விஞ்ஞானத்துக்குக் கட்டுப்பட்டதல்ல : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆனால் நான் என்ன சொல்கிறேனென்றால், இந்தவரைக்கும் இது ஸந்தோஷக்குரியதுதான் என்றாலும், நம் ஆசார அநுஷ்டானங்கள் பூராவையும் ஸயன்ஸின் எல்லைக்குள் கொண்டு வந்து, அந்த அடிப்படையில் நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது ஸரியில்லை என்கிறேன். ஸயன்ஸுக்கோ, நம்முடைய ஸோஷல் ஐடியாலஜிக்கோ, வேறெதற்கோ சாஸ்திரம் agree-ஆக வேண்டும் [ஒத்துப்போக வேண்டும்] என்கிற எண்ணமே தப்பு என்பது என் அபிப்ராயம். சாஸ்திரத்தின் ஸத்யம் அதன் சொந்தப் பிரமாணத்திலேயே இருக்கிறது. அது ரிஷிகள் கொடுத்த super-science [நம் விஞ்ஞானத்துக்கு அதீதமான உயர் விஞ்ஞானம்] . பாக்கி எல்லாவற்றுக்கும் இது பிரமாணமே தவிர, அவற்றின் basis-ல் (அடிப்படையில்) இதை ஒப்புக் கொள்வதென்பது தலைகீழ்ப் பாடம். நம்முடைய சிற்றறிவில் தோன்றும் social concept -களை [ஸமூஹக் கருத்துகளை] நாம் சாஸ்திரப்படி மாற்றிக்கொள்ள வேண்டுமேயன்றி, சாஸ்திரம் நம்முடைய ‘கான்ஸெப்டு’ க்கு வளைந்து கொடுக்க வேண்டுமென்று நினைப்பது தப்பு.

சாஸ்திரத்திலே நிறைய ஸயன்ஸ் இருக்கிறது வாஸ்தவம். அதனாலேயே அது முழுக்க ஸயன்ஸுக்கு உடன்பட்டாகிவிட வேண்டும் என்று ஆகாது. முன்னே கேலி செய்த விஷயங்களில் பல இப்போது விஞ்ஞான ரீதியில் அர்த்தமுள்ளவை என்று அறிகிற அடக்கம் நமக்கு வரவேண்டும். “நமக்குத் தெரிந்த ‘த்ருஷ்ட’த்தோடு, தெரியாத, தெரிய முடியாத ‘அத்ருஷ்ட’மும் இருக்கிறது; அதிலேதான் நம் நிறைவிருக்கிறது; இந்த ‘அத்ருஷ்ட’த்தைச் சொல்லும் சாஸ்திரங்களை அநுஸரித்து நடந்துதான் நம் பூர்விகர்கள் பக்தியிலும் ஞானத்திலும் நிறைந்து லோகமெல்லாம் புகழும்படியாக இருந்தார்கள்; அதை விட்டதிலிருந்துதான் நாம் விஞ்ஞானத்திலும் பொருளாதாரத்திலும் எத்தனையோ முன்னேறியுங்கூடக் கொஞ்சமும் நிறைவேயில்லாமல் திரிந்துகொண்டு, லோகமும் நம்மை மட்டந்தட்டும்படியாக ஆகிக்கொண்டு வருகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற எல்லாமே நிஜம் என்ற நம்பிக்கை பெற வேண்டும்.

நமக்குத் தெரிகிற ஸயன்ஸ், வைத்ய சாஸ்திரம் முதலானற்றுக்காகத்தான் ஆசாரம் என்றால் சாஸ்திர விதிகளை இவற்றின்படி மாற்றிக் கொண்டால் என்ன என்ற எண்ணம் வரும். சாணி போட்டு மெழுகுவது அது anti-septic என்பதற்காக மட்டுந்தான் என்று வைத்துக் கொண்டுவிட்டால், அப்புறம் நம் பூஜை மாடத்தையோ அல்லது யாகசாலையையோ ஏன் சாணிக்குப் பதில் ஃபினாயில் அல்லது கார்பாலிக் ஆஸிட் போட்டு அலம்பக் கூடாது என்று கேட்கத் தோன்றும். மணையில் உட்கார்ந்து கொண்டுதான் வைதிக கர்மா பண்ணணும் என்பது மந்திரத்தின் எலக்ட்ரிஸிடி நம்மை விட்டுப் போகப்படாது என்பதற்காக மட்டுமே என்று வைத்துக் கொண்டால் அப்புறம் மணைக்குப் பதில் ரப்பர் குஷனில் உட்கார்ந்து கொள்ளலாம், பவித்ரத்துக்குப் பதில் gloves போட்டுக் கொள்ளலாம் என்றெல்லாம் ‘லாஜிக’லாக ஒப்புக் கொள்ள வேண்டிவரும்.

இதைச் சொல்லும்போது எலக்ட்ரோ-மாக்னடிஸ தியரி உள்பட எல்லாம் நம் முன்னோர்களுக்குத் தெரிந்திருந்ததை நினைத்து ஆச்சர்யமாயிருக்கிறது. லோகம் முழுக்க எலக்ட்ரிஸிடி நிறைந்திருக்கிறது; மநுஷ்ய சரீரம் எண்ணம் இதுகளில்கூட எலக்ட்ரிக் கரென்ட் ஓடிக் கொண்டிருக்கிறது என்று இப்போதுதான் நம் ஸயன்டிஸ்ட்கள் கண்டுபிடித்திருக்கிறார்களென்றால் இதை எத்தனையோ ஆயிரம் வருஷம் முந்தியே நம் சாஸ்திரக்காரர்கள் தெரிந்து வைத்துக் கொண்டுதான் நம்மிடம் சேர்கிற மின்ஸார சக்தி வெளியே போகாமல் bad conductor -களாலான [மின்சாரத்தைக் கடத்தாதவையான] வஸ்துக்கள், உபகரணங்கள் முதலியவற்றையும், மின்ஸார சக்தியை கிரஹித்துக் கொள்ளும் good conductor -களாலான [மின்சாரக் கடத்துவிகளாலான] உபகரணங்கள், பாத்திரங்கள் முதலியவற்றையும் சொல்லியிருக்கிறார்கள். உட்காருகிற மணை மாதிரியே யாகத்தில் ஹோமத்துக்குப் பிரயோஜனப்படுகிற கரண்டி bad conductor -ஆன மரத்தாலானதாகத்தான் இருக்க வேண்டும். மறு திசையில் செப்புப் பாத்திரம், செப்பு விக்ரஹம், பட்டு வஸ்திரம் முதலியன good conductor -கள்.

‘வாழாது வாழ்ந்தாலும் வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது’ என்பார்கள். ‘ இதெல்லாம் சுத்த மூட நம்பிக்கை என்று  இருபது, முப்பது வருஷம் முந்தி சொல்லி வந்தார்கள். இப்போதோ, ‘மநுஷ்ய சரீரத்தில் எலெக்ட்ரோ-மாக்னடிஸ் வேவ்’களுக்கு மூலஸ்தானம் brain (மூளை) தான். உலகத்தை எடுத்துக்கொண்டால் அதன் ‘மாக்னடிக் ஃபீல்டி’ன் மூலஸ்தானம் North Pole [வட துருவம்]. ஆகையால் நம் தலையை வடக்குப் பக்கம் வைத்துப் படுத்துக்கொண்டால் மூளையின் சின்ன காந்த சக்தியும் ஒன்றுக்கொன்று ‘க்ளாஷ்’ஆகி, மூளை பாதிப்புக்கு ஆளாகிவிடும் என்று ஸயன்டிஸ்ட்கள் சொல்கிறார்கள். அதே ஸமயம் ஜபம், தியானம் பண்ண வடக்குப் பார்த்து உட்காருவது நல்லதென்று சொல்லியிருக்கிறது. தூக்கத்தில் புத்தியும் மனஸும் நமக்கு வசப்படாமல், தன்னையும் மீறித் தூக்கம் நம்மை வசப்படுத்தி ஓய்ச்சலில் அடித்துப் போடுகிறது; அப்போது புத்தி களைத்துக் கிடக்கிறது; அல்லது நம் வசத்திலில்லாததால் கன்னா பின்னா என்று கனவுகளைக் கல்பித்துக் கொள்கிறது. இம்மாதிரி ஸமயத்தில் இந்தச் சின்ன மாக்னட்டை, லோகத்தின் பெரிய மாக்னட்டுக்கு நேரே பிடித்தால் தாறுமாறாய்விடும். ஆனால், ஜப, த்யான காலத்தில் நாம் மனஸை அப்படியே அடக்கி வசப்படுத்த முடியாதவர்களாயிருந்தாலுங்கூட, அப்படிப் பண்ண வேண்டும் என்ற லக்ஷ்யமாவது நமக்கு இருக்கிறது. ஈஸ்வரன் விஞ்ஞானக் கருவிகளுக்கு த்ருஷ்டமாயுள்ள மின்ஸார காந்த சக்தியாய் மட்டுமில்லாமல், நம் லக்ஷ்யத்தைத் தெரிந்துகொண்டு அதற்கு அருள் செய்கிறவனாயும் இருப்பதால் த்யான காலத்தில் அதே காந்த சக்தி நமக்கு நல்ல ‘பவரை’க் கொடுக்கும்படிப் பண்ணுகிறான். ஷாக் அடிக்கிற எலெக்ட்ரிஸிடியைக்கொண்டே நாம் எத்தனையோ நல்லதைப் பெறவில்லையா? அந்த மாதிரி பிராணசக்தி நம் தேஹத்திலுள்ள சக்கரங்கள் வழியே போகிறதிலும் சயனநிலை, த்யானத்தில் உட்காரும் நிலை ஆகியவற்றுக்குள் ரொம்ப வித்யாஸமுண்டு. அதுவும் தவிர, வடக்கே மேருவில் இருக்கிற யோகிகள், ஞானிகள் ஆகியோரின் அநுக்ரஹ wave -ஐயும் அந்தப் பக்கம் பார்த்து ஜபம் பண்ணும்போது சற்று ஸுலபமாக கிரஹிக்கலாம். இப்படி ஒருத்தரின் உள்தன்மை, அன்பு முதலானவை வெளியே பரவுவது, தந்தியும்  ஃபோனும் இல்லாமலே மனஸுக்கு மனஸ் தொடர்பு கொள்கிற ‘டெலிபதி’ இவற்றையும் விஞ்ஞான பூர்வமாக ஒப்புக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

வடக்குப் பார்த்து ஒன்றைப் பண்ணுவது, இன்னொன்றைப் பண்ணாததற்கு இத்தனை அர்த்தமிருக்கிறது!

ஆனால் சாஸ்திரத்தில் எலெக்ட்ரோ மாக்னெடிஸத்தைப் பற்றிச் சொல்லாமல்தான் விட்டிருப்பார்கள். புராணத்தில் பார்த்தால், இதற்குக் கதையும் சொல்லியிருக்கும். வாழாது வாழ்ந்த எவனோ ஒருத்தன் வடக்கே தலை வைத்துக்கொண்டு படுத்திருந்தான், அதனால் அவனுடையே மேன்மையே படுத்துப் போச்சு என்றுதான் கதையில் இருக்குமே தவிர விஞ்ஞான தத்வம் சொல்லியிருக்காது. முன்னேயே சொன்ன மாதிரி ஒரு சுத்தி எத்தனையோ நல்லதற்கு பிரயோஜனப்படுகிறது என்றாலும் அதைக் குழந்தை கையில் கொடுக்கக்கூடாது என்கிறமாதிரி, விஞ்ஞான தத்வங்களையும் அதைப் பிரயோஜனப்படுத்தும் கார்யக் கிரமங்களையும் பொது ஜனங்களுக்குச் சொல்லக்கூடாது என்றேதான் இப்படிப் பண்ணியிருக்கிறது.

அந்தப் புராணக் கதையும் நிஜம் என்றே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஆஸ்திகர் கட்சி. லோகத்துக்குத் தெரிகிற ஸயன்ஸும், அதோடு தத்வமும் கதை புராணங்களும் ஸ்தாபிக்கிற (ஸயன்ஸுக்குத் தெரியாத) ஸத்யமும் சேர்ந்துதான் சாஸ்திரம்.

முன்னே தெரியாதிருந்த உண்மைகள் ஸயன்ஸுக்கு இப்போது தினந்தினம் புதிசு புதிசாகத் தெரிகிறபோது, முன்னே பரிஹாஸம் பண்ணின அநேக ஆசாரங்களை அதுவே சிலாகிக்க ஆரம்பிக்கிறது. பல் தேய்க்காமல் bed-coffee; வெள்ளைக்காரன் மாதிரி நித்ய ஸ்நானமில்லாமலிருப்பது; எப்போது பார்த்தாலும் உடம்பை மூடி thick துணியில் ஸுட்டும், கோட்டும் போட்டுக் கொண்டிருப்பது இதெல்லாம் நம் நாட்டு சீதோஷ்ணம், அதையொட்டி ஏற்படும் ஜீர்ணசக்தி முதலியவற்றுக்குப் பொருந்தாதவை என்று படிப்பாளிகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் பண்ணினால் அழுக்கு, வியர்வை இத்யாதிகளால் வியாதிகள் வரும் என்கிறார்கள்.

ஆனால் வியாதி வராமலிருப்பதற்கு மட்டுமில்லை சாஸ்திரம்; கர்ம வியாதியைப் போகப் பண்ணுவதற்காகப் புண்ய மருந்தைத் தரவே அது இருக்கிறது என்பதை மறக்கவே கூடாது. ஆரோக்யம் முதலான காரணங்களுக்காகத்தான் ஆசாரம் என்றால், ஒரு ஆசாரம் அநாரோக்யத்தை உண்டு பண்ண ஹேது இருப்பதாகத் தோன்றினால் அதை விட்டுவிடத் தோன்றும். தொத்து நோயுள்ளவர் உள்படப் பலர் கசகசவென்று கூடும் இடங்களுக்குப் போய்விட்டு வந்தால் ஸ்நானம் செய்வது ஆரோக்ய ரீதியில் நல்லது என்பதை நினைத்தோ ஸ்நான ஆசாரத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோமென்றால், இதற்கு விலக்காக ரதோத்ஸவத்தில் எத்தனை கூட்டத்தோடு இடித்துக் கொண்டு தேரிழுத்து விட்டுத் திரும்பினாலும் ஸ்நானம் பண்ணக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லியிருப்பது நம் ஹைஜீன் ஸயன்யோடு உதைத்துக் கொள்ளும். எத்தனை  பாசி பிடித்திருந்தாலும் திருக்குளத்தில் ஸ்நானம் பண்ணணும், எத்தனை அழுக்கானாலும் ஒரு மஹானின் பாத தீர்த்தத்தைப் புரோக்ஷணம் பண்ணிக்கணும், பாகவதர்கள் சாப்பிட்டு எழுந்த எச்சில் இலையில் விழுந்து புரளணும் என்பது போன்ற ஆசாரங்களை ஆரோக்யத்துக்காகவே ஆசாரம் என்றால் விட்டு விடும்படி ஆகும். அதனால், ‘புண்யத்துக்குத்தான் ஆசாரம், அந்தப் புண்யம் நம் புத்திக்கும் ஸயன்ஸுக்கும் பிடிபடாது’ என்பதை நன்றாக மனஸில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

பிறத்தியாரை ரொம்பவும் தொட்டுக் கொள்ளாமலிருப்பது, செத்த வீட்டில் சாவுத்தீட்டு என்று எதுவுமே சாப்பிடாமலிருப்பது, தீட்டுக்காக ஸ்நானம் செய்து, துணிமணிகளைத் தோய்த்துப் போடுவது முதலியனவெல்லாம் வியாதித் தடுப்புக்கு எத்தனை உபகாரமானவை என்று டாக்டர் கிங், ஐ.எம்.எஸ் (ஐ.ஏ.எஸ். மாதிரி, ஐ.எம்.எஸ் என்று ஆல் இண்டியா மெடிகல் ஸ்ர்வீஸ் இருந்தது. அதைச் சேர்ந்தவர் இவர்) , ஸானிடரி கமிஷனராயிருந்தவர், ஏகமாகக் கொண்டாடி எழுதியதுண்டு.

அவர் நாளில் பௌதிகமான ஜீன்ஸ் [ஜீவ நுண்ணணு] பாக்டீரியா, வைரஸ் [விஷக்கிருமி] இதுகளைப் பற்றி மாத்திரம் தெரிந்ததைக்கொண்டே அவர் இப்படிக் கொண்டாடியிருக்கிறார். ஆனால் அதற்கப்புறம் ஸைகலாஜி, பாராஸைகாலஜியெல்லாம் ரொம்பவும் ‘டெவலப்’ ஆகி மநுஷனுக்கு மநுஷன் எண்ணம், குணம் இவற்றை பொருத்துக்கூட வித்யாஸமான waves  [அதிர்வலைகள்] , aura [ஒளி வளையம்] ஆகியன இருப்பதாக ஏற்பட்டிருப்பதிலிருந்து, மைத்வம் என்ற பெயரில் எல்லாரையும் தொட்டுக் கொண்டும் தீட்டுப் பார்க்காமலும் பல பட்டடையாகக் குழப்பினால் அவரவர்களுடைய பிரத்யேகமான வளர்ச்சிக் கிரமம் பாதிக்கப்படும் என்று இன்னம் நன்றாகத் தெரிகிறது. ஒருத்தன் படுக்கையில் இன்னொருத்தன் படுத்துக் கொள்ளக் கூடாது, ஒருத்தன் வேஷ்டியை இன்னொருத்தன் கட்டிக் கொள்ளக் கூடாது, ஒருத்தனுடைய தீர்த்த பாத்திரத்தில் இன்னொருத்தன் குடிக்கக்கூடாது என்கிறதெல்லாம் இப்படி ‘பெர்ஸனல் மாக்னடினஸ’த்தை (மனோசக்தியை) க் காப்பாற்றிக் கொள்வதற்குத்தான்.

மாதவிடாய் என்கிறோமே, அதில் பெண்களைத் தனித்து வைத்துச் தீட்டுச் சொல்வதில் பௌதிக அசுசி [தூய்மைக்குறைவு] ஒரு பங்கு என்றால், பௌதிகத்துக்குத் தெரியாத அசுசி இன்னொரு பங்கு. இது பாப-புண்ய விஷயம். இந்திரனின் பிரம்மஹத்திப் பாபத்தில் ஒரு பங்கு ஸ்திரீகளிடம் ரஜஸ்ஸாகப் போகிறது என்று சொல்லியிருக்கிறது. இது ‘ஆரா’, ‘வேவ்’களில் கூடத் தெரியாது.

அவரவர் மனோசக்தியை வெளியே விடாமல் ரக்ஷித்துக் கொள்வது பற்றிய நவீன ஸயன்ஸ் கொள்கையைச் சொல்லும்போது ஒன்று நினைவு வருகிறது. கச்சம் போட்டுக் கட்டிக் கொள்வது என்று வைத்திருக்கிறதல்லவா? இதைப்பற்றி ஒருத்தர் எழுதியிருந்தார். வஸ்திரத்தின் நுனி வெளியே பார்க்க இருந்தால் இதை உடுத்திக் கொண்டிப்பவரின் மனோசக்தி வேவ்கள் வெளியே போய்விடுகிறதாம். கச்சமாக மடித்து உள்ளே சொருகிக் கொண்டுவிட்டால் இப்படி விரயமாவதில்லை என்று சொல்லியிருந்தார். இதைத் தெரிந்து கொண்டுதான் துருக்கர்கள்கூட லுங்கியை ஓரம் தைத்துக் கட்டிக் கெள்கிறார்கள் போலிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நாளுக்கு நாள் நமக்கு அநேக ஆசாரங்களின் உள்ளர்த்தம் ஸயன்ஸ்படி புரிந்துகொண்டு வருவதாலேயே இப்போது நமக்குப் புரியாத, இனி என்றைக்குமே ஸயன்ஸினால் புரிந்துகொள்ள முடியாத மற்ற எல்லா சாஸ்திர விதிகளையுங்கூட ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

“கங்கா, கங்கா என்று இந்த ஹிந்துக்கள் நமஸ்காரம் பண்ணுகிறார்களே, அப்படி இதில் என்னதான் இருக்கிறதென்று ஆராய்ச்சி பண்ணிப் பார்த்தால் எங்களுக்கு ஆச்சர்யமாயிருந்தது. காலராக்காரன் ஒருத்தன் பிணத்தை கங்கையில் எங்கே இழுத்து விட்டிருந்ததோ அந்த இடத்திலிருந்தே ஜலத்தை எடுத்துப் பரிசோதனைப் பண்ணிப் பார்த்தோம். மாய மந்திரம் மாதிரி அந்த ஜலத்தில் ஒரு காலராக் கிருமி கூட இல்லை” என்று ரிஸர்ச் செய்தவர்கள் ரொமப வருஷம் முந்தி ரிபோர்ட் கொடுத்திருந்தார்கள். ஸந்தோஷமான விஷயந்தான். ஆனாலும் நாம் ‘கங்கா, கங்கா’ என்று நமஸ்காரம் பண்ணுவது அவள் வியாதிநாசினி என்பதற்காக இல்லை. பாபநாசினி, ஸம்ஸார நாசினி என்பதற்காகத்தான். பாக்டீரியா-வைரஸ் மாதிரி பாப-புண்யமோ, ஸம்ஸாரம்-மோக்ஷம்-நரகம் இவையோ ஸயன்டிஸ்டின் ‘தியரி’க்குள்ளும்  ‘டெஸ்ட் ட்யூபு’க்குள்ளும் என்றைக்குமே வராது.

இதைப் புரிந்து கொண்டால், விஞ்ஞான ரீதியில் பரிஹாரம் பண்ணிவிட்டதால் ஒரு வஸ்துவுக்கு தோஷம் போய்விட்டது என்று நினைக்க மாட்டோம். இதை எதற்குச் சொல்கிறேனென்றால் இப்போது எவர்ஸில்வர் என்று ஒன்று ரொம்ப நடமாடுகிறது. ஸ்வாமி தீபம் உள்பட கலசமாக வைக்கிற குடம் உள்பட எல்லாம் அதில் வந்தவிட்டது. இத்தனை காலம், இரும்புப் பாத்திரம் உதவாது என்ற சாஸ்திர விதியை அநுஸரித்து வந்தவர்களும் இப்போது எவர்ஸில்வரை உபயோகிக்கிறார்கள். “இரும்பு கூடாது என்றதற்குக் காரணம் அது துரு பிடிக்கக்கூடும் என்பதுதான்; அதனால் அதில் ஆரோக்கிய ஹானி உண்டாக்குகிற ஹேது உள்ளது என்கிறதுதான். ஆனால் அந்த இரும்பை இப்படி எவர்ஸில்வராக ‘ப்ராஸஸ்’பண்ணிவிட்டபின், அதில் துரு பிடிப்பதற்கேயில்லை. அது health hazard ஆகாது. இரும்பின் தோஷத்திற்குப் பரிஹாரம் பண்ணிவிட்டதால் அதை உபயோகிக்கலாம்” என்று சொல்கிறார்கள். துருவுக்காகத்தான் இரும்பு கூடாது என்று இவர்களாகவே அநுமானம் பண்ணிக்கொண்டு இப்படி எவர்ஸில்வரை சாஸ்திரோக்தமானதாக ஆக்கிவிட நினைக்கிறார்கள். ஆனால் சாஸ்திரம் இரும்பு கூடாது என்றது துருவுக்காக அல்ல; அல்லது துருவுக்காக மாத்திரம் அல்ல. அது பாபகரமானது, ஆஸுர [அசுரத்தனமான] சக்திகளையும், சனைச்சரன் மாதிரி உக்ர க்ரஹங்களின் சக்தியையும் நம்மிடம் இழுத்து வரும் என்பதால்தான் கூடாது என்று சாஸ்திரம் வைத்திருக்கிறது. எவர்ஸில்வரிலும் இந்த தோஷம் போய்விடாது.

இதேமாதிரி, ஹோமத் திரவியங்கள் அட்மாஸ் ஃபியரிக் பொல்யூஷனைப் போக்குவதைவிட முக்யமாக, ஆஸுர சக்திகளைத் துரத்தி திவ்ய சக்திகளைக் கொண்டு வருவதற்கே ஏற்பட்டவை. அதனால் வறட்டிக்கும், ஸமித்துக்கும் பதிலாக அவற்றைவிட வீரியத்தோடு ஏதாவது anti-pollution கெமிகலைக் கண்டுபிடித்தாலும் இவற்றைக் கொண்டு ஹோமம் பண்ணுவதற்கில்லை!

ஸைகலாஜிகலாக அநேக சாஸ்திர விதிகளை ‘அப்ரீஷியேட்’ பண்ணலாம் என்கிறார்கள். பால், நெய், தயிர், சாணம், மூத்திரம் எல்லாவற்றாலும் நலன் விளைவிக்கும் பசுவை மாதாவாக பாவிப்பது psychologically satisfying [மனோதத்வப்படி திருப்தி தருவது] என்கிறார்கள். அதுவும் வாஸ்தவந்தான். ஆனால் பசுவின் divinity [தெய்வத்தன்மை] ‘ஸைகாலஜி’க்கு அப்பாற்பட்ட விஷயம். இந்த ‘டிவினிடி’க்காகத்தான் அதற்கு முக்யமாகப் பூஜை. மற்ற தேசங்களில் உள்ளவர்கள் மாதிரி பால், நெய், தயிர் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்துகொண்டது மட்டுமின்றி நம் பூர்விகர்கள் சாணி, பசு மூத்திரம் இவற்றின் சுத்தி செய்யும் சக்தியையும் தெரிந்துகொண்ட பெருமை ஒரு பக்கமிருக்கட்டும். ஆனால் இந்த ஐந்தையும் ‘பஞ்சகவ்யம்’ (‘கோ’ என்றால் பசு. ‘கவ்யம்’ என்றால் பசு ஸம்பந்தமுள்ளது. ‘பஞ்ச கவ்யம்’ என்பது பசு ஸம்பந்தப்பட்ட ஐந்து) என்று சேர்த்து ஒருத்தரைச் சாப்பிடச் சொல்லி அவரை சாப்பிடச் சொல்லி அவரை சுத்தி பண்ணுகிறபோது அது சரீர சுத்திக்காக (physical purity -க்காக) மட்டுமில்லை; ஆத்மசுத்திக்காகவே! பாபத்தைப் போக்கிப் புண்யத்தை உண்டுபண்ணுகிற சக்தியும் பஞ்ச கவ்யத்துக்கு இருக்கிறது. மந்த்ர பூர்வமாக அதை ப்ராசனம் பண்ணுவதால் [உட்கொள்வதால்] இந்த சக்தி இன்னம் விருத்தியாகிறது. ” புண்யாஹ வாசனம் ” என்று புண்ய ஸம்பந்தப்படுத்தித் தான் பஞ்சகவ்யத்தை வைத்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, மெடிகல் ஸயன்ஸ், ஸைகாலஜி எல்லாவற்றிலும் அதிஸுக்ஷ்மமான விஷயங்களைத் தெரிந்துகொண்டிருந்த அந்தப் பூர்வ காலப் பெரியவர்கள் எந்த லாபரட்டரியும், இன்ஸ்ட்ருமென்டும் இல்லாமல் இத்தனை ஞானமும் பெற்றார்கள் என்றால் அது எதனால்? ஈஸ்வரப் பிரஸாதமாக அவர்கள் பெற்ற மனோசக்தியால்தான். அவர்களுடய தபஸையும், நியமத்தையும் பார்த்து பகவானே ஸயன்ஸுகளுக்குள் வராத அநேக விஷயங்களை அவர்களுக்குத் தெரியப்பண்ணியிருக்கிறார்கன். அவனே அவர்கள் முன் பிரஸன்னமாகி தெரியப்படுத்தியிருக்கலாம்; அல்லது அவர்களுக்கு instinctive -ஆக [உள்ளுணர்ச்சியாக] , அல்லது அதற்கும் மேலே intuitive -ஆக [[உள்ளார்ந்த ஸத்யதர்சன சக்தியே intuition என்பது] இந்த உண்மைகள் தெரியும்படிப் பண்ணியிருக்கலாம். இவற்றையும் பிரயோஜனப்படுத்தி அவர்கள் மேலே மேலே தபோ நியமங்களை அநுஷ்டித்து ஸித்தி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஸகல ஞானமும் பெற்றுச் சொன்னவற்றில் நவீன விஞ்ஞானம் ஆச்சரியப்படுகிற கருத்துக்கள், அதனால் ஒப்புக்கொள்ள முடியாத கருத்துக்கள் இரண்டுமே இருக்கின்றன; நம் அறிவுக்கு ஏற்றவை, ஏற்காமல் மூடக் கொள்கையாய்த் தோன்றுகிறவை இரண்டும் இருக்கின்றன. நம்முடைய அறிவு எத்தனையோ ஆராய்ச்சி பண்ணி எவ்வளவோ உபகாரங்களை வைத்துக்கொண்டு கண்டுபிடிப்பதை அந்தப் பெரியவர்கள் அநாயஸமாகத் தெரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தே, நம் அறிவுச் சக்தியோடு ஈஸ்வர மர்மங்கள் முடிந்து விடவில்லை என்று அறிவு பெற வேண்டும். அந்த மர்மங்களைத் தெரிந்துகொண்டவர்கள் சொல்வதில் பலதை மூடநம்பிக்கை என்பதுதான் மூடத்தனம், இது நம்முடைய அல்ப அறிவிடம் நமக்கிருக்கிற மூடநம்பிக்கைதான் என்று தெளிவு பெற வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஆசார சாஸ்திரங்களில் விஞ்ஞான நுணுக்கம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஆத்ம திரு ஆசாரம்
Next