மந்திர பூர்வமாய் தெய்வ நினைவோடு காரியம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்திரம், காயத்தால் காரியம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மந்திரம் அல்லது பகவந் நாமம் இல்லாமல் காரியத்தைப் பண்ணுவதில் பிரயோஜனம் இல்லை. மநுஷ்யன் செய்கிற காரியத்தில் அநேகம் எல்லா ஜீவ ஜந்துக்களுந்தான் செய்கின்றன. ஒரு கிருமியிலிருந்து ஆரம்பித்து எந்த ஜீவராசியும் சாப்பிடத்தான் செய்கிறது. அப்படியே மநுஷ்யனும் செய்தால் மநுஷ்ய ஜன்மா எடுத்து என்ன பிரயோஜனம்? அதனால்தான் இவன் பிராணாஹுதி செய்து, கோவிந்த நாமாவைச் சொன்னபடிச் சாப்பிடவேண்டுமென்று சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. மீன்கூடத்தான் ஸதாவும் ஜலத்திலேயே முழுகியிருக்கிறது. அதனால் அது ஸ்நானம் பண்ணி மடியாயிருக்கிறதாகி விடுமா? மந்திரவத்தாகக் குளித்தால்தான் அது ஸ்நானமாகும். அல்லது கோவிந்தா, கோவிந்தா என்றோ, இஷ்ட தெய்வத்தின் நாமத்தைச் சொல்லிக் கொண்டோ ஸ்நானம் செய்யவேண்டும். இப்படி எல்லாமே காரியமாக மட்டுமில்லாமல் மனஸும் வாக்கும் ஈச்வரனிடம் செலுத்தப்பட்டுச் செய்யப்படுவதுதான் ஆசாரம்.

மீனைப் பற்றிச் சொன்னதால் ஒன்று வேடிக்கையாய் ஞாபகம் வருகிறது. மடி, மடி என்று எச்சில், துப்பல் ரொம்பவும் பார்க்கிற சாஸ்திரத்திலேயே ரொம்பவும் மடித் தப்பு மாதிரித் தோன்றுகிற சிலவற்றைப் பூஜார்ஹமாக [பூஜைக்கு உரியதாக] உயர்வு கொடுத்துச் சொல்லியிருக்கிறது. தேனீயுடைய எச்சில்தான் தேன். ‘வண்டெச்சில்’ என்றே அதற்கு ஒரு பேர். பட்டுப்பூச்சியின் எச்சில் இழைதான் பட்டு. கன்றுக்குட்டி எச்சில் பண்ணி ஊட்டின பிறகு கறப்பதே பால். புண்ய தீர்த்தங்களிலும் மத்ஸ்யங்கள் வாழத்தான் செய்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் ஈச்வரராதனையிலேயே பிரயோஜன படுத்துகிறோம்.

இப்படி சாஸ்திரத்திலேயே சாஸ்திரத்தின் பொதுவிதிக்கு மாறாகவும், அதைத் தளர்த்திக் கொடுத்து relax பண்ணியும் சில விதிகள் இருக்கின்றன. இப்படியிருக்கிறதே என்று நாமும் மேலே மேலே விலக்குகளைச் சேர்த்துக் கொண்டு போவது, தளர்த்திக் கொண்டு போவது என்பதாக ஸ்வதந்திரம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is உணர்ச்சிப் பூர்வமான விஷயங்கள் -  -
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  மூல சாஸ்திரமும், மாறான ஸம்பிரதாயமும்
Next