ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -22 இதழ் -5,6 ரௌத்ர வருஷம் ஆனி ஆடி
ஜுன்-ஜுலை - 1981


விபூதியின் விஜயம்

 

விபூதியே பஸ்மம். விபூதியே சிவம். சிவமே பஸ்மம்; பஸ்மத்திலும் மகா பஸ்பம். தான் பஸ்மமாயிருந்து கொண்டு நாத்திகத்தையும் பஸ்மம் செய்தது விபூதி. பொய்ப்பொருள்களெல்லாவற்றையுமே பஸ்மம் செய்வது சிவம். பஸ்மம் செய்வது மாத்திரமல்ல, அப்பஸ்மமும் தானாகி நிற்பதும் அச்சிவமே.

விபூதி நாத்திகத்தையும் பஸ்மமாக்கினது என்று சொன்னோம். எப்பொழுது? எங்கே? என்ற கேள்வி எழும்புகின்றது.

ஞானசம்மந்த சுவாமிகள் காலத்திலும், மாணிக்கவாசக சுவாமிகள் காலத்திலும், மதுரையிலும், சிதம்பரத்திலும் சமண மதமும், புத்த மதமும் நாத்திக மதங்கள்.

மதுரையில் அக்காலத்தில் அரசன் சமணனாகியிருந்தான். அவனுடைய ஜ்வர நோயை விரட்டியது. கடைசியாக நாத்திகக் கொள்கையையே பஸ்மமாக்கியது. அரசனுடைய தேவியராகிய மங்கையர்க்கரசியாரும், அரசனுடைய தூய அமைச்சரான குலச்சிறை நாயனாரும் அரசன் சமணம் புக்கு, அனாதி இறைவனான சிவபிரானையும், அவரது திருச்சின்னமான திருநீற்றையும் பகைத்துக்கொண்டிருக்கும் சமயத்திலும் அச்சிவமான விபூதியே சரணமென, மற்றவற்றையும் பொருட்படுத்தாது அரசனறியாது தம் திருமார்பில் தரித்து ரக்ஷித்துவந்த விபூதியே நாத்திகக் கொள்கையைப் பஸ்மமாக்கியது.

மற்றொரு காலத்தில் அம்மதுரையிலேயே அரசாண்டு வந்த மற்றொரு பாண்டியனுடைய மதியமைச்சராம் மணிவாசகப் பெருமானாகிய திருவாதவூரர் அரசாங்கச்சேனைக்குக் குதிரைகள் வாங்கவேண்டி, திரண்ட பொருளுடன் துறைமுகத்திற்குச் செல்லும் பொழுது இடையில் திருப்பெருந்துறையென்னும் ஆவுடையார் கோவிலில் குருந்த மரத்தடியில் சிவபெருமான் குரு ரூபமாய்த் தோன்றி, இவரை ஆட்கொண்டு சிவஞான நெறியைக் காட்டியருளினார். பெறற்கரிய பேறு பெற்ற வாதவூரரும் தம்மையும், காரியத்தையும் உலகத்தையும் மறந்து, சிவனையே நினைந்து, கொண்டுவந்த பொருள்களையெல்லாம் அக்குருந்த மரத்தனடியிலேயே ஆலயம் கட்டிச் சிவார்ப்பணம் செய்து, அரசன் மறுபடி கடிந்து தண்டித்தபோது, ஆவணி மூலத்தன்று அச் சிவபிரானுடைய திருவிளையாட்டினாலே மீட்கப்பட்டு க்ஷேத்ராடனம் செய்து, திருச்சிற்றம்பலத்தையடைந்து அம்பலத்தாடுவான் திருவடி நிழலிலேயே ஞானனுபூதி நிஷ்டையிலமர்ந்தார்.

சிங்களத்திலிருந்து அப்பொழுது புத்த மதவாதிகள் அனேகர் சிதம்பரத்திற்கு வந்தார்கள். வைதிக சாம்பவர்களான தில்லை மூவாயிரவர்களை அவர்கள் சமய வாதத்திற்கு இழுத்தார்கள். அப்புத்தமதவாதிகள் வாதில் வல்லவர்கள். மூவாயிரவர் நடராஜப் பெருமானிடம் முறையிட்டுக் கொண்டார்கள்: "எனது சன்னிதியில் ஞான நிஷ்டையிலமர்ந்திருக்கும் மணிவாசகப் பெருமானைச் சகாயமாகக் கொண்டு புத்தர்களோடு வாதம் செய்யுங்கள்" என்று இறைவன் திருவாய் மலர்ந்தருளினார். அந்தணர் வாதவூரரையணுகி வேண்ட, போத நிஷ்டையை விட்டுச் சமய வாத நிலைக்கு இறங்க இசையவில்லை. தீக்ஷிதர்கள் திரும்பவும் சிவபெருமானை வேண்டினர். ஆத்திக உண்மை நிலைநிற்கக் கருணைகொண்ட திருச்சிற்றம்பலமுடையாரும் மாணிக்க வாசக ஸ்வமிகளுக்குச் சாந்த முறையிலேயே சமய வாதம் செய்யுமாறு கட்டளையிட்டார். வாதமாரம்பமாயிற்று. புத்தர்களுக்குக் காட்சி, அனுமானம், இவையிரண்டே பிரமாணம். மறை நெறியாம் வைதிக சித்தாந்ததிற்கோ காட்சி, அனுமானம், உபமானம், சப்தம் முதலிய ஆறு பிரமாணங்கள். ஆதியந்தமில்லாத சாசுவதமான ஒன்றாம் பரம்பொருளில்லை என்பது நாத்திக புத்தவாதம். அவ்வாதப்படி தோற்றும் உலகத்திற்கு ஆதாரமான அப்பரம்பொருளில்லையாம். இல்லையென்னும் கொள்கையை காட்சிப் பிராமணத்தினாலும், அனுமானப் பிரமாணத்தினாலும் புத்தவாதிகள் நாட்ட முயன்றார்கள். மணிவாசகரிடம் அது பலிக்கவில்லை. அப்பிரயத்தினம் வீணாயிற்று., காட்சி என்றால் கண், காது முதலிய புலன்களால் ஏற்படும் அறிவாம். அனுமானமென்றால் கண், காது முதலியவைகளுக்கு நேராக புலப்படாப் பொருள்களை ஊகித்துக் கொள்ளுவதாம். இக்காட்சியினாலும், ஊகத்தினாலும் ஒவ்வொருவனுடைய அறிவுச் சக்திக்கு ஏற்றவாறு உலதத்திலுள்ள பொருள்களிலேயே எல்லவற்றையுமறிந்து விட முடியுமா? உள்ள பொருள்களில் கோடியில் ஒரு பங்கையும் அறிய முடியாதே! காற்று கண்ணுக்குத் தெரிவதில்லை; அதற்காகக் காற்று இல்லை என்று சொல்லி விடலாமா? கண்ணறியாத காற்றை உடலின் உணர்ச்சியறிகிறது. உணர்ச்சியுமறியாததை ஊகமறிகிறது. அதுபோல் ஊகமும் ஒன்றையறியாவிடின் அதற்குமேல் நாம் அறியாத மற்றொரு பிரமாணம் அதையறியலாம். ஊகத்திற்காவது அல்லது வேறு எந்த ப்ரமாணத்திற்காகவது எட்டாத காரணத்தால் இல்லையென்று சாதிப்பது காற்றில்லை யென்பது போலவே ஆகும். இல்லையென்னும் நாத்திகத்தை ப்ரத்யக்ஷம், அனுமானம் இவ்விரண்டு பிரமாணங்களாலும் நாத்திகர்களான புத்தர்கள் சாதிக்க முயன்றது வீணாயிற்று. இருந்து விட்டால், இல்லையென்று சொல்லிக் கொண்டு மறை விதிகளை மீறிய நாத்திகன் அடியோடு கெட்டான். ஒரு காலில்லாமிலிருந்தாலும் நம்பிச் செய்த ஆத்திகனுக்குக் கேடொன்றுமில்லை.

புத்தர் தங்களுடைய பிரமாணங்களால் தங்களது இல்லையென்னும் கொள்கையை நிலை நாட்டாமல் போய்விடினும், மாணிக்கவாசக ஸ்வாமிகளைப் பார்த்து, "நீங்கள் வேதங்கூறும் சிவத்தைப் ப்ரமாணத்தைக் கொண்டு நிலைநாட்டுங்கள்" என்றார்கள். சுவாமிகள் காட்சிக்குத் தெரியாததை அறிவிப்பது ஊகம்; ஊகத்திற்கும் அதீதமானதை அறிவிப்பது உபமான ப்ரமாணம் என்று கூறிவிட்டு உபமானம் என்னும் ப்ரமாணத்தைக் கொண்டு சபையோருக்குச் சிவப் பழத்தைத் தெள்ளெனக் காட்டியருளினார். வெந்தணலில் நீற்ற விபூதிப்பழத்தைக் கொண்டு உவமை காட்டிச் சிவப்பழத்தையும் நிலைநாட்டினார்.

விபூதி என்ன நிறம்? வெண்மை நிறம். வேறு நிறத்துப் பொருள்களெல்லாம் அக்னி புடம் போட்டு எரிக்கும்போது சிவப்பு, மஞ்சள், ஊதா, முதலிய சாயங்கள் அழிந்து முதலில் கருமையாகவும் பின்னர் வெண்மையாகவும் ஆகி விடுகின்றன. "சாயம் வெளுத்துப் போகிறது" என்பது பழமொழி. உண்மை நிற்கிறது. உண்மையே வெண்மை. நானாவர்ணாக்ருதியான உலகத்திற்குக் கரியமாலும், வெளிய சிவபிரானுமே முலம். அரியும் சிவமும் ஒன்று. நவீனபூத தத்துவ சாஸ்திரத்திலும் கரியே வைரமென ஏற்படுகிறது. மற்றப்பொருள்களையும் அக்னிபுடம் போடும்பொழுது நீற்ற வெண்மையான பஸ்மமாகிவிடுகிறது. மற்ற பஸ்மத்தைத் திரும்பவும் அக்னிபுடம் போட்டால் பஸ்மம் பஸ்மமே. எவ்விதத்திலும் உரு மாறுவதில்லை. மாறாத நிலையே உண்மை. இவ்வுண்மையே சிவம். லோகமெல்லாம் அக்னி புடம் போடும்பொழுது பஸ்மமாய் நிற்பதுபோல் உலகமெல்லாம் ஞானபுடம் போடும் பொழுது சிவமாய் நிற்கிறது. எல்லாவற்றிற்கும் பரம காரணம் சிவமே. உண்மை ஞானநிலையில் பார்த்தால் எப்பொருளும் சிவமாகிவிடுகிறது. சிவத்தை ஞானநிலையில் பார்த்தால் விபூதியைப் போல் சிவம் சிவமாகவே நிற்கிறது. புடம் போடும் சமயத்தில் மாறாத பொருளே உண்மைப் பொருள். மற்றவையெல்லாம் தோற்றம் சாயம். வெண்மையே உண்மை. பஸ்மம் வெண்மையே. சிவம் வெண்மையே. சிவமே விபூதி. இவ்வுண்மையை மாணிக்கவாசக சுவாமிகள் சிங்களத்திலிருந்து வாதுக்கு வந்த புத்தர்களுக்கு வெந்தழலிலே நீற்ற கோமியப் பழத்தை உபமானமாகக் காட்டி, அப்பிரமாணத்தைக் கொண்டு உபதேசித்தருளினார்.

அச்சமயம் சோழ சக்ரவர்த்தியும் தன் ஊமைப் பெண்ணுடன் அவ்விடம் வந்து சேர்ந்தான். ஊமைப் பெண்ணுக்கு வாக்குவரும் உபாயத்தைத் தேடியருள வேண்டுமென்று சபையோரை வேண்டினான். புத்த சமயத்தோர் ஒன்றும் வெய்ய இயலாதிருந்தனர். மாணிக்கவாசக சுவாமிகள் கருணைகொண்டு திருச்சிற்றம்பலத்துடையானை உள்ளத்தில் நினைந்துருகி, திருச்சாழலில் முதல் ஈரடிகளைக் கேள்வியாக எடுத்துக்கொடுக்க, அப்பெண் மற்ற ஈரடிகளை மறுமொழியாகப் பூர்த்தி செய்து வந்தாள், இது திருச்சாழலில் முதல் பாட்டு.

"பூசுவதும் வெண்ணிற பூண்பதுவும் பொங்கரவம்

பேசுவதும் திருவாயால் மறைபோனுங் காணேடி

பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை

ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ."

எப்பொருளிலும் நீற்ற பஸ்மம் இறுதியில் எஞ்சி நிற்கிறது. எப்பொருளிலும் உண்மையான சிவமே எஞ்சி நிற்கிறது. இன்மை என்னும் புத்த சமயத்தை உண்மை யென்னும் சிவமாம் விபூதி பஸ்மமாக்கியது. ஆத்திகம் நிலைநின்றது.

சிவனடியார் மாத்திரமேயல்லாமல், திருமாலடியாரம் முதலாழ்வார்களும் ஆத்திக ஸ்தாபனத்திற்கான விபூதியை வாயார வாழ்த்தினார்கள்.

 

நன்றி: காமகோடி

மேலும்...

Home Page