ஆசார சாஸ்திரங்களில் விஞ்ஞான நுணக்கம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஸமீப காலமாக நம் ஆசாரங்களைப் பற்றி இதற்கு முந்திய தலைமுறைக்கு இருந்ததைவிடக் கொஞ்சம் கௌரவ புத்தி உண்டாயிருப்பதைப் பார்க்கிறேன். முன்னே இங்கிலீஷ் படித்தவர்களென்றால் நம் ஆசாரம் அவ்வளவுமே பேத்தல் என்று நினைப்பவர்களாயிருந்தார்கள். ஆனால் நான் கொஞ்ச நாளாக ஒரு வேடிக்கை பார்க்கிறேன் – ஸயன்ஸும் ஸ்பிரிசுவாலிடியும் [ஆத்மிகமும்] ஒன்றுக்கொன்று விரோதமானதுபோல் தோன்றினாலும் ஸயனஸ் அபிவிருத்தியாகிக் கொண்டு வருவதாலேயே, புதிசு புதிசாக டிஸ்கவரி செய்யும்போது, “இதென்னடா ஆச்சர்யமாயிருக்கிறது! நாம் ரொம்பவும் அறிவிலே பின் தள்ளி நின்றவர்கள் என்று நினைத்த ஆதிகால இந்தியர்கள் இந்த விஞ்ஞான உண்மைகளை, நமக்கு இருக்கிற லாபரட்டரியும் இன்ஸ்ட்ருமென்டுகளும் இல்லாமலே எப்படியோ கண்டுபிடித்து அவர்களுடைய சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறதாகத் தெரிகிறதே!” என்று அதிசயப்படுகிறார்கள். கொஞ்சநாள் முந்தி [பத்திரிகைகளில்] பார்த்திருப்பீர்கள். ரஷ்யாக்காரன் கம்யூனிஸ்ட், நிரீச்வரவாதி. ஆனால் இங்கே நாம், “இதென்ன ஹோமம் என்று சொல்லிக்கொண்டு வீட்டையெல்லாம் புகையாக்கிக் கொண்டு, கண்ணும் கரிக்கக் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது?” என்றால், ரஷ்யா தேச ஸயன்டிஸ்ட்கள் வறட்டிப் புகையினால் அடாமிக் ரேடியேஷன் [அணுச் சிதைவின் கதிரியக்கம்] உள்படப் பலவித பொல்யூஷன்களைப் போக்கிக்கொண்டு விடலாமென்று சொல்லி, நம்முடைய ஹோமத்தைப் புகழ்ந்திருக்கிறார்கள். இதேபோல ஹோமத்தில் போடப்படும் பலவிதமான ஸமித்துக்களின் புகை பரவுவதும் க்ருமி நாசினியாக (antiseptic) உதவுகிறது என்று முன்னே டாக்டர்கள் சொன்னதுண்டு. தர்ப்பை, துளஸி, வில்வம் என்றிப்படி நம் சாஸ்திர காரியம், பூஜை இவற்றில் பிரயோஜனமாகின்றவற்றுக்கெல்லாம் வைத்ய ரீதியிலோ, மற்ற ஸயன்ஸ்களின் ரீதியிலோ sound basis [அழுத்தமான அடிப்படை] இருக்கிறது எனகிறார்கள். க்ரஹண காலத்தில் எல்லாவற்றிலும் தர்ப்பையைப் போட்டு வைக்க வேண்டுமென்றால் முன்னே பரிஹாஸம் செய்தார்கள். “ஸுரியனைப் பாம்பு தின்கிறதாம். அதன் நாக்கை அறுப்பதற்கு தர்ப்பை போட்டிருக்கிறார்களாம்!” என்று கேலி பண்ணினார்கள். ஆனால் இப்போதோ க்ரஹண காலத்தில் அட்மாஸ்ஃபியரிலும், அதற்கும் மேலே இருக்கிற ஸ்ஃபியர்களிலும் அநேக contamination (அசுத்தம்), radiation ஆகியன உண்டாவதாகவும், கர்ப்பத்திலிருக்கிற சிசுவைக் கூட அது பாதிப்பதாகவும், அதனால் ‘க்ரஹணத் தீட்டு’ என்று அந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருக்கணும் என்று வைத்ததில் ரொம்ப அர்த்தமிருப்பதாகவும், இந்த பாதிப்பை counteract பண்ணும் [எதிர்த்துப் போக்கும்] சக்தி தர்ப்பைக்கு இருக்கிறதென்றும் எழுதுகிறார்கள்.

எல்லாருக்கும் எல்லா ஸயன்ஸையும் சொல்லிக் கொடுத்துவிட்டால் ஒவ்வொருத்தனும் ‘ஆடம் பாம்(ப்)’ பண்ணி வைத்துக் கொள்வதில்தான் முடியும் என்றுதான், கெடுதல் வராமலிருப்பதற்கு நாம் பண்ணவேண்டியதை மட்டும் சொல்லி, அதன் காரணத்தை, “ராஹுப் பாம்பு ஸுர்யனை முழுங்கிற்று” என்பது போலக் கதா ரூபமாகப் பாமர ஜனங்களுக்குச் சொன்னார்கள் என்று ஒரு கட்சி. இதைக்கூட நான் முழுக்க ஸரி என்று சொல்லமாட்டேன். எல்லாருக்கும் விஞ்ஞான மர்மம் தெரிந்துவிட்டால் அனர்த்தமாகும் என்று நினைத்தது வாஸ்தவம். ஆனால் அதற்காகத்தான் விஞ்ஞான உண்மைகளுக்குப் பதில் கதைகளை இட்டுக்கட்டிச் சொன்னார்களென்பது ஸரியில்லை. இம்மாதிரிக் கதைகளும் நிஜம் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பகவானின் லீலையில், நமக்கு ஸாத்யமாகத் தோன்றாத என்னென்னவெல்லாம் நடக்குமோ? நமக்கு எப்படித் தெரியும்?

தங்களுடைய லிமிடெட் ஸர்க்கிளைத் தாண்டி நாலெட்ஜ் (அறிவு) வெளியே பரவக் கூடாதென்ற [சுயநலக் கும்பலின் கொள்கை] தான் நம் பூர்விகர்கள் இம்மாதிரி ஸயன்ஸ் உண்மைகளைக் கூறாமல், கதையிலே போர்த்தி மூடி வைத்ததற்குக் காரணம் என்றும் சிலர் குற்றம் சொல்கிறார்கள். இது ரொம்பத் தப்பாகும். மனஸ் கட்டுப் படாதவர்களுக்கு அறிவை மட்டும் கொடுப்பது அனர்த்தத்தில்தான் முடியும். பெரும்பாலான ஜனங்கள் மனஸ் கட்டுப்படாதவர்களாகத்தான் இருப்பார்கள். ஸயன்ஸ் ஸகல ஜனங்களுக்கும் பரவி முன்னேறிக் கொண்டேயிருக்கும்போது, அந்த முன்னேற்றத்துக்கு எதிர் ratio-வில் (விகிதாசாரத்தில்) லோகத்திலே தர்மம் பின்னே போய்க்கொண்டேயிருப்பதை நாம் பிரத்யக்ஷமாகப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்? இதை அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே போஜன் ‘ஸமராங்கண ஸூத்ர’த்தில் சொல்லியிருக்கிறார். அதிலே ஏரோப்ளேனைப் பற்றிக்கூட ‘வ்யோமயானம்’ என்று சொல்லி, ஆனாலும் அதன் theory-ஐ மாத்திரம் கொஞ்சம் கொடுத்துவிட்டு, “இதைச் செய்யும் procedure-ஐ இங்கே விஸ்தாரம் பண்ணாததால் அது தெரியாதாக்கும் என்று நினைக்க வேண்டாம். நன்றாகத் தெரியும். ஆனாலும் புஸ்தகத்தில் எல்லாருக்கும் தெரியும்படியாக எழுதி வைத்து விட்டால், அதனால் லோகத்துக்கு நன்மையைவிடக் கெடுதியே ஜாஸ்தி உண்டாகும் என்றுதான் இங்கே சொல்லவில்லை” என்று காரணம் காட்டியிருக்கிறார். அவர் சொன்னதிலுள்ள உண்மையை நாம் கண்கூடாகப் பார்த்து விட்டோம்! ரண பூமியில் மட்டும் யுத்தம் என்றில்லாமல் நாடு நகரமெல்லாம் குண்டு போட்டு World War நடந்ததற்குக் காரணம் விமானப் படையெடுப்புத் தானே? ஹ்ருதயம் சுத்தியாவதற்கு முந்தி புத்திமட்டும் விருத்தியானால் அனர்த்தந்தான் என்பதை ஸமயாசாரங்கள் எடுபட்டுப்போய் ஸயன்ஸ் மட்டும் அபிவிருத்தியாதிக் கொண்டிருக்கிற இக்காலத்தில் நன்றாகப் பார்க்கிறோம். இதனால்தான் சுத்தர்களான நல்ல கல்ச்சருள்ளவர்களுக்கென்று மாத்திரம் நம் பூர்விகர்கள் அநேக விஷயங்களை வைத்துவிட்டனர்.

ஸமீப காலமாக நம் சாஸ்திர விஷயங்களில் பல ஸயன்ஸுக்கு ஒத்து வருகின்றனவென்று கண்டு கொண்டதில் படிப்பாளிகள் கொஞ்சம் அதனிடம் கௌரவ புத்தி காட்டத் தொடங்கியிருக்கிறார்களென்று சொன்னேன். ஸயன்ஸ் கொஞ்சம் விருத்தியாயிருந்தபோது கேலி செய்தார்கள். இப்போது அதிக வளர்ச்சி அடைந்தபின் சில அம்சங்களைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னம் ஸயன்ஸ் விருத்தியாக ஆக இன்னம் பல சாஸ்தீரிய ஸமாசாரங்களுக்கும் scientific basis இருப்பதாகக் கண்டுபிடிப்பார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is செயல்களை ஈஸ்வரபரமாக்குவது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  விஞ்ஞானத்துக்குக் கட்டுப்பட்டதல்ல
Next