Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்ஆயுர்வேதம்

மன அழுத்தம் குறைய …

நம் உடலில் ஓயாது பணிபுரிபவற்றில் மூளை, இதயம் மற்றும் ரத்தம் முதலியவற்றை எடுத்துச் செல்லும் குழாய்களை முக்கியமாகக் குறிப்பிடலாம். இயங்கிக் கொண்டேயிருக்கும் அவற்றிற்கு மென்மையும், நெகிழ்ச்சியும், தடையின்மையும், சீரான வேகமும், சூடும் தேவை. மேலதிகாரிகள் நம்மிடம் கடுமையாக நடந்து கொள்ளும்போது மூளை மற்றும் இதயப்பகுதிகளில் ஏற்படும் stress காரணமாக ரத்தக் குழாய்களின் வழியே அபரிமிதமான வேகமும் சூடும் பரவுவதால் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அப்போது வரக்கூடிய கோபத்தையோ, துக்கத்தையோ வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையில் மூளைப் பகுதியில் மென்மையும், நெகிழ்ச்சியும் விட்டகன்று கடும் வறட்சியை மூளைச்சூடு ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் இயக்கத்தடை, தலைவலி, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிற்குக் காரணமாகின்றன.
மென்மையையும் நெகிழ்ச்சியையும் மறுபடியும் மூளைக்குக் கொண்டுவந்து அங்கு ஏற்பட்டுள்ள நரம்பு மற்றும் இரத்தக்குழாய் வறட்சியைப் போக்குவதன் மூலமே இந்த உபாதைக்கு நிரந்தர தீர்வு அளிக்க முடியும். மூளை நரம்புகளுக்கு வலிவுதர மிகச் சிறந்த முறையான மூக்கில் எண்ணெய் விட்டு உறிஞ்சுவதை உங்கள் மகன் செய்து கொள்வது மிகவும் நல்லது. காலையிலும் இரவு தூங்கும் முன்னும் மல்லாந்து தலையணையின்றிப் படுத்து தலையைச் சற்று மேலே தூக்கி இருமூக்குத் துவாரங்களிலும் 2 சொட்டு தான் வந்திரம் 101 எனும் மருந்தை விட்டு மெதுவாக உறிஞ்சி, நெற்றி மூக்கின் இரு புறங்கள், கழுத்து இவற்றைத் தேய்த்துவிட வேண்டும்.
அடுத்ததாக தலையில் க்ஷீரபலா தைலம் பயன்படுத்த உகந்தது. சிறிது தைலத்தை இரும்புக் கரண்டியில் சூடாக்கி பஞ்சில் நனைத்து தலைமுடியைப் பிரித்துவிட்டு உச்சந்தலையில் ஊற வைக்கவும். சுமார் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊறலாம். மூளை நரம்புகளுக்கும் அங்குள்ள இரத்தக்குழாய்களுக்கும் நெய்ப்பும் மென்மையும் வறட்சி நீங்குதலும் தடை நீங்குதலும் நெகிழ்ச்சியும்  விறைப்பின்மையும் தந்து மூளைக்கு ஏற்பட்டுள்ள தேய்வை ஈடு செய்து புஷ்டியை அளிக்கிறது.
தலைவலி, உயர் இரத்த அழுத்தம், பட்டாசு வெடிச் சத்தத்தினால் காது கேட்கும் திறன் குன்றிவிட்டது போன்ற தலையைச் சார்ந்த உபாதைகளில் ‘சிரோவஸ்தி‘ எனும் சிறந்த மருத்துவ முறையை ஆயுர்வேதம் உபதேசித்துள்ளது. தலைமுடியை எடுத்துவிட்டு நெற்றிப் பகுதியில் தொடங்கி பின் தலைவரை பருத்தித் துணியால் கட்டுவார்கள். அதன்மேல் உளுந்து மாவைத் தேய்த்து ஒரு தோல் அல்லது ரெக்ஸின் தொப்பியை அதில் வைத்து இறுகப் பிடிக்கும்படி செய்வார்கள். அதன்மேல் மறுபடியும் ஒரு துணியை இறுக்கிக்கட்டி, தொப்பியின் உள்பகுதியின் தலையில் க்ஷீரபலா அல்லது சுத்த பலா தைலம் போன்றவற்றில் ஒன்றை வெதுவெதுப்பாக 2 அங்குலம் உயரத்திற்கு ஊற்றி ஊற வைப்பார்கள். மூக்கிலிருந்து நீர் வடியும் வரை வைத்திருந்து அதன் பிறகு தைலத்தை பஞ்சில் முக்கி எடுத்து விடுவார்கள். தொப்பியையும் நீக்கிவிடுவார்கள். சுமார் 3 முதல் 7 நாள்கள் வரை இச்சிகிச்சையைத் தொடர்ந்து செய்வதால் தலைவலி, காது கேளாமை போன்ற நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்க நல்ல வாய்ப்பிருக்கிறது.
காதின் கேட்கும் சக்தி வளர தினசரி உபயோகத்திற்கு நல்லெண்ணெயில் பூண்டு போட்டுக் காய்ச்சி ஆற வைத்து இளஞ்சூடான நிலையில் காதில் விட்டுக் கொள்ளலாம். காதின் அடிப்பகுதி பின்புறத்தில் ‘விதுரம்‘ எனும் மர்மஸ்தானம் உள்ளது. அவ்விடத்தில் காதில் எண்ணெய் விட்டுக் கொண்ட பிறகு இதமாக பூண்டு காய்ச்சிய நல்லெண்ணெயால் நீவி விட வேண்டும். சிறிது நேரம் காதில் விட்ட எண்ணெயை வைத்திருந்து பஞ்சு சுற்றிய குச்சியால் புண்படாதவாறு துடைத்து விடுவது மிகவும் நல்லது.
ஆயுர்வேத மருந்துகளில் தசமூலரஸாயனம் எனும் லேஹ்யத்தை 10 கிராம் (2ஸ்பூன்) இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிடச் சொல்லவும். தலைவலி, கழுத்து வலி போன்ற உபாதைகள் நீங்கி விடும். மருந்துகள் கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் கிடைக்கும்.

Home Page ஆயுர்வேதம்