Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்ஆயுர்வேதம்

ரத்த அழுத்த ரகசியம் !

ரத்தக் குழாய்களின் உள்சுவர்களில் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தத்தை ரத்த அழுத்தம் என்கிறோம். ஆறு வயதுக் குழந்தைக்கு 90/60 mm of Hg என்பது இயல்பான ரத்த அழுத்தம். இளமையில் 120/80 mm of Hg முதல் 140/90 mm of Hg வரை இயல்பானது. இதற்கு மேற்பட்டு காணப்படுவது ரத்த அழுத்த நோயாகும். ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் ஏற்படும் கொழுப்பு அடைப்பு அல்லது கொழுப்புடன் கூடிய சுண்ணாம்புச் சத்து படிவங்கள் அந்தச் சுவர்களைக் கடினமாக்குவதால் ஏற்படும் உபாதை இது என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனதைச் சார்ந்த ரஜஸ் எனும் தோஷமும் உடலைச் சார்ந்த வாதமும் பித்த தோஷமும் சீற்றமடைவதால் தலைச்சுற்றல் ஏற்படுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இவையே ரத்த அழுத்தத்திற்கும் காரணமாகலாம் என்பதை ஊகித்தறியலாம். இந்தத் தோஷங்களின் சீற்றம் ஏற்படக் காரணமாக – முறையற்று மனம் போனபடி உடலுக்கொவ்வாததை உண்பதும், புளிப்பும் உப்பும் உறைப்பும் அதிகமாகச் சேர்ப்பதும், அப்பளக் காரம், சோடா உப்பு போன்றவை அதிகம் சேர்ந்ததும் குளிரால் விறைத்தும் உலர்ந்தும் சுவையற்றிருக்கும் கறிகாய்களும் புலாலும் சேர்ப்பதும், எள்ளும், எள்ளின் எண்ணெயும், இட்லி, தோசை போன்ற மாவாலான பணியாரங்களும் உணவில் அதிக அளவில் தொடர்ந்து சேர்ப்பதும் உடல் நலனைக் கெடுத்து எல்லாத் தோஷங்களையும் தோற்றுவிக்கும் என்று சரகர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.
மனதைச் சார்ந்த ரஜஸ் எனும் தோஷம் சீற்றமடையக் காரணமாக பிறரது பொருளை அடையத்தகாத முறையில் அடைய ஆவல், அடைந்துள்ளதை இழப்பதால் ஏற்படும் சோகம், பிறர் கேடு விளைவிப்பரோ என்ற கிலி, தன் உடல் பற்றி எரியுமளவிற்கு எழும் கடுஞ்சினம், மறைக்கத்தக்க தனது பிழைகளை மறைக்காமல் வெளிப்படுத்தும் குணம், பலருக்குப் பொதுவான பொருளில் தன்னைத் தவிர பிறர் பங்கு கொள்வதைச் சகிக்க முடியாமை, தக்கதையும் அதிக அளவில் விரும்புதல் போன்றவை உணர்ச்சிகள் தான் எனினும் இவற்றை அடக்க வேண்டும். போக்கிடம் காட்டி வெளிப்பட இடம் தரக்கூடாது என்கிரார் சரகர்.
ரத்தக் கொதிப்பும் தலைச்சுற்றலும் மாற எளிய வழிகள்:

  • மல்லி (தனியா), சந்தனத்தூள், நெல்லி வற்றல் இம்மூன்றையும் கஷாயமாக்கி அல்லது வென்னீரில் டீ போல் தயாரித்துச் சாப்பிட, பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்றலும் ரத்தக் கொதிப்பும் நீங்கும்.
  • ஏலக்காயை (5-6) கஷாயமிட்டுப் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட தலைச்சுற்றல், மயக்கம் நீங்கும்.
  • சீரகக் கஷாயம் தயாரித்து தேன் அல்லது நெய் சேர்த்துச் சாப்பிடுவதால் தலைச்சுற்றல், மயக்கம், நீரடைப்பு, பித்த அடைப்பால் ஏற்படும் நோய்கள் ஆகியவை விலகிடும்.
  • வெந்தயக் கீரையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கிச் சாப்பிட பித்தக் கிறுகிறுப்பு, வயிற்று உப்பசம், பசியின்மை, ருசியின்மை நீங்கும்.
  • இயற்கை தரும் பரிசான வேப்பம் பூ, ரத்தக் கொதிப்பையும் தலைச்சுற்றலையும் நீக்கும் அருமருந்தாகும். பச்சையான வேப்பம்பூவை வறுத்தும் காய்ந்ததை நெய்யிலும் எண்ணெயிலும் பொரித்தும் சாப்பிடலாம். சுவையில் கசப்பானாலும் மற்றவற்றைச் சுவைத்து உண்ணச் செய்யும். ருசியின்மை, உணவில் வெறுப்பு, வாந்தி, பித்தத்தால் தலைச்சுற்றல், எண்ணெய் அஜீரணத்தால் ஏற்படும் தலைச்சுற்றல், ஏப்பம் இவற்றை வேப்பம்பூ தணிக்கும். நெய் அல்லது எண்ணெய்யில் பொரித்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். கீரிப்பூச்சி, ஆசனவாய் அரிப்பு முதலிய வற்றுக்கு மிகவும் ஏற்றது.
  • தேனில் ஊறிய நெல்லிக்காய் 1-2ஜ காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட தலைச்சுற்றல் நீங்கும். நல்ல பசி, பலம், புஷ்டி, மனத்தெளிவு, சுறுசுறுப்புத் தரும்.
  • பேரீச்சம் பழம் கொழுகொழுப்பும் இனிப்பும் குளிர்ச்சியுமுள்ளது. தாமதித்துச் செரிக்கும். உள்ளழற்சி, எரிச்சல், நீர் வேட்கை, தலைச்சுற்றல், ருசியின்மை முதலியவற்றை நீக்கும்.
  • ஆரஞ்சு பழத்தோல், பச்சடி ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்தும்.
  • தலைச்சுற்றல், மலச்சிக்கலுடன் கூடிய உஅயர் ரத்த அழுத்த நோய்க்கு பூவன்வாழைப்பழத்துடன் தேன்கலந்து சாப்பிட நல்லது.
  • ரத்தக் குழாயை விரிவுபடுத்தும் முளைகட்டிய பச்சைப்பயறு, நாட்டுத்தக்காளி, முள்ளங்கி, வெங்காயம், பூண்டு, பாகற்காய் சாப்பிட சிறந்த உணவு வகைகளாகும்.

ஆயுர்வேத மருந்துகளில் அஸ்வகந்தாரிஷ்டம் 30 மிலி. காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும். பலாதாத்ரியாதி தைலம் தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும். கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலையில் மருந்துகள் கிடைக்கும்

Home Page ஆயுர்வேதம்