திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள்புரம்)

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

திருநல்லூர்ப் பெருமணம் ( ஆச்சாள்புரம்)

மக்கள் வழக்கில் ஆச்சாள்புரம் என்று வழங்குகிறது. ஞான சம்பந்தர் திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்த தலம். இக்காரணம் பற்றி இதற்கு முத்தித் தலம். என்ற பெயருமுள்ளது. நல்லூர் - ஊரின் பெயர். பெருமணம் - கோயிலின் பெயர். சிதம்பரம் - சீர்காழிச் சாலையில் கொள்ளிடம் புதிய பாலத்தைத் தாண்டி, கொள்ளிடம் ஊரையைடந்து, மெயின் ரோட்டில் வழிகாட்டிப் பலகையுள்ள இடத்தில் இடப்புறமாக 8 A.e. சென்றால் இவ்வூரையடையலாம். (இதற்கு மேலும் 3 A.e. செல்ல மயேந்திரப்பள்ளி வரும்.) குறுகலான தார்ப்பாதை.

சிதம்பரம் - மகேந்திரப்பள்ளி சீர்காழி - மகேந்திரப்பள்ளி

(பேருந்துகள் இத்தலம் வழியாகச் செல்கின்றன)

சாலையோரத்தில் கோயில் உள்ளது. கோயில் எதிரில் குளம்.

இறைவன் - சிவலோகத் தியாகேசர், பெருமணமுடைய மகாதேவர்.

இறைவி - வெண்ணீற்று உமை நங்கை, சுவேத விபூதி நாயகி, விபூதிகல்யாணி.

தலமரம் - மா.

தீர்த்தம் - பஞ்சாட்சரதீர்த்தம் முதலான 11 தீர்த்தங்கள்.

(பஞ்சாட்சர தீர்த்தம் எதிரில் உள்ளது.) பிரமன், முருகன், பிருகு- வசிஷ்டர், அத்ரி, வியாசர், மிருகண்டு, அகத்தியர், ஜமதக்னி முதலியோர் வழிபட்டதும், காகபுசுண்டரிஷி ஐக்கியமான சிறப்புடையதுமான தலம்.

சம்பந்தர் பாடல் பெற்றது. தருமையாதீனத் திருக்கோயில். ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. உட்சென்றால் கவசமிட்ட கொடிமரம் நந்தி உள்ளன. விசாலமான உள் இடம். முன்னால் ஞானசம்பந்தரின் திருமண மண்டபம் உள்ளது. இங்குத்தான் வைகாசி மூலநாளில் சம்பந்தர் கல்யாண உற்சவம் தேவஸ்தான ஆதரவுடன் உபயதாரர்களால் சாதாரணமாக நடைபெறுகிறது. உற்சவநாளில் காலையில் உபநயனச் சடங்கும், இரவு உற்சவத்தில் திருமணமும் வீதியுலாவும், பின்னிரவில் சிவசோதி தரிசன ஐக்கியமும் நடைபெறுகின்றன. மண்டபத்தில் இடப்பால் அலுவலகம், வலப்பால் வாகன மண்டபம் அடுத்து ஞானசம்பந்தர் திருமணஞ்செய்து கொண்ட 'தோத்திர பூர்ணாம்பிகை' அம்மையுடன் உள்ள மூலத்திரு மேனிகள் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் தனிக் கோயில்களாக உள்ளன. தனிவாயில், சுற்று மதிலுடன் அம்பாள் சந்நிதி உள்ளது. உட்சுற்றில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இத்திருமேனிகளுள் திரிபுரசம்ஹாரர், சந்திரசேகரர், வாயிலார், சேக்கிழார், பிட்சாடனர், சம்பந்தருடன் உடன் ஐக்கியமான நீலகண்டயாழ்ப்பாணர் மதங்கசூளாமணி, நீலநக்கர், முருகநாயனார், திருமண்க்கோலத்தில் 'தோத்திர பூர்ணாம்பிகை'யுடன் கூடியுள்ள ஞானசம்பந்தர் முதலிய திருமேனிகள் கண்டு களித்துத் தொழத்தக்கன. அடுத்து நால்வரும் - தொடர்ந்து அறுபத்துமூவர் சந்நிதி - நாயன்மார்கள் பெயர், குருபூசை நாள் நட்சத்திரம் முதலியன எழுதப்பட்டு அழகாகவுள்ளன.

அடுத்து மகாகணபதி, சுப்பிரமணியர், ரணவிமோசனர், மகாலட்சுமி சந்நிதிகளும், நடராசசபையும், பைரவர், சட்டநாதர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி (வேலைப்பாடமைந்தது) , இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம் வண்ணச் சுதையில் சம்பந்தர் ஐக்கியமான காட்சி உள்ளது. வாயில் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். அழகான சிவலிங்கத் திருமேனி. கோயில் அழகாக நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஞானசம்பந்தர் மனைவியுடன் (தோத்திர பூர்ணாம்பிகையுடன்) இத்தலத்தில் இருப்பது விசேஷமானது. சோழ, பாண்டிய, மகாராட்டிர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டில் இறைவன் 'திருப்பெருமண முடைய மகாதேவர்' என்று குறிக்கப்படுகின்றார். நாடொறும் ஆறுகால வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன. இத்தலபுராணம் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரால் பாடப்பட்டுள்ளது. மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அம்பாள் பேரில் 'வெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்' பாடியுள்ளார்.

ஆரணியைப் பெருங்கருணை வடிவாளை, உலகங்கள் அனைத்தும் ஈன்ற

காரணியை சிற்பரையை வெற்பறையன் புதல்விதனைக் கடுக்கையென்னும்

தாரணியை யானனத்தர் சிவலோகத்தியாகர் இடந்தன்னில் வாழும்

பூரணியை எழில்தரு வெண்ணீற்றுமையை எப்போதும் போற்றி வாழ்வாம்

(தலபுராணம்)

'அன்புறு சிந்தையராகி அடியவர்

நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின்

றின்புறு மெந்தையிணையடி யேத்துவார்

துன்புறு வாரல்லர் தொண்டு செய்வாரே"

(சம்பந்தர்)

"-விழிப்பாலன்

கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக் கச்சோதிதரு

நல்லூர்ப் பெருமணம் வாழ் நன்னிலையே"

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. சிவலோகத்தியாகர் திருக்கோயில்

ஆச்சாள்புரம் - அஞ்சல்

சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.

மயிலாடுதுறை R.M.S. - 609 101.







 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கழிப்பாலை
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருமயேந்திரப் பள்ளி (மகேந்திரப்பள்ளி)
Next