Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

மூல சாஸ்திரமும், மாறான ஸம்பிரதாயமும்1 : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பொதுவான சாஸ்திராசாரம் இருக்கும்போதே, அதற்குள் வித்யாஸமாகச் சில குலாசாரஙகள், ஸம்பிரதாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மூல சாஸ்திரத்தில் இருப்பதற்குக் கூடுதலாகவும், சில சின்ன அம்சங்களில் அதற்கு மாறாகவும்கூட நீண்ட காலமாகவே நல்ல சிஷ்டர்ககள் உள்பட பலரும் அநுஸரிக்கிற அநேக ஸம்பிரதாயங்கள் எப்படியோ ஏற்பட்டிருக்கின்றன.

ஒன்றுக்கொன்று வித்யாஸமான இந்தப் பல ஆசரணைகளைக் குலாசாரம், தேசாசாரம் என்ற பெயர்களில் பிற்கால தர்ம சாஸ்திரங்களே ஒப்புக் கொண்டிருக்கின்றன என்றும், சாஸ்திரத்தில் நிரம்ப பயபக்தியுள்ள பூர்விகர்கள் காலத்திலிருந்தே இப்படிப்பட்ட மாறுதல்களும் செய்யப்பட்டிருப்பதால், அவர்களுக்கு இப்படிப் பண்ணாலமென்று ஏதோ ஒரு திவ்யாக்ஞை கிடைத்துத்தான் மாறுதல் செய்திருப்பார்களென்று வைத்துக் கொண்டு, அந்தப்படியே நாமும் பண்ணிக்கொண்டு போகலாம் என்றும் சொன்னேன். இதனால் இப்போது நாமும் தலைக்குத் தலை தோன்றின மாதிரியெல்லாம் மாற்றிக்கொண்டு போகலாம் என்று அர்த்தமாகாது. நாம் பண்ணுகிற மாறுதல், இப்போதெல்லாம் ‘கான்ஷன்ஸ்’, ‘மனஸ்ஸாக்ஷி’ என்று பெரிசாகச் சொல்கிறார்களே அதன்படி நமக்குத் திருப்தியாயிருந்து விட்டால் மட்டும் போதாது. அதற்குப் பரமேஸ்வரனின் அங்கீகாரம் இருக்கிறது என்று நமக்கு நிச்சயமாகத் தெரிய வேண்டும்.

குலாசாரம், தேசாசாரம் என்று நமக்குத் தெரிந்து அநேக தலைமுறைகளாக வந்திருப்பவை மூல சாஸ்திரங்களுக்குக் கொஞ்சம் வித்யாஸமாகப் போகிற இடங்களில் கூட அவற்றின் வழியிலேயே நாமும் போவதில் தப்பில்லை என்று நான் சொன்னாலும், இப்போது ரொம்பவும் சாஸ்திரக்ஞர்களாக இருக்கப்பட்ட சிலபேர், “ஸித்தாந்தம், அதை வைத்து உண்டான ஆத்மார்த்தமான அநுஷ்டானங்கள், சின்னங்கள் ஆகியவற்றில் குலாசாரப்படியே பண்ணவேண்டுமென்றாலும், இவ்வளவு ஆத்மார்த்தமாக இல்லாத விஷயங்களுக்காக தேசாசாரம், குலாசாரம் என்ற பெயர்களில் ஆதி வைதிகாசாரத்துக்கு வித்யாஸமாகப் போவது ஸரியில்லைதான். மூலத்தைத் தான் ஸ்ட்ரிக்டாக ஃபாலோ பண்ணணும்” என்று தைரியமாக ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் சொல்கிறதிலும் ஸாரம் இல்லாமலில்லை. தேசாசாரம், குலாசாரம் முதலியவற்றைப் பற்றிச் சற்றுமுன் நான் சொன்னதற்கு ஒரு sub-clause போட்டால் தேவலையென்று இப்போது தோன்றுகிறது: அதாவது, ஒரு ஸித்தாந்தத்தோடு சேராமலே மூல சாஸ்திரத்துக்கு மிகவும் வித்யாஸப் பட்டிருக்கிற சில பழக்கங்கள் பல தலைமுறைகளாகவே ஏதோ காரணங்களுக்காக ஒரு ஸம்பிரதாயமாக வளர்ந்து வந்திருந்தால்கூட இவற்றை ஒரிஜனல் சாஸ்திரப் பிரகாரமே திருத்தினால்தான் தேவலை என்று தோன்றுகிறது உதாரணமாக:

மூன்று தலைமுறைகளுக்குப் பொதுவான மூதாதையில்லாவிட்டால்தான் உறவுக்காரர்களுக்குள் கல்யாணம் பண்ணலாம் என்று சாஸ்திரத்திலிருக்கிறது. ஆரோக்யத்தின்படி consanguinous marriage (ரத்த பந்துக்களுக்குள் விவாஹம்) பற்றிச் சொல்கிறவர்களும் சாஸ்திரம் சொல்வது ஸரியே என்கிறார்கள். ஆனாலும் நம் தக்ஷிண தேசத்தில் நீண்ட காலமாகவே பரம வைதிகக் குடும்பங்களில் கூட அத்தான்-அம்மங்காள், அம்மாஞ்சி-அத்தங்காள் என்று அத்தை, மாமா ஸந்ததிகளுக்கிடையே, – அதாவது இரண்டாவது மூதாதையான தாத்தாவே பொதுவாயிருக்கிற உறவு முறையில் – சாஸ்திரத்துக்கு முரணாகக் கல்யாணம் பண்ணிக்கொண்டுதான் வருகிறார்கள். இன்னம் ஒரு படி மேலே போய் மாமா-மருமாளே பண்ணிக் கொள்வதையும் சில இடங்களில் பார்க்கிறோம். ‘இதென்ன அநியாயம்?’ என்று வடக்கத்திக்காரர்கள் கேட்கிறார்கள். வடக்கே குளிர்காலத்தில் குளிர் மிகவும் அதிகமாயிருப்பதாலும், அநேக துருக்கர் ஆட்சியின் இன்ஃப்ளுயென்ஸ் எத்தனையோ நூற்றாண்டுகளாக அதிகமாக இருந்திருப்பதாலும் நம்மை விட அவர்கள்தான் ரொம்ப ஆசார ஹீனமாக, பூஜாரிகூட சட்டை போட்டுக்கொண்டும், ஸாதுக்கள்கூட ஹுக்கா குடித்துக்கொண்டும் இருந்தாலும், இந்தக் கல்யாணக் கொள்வினை-கொடுப்பனையில் அவர்கள்தான் நம்மை விட சாஸ்திரோக்தமாக இருக்கிறார்கள்.

வேறு சில விஷயங்களிலும் அவர்கள் நம்மைவிட வைதிகம். எனக்கே ஆசாரம் சொல்லிக் கொடுக்கிற வடக்கத்திக்காரர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். ஸமீபத்தில்2 நடந்த ஒன்று சொல்கிறேன். கோரக்பூரில் ‘கல்யாண கல்பதரு’ பத்திரிகை நடத்துகிறார்கள். அந்த கீதா ப்ரெஸ்காரர்கள் பக்த கோஷ்டியோடு தக்ஷிணத்துக்கு யாத்ரை வந்திருந்தார்கள். நானூறு, ஐநூறுபேர் இருக்கும். காஞ்சீபுரத்துக்கும் வந்தார்கள். அன்றைக்கு எனக்கு மௌன தினம். மா மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். தர்சனத்துக்கு வந்தார்கள். பிரஸாதமாகக் கல்கண்டு தந்தேன். அப்போது பல பேர் என்னவோ தயங்கி தயங்கி வாங்கிக்கொள்கிற மாதிரி இருந்தது. நான் பாட்டுக்குக் கொடுத்துக்கொண்டே போனேன். ஒரு பெண் மட்டும் இப்படித் தயக்கதோடு வாங்கிக் கொள்வது என்றில்லாமல், அதை வாங்கிக் கொள்ளவே இல்லை. பளிச்சென்று, “யஹ் காம் மேம் நஹி ஆதா; கோயி தூஸ்ரா ப்ரஸாத் தீஜியே” என்று சொல்லிவிட்டாள். அதாவது, “இது ஒரு காரியத்துக்கும் பிரயோஜனப்படாது; வேறே ஏதாவது பிரஸாதம் தாருங்கள்” என்றாள். உடனே எனக்கு மற்றவர்கள் ஏன் தயங்கினார்கள் என்று காரணம் புரிந்துவிட்டது. முன்னெல்லாம் சர்க்கரை ஆலைகளில் கரும்பைச் சுத்தமாக்கிக் கல்கண்டு பண்ணுவதற்கு மாட்டு எலும்புகளை உபயோகப்படுத்தி வந்தார்கள். அதனால் அது ஸ்வாமி நைவேத்யமாகவும் பிரஸாதமாகவும் இருப்பதற்கில்லை என்று வடக்கே வைத்திருக்கிறார்கள். [1934-36ல்] நான் வடக்கே யாத்ரை பண்ணினபோது இதைத் தெரிந்து கொண்டு சேர்க்கக் கூடாது என்று வைத்திருந்தேன். அப்புறம் கொஞ்சம் வருஷத்துக்குப் பிற்பாடு ஆலைக்காரர்கள் சிலர் இப்போதெல்லாம் எலும்பை உபயோகபடுத்தாமலே வேறு தினுஸில் ப்ராஸெஸ் பண்ணுவதாகத் தெரிவித்தார்கள். அதிலிருந்து மறுபடி கல்கண்டு சேர்ப்பது என்று ஆரம்பித்தேன். ஃபாக்டரிகளின் பழைய முறையை நினைத்துத்தான் இப்போதும் இந்த வடக்கத்தி கோஷ்டி கல்கண்டை ‘அக்ஸெப்ட்’ பண்ணிக்கொள்ள முடியவில்லை; ஆனாலும் ‘ரிஃப்யூஸ்’ பண்ணினால் ஸ்வாமிஜிக்கு மரியாதைக் குறைச்சலாச்சே என்று ‘ரிலக்டன்ட்’டாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெண்ணானால் ஆசார்யனைவிட ஆசாரந்தான் முக்கியம் என்று (ஆசார்யர்கள் ஒருத்தர் போய் இன்னொருத்தர் என்று வந்து கொண்டேயிருக்கிறார்கள்; ஆசாரம்தானே என்றைக்கும் சாச்வதமாக, இத்தனை ஆசார்யர்களுக்கும் basic-ஆக இருக்கிறது என்று) தைரியமாக: ‘இது வேண்டாம்; வேறே கொடுங்கோ’ என்று சொல்லி விட்டாளென்று புரிந்து கொண்டேன். மௌனமானதால் அப்போது ஒன்றும் எக்ஸ்ப்ளைன் பண்ணவில்லை. நம்மைவிடச் சிலதில் வடதேசக்காரர்கள் சாஸ்திரோக்தமாயிருக்கிறார்களென்பதற்காகச் சொன்னேன்.

இப்படியேதான் பிரம்மசர்ய காலத்திலிருந்து அங்கேதான் கச்சம் போட்டு வேஷ்டி உடுத்துகிறார்கள். குருகுலத்தில் ஸமாவர்த்தனம் ஆனதும் — அதாவது படிப்பு பூர்த்தியானதுமே – கல்யாணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் பஞ்சகச்சமும் மேல் வேஷ்டியும் ஒருத்தனுக்கு உண்டு என்பதுதான் சாஸ்திரம். இப்போது குருகுலவாஸமென்பதே போய்விட்டதென்றாலும் எங்கேயாவது நாலு பசங்கள் பாடசாலைகளில் அத்யயனம் பண்ணுவதாவது இருக்கிறதல்வா? தக்ஷிண தேசத்தில் இப்படிப்பட்ட பாடசாலைப் பசங்கள் கூடப் படிப்பு முடித்தபின், கல்யாணமாகும் வரையில் முன்தலைமுறைகளிலும் இப்படித்தானிருந்திருக்கிறது. மற்றப் பிராந்தியங்களிலெல்லாம் ஸகல வர்ணத்தாருமே கச்சமில்லாமல் வேஷ்டி கட்டுவதில்லை என்று வைத்துக் கொண்டிருக்க, தமிழ் நாட்டிலும் மலையாளத்திலும் மாத்திரம் பிராம்மணன் உள்படத் ‘தட்டுச்சுற்று’ என்று ஒன்றுக் கட்டிக் கொள்வதாயிருக்கிறது. இதுவும் அசாஸ்திரீயமே; அநாசரமே.

சாஸ்திரங்களில் சொன்னதற்கு மாறாகச் ‘அச்சான்யம்’ என்ற பேரில் சிலவற்றைப் பின்பற்றுவதாக ரொம்ப காலமாகவே ஏற்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. உதாரணமாக: தாயார் தகப்பனார் உள்ளவர்கள் பூணூலைத் தோள் மாற்றிப் போட்டுக்கொண்டால் பார்க்க அச்சான்யமாயிருக்கிறது. இதனால் பிரம்மயஜ்ஞத்தில் மாதா-பிதா உள்ளவர்கள்கூட, தங்கள் வம்சத்தின் நேர் மூன்ற மூதாதைகளைத் தவிர்த்து, வேத சாகா-ஸூத்ர முன்னோர்களுக்கு பூணூலை மாற்றிப் போட்டுக்கொண்டு தர்ப்பணம் பண்ணத்தான் வேண்டுமென்று சாஸ்திரத்தில் இருந்தாலும், அப்படிச் செய்யாமலிருக்கிறார்கள்.

கல்யாணமாகாத அக்கா இருக்கிறபோது தம்பிக்குப் பூணூல் போடக்கூடாது; ஒரு வீட்டில் மூன்று பிரம்மச்சாரி இருக்கக்கூடாது என்கிற மாதிரி வெறும் ஸென்டிமென்டில் தோன்றிய வழக்குகளை ஏதோ பெரிய சாஸ்திர விதி மாதிரி ஃபாலோ பண்ணிக்கொண்டு, வாஸ்தவத்திலே சாஸ்திரத்தில் கண்டிப்பாக உபநயனத்துக்குச் சொல்லியுள்ள வயசு வரம்பை மீறுகிறார்கள். இம்மாதிரி ஸநாதன வைதிக மதத்தின் ‘ஸ்பிரிட்’டுக்கே வித்யாஸமாகச் செய்வதையெல்லாம் மாற்றினால்தான் தேவலை.

‘ஸதாசாரம்’ என்பதற்கு லக்ஷணம் சொல்கிற போதே அது ச்ருதி-ஸ்மிருதிகளின் மூல ரூல்களுக்கு விரோதமில்லாமலிருக்க வேண்டுமென்று தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

யஸ்மிந் தேசே யத் ஆசார: பாரம்பர்ய: க்ரமாகத: |

ச்ருதி-ஸம்ருத்-யவிரோதேந ஸதாசாரஸ்-ஸ உச்யதே ||

பரம்பரையாக, வழி வழி, அநேக ஸத்துக்கள் வெவ்வேறு தேசங்களிலோ, ஒரு தேசத்தின் வெவ்வேறு சீமைகளிலோ எப்படி வாழ்ந்திருக்கிறார்களோ அந்த முறைக்கு ‘ஸதா சாரம்’ என்று பெயர் என்று broad-minded-ஆக (விசால மனஸோடு) இங்கே லக்ஷணம் கொடுக்கிறபோதே ஆனாலும் நம் தேசத்தில் எந்தச் சீமையானாலும் இந்த ஆசாரங்கள் ச்ருதி ஸ்மிருதிகளுக்கு அவிரோதமாக அதாவது பொதுவான வேதத்திற்கும், மூல தர்ம சாஸ்திரங்களுக்கும் விரோதமாகப் போகாதவையாக இருக்க வேண்டுமென்றும் நிபந்தனை போட்டிருக்கிறது: ச்ருதி-ஸ்ம்ருத்-யவிரோதேந.
சாஸ்திரங்களில் அது போடுகிற விதிக்கு மாறாக அதுவே விலக்கு தருகிற இடத்தில் மட்டுந்தான் நாமும் விலகிப் போகலாம்; மற்றபடி, மூலப்படிதான் செய்ய வேண்டும். செய்வது என்பது தற்போதைய வாழ்க்கை முறையில் ஸாத்யமோ ஸாத்யமில்லையோ; மனஸிலாவது மூல சாஸ்திர ரூல்தான் ‘அதாரிடி’ என்ற எண்ணம் வேண்டும், அந்தப்படி பண்ணத்தான் நம்மால் முடிந்த அளவு முயலவேண்டும்.


1 இவ்விஷயமாக “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில் “பிரம்மசரியம்” என்ற உரையில் ‘சாஸ்திர விதியும் பொது வழக்கும்‘ என்ற உட்பிரிவும் பார்க்க.

2 1956-ல் நடந்ததாக இருக்கலாம்

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மந்திர பூர்வமாய் தெய்வ நினைவோடு காரியம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  கேள்வி கேட்காமல்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it