந்து கொண்டே இதிலிருந்து விடுவித்து நித்யானந்தத்தில் சேர்க்கக் கூடியதாக உள்ளது எது என்பதை அவர்கள் தெரிந்துகொண்டு, அப்படியே வாழ்ந்து காட்டியதுதான் நம்முடைய தர்மங்களாகவும், நீதிகளாகவும், ஆசாரங்களாகவும், அநுஷ்டானங்களாகவும் ஆகி சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றன.

இந்த ஸநாதன தர்ம மார்க்கத்தை, ஆசார அநுஷ்டானப் பாதையைப் போட்டவர் யார்? பேர் சொல்லத் தெரியாது. குறிப்பாக யாரையும் காட்ட முடியாது. ஆனால் பாதை மட்டும் இருப்பது தெரிகிறது. இதனால்தான் நான் ஹிந்து தர்மத்தை, “ஒற்றையடிப் பாதை” என்று சொல்வது*. ஒற்றையடிப்பாதை பிரத்யக்ஷமாகத் தெரிகிறது. ஆனால் யார் போட்டார் என்று கேட்டால் சொல்லத் தெரியுமா? தார் ரோடு, கப்பி ரோடுக்கெல்லாம் சொல்லலாம். இந்த கவுன்சிலர் திட்டம் போட்டார்; இந்தக் கமிஷனர் ஸாங்க்ஷன் பண்ணினார்; இந்தக் கன்ட்ராக்டர் வேலை எடுத்துக் கொண்டார்; இந்தத் இந்தத் தொழிலாளிகள் வேலை செய்தார்கள் என்று மற்ற ரோட்களுக்கெல்லாம் காரணமான ஆளைக் காட்டலாம். ஒற்றையடிப்பாதைக்கு மட்டும் முடியாது. அது ‘ப்ளான்’ பண்ணி, ‘மெஷர்மென்ட்’ பார்த்து, சம்பளம் கொடுத்துப் போட்டதல்ல. யார் என்று குறிப்பாகச் சொல்லத் தெரியாமல் அநேக ஜனங்கள் நடந்து நடந்தே உண்டானது அது. ரோட் போட்ட பிறகு அதில் ஜனங்கள் நடக்கிறார்களென்றால் இதுவோ ஜனங்கள் நடந்ததாலேயே ஏற்பட்ட பாதை! புஸ்தக ரூலால் ஏற்படுத்தும் வாழ்க்கை முறை இல்லை; வாழ்க்கை முறையால் ஏற்பட்ட புஸ்தக ரூல்!

மற்ற மதாசாரங்கள், ஸ்தாபனங்களின் சட்ட திட்டங்கள் சிலரால் உத்தேசிக்கப்பட்டு, ப்ளான் பண்ணிப் போட்டவை. அதுதான் தார் ரோடு மாதிரி நன்றாயிருக்கிறது என்று தோன்றலாம். ‘அதிலேதான் வேகமாக கார் ஸவாரி முடிகிறது, உம்முடைய ஒற்றையடிப் பாதையில் முடியுமா?’ என்று கேட்கலாம். ஆனால் நன்றாயிருக்கிற அதற்குத்தான் வருஷா வருஷம் ரிப்பேர் பார்த்தாக வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் குண்டும் குழியும் விழுகிறது. ஒற்றையடிப் பாதையோ ரிப்பேராகிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜனங்கள் நடக்க நடக்கத் தார் ரோட் தேய்கிறது என்றால், ஒற்றையடிப் பாதையோ அவர்கள் நடக்க நடக்க இன்னம் உறுதியாகவும் பளிச்சென்றும் ஆகிறது. அதாவது ஜனங்கள் வாழ்ந்து காட்டும்போது, எவரோ சிலர் ‘ப்ளான்’ பண்ணினதாக உள்ள வழிமுறைகள் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் நசித்துப் போகின்றன. இப்படித்தான் பழங்கால கிரேக்கர் மதம், ஹீப்ரு மதம், கன்ஃபூஷியஸ் மதமெல்லாம் எடுபட்டுப்போய்விட்டன. ஆனால் நம்முடைய சாஸ்திர ஆசரணைகளோ வழி வழியாக ஜனங்கள் அநுஷ்டிக்க அநுஷ்டிக்க மேலும் மேலும் பிரகாசம் பெற்றிருக்கின்றன. கார் ஸவாரி மாதிரி இங்கே சேரவேண்டிய இடத்துக்கு வேகமாகப் போய்ச் சேர முடியாமலிருக்கலாம்; நின்று நிதானமாக, படிப்படியாகத்தான் ‘எவல்யூஷன்’ ஆகி goal வரும்; ஆனால் நிச்சயமாக வரும். தார் ரோடில் போகிற கார் வேகமாகப் போனாலும் goal-ஐ அடையுமா என்பதே ஸந்தேகம். வேகமாகப் போவதாலேயே அதற்கு விபத்து வந்துவிடுகிறது. அதோடு கூட ரோடும் குண்டு குழி விழுந்து ரிப்பேராகிறது! ரோட் இப்படி ஆவதால் கார் ஸவாரியிலும் பெரிய ஆபத்துக்கே இடமிருக்கிறது. ஒற்றையடிப் பாதையில் ஒரு நாளும் ஆக்ஸிடென்ட் ஏற்படாது.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தார் ரோடு மேடு பள்ளம், குறுகல் வழி முதலானதுகளில் சுற்றிச் சுற்றித்தான் போகும். ஒற்றையடிப்பாதையோ குறுக்கு வழி அதனால், தார் ரோடில் சுற்றி வளைத்துக் கொண்டு காரில் போய் ஒரு இடத்தை அடைகிறதற்குள், ஒற்றையடிப் பாதையில் நடந்து போயே அந்த இடத்தை அடைந்து விடலாம். நவீன ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிறதையே ஒப்புக் கொண்டாலும் குறைந்த பக்ஷம் ஐயாயிரம் வருஷமாக (3000 B.C. — Vedic Civilisation என்கிறார்கள்) , நூற்றுக்கணக்கான தலைமுறையினர் நடந்த வழியை நாம் விட்டு விட்டு, நாம் கெட்டது போதாதென்று பின் ஸந்ததியினருக்கும் கெடுதலை உண்டாக்கியிருக்கிறோம். ஜனங்கள் நடக்காமலேயிருந்தால் ஒற்றையடிப்பாதை மூடிப்போய் விடுமல்லவா? இந்தத் தலைமுறையினரான நாம் நம்முடைய சாஸ்திர மார்க்கம் வருங்காலத்தவருக்குத் தெரியாமலே மூடிப் போகிற மாதிரிப் பண்ணும் பெரிய தோஷம் நமக்கு ஏற்படாமல் கருணாமூர்த்தியான பகவான் தான் காப்பாற்ற வேண்டும். இப்போதாவது நாம் இந்த விஷயங்களை ஆலோசித்து, நம் முன்னோர்கள் சென்ற வழியிலே திரும்பி, ஆசார அநுஷ்டானங்களை நடத்தி மேன்மை அடைய ஈசன் நமக்கு நல்லறிவைக் கொடுப்பானாக!


* ‘ஆசாரம்’ என்ற முந்தைய உரையில் “ஒற்றையடிப் பாதை“என்ற பிரிவும் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அந்நாள் பெருமையும் இந்நாள் சிறுமையும் -  -
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  உணவும், அதனுடன் தொடர்பு கொண்டோரும்
Next