Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

சீகாழி (சீர்காழி)

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

சீகாழி ( சீர்காழி)

மக்கள் சீர்காழி என்றே வழங்குகின்றனர். சிதம்பரம் முதலிய பல ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சிதம்பரத்தையடுத்துள்ள தலம் - புகைவண்டி நிலையம். திருஞானசம்பந்தரின் அவதாரப்பதி - ஞானப்பாலுண்டு அற்புதங்கள் நிகழ்த்திய தலம். முருகன், காளி, பிரமன், திருமால், குரு, இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி, ஆதிசேஷன், ராகு, கேது, வியாசர் முதலியோர் இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம். இத்தலத்திற்குப் பன்னிரண்டு பெயர்களுண்டு.

1. பிரமன் வழிபட்டதால் - பிரமபுரம்.

2. இறைவன் மூங்கில் வடிவமாகத் தோன்றியதால் - வேணுபுரம்.

3. சூரனுக்குப் பயந்த தேவர்களுக்குப் புகலிடமாக விளங்கிய தலமாதலின் - புகலி.

4. குருவான வியாழன் வழிபட்டு, குருத்துவம் பெற்றமையால் - வெங்குரு.

5. பிரளய காலத்தில் இறைவன் உமையோடு சுத்தமாயையைத் தோணியாகக் கொண்டுவந்து தங்கியிருந்ததால் தோணிபுரம்.

6. பூமியைப் பிளந்து சென்ற இரணியாக்கனைக் கொன்றவராக மூர்த்தி வழிபட்டதால் - பூந்தராய்.

7. தலைக்கூறாகிய ராகு பூசித்ததால் - சிரபுரம்.

8. புறா வடிவில் வந்த அக்கினியால் CH மன்னன் நற்கதியடைந்தமையால் - புறவம்.

9. சண்பைப் புல்லால்மாய்ந்த தம்குலத்தோரால் வந்தபழி தன்னைப் பற்றாதிருக்க, கண்ணபிரான் (திருமால்) வழிபட்டதால் - சண்பை.

10. தில்லைப்பெருமானுடன் வாதாடிய குற்றம்போக, காளி இங்கு வந்து வழிபட்டதால் - ஸ்ரீகாளி (சீகாழி) .

11. மச்சகந்தியைக்கூடிய கொச்சையாம் பழிச்சொல் நீங்கப் பராசரர் பூசித்ததால் - கொச்சை வயம்.

12. மலத்தொகுதி நீங்குமாறு உரோமச முனிவர் வழிபட்டதால் - கழுமலம் எனவும் பெயர் பெற்றது.

கோயில் ஊர் நடுவே நான்கு கோபுர வாயில்களுடன் அழகுற விளங்குகிறது.

கணநாத நாயனார் தொண்டுசெய்து வாழ்ந்த தலம்.

இறைவன் - பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர்.

இறைவி - பெரியநாயகி, திருநிலைநாயகி.

தலமரம் - பாரிசாதம்.

தீர்த்தம் - பிரம தீர்த்தம் முதலாகவுள்ள 22 தீர்த்தங்கள்.

பிரமதீர்த்தமே பிறவற்றினும் மேலானது. இக்கரையில்தான் ஞானசம்பந்தர், ஞானப்பாலையுண்டார். 'திருமுலைப்பால் உற்சவம்' இன்றும் சித்திரைப் பெருவிழாவில் இரண்டாம் நாள் விழாவாக நடைபெறுகின்றது. 'திருமுலைப்பால் உண்டார் மறுமுலைப்பால் உண்ணார்' என்பது இப்பகுதியில் சொல்லப்படும் மொழியாகும்.

இறைவன் திருமேனிகளுள் (1) அடிப்பாகத்திலுள்ள பிரமபுரீஸ்வரர் பிரமன் பூசித்தது - இலிங்கவடிவம். (2) இடைப்பகுதியிலுள்ள தோணியப்பர் (ஞானப்பால் தந்தவர்) குரு வடிவம். (3) சட்டை நாதர் சங்கமவடிவம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.

(மாவலியிடம் சென்று மண்கேட்டுப் பெற்ற மகாவிஷ்ணு, செருக்குற்றுத்திரிய, வடுகநாதர் சென்று தம் திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பிலடித்து வீழ்த்தினார். இலக்குமி மாங்கல்ய பிச்சை கேட்க அவ்வாறே அருள்செய்ய மகாவிஷ்ணு உயிர்பெற்றெழுந்து வணங்கனரிர். தம் தோலையும் எலும்பையும் அணிந்து கொள்ளமாறு அவர் வேண்ட, இறைவனும் எலும்பை கதையாகக்கொண்டு, தோலைச் சட்டையாகப் போர்த்து அருள் செய்தார். இவ்வடிவமே சட்டைநாதர் வடிவமாகும்.)

மூவர் பாடல் பெற்ற தலம். தருமையாதீனத் திருக்கோயில். மாணிக்கவாசகர், பூந்துருத்திகாடநம்பி, பட்டினத்தடிகள் நம்பியாண்டார் நம்பிகள், அருணகிரிநாதர், தருமையாதீனத்துப் பத்தாவது குருமூர்த்தி சிவஞானதேசிகர், திருவாவடுதுறை ஆதீனத்து எட்டாவது குருமூர்த்தி மாசிலாமணி தேசிகர், அருணாசலக்கவிராயர் முதலியோர் சீகாழியின் சிறப்பையும் ஞானசம்பந்தரின் பெருமையையும் பல படப் புகழ்ந்து பாடியுள்ளார்.

கிழக்கு ராஜகோபுரம் பிரதானவாயில். இடப்பால் அலுவலகம் உள்ளது. விசாலமான உள்ளிடம். உள்வாயிலில் வெளிப்புறம் 'தோடுடைய' பதிகம் சலவைக்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம். விபூதிப்பட்டையும், பட்டும் சார்த்தித் தரிசிக்கும்போது கம்பீரமான தோற்றம் மனத்திற்கு நிறைவாக இருக்கிறது. மூலவர் - பிரமபுரீஸ்வரர். பக்கத்தில் திருஞானசம்பந்தர் சந்நிதி உற்சவத்திருமேனியுடன் (கையில் பாற்கிண்ணம் ஏந்தி நின்ற நிலையில்) உள்ளது. கருவறை வெளிச்சுவரில் ஞானசம்பந்தர் வாழ்க்கைச் சிற்பங்கள் ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன. பிராகாரத்தில் அறுபத்து மூவர் சந்நிதி உள்ளது, சோமாஸ்கந்தர் சந்நிதி அழகாகவுள்ளது. மலைப்படிகளேறிக் கட்டு மலையின் மீது சென்றால், ஞானப்பாலைத்தந்தருளிய தோணியப்பரைத் தரிசிக்கலாம். இச்சந்நிதி கயிலாய அமைப்பிலுள்ளது. இங்குள்ள சாளரத்தில் நின்று பார்த்தால் (சற்றுச்சாய்வாக) பிரமதீர்த்தக் குளம் தெரிகிறது. 'பிரமாபுரம் மேவியபெம்மான் இவன்' என்று சம்பந்தர் சுட்டிக்காட்டிய அமைப்பு நினைவு கூரத்தக்கது.

அதற்கும் மேலேறிச் சென்றால் சட்டையப்பரைத் தரிசிக்கலாம். சட்டைநாதர் பெயரிலேயே தேவஸ்தானம் விளங்குகிறது. இம்மூர்த்திகரம் தனிச்சிறப்புவாய்ந்தது, இச்சந்நிதி உயர்த்தில் உள்ளது. குறுகலான வழியே நுழைந்து, மரப்படிகளேறித் தரிசிக்க வேண்டும். ஆண்கள் சட்டையைக் கழற்றி விட்டு ஏறிச்சென்று தரிசித்துப் பின்னர் வந்து போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறே, பெண்கள், தலையிலுள்ள பூவையெடுத்து வைத்துக் கொண்டு, சென்று தரிசித்து விட்டுப் பின்பு தலையில் சூடிக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றுகிறது.

வாரத்தில் ஒருநாள் - வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குமேல் அர்த்தசாமம் முடிந்தவுடன் இதற்குப் புனுகு எண்ணெய் சார்த்தி, நெய்யில் செய்த வடை, பாயசம் நிவேதனம் செய்யப்படுகிறது. நித்தியப்படி நெய்தீபமே ஏற்றப்படுகிறது.

இப்பெருமானுக்குச் சட்டையப்பர், சட்டைநாதர், வடுகநாதர் எனப்பல பெயர்களுண்டு. சட்டைநாதரைப் தரிசித்துக் கீழிறங்கி வலமாக வரும்போது மூங்கில்கன்றும் அதன்பக்கத்தில் பாரிசாதமும் உள்ளதைக் காணலாம். அடுத்துத் தேவேந்திரலிங்கம், நவக்கிரகம், பிரமபுரீஸ்வரலிங்கம் உள்ளன. பிரமதீர்த்தக் குளம் முதன்மை வாய்ந்த தீர்த்தமாகும். முன்னால் வளைவு போடப்பட்டு, அதன் இருபுறங்களிலும், பிரமன் வழிபடுவது, தந்தையாகிய சிவபாத இருதயருக்கு ஞானசம்பந்தர் தோணியப்பரைச் சுட்டுக் காட்டுவது, அம்பிகை பொற்கிண்ணத்தில் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அளிப்பது முதலியவை சுதையால் அமைக்கப்பட்டுள்ளன. பிராகாரத்தில் திருஞானசம்பந்தர் மூலச்சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம் - மனநிறைவான தரிசனம். இச்சந்நிதி உள்மண்டபத்தில் சலவைக் கற்களில் திருஞானசம்பந்தர் பதிகமும், மகாவித்துவான் மீனாடசி சுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றியுள்ள சீகாழிக் கோவைப் பாடல்களும் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன.

சீகாழி அருணாசலக் கவிராயர் தலபுராணம் பாடியுள்ளார். 'திருக்கழுமல மும்மணிக்கோவை' பட்டினத்தடிகளால் பாடப்பட்டது. ஞானசம்பந்தர் மீது மும்மணிக் கோவை, திருச்சண்பை விருத்தம், திருத்தொகை திருவந்தாதி, திருவுலாமாலை, திருக்கலம்பகம் முதலிய பிரபந்தங்களை நம்பியாண்டார் நம்பிகள் பாடியுள்ளார்.

காழிக்குமரவேளைச் சிறப்பித்துப் பாடியுள்ள திருப்புகழும் உள்ளது. இத்தலத்தில் வாழ்ந்த மகான்களில் 1. உலகத் தீமைகளைப் பார்க்க விரும்பாது மச்சைவிட்டு இறங்காமல் மேலேயே தங்கி வாழ்ந்து, மறைஞானசம்பந்தரிடம் அருளுபதேசம் பெற்ற மச்சுச்செட்டியார் 2. 'சிவப்பிரகாசம்' நூலுக்குக் கொளுச் சூத்திரம் எழுதியவரும் காழிப்பழுதை கட்டிச் சிற்றம்பலநாடிப் பாண்டாரம் என்னும் பெயர் உடையவருமான சீகாழிச் சிற்றம்பல நாடிகள் 3. 'ஒழிவில் ஒடுக்கம்' நூலைப்பாடிய சீகாழிகண்ணுடைய வள்ளலார் 4. 'காழிப்புராணம்' 'காழிப்பள்ளு', காழி அந்தாதி' 'இராமநாடகக் கீர்த்தனை' முதலிய நூல்களைப் பாடிய சீகாழி அருணாசலக்கவிராயர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர்.

இத்திருக்கோயிலில் திருஞான திருஞானசம்பந்தருக்கு நித்திய வழிபாடும் தைஅமாவாசை, வைகாசி மூலம், ஐப்பசி சதயம் ஆகிய நாள்களில் சிறப்பு வழிபாடுகளும், மலை மேல் உள்ள பெரிய நாயகருக்கு நாடொறும் நான்கு கால பூஜைகளும் நடைபெறுகின்றன. திருநிலைநாயகிக்கு ஆடிப்பூரம், நவராத்திரி காலங்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு.

இரண்டாம், மூன்றாம் குலோத்துங்கன், வீரராசேந்திரன், இராசகேசரி வர்மன், கிருஷ்ண தேவராயர் ஆகிய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவற்றின் இறைவன் பெயர் 1. திருக்கழுமலம் உடையார் 2. திருத்தோணிபுரம் உடையார் எனவும், ஞானசம்பந்தரின் பெயர் ஆளுடைய பிள்ளையார் என்றும் குறிக்கப்பெறுகின்றது. தலத்தின் பெயரை 'ராஜராஜவள நாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேயம் திருக்கழுமலம்' என்று கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

இத்தலத்தில் உள்ள, திருஞானசம்பந்தர் அவதாரம் செய்த இல்லம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் அவர்களால் நினைவாலயமாகப் போற்றப்பட்டு வருகின்றது.

'தோடுடைய செவியன் விடையேறி ஓர்தூவெண் மதிசூடிக்

காடுடைய சுடலைப் பொடி பூசிஎன் உள்ளம்கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய மெம்மான் இவனன்றே'.

"வண்டார் குழலரிவை யடு பிரியாவகை பாகம்

பெண்தான் மிகவானான் பிறைச் சென்னிப் பெருமானுர்

தண்டாமரைமல ராளுறை தவளந்நெடு மாடம்

விண்தாங்குவ போலும்மிகு வேணுபுரம் அதுவே". (சம்பந்தர்)

'சிந்தித்து எழுமனமே நினையாமுன் கழுமலத்தைப்

பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானைப் பசுபதியைச்

சந்தித்த காலமறுத்து மென்றெண்ணி யிருந்தவர்க்கு

முந்தித் தொழுகழல் நாடொறும் நந்தமையாள் வனவே". (அப்பர்)

'மற்றொருதுணையினி மறுமைக்குங் காணேன் வருந்தலுற்றேன் மறவாவரம் பெற்றேன்

சுற்றிய சுற்றமும் துணையென்று கருதேன் துணையென்று நான் தொழப்பட்ட ஒண்சுடரை

முத்தியு ஞானமும் வானவரறியா முறைமுறை பலபல நெறிகளுங்காட்டிக்

கற்பனைகற்பித்தகடவுளை யடியேன் கழுமல வளநகர்க்கண்டு கொண்டேனே.'

'பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்

துறவி யெனுந்தோல் தோணி கண்டீர் - நிறையுலகில்

பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்

தன்மாலை ஞானத் தமிழ்.'

(நம்பியாண்டார் நம்பி -

மும்மணிக்கோவை)

தலபுராணம்

பிரமபுரீசுவரர்

நீர்பூத்த பேரொளியாய் உயிர்க்குயிராய் அகண்டிதமாய்

நிறைவாய் நீங்காப்

பேர்பூத்த குணம்குறிகள் இகந்தபழ மறைக்கொழுந்தாய்ப்

பெருமை சானற்

பார்பூத்த பரையினொடு கலந்துகுரு ஆதிமும்மைப்

படிவ மாகிச்

சீர்பூத்த காரீநகர் அமர்ந்தபிர மேசனையாம்

சிந்தை செய்வாம்.

திருநிலைநாயகி

ஓருநிலையே உலகனைத்தும் பொருள்நிலைசேர் வெண்டிருநீ (று)

உயர்ந்து வேதம்

கருநிலையால் வளர்ந்தோங்க இரங்குமரு மறைக்குழலி

தன்பால் அன்பால்

பெருநிலைசேர் முலைக்கண்ணும் சிலைக்கண்ணும் இரங்கியஎம்

பிராட்டி அன்பர்

கருநிலைதீர்த் தருள்காழித் திருநிலைநா யகிதுணைத்தாள்

கருத்துள் வைப்பாம்.

சட்டை நாதர்

துங்க மாமணித் தூணில்வந் திரணியன்

தோள்வலி தனைவாங்கும்

சிங்க வேற்றரி அரைக்கசைத் துலகெலாம்

தேர்ந்தளந் தவன்மேனி

அங்கம் யாவும்ஓர் கதையதாய்க் கொண்டதள்

அங்கியாப் புனைகாழிச்

சங்க வார்குழைச் சட்டைநா யகன்துணைத்

தாமரைச் சரண்போற்றி

திருவாவடுதுறை ஆதீனம் எட்டாவது குருமகாசந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் இயற்றியருளிய

திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்

கோலொன்று கொண்டகில வலயம் புரக்கவரு

கோமாறன் மேவிய தமிழ்க்

கூடலிற் சமண்மூகர் திருமடத் திட்டஎரி

கொற்றவர் பற்ற மொழியா

மாலொன்று மங்கையர்க் கரசியார் படுதுயரின்

வலிகண்டு சென்று தவிர

வஞ்சப் பெருங்கூனும் வெப்பந் தவிர்த்தருளு

மதுரவா சகமதகு பாய்

காலொன்று மாநதி பரந்துவரு கழனியிற்

கலையெனக் குவளை களைவார்

கண்டுவெரு வித்தங்கள் கைநெரித் தருகுமிடை

கன்னலங் காடு மறையச்

சேலொன்று விளையாடு சீகாழி நாடாளி

செங்கீரை யாடி யருளே

செழுநான் மறைத் தலைவ திருஞான சம்பந்த

செங்கீரை யாடி யருளே.

சிந்துற் றெழுமாமதி அங்கித் - திரளாலே

தென்றற்றரு வாசமிகுந்துற் - றெழலாலே

அந்திப் பொழுதாகிய கங்குற் - றிரளாலே

அன்புற்றெழு பேதை மயங்கித் - தனியானாள்

நந்துற்றிடு வாரியை மங்கத் - திகழாயே

நஞ்சத் தொளிர் வேலினையுந்திப் - பொருவேளே

சந்தக்கவி நூலினர் தஞ்சொற் - கினியோனே

சண்பைப்பதி மேவிய கந்தப் - பெருமாளே. (திருப்புகழ்)

-அருகாத

கார்காழில் நெஞ்சக் கவுணியர்க்குப் போதமருள்

சீர்காழி ஞானத் திரவியமே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு. சட்டைநாத சுவாமி தேவஸ்தானம்

சீர்காழி - அஞ்சல் - 609 110

சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.


 
 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்குருகாவூர் (திருக்கடாவூர்)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கோலக்கா
Next