வைஷ்ணவம் ஸ்ரீ ரங்கநாதர் (ஸ்ரீ ரங்கம், தமிழ்நாடு) ஸ்ரீ ரங்கநாதரின் கோயில் ஸ்ரீ ரங்கத

வைஷ்ணவம்

ஸ்ரீ ரங்கநாதர் (ஸ்ரீ ரங்கம், தமிழ்நாடு)

ஸ்ரீ ரங்கநாதரின் கோயில் ஸ்ரீ ரங்கத்தில் புனிதமான காவிரி நதிக்கும் அதந் மிகப்பெரிய கிளை நதியாகிய கொள்ளிடத்திற்கும் நடுவில் தீவுத்திடலில் அமைந்துள்ளது. வைஷ்ணவர்களின் 108 திவ்யதேசங்களில் முக்கியமானதும் முதன்மையானதும் இந்த கோயில். பூலோக வைகுண்டம் எனப்பெயர் பெற்ற இந்த கோயில் மிகவும் பெரியவற்றில் ஒன்று இது 4000 ஆண்டுகட்கும் முந்தையது என்பது வரலாற்றிலிருந்து அறியப்படுகிறது. இந்த கோயில் 7 பிரகாரங்களைக் கொண்டது. சில வெளிப்பிரகாரங்கள் பலகுடி இருக்கும் வீடுகள் கொண்ட தெருக்களாக உள்ளன. இந்த கோயிலில் ஸ்ரீ மஹாவிஷ்ணு ரங்கநாதர் என்ற பெயருடன் தன்னுடைய ஆதிசேஷ படுக்கையில் கிடந்த கோலத்தில் (சயன கோலம்) காட்சி அளிக்கின்றார். இந்த காட்சி மனதைக் கவரும் ஒன்று.

ராவணனின் சகோதரனாகிய விபீஷணனால் வணங்கி தொழப்பட்டவர் இந்த பெருமாள் என்று தலபுராணம் சொல்கிறது. அயோத்தியில் ஆண்ட இஷ்வாகு வம்சத்தில் தோன்றிய ஸ்ரீ ராமனின் முன்னோர்களால் வழிபாடு செய்து கொண்டு வரப்பட்டவர் இந்த ஸ்ரீ ரங்கநாதர் என்று வால்மீக ராமாயணம் மூலம் தெரிகிறது. வருடம் முழுவதும் இந்த தலத்திற்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த இறைவனின் மீது 12 ஆழ்வார்களும் தரிசனம் செய்து (மங்களா சாஸனம் செய்து) பாசுரங்கள் பாடி வழிபட்டுள்ளனர்.

ஸ்ரீ ரங்கநாதரின் திருவிழாவில் திவ்ய பிரபந்த பாசுரங்களை நாட்டியம் மூலம் அரயர் சேவை என்ற பெயருடன் நடித்துக்காட்டுவது என்பது ஒரு சிறந்த அம்சமாகும்.

வைஷ்ணவ ஆசார்யரான ராமானுஜர் இந்தத் தலத்தில் 20 ஆண்டுகள் வசித்து இங்கு ஆசார்ய பீடத்தில் ஆசார்யனாக அமர்ந்து தன்னுடைய கிரந்தங்களை எழுதியுள்ளார்.