Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருப்பெருந்துறை

திருவாசகத்தலங்கள்

திருப்பெருந்துறை

ஆவுடையார் கோயில்

திருவாசகத் தலம். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்குப் பக்கத்தில் உள்ளது. அறந்தாங்கி - மீமிசல் பாதையில், அறந்தாங்கியிலிருந்து 14 A.e. தொலைவில் உள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், மதுரையிலிருந்து திருப்பத்தூர் காரைக்குடி அறந்தாங்கி வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம். மக்கள் வழக்கில் இன்று இத்தலம் ஆவுடையார்கோயில் என்று வழங்குகிறது. ஊர் - பெருந்துறை. கோயில் - ஆவுடையார் கோயில். கோயிற் பெயரான ஆவுடையார் கோயில் என்பதே ஊருக்குப் பெயராக வழங்ககிறது. சிறிய ஊர். அருகில் செல்லும் போதே கோபுரம் காட்சியளிக்கிறது.

அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம். மாணிக்கவாசகர் அருள் பெற்ற புண்ணி பூமி. அருபரத்து ஒருவன் குருபரனாக வந்து காட்சி தந்த பதி. இத்திருக்கோயில், இறைவனின் கட்டைள்பபடி மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது. கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். பண்டைநாளில் ஸ்தபதிகள் கோயில்

கட்டுவதற்கு உடன்படிக்கைஎழுதுங்கால் ஆவுடையார் கோயில் கொடுங்கைகளைப் போலத் தங்களால் அமைக்க முடியாது என்பதைக் குறிக்கும் வகையில் "ஆவுடையார் கோயில் கொடுங்கைகள் நீங்கலாக" என்ற எழுதும் வழக்கம் இருந்ததாம். பெரிய கனமுடைய கருங்கல்லை, மெல்லியதாக இழைத்து, பல மடிப்புக்களாக அமைத்துள்ள இக்கலைத் திறனைப் பார்க்குங்கால் நம் அறிவுக்கும் எட்டாத அபூர்வ ஆற்றலை அறிந்தின்புறலாம்.

திருவாவடுதுறை ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட கோயில். ஆதினக் கட்டளைத் தம்பிரான் ஒருவர் இங்கிருந்து கோயிலைக் கவனித்து வருகிறார்.


இறைவன் - ஆம்நாதசுவாமி, குருசுவாமி, பரமசுவாமி, ஆத்மநாதர்.


இறைவி - யோகாம்பாள்.


தலமரம் - குருந்த மரம்.


தீர்த்தம் - அக்கினித் தீர்த்தம் (திருத்தமரம் பொய்கை)


உலகவுயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக - பெரும் துறையாக விளங்கும் தளம் ஆதலின் பெருந்துறை எனப் பெயர் பெற்றது. வெள்ளாறு (சுவதேநதி) பாய்கின்ற வயற்பரப்புக்கள் நிறைந்த பகுதி. "தெள்ளுநீர் வெள்ளாறுபாய், திருமிழலை நாட்டுப் பெருந்துறை" என்பது சிவலோக நாயகி பொன்னூசலில் வருந்தொடர்.

திருவாசகத்திலுள்ள 51 பகுதிகளில் 20 பகுதிகள் (சிவபுராணம்) , திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செத்திலாப்பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா, பண்டாய நான்மறை) இத்தலத்தில் பாடப்பெற்றவை.

இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் - அனாதிமூர்த்தத்தலம், ஆதிகயிலாயம், உபதேசத்தலம், குருந்தவனம், சதுர்வேதபுரம், சதுர்வேதமங்கலம், ஞானபுரம், சிவபுரம், திருமூர்த்திபுரம், தட்சிண கயிலாயம், யோகவனம் முதலியன.

ஆத்மநாதருக்கு 18 பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவை 1) ஆத்மநாதர் 2)

பரமசுவாமி 3) திருமூர்த்திதேசிகர் 4) சதுர்வேதபுரீசர் 5) சிவயோகவனத்தீ §சர் 6) குந்தகவனேசர் 7) சிவக்ஷேத்ரநாதர் 8) சன்னவனேசர் 9) சன்னவநாதர் 10) மாயபுரநாயகர் 11) விப்பிரதேசிகர் 12) சப்தநாதர் 13) பிரகத்தீசர் 14) திருதசதேசிகர் 15) அசுவநாதர் 16) சிவபுரநாயகர் 17) மகாதேவர் 18) திரிலோககுரு என்பன. மற்றும் ஷடாராதனர் என்ற பெயருமுண்டு.

சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும். சில மேற்கு நோக்கியிருக்கும். ஆனால் குருமூர்த்தமாக அமைந்த இத்திருக்கோயில் தெற்கு நோக்கியுள்ளது. தவிர, சிவாலயங்களில் இறைவன், சிவலிங்கபாண வடிவில் அருவுருவாகக் காட்சிதர, இக்கோயிலில் மட்டும் குருந்தம் மேவிய குருபரனான ஆத்மநாதர் அருவமாக இருந்து சித்தத்தைச் சிவமாக்கும் சித்தினைச்

செய்தருளுகின்றார். ஆறாதாரங்களை நினைவூட்டும் வகையில் கனகசபை முதலான ஆறு சபைகளும் இக்கோயிலில் உள்ளன. திருப்பரங்குன்றத் திருப்புகழில் "அருக்கு மங்கையர்" என்று தொடங்கும் பாடலில் "வழியடியர் திருக்குருந்தடி அருள் பெற அருளிய குருநாதர்" என்று ஆத்மநாதசுவாமி போற்றப்படுகிறார்.

ஆத்மலிங்க வடிவில் இறைவன் இப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிறப்பை - அருவ நிலையை - ஆத்மசொரூபமாக உள்ள நிலையை

"பார்த்து நாம் குருவாய் வந்தனுக்கிரம்

பதனமாய் வைத்து மனத்துள்ளே - நிதம்

பத்திசெய் வேறொன்றுமில்லை யில்லை - இது

பரம ரகசியம் என்று கொள்ளே" - என்று மாணிக்கவாசகர் விலாசம் என்னும் பழைய நூல் புகழ்கிறது.

இத்தலம் வனம், தலம், புரம், தீர்த்தம், மூர்த்தி, தொண்டர் எனும் 6 சிறப்புக்கள் அமைந்தது 1) வனம் - குருந்தவனம் 2) தலம் - தீர்த்தத்தலம் 3) புரம் - சிவபுரம் 4) தீர்த்தம் - திருத்தமாம் பொய்கை 5) மூர்த்தி - ஆத்மநாதர் 6) தொண்டர் - மாணிக்கவாசகர்.

கோயிலின் முன்புறம் திருவாவடுதுறை ஆதீனப் பெயர்ப் பலகையுள்ளது. எதிரில் சற்று உள்ளடங்கி, குளமொன்று உள்ளது - பயன்படுத்தும் நிலையில் இல்லை. சாலையிலிருந்து கோயிலுள் நுழையும் முன்பு மண்டபத்தின் மேற்புறம் குருந்தமர உபதேசக்காட்சி அமைக்கப்பட்டள்ளது. உட்புறம் சுற்றிலும் கடைகள், மண்டபத்தின் விதானம் மரத்தாலாகியது.

பார்வையைச் சற்று உயர்த்தினால் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ் நோக்கியவாறு) , ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப்பிடிபோல நிறுத்தி - அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டமென்னும் எண்ணத்துடன் உள்ளே செல்க என்று நமக்கு உணர்த்துவது போல இஃது உள்ளது.

அடுத்துள்ளது மண்டபம் பெரியது - ரகுநாத பூபால மண்டபம். அற்புதமான வேலைப்பாடுடைய பெரிய மூர்த்தங்கள், அகோர வீரபத்திரரும், ரணவீரபத்திரரும் உட்புறமாகத் திரும்பியவாறு தரிசனம் தருகின்றனர். மத்தியில் மேற்புறத்தில் விராட் சொரூபம் வண்ணத்தில். பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர்களான வேதவனப் பண்டாரம், ஆறுமுகப் பண்டாரம் ஆகியோர்களால் இம்மண்டபம் 330 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டதாம்.

இடப்பால் சிவானந்த மாணிக்கவாசகர் சந்நிதி. வலமாகச் சுற்றி வரும்போது துவாரபாலகர்களையும் விநாயகரையும் தரிசிக்கிறோம். சுவரில் வண்ணஓவியங்கள் மிகப்பழமையானவை. அழிந்த நிலையில் உள்ளன. அவற்றுள் ஒன்று.

'அண்ட ரண்ட பட்சி'யின் வண்ண ஓவியம். இப்பறவை இரண்டு யானைகளை ஒருசேரத் தூக்குமளவுக்கு வலிமையுடைய பறவையுள்ள திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பாம்பன் சுவாமிகள் பாடியுள்ள வீரபத்திரச் சக்கரத்தின் வண்ண ஓவியம் உள்ளது. அட்டாங்க யோக வளர்ச்சிச் சிற்பங்கள் மேற்புறத்தில் உள்ளன. தூணில் கண்ணப்பர், கண்களை அப்பும் கோலம் முதலியைவகளையும் காணலாம்.

மண்டபத்தின் ஓரங்களில் அமைந்துள்ள கொடுங்கைகளின் அழகைக் கண்டு ஆனந்தம் பெறலாம்.

அடுத்துள்ளது ராஜகோபுரம் - முன்பு ஐந்து நிலைகளாக இருந்ததை மாற்றி எழுநிலைகளாக்கித் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மகாகும்பாபிஷேகம் 27 -6- 1990 அன்று நடைபெற்றது நெடிதுயர்ந்த ராஜகோபுரம், தொலைவில் வரும்போதே வா என்று அழைக்கும் வான்கருணைச் சான்றான ஆத்மநாத ஸ்வரூபத்தின் ஸ்தூல அடையாளம்.

ராஜகோபுரத்தின் வழியே உட்செல்லும்போது வாயிலின் இடப்பக்கத்தில் - சுவரில் - வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலுக்கு வைத்துள்ள தர்மத்தைப் பற்றிய சாசனக் கல்வெட்டு, பதிக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள விவரம் வருமாறு -

ஆவுடையார்க்கோயிலில் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாருடைய தர்மம் சகலருக்கும் பிரசித்தியாகத் தெரியும் பொருட்டு நிரந்தரமான ஞாபகத்தின் பொருட்டுச் செய்ய விளம்பரமாவது-

இறந்துபோன புண்ணிய புருஷராகிய பச்சையப்ப முதலியார் அவர்களாலே வைக்கப்பட்டிருக்கும் லட்சம் வராகனுக்கு வரப்பட்ட சாயர¬க்ஷ கட்டளைத் தர்மமானது. கனம் பொருந்திய சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்டு அதிகாரிகளால் தர்ம வரிசரணைக் கர்த்தர்களாக நியமிக்கப்பட்டுச் சென்னப் பட்டினத்திலிருக்கும் இந்து சபையாரவர்களுடைய உத்திரவின்படி சாலிவாகன சகாப்தம் 1764ஆம் வருஷத்து சரியான சுபகிருது இ §முதல் வருஷம் கறாளஉய 120 வராகன் செலவுள்ளதாக நடந்து வருகின்றது. ஷ மூலதனம் சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகளுடைய உத்திரவின்படி சென்னப் பட்டணத்திலிருக்கும் ஜெனரல் திரேசரி என்னும் கவர்ன்மெண்டாருடைய பொக்கி7த்தில் வைக்கப்பட்டிருக்கின்றது ஷ தர்மம் கிரமமாக நடவாவிட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர் ஷ சபையாரவர்களுக்குத் தெரியபடுத்த வேண்டியது."

உள்கோபுரத்தையும் தாண்டுகிறோம். அடுத்துள்ளது பஞ்சாட்சர மண்டபம். உட்புகுமுன் நம் நினைவுக்கு ஒரு குறிப்பு.

இக்கோயிலில் கலாத்வா, தத்துவாத்வா, புவனாத்வா, வர்ணாத்வா, பதாத்வா, மந்திராத்வா முதலிய ஆறு ஆத்வாக்களைக் குறிக்கும் வகையில் ஆறுவாயில்கள் - ஆறுசபைகள் உள்ளன. அவை 1) கனகசபை 2) நடனசபை 3) தேவசபை 4) சத்சபை 5) சித்சபை 6) ஆநந்த சபை என்றழைக்கப்படுகின்றன.

(கனகசபை - 81 தீபங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நர்த்தனசபை (நடன நிருத்தசபை) - பதஞ்சலி வியாக்ரபாதர்கள் பெருமானிடம் கருணையை வேண்டிப் பெற்ற இடம் 224 புவன தீபங்களையுடையது. சூரனிடம் பயந்த தேவர்கள் தவஞ்செய்த இடமாகச் சொல்லப்படுவது தேவசபை - சுந்தரபாண்டிய மண்டபம் என்பர். இங்க ஏகாதச மந்திரங்கள் 11 தீபங்களாக உள்ளன. சத்சபையில் 36 எண்ணுடைய தத்துவத் தீபங்கள் பிரகாசிக்கின்றன. சித்சபையில் அகரமுதலான 51 எண்ணுடைய தீபம் திகழ்கிறது. ஆநந்தசபையில் (கருவறையில்) பஞ்சகலைகள் என்னும் சுடர், பிரகாசிக்கிறது. இவ்வாறு இத்திருக்கோயிலில் தத்துவம் அனைத்தம் தீபவடிவங்களாகவே வைத்துக் காட்டப்பட்டுள்ளன. இக்கருத்தை மனத்துக் கொண்டு உட்செல்வோம்)

1. இப்போது நாமிருப்பது பஞ்சாட்சர மண்டபம் - இதை கனகசபை என்பர். முந்நூறு ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டதாம். கொடுங்கைகளை அழகாகப் பெற்றுள்ள இம்மண்டபத்தின் மேற்புறச் சுவரில் எண்ணற்ற புவனங்களைக் குறிக்கும் அட்சரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆத்மநாதர், தம்மை வழிபட்டு வந்த அந்தணர்களுக்கா, பூமியில் (கீழ்) நீர் வெட்டிக் காட்டிய திருவிளையாடலைக் குறிக்கும் சிற்பம் உள்ளது. பாண்டியன் விசாரிக்க, அமைச்சன் நிற்க, பக்கத்தில் கீழ்நிரை வெட்டிக் காட்டியவராக - குதிரைச் சாமியாராகக் காட்சி தரும் கோலத்தை இம்மண்டபத்தில் காணலாம். (இவ்வரலாறு இக்குறிப்பின் கடைசியில் தரப்பட்டுள்ளது.)

இவ்வரலாற்றுச் செய்தியைக் கவிக்குஞ்சர பாரதியார்,

"வனமான கைலைக்கு நிகரான சதுர்வேத

மங்களம் இருந்த லிங்கம்

கங்கை பங்காளராய் வேதியர்க் காகவே

காணி பறிகொண்ட லிங்கம்"

என்று பாடியுள்ளார்.

இதையே பின்வரும் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணப் பாடலும் தெரிவிக்கின்றது.

"பொருந்துதில்லை வனம் கடந்துபோந்த வேந்தற்சேர்ந்தருளின்

வருந்த விடலந்தனிலிருந்த மறையோனாகி மறையோர்கட்

கிரங்கியருங் கீழ் நீர் காட்டி யிடங்கள் மீட்ட பெருமானே

குருந்த வரம்பிற் கரந்த மறைக் கொழுந்தே செழும் பொற்றாள் போற்றி."


இங்குள்ள தூண் ஒன்றில் இருதலைகளும் ஓருடலும் கொண்டு பின்னிய நிலையிலுள்ள பாம்பும், ஒன்றில் சாமுத்ரிகாலட்சணத்தைக் காட்டும் பெண் முதலான சிற்பங்களும் உள்ளன.

இடப்பால் மாணிக்கவாசகர் மூலத்தானம். கிழக்கு நோக்கியது. இங்குள்ள தூண் ஒன்றில் நவக்கிரகங்கள் கல்லில் அடித்து வைக்கப் பட்டுள்ளன. தனியாக இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில்லை. சந்நிதி மேற்புறத்தில் 27 நட்சத்திர வடிவங்களும் கல்லிற் செதுக்கப்பட்டுள்ளன. எதிரில் உள்ள தூண்களில் ஆதீனக் குருமூர்த்திகள், கட்டளைத் தம்பிரான்கள் காட்சி தருகின்றனர். சந்நிதியின் வெளிச்சுவரில் வண்ண ஓவியத்தில் ஸ்பரிச உபதேச, திருவடி தீட்சை ஓவியங்கள் உள்ளன. வலமாக வரும்போது திருவிளையாடற்புராண வரலாறுகளுள் பிறவும் வண்ணத்தில் இருப்பதைக் காணலாம்.

2. அடுத்தது நிருத்த மண்டபம் - நடனசபை, நர்த்தன சபை. இடப்பால் குறவன், குறத்தி சிலைகள். அற்புதமான கலையழகு, தலைக்கொண்டை முதல் ஒவ்வொரு உறுப்பையும், கை விரல் ரேகைகள் கூடத் தெளிவாக தெரியும் வண்ணம் செதுக்கியுள்ள கைவண்ணம் - வேடனின் நளினத்தோற்றம் - இவ்வாறே வலப்பால் காட்சிதரும் வேடன் வேடுவச்சி சிற்பங்கள் -அற்புதமான கலையழகு கருவூலங்கள். கண்களுக்குக் கொள்ளையழகு. சோமாசிமாற நாயனார் செய்த யாகத்திற்கு இறைவன் சென்ற வடிவம் இஃதுதானே நினைத்தால் புல்லரிக்கும்,

மெய்சிலிர்க்கும். தலையழகுக் கோலங்கள் சங்கநிதி, பத்மநிதி சிற்பங்கள் - சற்று உள்ளே சென்றால் இடப்பால் வியாக்ரபாதரும் வலப்பால் பதஞ்சலியும் உள்ளனர். மற்றோர் இடத்தில் யாக்ஞவல்கியர் ஜனகர் உருவங்கள், நிருத்த மண்டபம் என்பதற்கேற்ப கல்விளக்குத் தூண் ஒன்றில் நிரூத்த (நடன) சிற்பங்கள் ஒன்றின் கீழ்

ஒன்றாக உள்ளன.

3. வாயிலைக் கடந்து உட்புகுந்தால் அடுத்து வருவது தேவசபை - சுந்தர பாண்டிய மண்டபம் (சுந்தர பாண்டிய மன்னனால் புதுப்பிக்கப்பட்டதாதலின் இப்பெயர் பெற்றது) இடப்பால் பிராகாரத்தில் மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்தி சந்நிதி. இப்பெருமானைத் தரிசித்து விட்டுத்தான் உள்ளே மூலவரைத் தரிசிக்க செல்ல வேண்டும் என்பது இக்கோயில் மரபு. விநாயகர், வீரபத்திரர், பிட்சாடனர், ஊர்த்துவர் மூர்த்தங்களைத் தரிசித்தவாறே அம்பிகை சந்நிதியை அடைகிறோம். சுவாமியைப் போலவே அம்பாளும் தெற்கு நோக்கிய சந்நிதி, ஆத்மநாத சுவாமியைப் போலவே அம்பாளும் அருவம்தான். ஸ்ரீ யோகாம்பாள் சந்நிதியில் திருமேனி இல்லை. சததளபத்ம பீடத்தில் - 100 இதழ்கள் கொண்ட தாமரையாகிய பீடத்தில் - யோகாம்பாளின் திருவடிகள் மட்டமே தங்கத்தாலான யந்திர வடிவமாக உள்ளன. முன்புறமுள்ள கல் ஜன்னல் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். அதற்கேற்ப ஒளி பொருத்தப்பட்டுள்ளது. பூஜை செய்வோர் மட்டும் உள்ளே செல்வதற்குப் பக்கவாயில் உள்ளது. யோக சொரூபியைத் தரிசித்து விட்டு வலமாக வரும்போது சுவரில் உள்ள சிவபுராணத்தையும் திருவாசகப் பாடற்பகுதிகளையும் படித்தவாறே வலம் வரலாம்.

அடுத்த தரிசனம் தல விசேடக் காட்சியான குருந்தமர உபதேசக் காட்சி. கல்லில் வடித்துள்ள குருந்தமரம் - கீழே இறைவன் குரு வடிவில் அமர்ந்திருக்க எதிரில் மாணிக்கவாசகர் பவ்வியமாக இருந்து உபதேசம் பெறும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. ஆனித் திருமஞ்சன நாளிலும் மார்கழித் திருவாதிரையிலும் மாணிக்கவாசகருக்கு உபதேசித்த காட்சி உற்சவம் நடைபெறுகிறது. அப்போது பூஜை செய்யும் நம்பியார் சிவ வேடமணிந்து, மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து உபதேச ஐதிகத்தை நடத்துவிக்கின்றார். "எந்தமராம் இவன் என்று என்னையும் ஆட்கொண்டருளும்" என்ற திருவாசகத்தை நினைவிருத்தித் தொழுது நகர்ந்தால், திருவாசகக் கோயிலைக் காணலாம். இங்குத் திருவாசக ஒலைச்சுவடியே இருப்பது விசேடம். நடராஜர் சந்நிதி மூலமூர்த்தமாக (கற்சிலையில்) அம்பலவாணர் - ஆனந்தக் காட்சி. பாலசுப்பிரமணியரை வணங்கி மேற்பகுதியில் "நிலம் நீர் நெருப்பு" என்று தொடங்கும் திருவாசகத் தோணோக்கப் பாடல் எழுதப்பட்டு, அதற்குரிய உருவங்களும் உள்ளன.

4. அடுத்த சபை, சத்சபை, இங்குள்ள விசாலமான கல்மேடையில்தான் சுவாமிக்குக் கைபடாத அன்னம் நிவேதிக்கப்படுகிறது. இதனால் இதற்கு அமுத மண்டபம் என்றும் பெயர்.

5. சித்சபை அடுத்துள்ளது. பூசை செய்வோர் நிற்குமிடம். ஐந்து (பஞ்ச) கலைகள் தீபங்களாகக் காட்சி நல்குமிடம்.

6. ஆனந்த மயமான ஆத்மநாதரை நேரே காண்கிறோம். பரமசுவாமியான ஆத்மநாதர் எழுந்தருளியுள்ள கருவறையே - குருவருள் கொலு வீற்றிருக்கும்

ஆநந்த சபை.

ஆவுடையார் - நம்மை ஆளுடையார். சதுரபீடம். மேலே சிவலிங்க பாணமில்லை. ஆத்மநாதசுவாமி அருவமாகக் காட்சியளிக்கிறார். அதற்குரீய இடத்தல் தங்கத்தாலான குவளை (ஆவுடையாரின் மேலே) சார்த்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னால் 27 நட்சத்திரங்களைக் கொண்டதான திருவாசி உள்ளது. அதன் மேலே மூன்று விளக்குகளை வைத்துள்ளனர். அவற்றுள் சிவப் § அக்கினியையும், வெண்மை சூரியனையும், பச்சை சந்திரனையும் குறிக்கின்றதென்பர். சுவாமிக்கு முன்னால் இருதூங்கா விளக்குகள் சுடர் விடுகின்றன.

மண்ணிலே பிறந்து இறந்து மண்ணாவதற்கு ஒரப்படுகின்ற நம்மை, அண்ணல் ஆட்கொண்டு அடியரிற்கூட்டிய 'அதிசயத்தை' அகம் நெகிழ நினைத்து, கண்ணீர் பெருக்கி, கையாரத் தொழுது, வாய்குளிரப் பாடி, "சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே" என்று பிரார்த்திக்கின்றோம்.

சேர்ந்தறியாக் கையானிடம் கைகளைச் சேர்த்துக் குவித்து, நெஞ்சிற்குடி கொண்ட நீலமேனியைத் தியானிக்கின்றோம்.

"சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளுமலை போற்றி"

பிரிய மனமின்றித் தரிசித்தவாறே வெளியே வந்து பக்கத்தில் சென்றால் தியாகராஜா மண்டபத்தை அடையலாம். வழியில் வெயிலுகந்த விநாயகர் வீற்றிருக்கின்றார். பக்கத்தில் அக்கினிதீர்த்தம் "இதற்குத் திருத்தமாம் பொய்கை" என்று பெயர். தியாகராஜ மண்டபத்தில் மகாலிங்கமூர்த்தி தரிசனம் தருகரிறர். எதிரில் முத்து விநாயகர் மண்டபத்தின் மேற்கூறையில் தொங்கும் கற்சங்கிலிகள் கண்களைக் கவர்கின்றன. கொடுங்கைகளின் அற்புதத்தை இம்மண்டபத்தில் காணலாம். எவ்வுளவு கனமான கருங்கல்லை எந்த அளவுக்கு மெல்லியதாக இழைத்து, எத்தனை எத்தனை மடிப்புக்களாகக் கொண்டு வந்துள்ளார்கள் என்பதைக் கண்டு வியப்படைவதற்காக இடப்பக்கத்தின் கோடியில் இரண்டு மூன்றிடங்களில் துளையிட்டுக் காட்டியுள்ளார்கள்.

விழா நாள்களில் மாணிக்கவாசகர் இம்மண்டபத்திற்கு எழுந்தருளி, இருந்து, பின் புறப்பாடாகிறார். மண்டபத்தைக் கண்டு வியந்த நமக்கு அடுத்த தரிசனம் தலமரங்களான இருகுருந்த மரங்கள்தாம். இம்மரத்தினடியில் தானே பெருமான் வந்தமர்ந்தார் என்று நினைக்கையில் விழிநீர் பெருக்கி, இம்மரத்திற்குக் கிடைத்த பேறு கூட நமக்குக் கிடைக்கவில்லையே என்றெண்ணித் தொழுகின்றோம். வலமாக வெளியேறுகிறோம். கோயிலின் பக்கத்திலுள்ள தெருக்கோடியில் ஆதீனத்தின் கோயில் நிர்வாக அலுவலகம் உள்ளது.

இத்திருக்கோயில் பல்வகையிலும் சிறப்புக்களைப் பெற்றுத் திகழ்கிறது. இங்குத் தனியே தட்சிணாமூர்த்தி சந்நிதியில்லை. இத்தலத்தில் 24 தீர்த்தங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவை அக்கினி தீர்த்தம், ஆத்ம கூபம், வேததீர்த்தம், நாராயண தீர்த்தம், தேவதீர்த்தம், வாயுதீர்த்தம், மானவதீர்த்தம், காலாக்னிருத்ர தீர்த்தம், KS தீர்த்தம், ஆசுர தீர்த்தம் காந்தர்வ தீர்த்தம், இந்திர தீர்த்தம், பராசர தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர வாவி, வைதிக தீர்த்தம், லட்சுமி

தீர்த்தம், சரஸ்வதி கூபம், பக்த தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், கௌதம தீர்த்தம், தொண்டர் குழி, கீழ் நீர், சுவேதநதி என்னும் வெள்ளாறு என்பன. இதனால் சுவாமிக்குத் தீர்த்த நாதர் என்ற பெயருமுண்டு.

மூலவருக்கு மகுடாகமம் உத்தரபாகத்தின்படி பூஜைகள் நடைபெறுகின்றன. ஆனி மகத்திலும் மார்கழித் திருவாதிரையிலும் 10 நாள்கள் பெருவிழா நடைபெறுகிறது.

இத்தலத்தில் "நம்பியார்கள்" எனப்படுபவர்களே முக்கிய பூஜகர்களாவார்கள். இவர்கள் ஆத்ம நாதசுவாமியை உள்ளிட்ட 301 பேர்களாவர்.

இத்திருக்கோயிலில் ஆறு வகைப்பட்ட பிரவினர்களின் மூலமாகப் பூஜைகள் நடைபெறுகின்றன. அவ்விவரம் வருமாறு-

1) மூலவருக்கும், குரந்தமரத்தடியிலுள்ள மூல சுவாமிக்கும் - நம்பியார்களும்

2) பரிவார தெய்வங்களுக்குச் சிவாசாரியார்களும்

3) குதிரைச்சாமிக்குச் சைவப் பிள்ளைமார்களும்

4) வீரபத்திரருக்கு வேளாளர்களும், 5 கொத்தனார்களும்

5) மகாலிங்கமூர்த்திக்கு அஷ்ட சாஸ்திரக்காரர்கள் எனப்படுவோரும் பூஜைகளைச் செய்து வரும் ஏற்பாடு இங்குள்ளது.

நாள்தோறும் ஆறுகால பூஜைகள். ஆத்நாதருக்கு ஆறுகாலங்களிலும் புழுங்கலரிசி நிவேதனம், ஒரு தவலையில் வடித்து, கை படாமல் அப்பாத்திரத்தோடு கொண்டுவந்து அமுத மண்டபத்தில் உள்ள கருங்கல் மேடையில் (சுவாமிக்கு எதிரில்) அப்படியே கொட்டி, ஆவியோடு சுவாமிக்கு நிவேதிப்பதை நாமும் பார்த்துத் தரிசிக்கலாம். அர்த்த சாமத்தில் தினமும் புளியோதரை, எள் சாதம், பால் சாதம், உளுந்து சாதம், பாகற்காய், முளைக்கீரை நிவேதனம். திருவிழாக்காலங்களில் வழக்கமான ஷ நிவேதனங்களுடன் தேன்குழல், வடை, புட்டு சீயம், அதிரசம், தோசை முதலியவை சிறப்பு நிவேதனமாகும். இந்த நிவேதன அமைப்பு ஆனி மகத்திலும் மார்கழித் திருவாதிரையிலும் நடைபெறும் உற்சவகாலங்களில் மாணிக்கவாசகருக்கும் உண்டு.

ஆத்மநாதசுவாமிக்கு வருடமுழுவதும் உள்ள நைவேத்யம் மாணிக்கவாசருக்கும் இந்த இருவிழாக் காலங்களில் (10 + 10 = 20 நாள்களில்) படைக்கப்படுகிறது.

அக்கினி நட்சத்திரக்காலங்களில் சுவாமிக்கு இளநீரும் பானகமம், பாசிப் பருப்பும் தனித்த நிவேதனமாகும். (நிவேதனம் பற்றிய வரலாறு இக்குறிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது.)

கோயில் கல்வெட்டுக்களில் இத்தலம், மிழலைக்கூற்றத்து நடுவிற் கூற்றம் பிரமதேசம் தனியூர் திருப்பெருந்துறையான பவுத்திர மாணிக்கச் சதுர்வேத மங்கலம்" என்று குறிக்கப்பட்டுள்ளது. சுந்தரபாண்டிய மண்டபம், அம்பாள் மண்டபச்சுவர்கள், பஞ்சாட்சர மண்டபம் முதலிய இடங்களில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன. இவற்றிலிருந்து அக்காலத்தில் கோயிலுக்கும் சுவாமிக்கும் விடப்பட்ட நிவந்தங்கள் குத்தகைதாரர்களின் பத்திரங்கள், கும்பாபிஷேகம் நடைபெற்ற நிர்வாகச் செய்திகள் முதலியவை தெரிய வருகின்றன.

இத்திருக் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் ஆதிகயிலாய நாதர் கோயில்

உ ¢ளளது. தனிக் கோயில். மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசக்காட்சி அங்குத்தான். இக்கோயில் மாணிக்கவாசகருக்கு முன்பிருந்தே உள்ளது. இப்பகுதிகள் அனைத்தும் ஒரு காலத்தில் காடாக இருந்ததாம். தற்போது ஆதிகயிலாயநாதர் கோயில் உள்ள இடத்தை, வடக்கூர் (வடக்களூர்) என்றும், ஆவுடையார் கோயில் உள்ள இடத்தை தெற்கூர் என்றும் சொல்கின்றனர்.

ஆதிகயிலாயநாதர் கோயில் கிழக்கு நோக்கியது. சிவகாமி அம்பாள் சந்நிதி தெற்கு. விநாயகர் கிழக்கிலும் பைரவர் தெற்கிலும் நந்தி மேற்கிலும் எழுந்தருளியுள்ளனர். பராசரர், புலஸ்தியர், அகத்தியர் முதலிய மகரிஷிகள் இங்கிருந்ததாகச் சொல்கின்றனர்.

ஆதிகயிலாயநாதர் திருக்கோயிலில் திருப்பணிகள் பலவும் செய்தும், புதிய ராஜகோபுரம் அமைத்தும், மகாகும்பாபிஷேகம் 25-6-1990 காலையிலும், இத்திருக்கோயில் ராஜகோபுரத்தை, ஐந்து நிலைகளை மாற்றி ஏழுநிலைகளாக்கித் திருப்பணிகள் செய்து புதுப்பித்தும், உள்கோபுரத்தையும் திருப்பணி செய்தும், மஹாகும்பாபிஷேகம் பிரமோதூத ஆண்டு ஆனித்திங்கள். 13ஆம் நாள் 27-6-1990 புதன்கிழமையன்று காலை 6-7.30 மணிக்குள்ளும் சிறப்பாக நடைபெற்றது. திருப்பணிக் குழுத்தலைவர் கோவை சிரவணபுரம் கௌமார மடாலயம் சிரவை யாதீனம் ஸ்ரீ லஸ்ரீ சுந்தர சுவாமிகள் ஆவார். செயலர் கயிலைமணி. ஈரோடு திரு.மு. அழகப்பன், சேர்மன் அழகப்பா சிமெண்ட் லிமிடெட் அவர்களாவார்.

திருப்பெருந்துறை நாதனாய ஆத்மநாதசுவாமி நிகழ்த்திய அற்புதங்களுள் மாணிக்கவாகசரை ஆட்கொண்டதன்றி, அந்தணர் குழந்தைகட்கு வேதம் ஓதுவித்தது, 'கீழ்நீர் வெட்டிக் காட்டியது' முதலியவைகளும் அடங்கும். இவ்வரலாறுகளைப் பெருந்துறைப் புராணம், கடவுள் மாமுனிவர் புராணம், வீரவனப்புராணம், திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் முதலியவைகளில் காண்கிறோம்.

அவ்வரலாறுகள் வருமாறு-

1) அந்தணர் கூந்தைகளுக்கு வேதம் ஓதுவித்தது-

ஒரு முறை இறைவனே அந்தணராய் கிழவேடங்கொண்டு பெருந்துறையில் வாழ்ந்து வரும் முந்நூறு அந்தணர் வீட்டுக் குழந்தைகட்கும் வேதசாத்திரங்களைக் கற்றுத்தர முன்வந்தார். அந்தணர்களும் அது கேட்டு மகிழ்ந்து விநாயகரைப் பிரதிஷ்டை செய்து பாடசாலையன்றை ஏற்படுத்தித் தந்தனர். அந்தணர்களின் வீடுகளில் நாடொறும் புழுங்கலரிசி பாகற்காய் முளைக்கீரை சமைத்து அப்பெரியவருக்கு உணவாகத் தந்து வந்தனர். அவரும் அவ்வுணவை உண்டு பிள்ளைகளுக்கு வேதங்களைக் கற்பித்து வந்தார். ஞானயோக சாஸ்திரங்கள், வியாகரணம், தர்க்கம் முதலியவை அனைத்தையும் முறையகாக் கற்பித்தார். குழந்தைகளோடு குழந்தையாய்க் கலந்து ஓடியாடியும், கண்ணைப் பொத்தி விளையாடியும் மகிழ்வித்தார்.

இவருடைய வரவால் குழந்தைகள் பெரிதும் மகிழ்ந்து வேதங்களைப் பயின்று வந்தனர். ஒருநாள் குழந்தைகளோடு விளையாடிய கிழவர் திடீரௌ மறைந்தார். குழந்தைகள் அவரைக் காணாது வருந்தினர் - பெற்றோர்களிடம் முறையிட்டனர். அவர்களும் மனம் வருந்தி எல்லாவிடங்களிலும் தேடினர். பயனில்லை.

அன்றிரவு குழந்தைகள் அனைவருடைய கனவிலும் ஒரே சமயத்தில் இறைவன்தோன்றி, "அந்தணக் கிழவராக வந்து உங்களுக்கு வேத சாத்திரங்களைக் கற்பித்தது நானே. உங்கள் பெற்றோரிடம் சொல்லி இதுவரையில் நான் சுடச்சுட விரும்பியுண்டு வந்த புழுங்கல் அரிசி, முளைக்கீரை, பாகற்காய் ஆகிய இவற்றையே எனக்குச் சமைத்துச் சூட்டோடு நிவேதித்து வரச்செய்யுங்கள்" என்றருளி மறைந்தார். குழந்தைகள் விழித்து, மகிழ்ந்து, தத்தம் பெற்றோர்களிடம் செய்தியைச் சொல்ல, வந்தவர் இறைவனே என்று மகிழ்ந்து வணங்கினர். அன்று முதல் சுவாமிக்கு மேற் சொல்லியவாறே நிவேதனம் செய்யப்பட்டு வருகின்றது. இறைவன் குழந்தைகட்கு வேதசாத்திரங்களை ஓதுவித்த இடமாகிய குருந்தவனத்தில் ஸ்ரீ வித்யா கணபதி எழுந்தருளியுள்ளார். இம்மரபினரே நம்பியார் என்போர். இவர்களே ஆத்மநாதசுவாமி பூஜை செய்து வருகின்றனர்.

2) கீழ் நீர் வெட்டிக் காட்டியது.

பாண்டிய மன்னனின் ஆட்சிகாலத்திலும் துண்டகன் என்னும் அமைச்சன் இருந்தான். அவன் பேராசை கொண்டவன். சிவபுரம் என்னும் இக்கிராமத்தின் வளத்தைக் கேள்வியுற்று அக்கிராமத்தைத்தான் அடைய எண்ணினான். அக்கிராமம் தனக்குச் சொந்தமானது என்றும், அந்தணர்கள் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகவும் மன்னனிடம் சொல்லிவிட்டுச் சிவபுரம் வந்து அதிகார பலத்தால் அந்தணர்களை விரட்டியடித்தான், எல்லைக்கற்களை யெல்லாம் எடுத்தெறிந்தான். மறையவர்கள் செய்வதறியாமல், அவனை எதிர்க்க மாட்டாமல் சொத்துக்களை இழந்து அலைந்தனர். ஆத்மநாதரே கதி என்று அழுது வேண்டினர்.

அவர்க்கருள விரும்பிய ஆத்மநாதர் வயது முதிர்ந்தவராக வேடங்கொண்டு அந்தணர்களிடம் சென்று, "என்பெயர் பரமசுவாமி, திலையிலிருந்து வருகின்றேன். உங்கள் கிராமத்தைப் பற்றிய விவரமனைத்தும் எனக்குத் தெரியும். உங்கள் நிலையை அறிந்துதான் நான் வந்துள்ளேன். என்னிடமுள்ள பட்டயத்தைக் காட்டி உங்களுடைய பூமியை மீட்டுத் தருகின்றேன். அப்படி மீட்டுத் தந்தால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து 300ல் 1 பங்கை எனக்குத் தரவேண்டும்" என்றார். அதுகேட்ட அந்தணர்கள், துண்டகனின் கொடுமையைக் கூறி அவரைத் தடுத்தனர். வந்த பெரியவர் அவர்களைத் தைரியப்படுத்தி அழைத்துக் கொண்டு மதுரை வந்தார். வீதியில் உரக்கக் கூவினார். மன்னனுக்குச் செய்தி தெரிந்தது. அவரை அழைத்து அமர்த்தி விவரம் கேட்டான். சிவபுர மகிமையையும், அரசனுடைய குலப்பெருமையையும் எடுத்துரைத்துக் தன் வசமிருந்த பட்டயத்தைக் காட்டினார். சினந்த மன்னன் அமைச்சனை அழைத்து விசாரிக்க, அவனும் தன்னிடமிருந்த பட்டயத்தைக் காட்டினான். இருப்பட்டயங்களையும் பார்த்த மன்னன் செய்வதறியாது திகைத்து, இருவரையும் அநத்ப் பூமிக்குரிய அடையாளங்களைச் சொல்லுமாறு கேட்டான்.

அமைச்சனோ தன் பூமியில் எவ்வளவு வெட்டினாலும் தண்ணீர் வாராது என்று சொன்னான். பெரியவரோ தன் பூமியில் வெட்டினால் நீர் வரும் என்றார். பாண்டியன் இருவரையும் அழைத்துக்கொண்டு சிவபுரம் வந்தான். கோயிலின் ஈசான திசையில் உயர்ந்த மேட்டில் நீரை வரவழைக்குமாறு கூறினான். பெரியவர்

அதற்குடன்பட்டு, அனைத்துத் தீர்த்தங்களையும் அவ்விடத்தில் வருமாறு சங்கற்பித்து, பூமியை வெட்டிக் கீழ் நீரை மேலே வரர்செய்து வெளிப்படுத்தினார், அத்துடன் பூமியின் நான்கு எல்லைகளையும் அடையாளம் காட்டினார். பாண்டியன் துண்டகனைத் தண்டித்ததுடன் அமைச்சர் பதிவியிலிருந்துமூ நீக்கிவிட்டு மதுரை திரும்பினான். அந்தணர்கள் தங்கட்குப் பூமியை மீண்டுத் தந்த பெரியவர் ஆத்மநாதச சுவாமியே என்று துதித்து, அவரைப் பிரம்ம ரதத்தில் ஏற்றி, உபசரித்து, ஊர்வலமாக அழைத்து வந்து, வாக்களித்தபடியே அவருக்கும் ஒரு பங்கை அளித்து, தங்களோடு அவரையும் சேர்த்துக் கொண்டனர். அவரும் (இறைவனும்) அவர்களோடு சேர்ந்து முந்நூற் றொருவராக ஆனார்.

தில்லை தீக்ஷிதர்கள் நடராசப் பெருமானை உள்ளிட்ட மூவாயிரவர் என்பது போல, இத்தலத்தில் "நம்பியார்கள்" ஆத்மநாதரை உள்ளிட்ட 301 பேர் என்று சொல்லப்படுகிறது.

ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும் என்று சொல்லச் செய்த பெருமான் அவ்வாறே நரிகளைக் குதிரைகளாக்கிக் கொண்டு சென்றார். அவ்வாறு செய்த இடம் நரிக்குடி என்று இன்று வழங்குகிறது.


சிவபுராணம்

"ஈசனடி போற்றி எந்யைடி போற்றி

தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலனடி போற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி

சீரார் பெருந்துறை நம்தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளுமலை போற்றி"


திருச்சதகம்

"ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்

குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி

வருகஎன் றென்னைநின்பால் வணங்கிடவேண்டும் போற்றி

தருக நின்பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே"


திருப்பள்ளியெழுச்சி

"முந்திய முதல்நடு இறுதியுமானாய்

மூவரும் அறிகிலர் யாவர்மற்றறிவார்

பந்தணை விரலியும் நீயும் நின்அடியார்

பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே

செந்தழல் புரை திரமேனியுங்காட்டித்

திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி

அந்தணனாவதும் காட்டி வந்தாண்டாய்

ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே


செத்திலாப்பத்து

"புலையனேனையும் பொருளென நினைந்துன்

அருள்புரிந்தனை புரிதலும் களித்துத்

தலையினால் நடந்தேன் விடைப் பாகா

சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம்

நிலையனே அலை நீர் விடமுண்ட

நித்தனே அடையார் புரமெரித்த

சிலையனே யெனைச் செத்திடப் பணியாய்

திருப் பெருந்துறைமேவிய சிவனே"


அடைக்கலப்பத்து

"வழங்கு கின்றாய்க்குன் அருளார்

அமுதத்தை வாரிக் கொண்டு

விழுங்குகின்றேன் விக்கினேன்

வினையேன் என் விதியின்மையால்

தழங்கருந்தேனன்ன தண்ணீர்

பருகத் தந்துய்யக் கொள்ளாய்

அழுங்கு கின்றேன் உடையாய் அடி

யேன் உன் அடைக்கலமே."


ஆசைப்பத்து

"கையால் தொழுதுன் கழற் சேவடிகள்

கழுமத் தழுவிக்கொண்டு

எய்யா தென்றன் தலைமேல் வைத்தெம்

பெருமான் பெருமானென்று

ஐயா என்றன் வாயா லரற்றி

அழல்சேர் மெழுகொப்ப

ஐயாற்றரசே ஆசைப்பட்டேன்

கண்டாய் அம்மானே."


அதிசயப்பத்து

"எண்ணிலேன் திருநாமம் அஞ்செழுத்தும் என்

ஏழைமை அதனாலே

நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடு

நல்வினை நயவாதே

மண்ணிலே பிறந்திருந்து மண்ணாவதற்

கொருப் படுகின்றேனை

அண்ணல் ஆண்டுதன் அடியரில் கூட்டிய

அதிசயம் கண்டாமே."


புணர்ச்சிப்பத்து

"ஆற்றகில்லேன் அடியேன் அரசே

அவனி தலத்தைம் புலனாய

சேற்றிலழுந்தாச் சிந்தை செய்து

சிவன்எம் பெருமான் என்றேத்தி

ஊற்று மணல்போல் நெக்குநெக்கு

உள்ளே உருகி ஓலமிட்டுப்

போற்றி நிற்பதென்று கொல்லோ என்

பொல்லா மணியைப் புணர்ந்தே"

வாழாப்பத்து

"பாவநாசா உன்பாதமே யல்லால்

பற்றுநான் மற்றிலேன் கண்டாய்

தேவர்தந் தேவே சிவபுரத்தரசே

திருப் பெருந்துறையுறை சிவனே

மூவுலகுருவ இருவர்கீழ் மேலாய்

முழங்கழலாய் நிமிர்ந்தானே

மாவுரியானே வாழ்கிலேன் கண்டாய்

வருக என்றருள் புரியாயே

அருட்பத்து

எங்கள் நாயகனே என்னுயிர்த்தலைவா

ஏலவார் குழலிமார் இருவர்

தங்கள் நாயகனே தக்கநற்காமன்

தனதுடல தழலெழவிழித்த

செங்கண் நாயகனே திருப்பெருந்துறையில்

செழுமலர்க் குருந்தமே வியசீர்

அங்கணா அடியேன் ஆதரித்தழைத்தால்

அதெந்துவே என்றருளாயே.

பிரார்த்தனைப்பத்து

"மானோர் பங்கா வந்திப்பார்

மதுரக்கனியே மனம்நெகா

நானோர் தோளாச் சுரையத்தால்

நம்பி இத்தால் வாழ்ந்தாயே

ஊனே புகுந்த உனையுணயர்ந்தே

உருகிப் பெருகும் உள்ளத்தைக்

கோனே அருளுங் காலத்தான்

கொடியேற் கென்றோ கூடுவதே."

குழைப்பத்து

ஒன்றும் போதா நாயேனை

உய்யக் கொண்ட நின்கருணை

இன்றே இன்றிப் போய்த்தோதான்

ஏழை பங்கா குற்றங்கள்

குணமாம் என்றேநீ கொண்டால்

என்தான் கெட்டது இரங்கிடாய்

எண்தோள் முக்கண் எம்மானே.

உயிருண்ணிப்பத்து

நானார் அடியனை வானொரு

நாய்க்குத்த விசிட்டிங்கு

ஊனாருடல் புகுந்தானுயிர்

கலந்தான் உளம்பிரியான்

தேனார்சடை முடியான் மன்னு

திருப்பெருந்துறை உறைவான்

வானோர்களும் அறியாததோர்

வளம் ஈந்தனன் எனக்கே.

பாண்டிப்பதிகம்

அழிவின்றி நின்றதோர் ஆனந்த

வெள்ளத் திடையழுத்திக்

கழிவில் கருணையைக் காட்டிக்

கடிய வினையகற்றிப்

பழமலம் பற்றறுத்தாண்டவன்

பாண்டிப் பெரும்பதமே

முழுதுலகுந்தரு வான்கொடை

யேசென்று முந்துமினே.

திருஏசறவு

நானேயோ தவம் செய்தேன்

சிவாயநம எனப்பெற்றேன்

தேனாய் இன்னமுதமுமாய்த்

தித்திக்கும் சிவபெருமான்

தானேவந் தெனதுள்ளம்

புகுந்தடியேற் கருள்செய்தான்

ஊனாரும் உயிர்வாழ்க்கை

ஒறுத்தன்றே வெறுத்திடவே

அற்புதப்பத்து

மாடும் சுற்றமும் மற்றுளபோகமும்

மங்கையர் தம்மோடும்

கூட அங்குள குணங்களால் ஏறுண்டு

குலாவியே திரிவேனை

வீடுதந் தென்றன் வெந்தொழில் வீட்டிட

மென்மலர்க கழல் காட்டி

ஆடுவித்தென தகம் புகுந்தாண்டதோர்

அற்புதம் அறியேனே

சென்னிப்பத்து

அட்டமூர்த்தி அழகன் இன்னமு

தாய ஆனந்த வெள்ளத்தான்

சிட்டன் மெய்ச்சிவலோக நாயகன்

தென்பெருந்துறைச் சேவகன்

மட்டுவார் குழல்மங்கை யாளையோர்

பாகம் வைத்த அழகன்தன்

வட்டமாமலர்ச் சேவடிக்கண் நம்

சென்னி மன்னி மலருமே.

திருவார்த்தை

வந்திமை யோர்கள் வணங்கியேத்த

மாக்கருணைக்கடலாய் அடியார்

பந்தனை விண்டற நல்கும்எங்கள்

பரமன் பெருந்துறை ஆதிஅந்நாள்

வந்து திரைக்கடலைக் கடந்தன்று

ஓங்குமதில் இலங்கை அதனில்

பந்தணை மெல்விர லாட்கருளும்

பரிசறிவார் எம்பிரானாவாரே.

திருவெண்பா

யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்

யாவர்க்கும் கீழாம் அடியேனை - யாவரும்

பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்

மற்றறியேன் செய்யும் வகை.

பண்டாய நான்மறை

காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பமெனப்

பேணும் அடியார் பிறப்பகலக் - காணும்

பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்

பிரியானை வாயாரப் பேசு.

"உருவெளி தான்வாதவூர் உத்தமர்க்கு அல்லால் இனமுங்

குருவழி நின்றார்க்கும் உண்டோ கூறாய்பராபரமே." (தாயுமானவர்)

திருப்புகழ்

வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மன

மகிழ்ச்சி கொண் டிடஅதி விதமான

வளைக்கரங் களினொடு வளைத்திதம்

மயக்கவந் ததிலறி வழியாத

கருத்தழிந் திடஇரு கயற்கணும் புரள்தர

களிப்புடன் களிதரும் மடமாதர்

கருப்பெரங் கடலது கடக்கஉன் திருவடி

களைத்தரும் திருவுளம் இனியாமோ

பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியடு

புகைபரந் தெரிஎழ விடும்வேலா

புகழ்ப்பெருங் கடவுளர் களித்திடும் படிபுவி

பொறுத்தமந் தரகிரி கடலூடே

திரித்தகொண் டலுஒரு மறுப்பெறும் சதுமுக

திருட்டிஎண் கணன் முதல் அடிபேணத்

திருக் குரந் தடியமர் குருத்வசங் காரொடு

திருப்பெருந் துறையுறை பெருமாளே

"மங்கள மதாகவே வந்து துறைசைதனில்

வந்தடிமை கொண்டலிங்கம்

வளமான கலைக்கு நிகரான சதுர்வேத

மங்களம் இருந்த லிங்கம்

கங்கை பங்காளராய் வேதியர்க்காகவே

காணிபறி கொண்ட லிங்கம்

திங்களும் மும்மாரி பெய்திடவே குருந்தடியில்

சிறப்புடன் வளர்ந்த லிங்கம்."

"சிவசங்கர குருதேசிக பூசித்த

சிந்தை வடிகொண்ட சிவனே

அங்க வேதனையினால் உங்களிடம் அபயமென்று

அலறினேன் ஆதிசிவயோகமாது

அடியனை ரட்சிக்க வரவேணும் இதுசமயம்

ஆளுடை மகாலிங்கமே

மூவரும் முப்பத்து முக்கோடி தேவரும்

முனிவரும் தஞ்சமெனவே

முப்புமெரித்த வழி அப்பனே கதியென்று

மூலமே உமை நம்பினேன்

ஏவலொடு வஞ்சனை மொரப்போடு

எதிரி பகையாளி எல்லாம்

எண்முகம் கண்ட போதிலே திகைத்தோட

ரவி கண்ட பனிபோலவே

தாவிவரும்ட சூரனைவெல் கொண்டரித் தகுரு

ஷண்முகனை ஈன்ற பரனே

தயவு வைத்துன்பாத தெரிசனம் கொடத்தென்று

சஞ்சலம் தீர்த்து வைப்பாய்

அடைக்கலமே நம்பினேன் ஆதிசிவ யோகமா

தரைப் பங்கில் கொண்டபரனே

அடியனை ரட்சிக்க வரவேணு மிதுசமயம்

ஆளுடை மகாலிங்கமே (கவிக்குஞ்சரபாரதியார்)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. ஆத்மநாதசவாமி திருக்கோயில்

ஆவுடையார் கோயில் - அஞ்சல் - 614 618.

ஆவூடையார் கோயில் வட்டம் - புதுக்கோட்டை மாவட்டம்.

Previous page in  கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is திருவாசகத்துள் இடம் பெற்றுள்ள தலங்கள்
Previous
Next page in கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is  தில்லை (சிதம்பரம்)
Next