விழுப்புரம், திருவானைக்கோயில் - 13 October 2004 சித்தூரிலிருந்து விடியற்காலையில் புறப்பட்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாலபெரியவர்கள் விழுப்புரம் காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தார்கள்

விழுப்புரம், திருவானைக்கோயில் - 13 October 2004

சித்தூரிலிருந்து விடியற்காலையில் புறப்பட்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாலபெரியவர்கள் விழுப்புரம் காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தார்கள். விழுப்புர எல்லையில் நல்லதொரு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாலபெரியவர்கள் சங்கரா வித்யாலயாவினை பார்வையிட்டு பின் பாடசாலை வந்து சேர்ந்தார்கள்.

திருப்பதி திருமலையிலிருந்து நவராத்ரி பூஜை நடக்க இருக்கும் மதுரைக்கு விழுப்புரம் வழியாக செல்லாமலும் நேரிடையாகவே செல்லக்கூடும். இருப்பினும் விழுப்புரம் வந்தார்கள் என்ற போது அதற்கு ஒரு தனி காரணம் உள்ளது.

ஓர் இடம் பிரபலமடைவதற்கு அந்த இடத்தில் பிறந்தவர்களின் தன்மை, குணம், நடவடிக்கை காரணமாக அமைகின்றது. உலகம் முழுவதும் ஒரு இடம் பிரபலமாக வேண்டுமானால் அந்த இடத்தின் சிறப்பிற்கு காரண பூதராக ஒரு மஹான் இருக்க வேண்டும். நூற்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புத்தில் தோன்றிய மஹான் வேறுயாருமல்ல. அனைவராலும் போற்றி புகழப்பட்டு வணங்கப்பட்டு நடமாடும் தெய்வம் என்று கருதப்பட்ட ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக நூறுவயது அருளாசி நடத்திய மஹாஸ்வாமிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்தான்.

பெற்றவர் இட்ட பெயர் ஸ்வாமிநாதன். பிரணவப் பொருள் கேட்ட பரமனுக்கும் பொருள் சொன்ன தகப்பன் ஸ்வாமியின் பெயரைத் தாங்கிய குழந்தை பிற்காலத்தில் உலகிற்கே ஆன்மிகத்திற்கு பொருள் சொல்லி வழிகாட்டப் போகிறது என்ற தீர்க்க தரிசனத்திலோ இந்த பெயர் சூட்டப்பட்டது. ஆன்மிகம் தழைக்க அவதரித்த மஹான் வேதங்களை காக்க வந்த ரக்ஷகர். கலாசாரங்களை காத்திட்ட காவலர். ஸெளலப்யம், ஸெளசீல்யம் என்றெல்லாம் இராமபிரானின் குணங்களை வர்ணிப்பார்கள். இந்த குணங்களை நேரில் கண்டு மகிழும் பாக்கியத்தை அனைவருக்கும் அளித்த மஹான். எளிதில் எவரும் அணுகும் வகையில் எளிமையானவர். சீலத்தின் மறு உருவாக திகழ்ந்தவர். எல்லா மதத் தலைவர்களாலும் ஒருமித்து போற்றி வணங்கப்பட்டவர். இன்று யாவரலும் புகழபபட்டு வரப்படும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்யார்களை தேர்ந்தெடுத்து நாட்டுக்கு தனது வாரிசாக அளித்த உத்தமர். அன்னவரின் ஜனன ஸ்தானம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தால் பராமரிக்கப்பட்டு அன்னாருக்கு மிகவும் மனதிற்கு உகந்தான வேதத்தினை போதிக்கும் பாடசாலையினை நிர்வகித்து வரப்படுகிறது.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் துறவறம் ஏற்பதற்கு முன்னால் பள்ளி மாணவனாக இருந்த தலமும் விழுப்புரம் தான்.

இரண்டு மஹான்களையும் தன்னிடத்தில் கொண்டதால் பூரித்து விம்மி மகிழும் பூமித்தாயின் ஒரு பகுதியான விழுப்புரத்தில் ஸ்ரீமஹாபெரியவர்களின் நினைவாக ஒரு பெரிய ஸ்தூபி எழுப்பப்பட்டுள்ளதது,

திருமலையில் பெருமானை தரிசித்து பின் தனது பரமகுருவின் ஜன்மஸ்தானமும், தன்குருநாதர் பால்யத்தில் விளையாடி புனிதப்படுத்தியதானதும், ஆன விழுப்புரத்திற்கு விஜயம் செய்து அங்கு எழுப்பப்பட்டுள்ள ஸ்தூபியையும் கண்டு, மேற்கொண்டு பயணத்தை தொடர திருவுள்ளம் கொண்டால் போலும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாலபெரியவர்கள்.

விழுப்புரத்தில் சிறிது நேரம் தங்கி மாலையில் அங்கிருந்து புறப்பட்டு இரவு தங்கலுக்கு திருவானைக்கோயில் வந்து சேர்ந்தார்கள் ஸ்ரீபாலபெரியவர்கள். பெரியவர்கள் ஸ்ரீமடத்து பாடசாலைக்கு வந்த சிறிது நேரத்திற்குகுள்ளேயே அகிலாண்டேஸ்வரி கோயில் நவராத்திரியை முன்னிட்டு பஞ்சமூர்த்திகளின் உத்ஸவ ஊர்வலம் பாடசாலையை வந்து அடைந்தது. தன்னிடம் வந்த தனயனை தாயும் தந்தையும் எதிர்கொண்டு அழைத்தனாரோ என்று எண்ணுமாறு அமைந்தது இந்த காட்சி. ஸ்ரீ பாலபெரியவர்கள் பஞ்சமூர்த்திகளை வழிபட்டு மகிழ்ந்தார்கள்.

இரவு பாடசாலையில் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள்.

நாளை விவரம் நாளை

14-10-2004 இராமாயணம்

திருவானைக்கோயில்