Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.
திருக்கருப் பறியலூர் (மேலைக்காழி,தலைஞாயிறு)
திருமுறைத்தலங்கள்
சோழ நாட்டு (வடகரை) த் தலம்
கோயில்
திருக்கருப் பறியலூர் ( மேலைக்காழி,தலைஞாயிறு)
மக்கள் வழக்கில் 'தலைஞாயிறு' என்றும், கொச்சையாக 'தலைஞாயர்' என்றும் வழங்குகிறது. இஃது கொகுடிக்கோயில். கொகுடி என்பது ஒருவகை முல்லை. இதன் வடிவில் அமைந்த கோயில். ஊர் - கருப்பறியலூர். கோயில் - கொகுடிக்கோயில். கருமூலத்தை அழித்து ஞானம் நல்கும் தலமாதலின் 'கருப்பறியலூர்' என்று பெயர் பெற்றது. கன்மநாசபுரி என்றும் பெயருண்டு. சீகாழிக்கு மேற்கில் இருப்பதால் மேலைக்காழி என்றாயிற்று. சூரியன் வழிபட்டதால் தலைஞாயிறு ஆதித்யபுரி என்றும் பெயராயிற்று. முல்லை, தலமரமாதலின் முல்லைவனம் - யூதிகாவனம் என்றும் பெயர், கோயில் கட்டுமலைமேல் உள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில், 'தலைஞாயிறு' என்று கைகாட்டி உள்ள இடத்தில், பிரியும் சாலையில் (வலப்புறமாகச்) சென்றால் தலத்தையடையலாம். வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 8 A.e. தொலைவு.
இறைவன் - அபராத க்ஷமேஸ்வரர், குற்றம் பொறுத்த நாதர்.
இறைவி - விசித்ர பாலாம்பிகா, கோல்வளைநாயகி.
தலமரம் - கொகுடிமுல்லை.
தீர்த்தம் - இந்திர தீர்த்தம்.
தருமையாதீனத் திருக்கோயில், வசிட்டர், ஆஞ்சநேயர், இந்திரன், ஆகியோர் வழிபட்டது. சம்பந்தர் சுந்தரர் பாடல் பெற்றது. இந்திரன் இறைவன் என்றறியாமல் அவர்மீது வச்சிரம் எறிந்த குற்றத்தைப் பொறுத்தருள் செய்தமையால் குற்றம்பொறுத்த நாதாராயினர் என்பது வரலாறு. ராஜகோபுரம் மூன்றுநிலைகளையுடையது. கிழக்கு நோக்கிய சந்நிதி. உள்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்பினது. பிராகாரத்தில் சீகாழியிலிருப்பது போல உயர்ந்த தனிக்கோயிலாகச் சட்டைநாதர் சந்நிதி உள்ளது. மேலேறிச் சென்று தோணியப்பரைத் தரிசித்து அதற்கும்மேலே சென்று சட்டைநாதரைத் தரிசிக்க வேண்டும். தோணியப்ர் கையில் மான்மழு உளது. சுவாமி அம்பாள் மட்டும் உள்ளனர். சட்டை நாதரைத் தரிசிக்கத் செங்குத்தான மரப்படிகளை ஏறவேண்டும். தோணியப்பர் சந்நிதியை இத்தலத்தில் கர்ப்பஞானேஸ்வரர் கர்ப்பஞானபரமேஸ்வரி சந்நிதி என்றழைக்கின்றனர்.
இலிங்கோற்பவ மூர்த்திக்கு எதிரில் தலமரம் கொகுடி முல்லை உள்ளது. வலம்முடித்து உட்சென்றால் மண்டபத்தில் சித்தி விநாயகர் சந்நிதி. அடுத்து இத்தலத்திற்குரிய சிறப்பாக உள்ள உமாமகேஸ்வரர் சிலா ரூபத்தைத் தரிசிக்கலாம். பக்கத்தில் சுப்பிரமணிர் சந்நிதி. வலப்புறமாக வாயிலைக் கடந்தால் நேரே அம்பாள் சந்நிதி. இடப்பால் சுவாமி சந்நிதி. இலிங்கத் திருமேனி சற்று குட்டையான பாணத்துடன் காட்சிதருகின்றது. உள்ளே நடராசத் திருமேனி உள்ளது. உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
மகாமண்டபச்சுவரில் நாரை வழிபடும் சிற்பம் உள்ளது. இத்தலத்தில் இதற்குண்டான தொடர்பு யாதெனத் தெரியவில்லை. நாடொறும் நான்கு காலவழிபாடுகள். பெருவிழா நடைபெறவில்லை. நவராத்திரி முதலிய சிறப்புக்கள் மட்டும் நடைபெறுகின்றன. பக்கத்தில் 'குரக்குக்கா' என்னும் தலமுள்ளது. மருதூர் அம்பலவாணப் புலவர் பாடிய தலபுராணம் உள்ளது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் 'தனிநாயகச்சதுர்வேதிமங்கலம்' என்று குறிக்கப்பெறுகின்றது. இங்குள்ள கல்வெட்டொன்று, ஊர்ச்சபையார் கூடி, ஊர்ச்சபை உறுப்பினர் ஆவதற்குரிய சட்டதிட்டங்களை வகுத்த செய்தியைத் தெரிவிக்கின்றது. இத்திருக்கோயிலில் பூசை செய்யும் சிவாசாரியார் அர்ச்சனை செய்யுங்காலத்தில் அர்ச்சனையையும், அதற்குரிய சங்கல்பத்தையும் கூட அழகாகத் தமிழில் சொல்லிச் செய்த காட்சி மனத்தில் பசுமையாகவுள்ளது.
'வேதமொடு வேதியர்கள் வேள்வி முதலாகப்
போதினொடு போதுமலர் கொண்டு புனைகின்ற
நாதனென நள்ளிருள் முன் ஆடுகுழைதாழும்
காதவன் இருப்பது கருப்பறியலூரே.' (சம்பந்தர்)
'நீற்றாரும் மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே நிறைந்துதோன்றும்
காற்றானைத் b §யானைக் கதிரானை மதியானைக் கருப்பறியலூர்க்
கூற்றானைக் கூற்றுதைத்துக் கோல்வளையா ளவளோடுங் கொகுடிக் கோயில்
ஏற்றானை மனத்தினால் நினைந்த போ (து) அவர் நமக்கு இனியவாறே (சுந்தரர்)
-ஓரட்ட
திக்குங்கதி நாட்டிச் சீர்கொள் திருத்தொண்டருளம்
ஒக்குங் கருப்பறிய லூரரசே. (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. குற்றம் பொறுத்தநாதர் திருக்கோயில்
தலைஞாயிறு - அஞ்சல் - (வழி) இளந்தோப்பு
மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம் 609 201