Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

வைத்ததீஸ்வரன் கோயில்

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

வைத்ததீஸ்வரன் கோயில்

சீர்காழிக்கு அடுத்துள்ள தலம். சீர்காழிக்கும் மயிலாடுதுறைக்கும் இடையில் உள்ள ஊர். கோயில் சாலையோரத்திலேயே உள்ளது.

புள் (சடாயு) . இருக்கு (வேதம்) வேள் (முருகன்) ஊர் (சூரியன்) என்ற நால்வரும் வழிபட்டமையால் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் பெற்றது. சடாயு வழிபட்டதால் சடாயபுரி என்றும், வேதம் பூசித்ததால் வேதபுரி என்றும், கந்தன் பூசித்ததால் கந்தபுரி என்றும், சூரியன் பூசித்தவூர் பரிதிபுரி என்றும், அங்காரகன் வழிபட்ட தலம் அங்காரகபுரம் என்றும், அம்பிகை வழிபட்டதால் அம்பிகாபுரம் என்றும், இறைவன் இத்தலத்து மந்திரமும் மருந்தும் ஆகி உயிர்களின் வினைகளைப் போக்குவதால் வினைதீர்த்தான் கோயில் என்றும் இதற்குப் பல பெயர்களுண்டு.

ஊர் நடுவே கோயில். நாற்புறமும் உயர்ந்த சுற்று மதில்கள். கோயிலின் கிழக்கில் வைரவரும், மேற்கில் வீரபத்திரரும், தெற்கில் கற்பக விநாயகரும், வடக்கில் காளியும் இருந்து இக்கோயிலைக்காவல் புரிகின்றனர். இதைப் பின்வரும் தனிப்பாடல் உணர்த்தும் -

தெற்கிற்கணேசன் திகழ்மேற்கிற் பைரவரும்

தொக்க வடக்கில் தொடர்காளி - மிக்ககிழக்

குள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தோம்

புள்ளிருக்கும் வேளூரிற் போய்."

சூரபத்மாவின் மார்பைப் பிளக்க முருகப்பெருமான் வேல்வாங்கிய தலம். இங்கு அங்காரகனுக்குப்பெருமை அதிகம் - அங்காரகக்ஷேத்ரம். உயிர்களின் நோய்களைப் போக்கும் பொருட்டு உமாதேவி, தையல் நாயகியாய் வடிவுகொண்டு தைல பாத்திரமும் சஞ்சீவியும் வில்வமரத்தடி மண்ணும் கொண்டு தம்முடன் வர இறைவன் எழுந்தருளி மருத்துவராகயிருந்து அருள்செய்த சிறப்புடைய தலம்.

இறைவன் - வைத்தியநாதர்.

இறைவி - தையல்நாயகி.

தலமரம் - வேம்பு.

தீர்த்தம் - சித்தாமிர்த குளம். இங்குள்ள முருகப்பெருமான் - செல்வமுத்துக்குமாரசுவாமி சந்நிதி மிகச் சிறப்பு வாயந்தது.

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

சித்தாமிர்த தீர்த்தம் என்பது சித்தர்கணம் இறைவர் திருமுடியில் அமிர்தத்தால் அபிஷேகத்தபோது அவ்வமிர்தம வந்து இதில் கலந்தமையால் பெற்றபெயர் ஆகும். இத்திருக்குளத்தில் தவளை இருப்பதில்லை.

கிழக்கு கோபுரச் வாயிலின், முன்புறமும் இரும்புப் பந்தல் போடப்பட்டுள்ளது. பேருந்திலிருந்து இறங்குவோர் இவ்வழியே கோயிலுள் புகுவர். வாயிலைக் கடந்ததும் வலப்பால் அலுவலகம், இடப்பால் வேம்பு தலமரம் உள்ளது. இதனடியில் ஆதி வைத்தியநாதர் தரிசனம் தருகிறார். எதிரில் வீரபத்திரர் சந்நிதி உள்ளது. உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி சந்நிதி. அடுத்து இடப்பால் சித்தாமிர்தகுளம் உள்ளது. காமதேனு இறைவன்மீது பொழிந்து அபிஷேகித்த பால் வழிந்தோடி வந்து கலந்தமையால் இதற்கு கோஷீர தீர்த்தம் என்பது மற்றொரு பெயர்.

இவ்வாலயத்துள் தரப்படும் சந்தனக்குழம்புருண்டை (மருந்துப்பொட்டலம் என்று சொல்வார்கள்) உட்கொண்டு, சித்தாமிர்த குளத்து நீரைப் பருகி வந்தால் வியாதிகள் நீங்கும் என்பது இன்றும் கண்கூடு.

விநாயகரையடுத்து, கிருத்திகை அபிஷேக மண்டபம் உள்ளது. இங்குத்தான் கிருத்திகைதோறும் ஸ்ரீ செல்வமுத்துக்குமாரசுவாமிக்குச் சிறப்பான அபிஷேகம் நடைபெறும். வாழ்வில் ஒவ்வொருவரும் காணவேண்டிய அபிஷேகமாகும் இஃது. சுவாமி சந்நிதிக்கு நேரில் இரு கொடிமரங்கள் உள்ளன. ஆடிப்பூர அம்மன் சந்நிதி சுவர்களில் அஷ்டலட்சுமி வண்ண ஓவியங்களைக் கண்டு மகிழலாம். மூலவர் வைத்தியநாதர், மிகப்பெரிய துவாரபாலகர் திருவுருவங்கள். சடாயுவின் உருவமும் உள்ளது.

சிறிய சிவலிங்கத் திருமேனி. மந்திரமும், தந்திரமும், மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள வல்லானாகிய வைத்தியநாதப் பெருமானைக் கண்ணாரத் தரிசிக்கின்றோம். பக்கத்தில்தான் இத்தலத்தில் உள்ள சிறப்பு மூர்த்தமாகிய ஸ்ரீ

செல்வமுத்துக் குமாரசாமியின் சந்நிதி உள்ளது. குமரகுருபர் முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ் பாடி இப்பெருமானைப் போற்றியுள்ளார். கஜலட்சுமி சந்நிதியையடுத்துத் திருமுறைப் பேழையுள்ளது. நடராச சபையில் சிவகாமியுடன் மாணிக்கவாசகரும் காரைக்காலம்மையாரும் உள்ளனர். ரிக் முதலிய நால்வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசுவநாதர் முதலிய பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தங்களும், சஹஸ்ரலிங்கமும் வரிசையாகவுள்ளன.

இத்தலத்தில் (கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையாக உள்ளன. பைரவர் சந்நிதியடுத்து இராமர், சடாயு, சுப்பிரமணியர், சூரியன், அங்காரகன் ஆகியோர் வழிபட்ட லிங்கங்கள் வரிசையாக உள்ளன. தன்வந்திரி எழுந்தருளியுள்ளார். சுப்பிரமணியர், ஐயனார் சந்நிதிகளையடுத்து அறுபத்துமூவர் உற்சவமூர்த்தங்கள் வரிசையாக அழகாகவுள்ளன. முடிவில் சடாயுவின் உற்சவமூர்த்தமும் அங்காரகனின் உற்சவமூர்த்தமும் உள்ளன. அங்காரக தோஷ நிவர்த்தி வேண்டுவோர் இம்மூர்த்த்திற்கு அர்ச்சனை செண்கின்றனர். வாரந்தோறும் செவ்வாய்கிழமை மாலையில் ஆட்டு வாகனத்தில் அங்காரகன் புறப்பாடு பிராகார அளவில் நிகழ்கிறது. உற்சவ விநாயகர், வலஞ்சுழி விநாயகர், சோமாஸ்கந்தர் ஆகிய சந்நிதிகளைத் தரிசித்தவாறே தையல்நாயகித் தரிசனத்திற்குச் செல்லலாம். இறைவனுடன் தைபாத்திரத்தை ஏந்தி அம்பிகை உடன் வந்தமையால் தைலாம்பாள் என்றும் அம்பாளை வழங்குகின்றனர். நிற்கும் திருக்கோலம் - ஆம்!வழிபடுவோர் உள்ளத்தில் மறையாமல் நிற்கும் திருக்கோலமாகவே உள்ளது.

தலப்பதிகங்கள் சலவைக் கற்களில் பொறித்துப் பதிக்கப் பட்டுள்ளன. பத்திரக்காளி சந்நிதி தரிசிக்கத் தக்கது. மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படும் இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் அருளாட்சிக்குட்பட்டது. ஆதீனத்தின் கட்டளைத்தம்பிரான் ஒருவர் இங்கிருந்து மேற்பார்வை செய்து வருகின்றார். இஃது வேளூர் தேவஸ்தானம் என்றழைக்கப்படுகிறது. வடுகநாத தேசிகர் என்பவர் வேளூர்த்தலபுராணம் பாடியுள்ளார். அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடலும் உள்ளது. தருமையாதீனத்தின் 10 ஆவது குருமூர்த்தியாகிய சிவஞான தேசிகர் பாடியுள்ள செல்வமுத்துக்குமாரசுவாமி திருவருட்பா, குமரகுருபர் பாடியுள்ள முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ், படிக்காசுத் தம்பிரான் பாடியுள்ள வேளூர்க்கலம்பகம், சிதம்பர முனிவர் அருளிய க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ், காளமேகப் புலவரின் தனிப்பாடல்கள், முதலியவைகளிலிருந்து இத்திருக்கோயிலின் - மூர்த்திகளின் பெருமைகளையறிந்தின்புற்றுத் தொழுதுய்யலாம்.

இக்கோயில் விளக்கு அழகுக்குப் பெயர் பெற்றது. 'வினைதீர்த்தான் கோயில் விளக்கழகு' என்பது பழமொழி. நாடொறும் காமிகஆகம விதிப்படி ஆறுகால வழிபாடுகள் நடைபெறுகின்றன. பங்குனிப் பெருவிழா சிறப்புடையது. செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு தை மாதத்தில் திருவிழா நடைபெறுகிறது. மாதந்தோறும் வரும் கார்த்திகை நாள்கள், கந்தசஷ்டி போன்ற விசேஷ காலங்களில்தான் செல்வமுத்துகுமாரசுவாமிக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மற்றைய நாள்களில் செல்வமுத்துக்குமாரசுவாமியின் ஆன்மார்த்த பூஜா மூர்த்தியான ஸ்ரீ முத்துலிங்கத்திற்குத்தான் அபிஷேகம் நடைபெறும்.

இதுதவிர, இக்கோயிலில் உள்ள மற்றொரு சிறப்பு -

அர்த்தசாம பூஜையில் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும். இதற்குப் புழுகாப்பு என்று பெயர். இப்புழுகாப்பு தரிசனம் இங்குச் சிறப்புடையது.

"கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்

பாதத்தைப் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்

வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்

போதத்தால் வழிபட்டான் 'புள்ளிருக்குவேளூரே." (சம்பந்தர்)

"பத்திமையாற் பணிந்தடியேன் தன்னைப் பன்னாட்

பாமாலை பாடப் பயில்வித்தானை

எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை

எமர்னை என்உள்ளத்துள்ளே யூறும்

அத்தேனை அமுதத்தை ஆவின்பாலை

அண்ணிக்கும் தீங்கரும்பை அரனையாதிப்

புத்தேளைப் புள்ளிருக்கும் வேளூரானைப்

போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே." (அப்பர்)

உரத்துறை போதத் தனியான-

உனைச்சிறி தோதத் தெரியாது ;

மரத்துறை போலுற் றடியேனும்-

மலத்திருள் மூடிக் கெடலாமோ ;

பரத்துறை சீலத் தவர்வாழ்வே-

பணித்தடி வாழ்வுற் றருள்வோனே ;

வரத்துறை நீதர்க் கொருசேயே-

வயித்திய நாதப் பெருமாளே. (திருப்புகழ்)

வாராட்டு தடமுலைப் பாலொழுகி வழிவதென

மணிமுறுவ னிலவுகாலும்

மழலைவாய் முத்துண்டு முச்சிமோந் துந்திரு

மடித்தலத் தினிலிருத்திப்

பாராட்டி யுந்தமது கண்மணிப் பாவைநின்

படிவமா கக்காட்டியிப்

பாலரொடும் விளையா டெனப்பணித் துந்தங்கள்

பார்வைகளி யாடச்செயும்

தாராட்டு மதிமுடித் தீராத வினைதீர்த்த

தம்பிரா னுந்தம்பிரான்

தழலுருவி லொருபாதி குளிரவொரு புறநின்ற

தையனா யகியும்வைத்துச்

சீராட்டி விளையாடு சேனா பதிக்கடவுள்

சிறுதே ருருட்டியருளே

திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர

சிறுதே ருருட்டியருளே.

(முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்)

அன்னைசொற் கொருசெவி யையர்சொற் கொருசெவி

யம்மான் றுதிக்கொருசெவி

யானைசொற் கொருசெவி வீரர்சொற் கொருசெவி

அயன்றுதிக் கொருசெவிவிணோர்

மன்னர்சொற் கொருசெவி வள்ளிசொற் கொருசெவி

வான்வனிதை சொற்கொருசெவி

மறைதுதிக் கொருசெவி யடியர்சொற் கொருசெவி

வல்லசுரர் சொற்கொருசெவி

பன்னிரண் டுங்கொடுத் தென்சொல்கே ளாமற்

பாராமுகம தாயிருந்தால்

பாவியேன் மெலிவுகுறை யெவர்செவியி லேற்றிப்

படுந்துயர் களைந்துகொள்வேன்

முன்னமறை நாலும்வந் தன்னுபுள் ளூரனே

முக்கட் குருக்கள் குருவே

முத்தர்குர வேயோக சித்தர்குரு வேபால

முத்துக்கு மாரகுருவே.

(செல்வமுத்துக்குமாரசாமி திருவருட்பா)

செவிகளரு பன்னிரண் டுங்கேட்க அயனையுந்

தேவர்பணி யுங்குருவையும்

தேவர்கோ னென்றசத மகனையும் செந்தமிழ்சொல்

தென்பொதிய மலைமுனியையும்

புவியினக் கீரரையும் ஒளவையையும் நீமுன்

புகழ்ந்தபொய் யாமொழியையும்

புகழ்கொண்ட அருணகிரி நாதரையும் வெகுசித்தர்

போற்றுகரு வூராரையும்

குவியுமன மறாச்சிறு புலவரையும் வருபுலவர்

கொண்டாடு நல்லபகழிக்

கூத்தரையும் வளர்காசி வாழுஞ் சிவானந்த

குமரகுரு பரமுனியையும்

கவிசொலன் றேயடி யெடுத்துக்கொ டுத்தவன்

கனிவாயின் முத்தமருளே

கந்தனே புள்ளூரில் வந்தமுத் துக்குமர

கனிவாயின் முத்தமருளே.

(க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்)

-கோலக்கா

உள்ளிருக்கும் புள்ளிருக்கு மோதும் புகழ் வாய்ந்த

புள்ளிருக்கும் வேளூர்ப் புரிசடையாய். (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. வைத்திய நாதப்பெருமான் திருக்கோயில்

வைத்தீஸ்வரன் கோயில் - அஞ்சல் 609 117

சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்

மயிலாடுதுறை R.M.S.
 
 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கோலக்கா
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கண்ணார்கோயில் (குறுமாணக்குடி)
Next