உணவும், அதனுடன் தொடர்பு கொண்டோரும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இப்படித் கதை போகிறது. இதிலே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சாப்பாட்டோடு ஸம்பந்தப்பட்டவர்களின் குண-தோஷங்கள் சாப்பிடுகிறவனை பாதிக்கின்றன என்பதே. அந்த குரு மாதிரியே நாமும் தெரியாத்தனத்தால்தான் தோஷமுள்ளவர்களின் ஸம்பந்தம் கொண்டதைச் சாப்பிடுகிறவர்களாயிருப்போம். உங்களை ஒருத்தர் சாப்பிடக் கூப்பிடுகிறார்; அல்லது க்ளப்  [ஹோட்டல்] , கான்டீன் எதிலாவது எவனோ சமைத்து, எவனோ ‘ஸர்வ்’ பண்ணுவதை நீங்கள் சாப்பிடுகிறீர்களென்றால், இவர்களுடைய குணமென்ன, தோஷமென்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்க முடியாதுதான். ஆனால் இப்படிப்பட்ட நிலையில் நாம் சாப்பிடுவதால், அந்த மஹானை பகவான் மன்னித்து நல்ல புத்தியைத் தந்தது போல் நமக்கும் பண்ணி விடுவான் என்று நினைத்து விடக் கூடாது! அப்படிப்பட்ட மஹானையுங்கூட ஒரு நாளெல்லாம் அன்ன தோஷம் சறுக்கித்தான் விட்டது. அவரே சிஷ்யன் ஸொத்தை அபஹரிக்கிற பாபத்தை முதலில் செய்யத்தான் செய்தாரென்றால், அவர் மாதிரியில்லாமல் ஸாதாரண ஆஸாமிகளாக உள்ள நம் கதி இதைவிட எவ்வளவோ மோசமாகுமென்றுதான் அறிவு பெற வேண்டும்.

தெரியாமல்தான் அநேகத் தப்புப் பண்ணுகிறோம்; வாஸ்தவம். ஆனால் தெரிவிக்கிறதற்குத்தான் சாஸ்திரங்கள் இருக்கின்றனவே, அவற்றை ஏன் பார்க்கக் கூடாது? நமக்கு அநேக விஷயங்கள் ஸ்வயமாகத் தெரியாதபடி ஈஸ்வரன் நம் கண்ணை மூடித்தான் வைத்திருக்கிறானென்றாலும், அவனே கண்ணைத் திறக்கப் பண்ணுவதற்காக அநேக மஹான்கள் மூலம் சாஸ்திரங்களையும் கொடுத்திருக்கிறான் அல்லவா? வேறே எத்தனையோ கார்யங்களைச் செய்யும் நாம், கண்ட கண்ட விஷயங்களைப் படிக்கும் நாம், நாம் செய்ய வேண்டியது என்ன, செய்யவேண்டாதது என்ன என்று ஈஸ்வராக்ஞையாகப் பெரியவர்கள் கொடுத்திருக்கிற தர்ம சாஸ்திரங்களைப் பார்க்க மாட்டேன் என்று இருந்து கொண்டே, “தர்மாதர்மம் தெரியாமல் தப்புப் பண்ணினதற்காக பகவான் தண்டிப்பானா?” என்று கேட்டால் அது நியாயமேயில்லை.

இதுவரையில் உங்களுக்கு தெரியாவிட்டாலும் இதோ இப்போது உங்களுக்குத் நான் சொன்னதலிருந்து ஆஹாரத்தினால் எப்படி குண-தோஷங்கள் உண்டாகின்றன என்று தெரிந்து விட்டதல்லவா? அதனால் [விடாமல் சிரித்தவாறு சொல்கிறார்] இதுவரை ஆஹார சுத்தத்தைப் பார்க்காததற்காக உங்களை பகவான் மன்னித்திருந்தாலும் இனிமேலே மன்னிக்க மாட்டான்!

இன்னொரு ஆர்க்யுமென்ட் கூட தொற்று நோய்க்காரன் என்று தெரியாமல் ஒருத்தனுடன் பழகினாலும், ‘தெரியாதவனாச்சே’ என்று நோய்க்கிருமி இவனை விட்டு விடுகிறதா? அந்தக் கிருமி நம் கண்ணுக்குத் தெரியாமல் ‘மைக்ரோஸ்கோப்’புக்குத் தெரிகிறதென்றால், ‘மைக்ரோஸ்கோப்’புக்கும் தெரியாமல் ஞானிகளுக்கே தெரிகிறவைதான் மானஸிகப் பரமாணுக்கள் – நல்ல, கெட்ட எண்ணங்களின் வெளி ரூபங்கள். இதுகளும் கிருமி மாதிரிதான் தெரிந்தவனா, தெரியாதவனா என்று பார்க்காமல் பரவுகின்றன என்று ஆர்க்யுமென்ட்.

சுத்தமான ஆஹாரம் என்பது இரண்டு விஷயங்களைப் பொருத்தது. ஒன்று, ஆஹாரமாக ஆகிற வஸ்துக்கள் – தானியம், காய்கறி முதலான பதார்த்தங்கள் – ஸ்வயமாக சுத்தமானவையாயிருக்க வேண்டுமென்பது. அதாவது வெங்காயம், முள்ளங்கி மாதிரி மனஸைக் கெடுக்கிறவையாக அவை இருக்கப்படாது. இதைப் பற்றி அப்பறம் சொல்கிறேன். இரண்டாவது, அந்த ஆஹாரம் நம் இலையில் வந்து விழுகிற வரையில் அதில் ஸம்பந்தப்பட்டவர்கள் சுத்தர்களாயிருக்கவேண்டும்.

இந்த இரண்டாவது அம்சத்தை emphasize செய்வதற்காகத்தான் ராஜா-குரு கதை சொன்னேன். ஏற்கனவே உள்ள கதைதான்.

ஒரு விஷயத்தை ‘ஓவ’ராகவே மிகைப்படுத்தி சொன்னால்தான் அதில் உரிய அளவுக்காவது கவனம் செலுத்துவார்கள் என்கிற ரீதியில்தான் இந்தக் கதை உண்டாகியிருக்கிறதென்று தோன்றாலாம். கதையில் குருவுக்குப் போட்ட போஜனத்தோடு முதல் ஸம்பந்தமுள்ளவர்கள் அதைச் சமைத்துப் பறிமாறின அரண்மனை சிப்பந்திகள்; இரண்டாம் ஸம்பந்தம், குருவுக்கு பிக்ஷை பண்ண நினைத்த ராஜாவுடையது; மூன்றாவதாகத்தான் திருடனின் ஸம்பந்தம் அதற்கு வருகிறது. அவனுடைய எண்ணம் அதில் ஒட்டிக்கொண்டிருந்ததென்றால், அதோடு இன்னம் நாலாம் ஐந்தாம் ஸம்பந்தங்களுள்ள மளிகைக் கடைக்காரன், விவஸாயி ஆகியவர்களின் குண-தோஷமும் அதிலே ஒட்டிக்கொண்டுதானே இருக்கும்? இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணிச் சாப்பிடுவதென்றால் பட்டினிதான் கிடக்க வேண்டும் போலத் தோன்றுகிறது! ரிஷிமூலம், நதிமூலம் என்கிறமாதிரி நாம் சாப்பிடுகிற அரிசியை, கடுகை, வெண்டைக்காயை எவன் எப்படிப் பயிர் பண்ணி, எவன் எப்படி மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்தானென்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியுமா?

முடியாதுதான். இதனால்தான் சாஸ்திரத்திலேயே வஸ்துவுக்கே உள்ள நேர்த் தோஷத்தைக் கவனிக்கச் சொல்லிவிட்டு அதில் ஸம்பந்தப்பட்டவர்களில் மற்றவர்களை ஓரளவு தள்ளிவிட்டுக் கடைசியில் அதோடு ஸம்பந்தப்படுகிற இரண்டு பேரை மட்டும் முக்யமாகக் கவனிக்கச் சொல்லியிருக்கிறது. ‘ Raw -ஆக (கச்சாப் பொருளாக) அரிசி, மற்ற தான்யங்கள், காய்கள் முதலானவை எங்கேயிருந்து வேண்டுமானாலும் வந்துவிட்டுப் போகட்டும். நாம் காசு கொடுத்து அதை வாங்குகிறபோது, இப்படி அதற்காக நாம் ஒரு தியாகத்தைப் பண்ணிவிடுவதால், அதில் படிந்திருக்கிற மானஸிகப் பரமாணுக்கள் நம்மைத் தொடாது. அல்லது நம் சொந்த வயலிலோ, நாம் இருக்கிற வீட்டுத் தோட்டத்திலோ அவை விளைந்து வருகிறபோது அதன் பொருட்டு நாமே செலவழிக்கிறோம், உழைக்கிறோம், நம் எண்ணத்தையும் கவனத்தையும் கொடுக்கிறோம் என்பதால் அவை raw-ஆக உள்ள போது நம்மைப் பாதிக்காது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனாலும், “பச்சைத் தானியத்தையும் கறிகாயையும் நாம் புஜிப்பதற்கு யோக்யதையாக வேக வைத்தோ, பொறித்தோ, அரைத்தோ சாப்பாடாக ஆக்கும் சமையல்காரன் யார், அப்புறம் அதை எடுத்து நமக்குப் பரிமாறுவது யார் என்று பார்த்துக்கொள். இந்த இரண்டு பேர் ஸாத்விகமாக இருந்தால்தான் அந்த ஆஹாரம் நம் சித்தத்துக்கு நல்லது செய்யும்” என்று சாஸ்திரம் சொல்கிறது. கெட்டியாக இருக்கிற தானியத்திலும் பச்சைக் கறிகாயிலும் வியவஸாயி, வியாபாரி ஆகியவர்களுடைய எண்ணம் ‘இம்ப்ரெஸ்’ ஆவதைவிடச் சமையற்கார், பரிசாரகர் ஆகியவர்களின் எண்ணம் வெந்து குழைந்த ஆஹாரத்தில் நன்றாகப் பதிந்துவிடும் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்!

கெட்டதைப் போலவே நல்லதும் ஆஹாரத்தில் ஸம்பந்தப்பட்டவர்களைப் பொருத்து உண்டாகிறதும் உண்மைதான். பழங்காலத்தில், அதாவது பிராம்மணர்கள் உத்யோகத்துக்குப் போக ஆரம்பித்ததற்கு முந்தி, அவர்கள் தானமாகத்தான் எல்லாம் பெற்று வந்தார்கள். அரிசி வாங்கக்கூட அவர்களுக்கு ‘ஐவேஜி’ கிடையாது. ஆனாலும் அவர்களுக்கு தானம் பண்ணினவர்கள் மரியாதையோடும் பிரித்தோடும் அர்ப்பணம் பண்ணினதால் அந்த நல்ல எண்ணத்தின் சக்தியில், வஸ்துக்களுக்கு ஏற்கெனவே ஏற்பட்டிருக்கக் கூடிய தோஷம் ‘ந்யூட்ரலைஸ்’ ஆகியிருக்கிறது. கதை ராஜாவும் பக்தியோடுதான் அர்ப்பணம் செய்தான்; ஆனால் அந்த ஆஹாரம் ஏன் மஹானின் புத்தியைக் கெடுத்தது? ஏனென்றால், ராஜதர்மபடி யாரும் உரிமை கோராதது விலைகொடுத்து வாங்காவிட்டாலும் ராஜாவைச் சேரலாமாயினும், உரிமை உடைமை இதுகளே இல்லாத ஸத் புருஷர்களின் தர்மத்தோடு அது ஒட்டாது. இதிலே இன்னொன்று: நிலச் சொந்தக்காரன், உழவன் ஆகியவர்களிலிருந்து ஆரம்பித்து ஆஹாரத்தைப் பரிமாறுகிறவர் வரையில் பொதுவாக எல்லாரும் ஸாமான்ய ஜனங்களுக்குள்ள ஸாமான்ய குணதோஷங்களுள்ளவர்களாகவே இருப்பார்கள். சற்றுமுன் சொன்னாற்போல இதில் நல்லதும் கெட்டதும் ஒன்றையொன்று ந்யூட்ரலைஸ் செய்து கொண்டுவிடும் என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால் கதையிலே ஸாதாரணமாக எவரும் செய்யக்கூடிய தோஷமாக இல்லாமல், எங்கேயோ எவனோ மட்டும் செய்கிற பெரிய குற்றமாகவே உள்ள திருட்டு என்கிற மஹாதோஷமும் சேர்ந்திருக்கிறதல்லவா? அதை ராஜாவின் நல்லெண்ணம் கூட ந்யூட்ரலைஸ் செய்ய முடியாதுதான். குருவின் தபஸும் அதற்கு அரை நாளாவது அடங்கித்தான் போயாக வேண்டியிருந்திருக்கிறது.

பழைய காலத்தில் ஸாதாரணமாக பொது ஜனங்களின் குணத்தில் நல்லது ஜாஸ்தியிருந்தது. அப்படியிருந்தபோதே அதில் எங்கே கெடுதல் இருந்து விடுமோ என்பதால் ஆஹார சுத்தியில் அதில் ஸம்பந்தப்பட்டவர்களின் சுத்தத்தையும் கவனி என்று ரூல் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது, நம் நாளில் – சொல்ல வருத்தமாகத் தான் இருக்கிறது – சாஸ்திரங்களை விட்டு, மனம் போனபடி பண்ணுவது என்று நாம் எதற்கும் துணிந்து காரியங்களைச் செய்து வருவதில், நல்லது-கெட்டதுகளை நிறுத்துப் பார்த்தால் ஒன்றுக்கொன்று ந்யூட்ரலைஸ் ஆகாமல், கெட்டதுதான் தூக்கலாக நிற்கும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதனால் நல்லதில் போகவேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருந்தால் ஆஹார விஷயத்தில் ஜாக்ரதையாகத்தான் இருக்க வேண்டும்.

பக்வம் பண்ணாத பச்சை வஸ்துக்களைக்கூட சராசரித் தப்புத் தண்டாக்களைவிட ஜாஸ்தியாகப் பண்ணினவர்களிடமிருந்து வாங்காமலிருக்கப் பார்க்க வேண்டும். Smuggle பண்ணினது, ப்ளாக் மார்க்கெட்காரனுடையது இவையெல்லாம் கூடாது.

சமைக்கிறவர், பரிமாறுகிறவர் இரண்டு பேரும் யாரென்று பார்த்துக்கொள்ள வேண்டியது ரொம்ப அவசியமாகும். பொதுவாகச் சொல்கிறது என்னவென்றால் ஒரு தாயாரோ, பத்தினியோ சமைத்துப் பரிமாறுகிறாளென்றால் அதை போஜனத்துக்கு யோக்யமான ஸாத்விக ஆஹாரம் என்று வைத்துக் கொள்ளலாம் என்பதே. அவளுடைய பொதுக்குணம் பொல்லாததாக இருந்தாலுங்கூட புத்ரனிடம், பதியிடம் மட்டும் பிரியமே வைத்து அவன் நன்றாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறவளாகத் தான் இருப்பாளாதலால் அவள் கை அன்னம் ஸாத்விகமானது என்று வைத்துக் கொள்ளலாம் என்று ஏற்பட்டிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is உயிருதாரணத்தால் உண்டான சாஸ்திரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  முக்குணங்களும் உணவும்
Next