Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருஆமாத்தூர்

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

திருஆமாத்தூர்

1) திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் சென்று, (விழுப்புரம்) ஊருள் செல்லாமல் (திருவண்ணாமலை) ரயில்வே கேட்டில் பிரிந்து ரயில்வே லைன் ஓரமாகச் செல்லும் விழுப்புரம், திருவண்ணாமலை செஞ்சி பேருந்துச் சாலையில், 2 A.e. சென்றால் 'திருவாமாத்தூர்' கைகாட்டி உள்ளது. அப்பாதையில் - இடப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில் - 6 கிடமீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். நல்ல பாதை இருபுறமும் வயல்கள், கோயில்வரை கார், பேருந்து செல்லும்.

2) விழுப்புரம் - சூரப்பட்டு, நகரப் பேருந்து திருவாமாத்தூர் வழியாகச் செல்கிறது.நந்தி, காமதேனு தவமிருந்து கொம்புகளைப் பெற்ற சிறப்புடைய தலம். இதனால் இதற்கு 'கோமாத்ருபுரம்' என்று பெயர், பெண்ணையாற்றிலிருந்து பிரியும் பம்பையாற்றின் கரையில் கோயில் உள்ளது. உயிர்களுக்கு - பசுக்களுக்கு இறைவன் தாயாக இருந்து அருளும் தலம். இராமர் வழிபட்ட சிறப்புடைய தலம்.

'புலவர் புராணம்' பாடிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சமாதி இத்தலத்தே உள்ளது. இரட்டைப் புலவர்கள் இவ்வூருக்குக் (திருவாமாத்தூர்க் கலம்பகம்) கலம்பகம் பாடியுள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்கள் பெற்ற பதி.

இறைவன் - அபிராமேஸ்வரர், அழகியநாதர்.

இறைவி - முக்தாம்பிகை, அழகியநாயகி.

தலமரம் - வன்னி.

தீர்த்தம் - ஆம்பலப்பொய்கை.

தலவிநாயகர் - மால் துயர் தீர்த்த விநாயகர்.

மூவர் பாடல் பெற்ற தலம்.

சுவாமி கோயிலும் அம்பாள் கோயிலும் எதிரெதிலே உள்ளன. கோயிலுக்கு வெளியில் பக்கத்தில் ஆற்றங்கரையில் உள்ள மண்டபத்திலிருக்கும் விநாயகரே தல விநாயகர் (மால் துயர் தீர்த்த விநாயகர்) ஆவார். சுவாமி கோயிலின் எதிரில் உள்ள மண்டபத்தில் தலமரம் உள்ளது. மிகமிகப் பழமை வாய்ந்த இம்மரத்தின் அடிப்பாகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது.

சுவாமி கோயிலுக்கு ராஜகோபுரமில்லை. திறந்த முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. நெடுங்காலமாகவே கோபுரமில்லையாம்.

கிழக்கு நோக்கிய சந்நிதி. உட்புறம் விசாலமாகவுள்ளது. சதையாலான நந்தி பெரிதாக உள்ளது. இதன் முன்னால் நான்கு கால் மண்டபத்தில் பள்ளத்தில் நந்தி உருவம் உள்ளது. பஞ்ச காலத்தில் மழை வேண்டி, நீர் கட்டும் வழக்கத்திற்கு இது பயன்படுகிறது. முன்னால் செப்புக் கவசமிட்ட கொடிமரமும் அதன் முன்பு கீழே அஸ்திர தேவதையின் சிலாரூபமும் உள்ளன. முன்னால் பலிபீடம்.

வெளிப் பிராகாரத்தில் சித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. இடப்பால் இராமர் ஆஞ்சநேயர், சீதை, இலட்சுமணன் ஆகியோர் கொண்ட சந்நிதி உள்ளது. நேர் வலப்பால் பழைய விநாயகர் சந்நிதி உளது. தனிக்கோயிலாகவுள்ள சண்முகர் சந்நிதி தரிசிக்கத்தக்கது. மேலக்கோபுரவாயில் - ஜேஷ்டாதேவி உருவம் கல்லில் செதுக்கியது அழிந்த நிலையில் உள்ளது. அலங்கார (நாற்றுக்கால்) மண்டபம் பழமையானது. யாகசாலையடுத்து ஈசான தேவர் சந்நிதி. வலம் முடித்து, சித்தி விநாயகர் சந்நிதியையடுத்துள்ள படிகள் வழியேறி உட்செல்லுகிறோம். நேரே தெற்குநோக்கிய நடராச சபை உள்ளது - தனிக்கோயில். இடப்பால் திரும்பி, துவாரபாலகரையும், விநாயகரையும், பிரதோஷ நாயகரையும், முருகனையும் வணங்கி உட்சென்று, வலம் வரும்போது நால்வர், உற்சவத் திருமேனிகள் உள்ளன. கருவறை, அகழி அமைப்புடையது. நவகன்னியர் உளர். அறுபத்து மூவர் சிலாரூபங்கள் முழுவதுமாக இல்லை - ஒருசிலவே உள்ளன.

விநாயகர், பூசை செய்யும் அமைப்பில் கையில் மலருடன் சந்நிதியில் காட்சி தருகிறார். அடுத்துப் பழைய ஆறுமுக மூர்த்தி மட்டும் உள்ளார் - சந்நிதியமைப்பில்லை. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதி உளது, கோமுகத்தின் கீழ் அதை ஒரு பூதம் தாங்குவது போலவுள்ள அமைப்பு காணத்தக்கது. மூலவர் வாயிலில் இருபுறங்களிலும் துவார பாலகர் வண்ணச் சுதையில் உள்ளனர். மேற்புறத்தில் இராமர் பூசித்த சிற்பம் உள்ளது. மூலவர் தரிசனம் - சுயம்புத் திருமேனி, திருமேனியின் முடி மீது பசுவின் குளம்பு பதிந்த வடுவும், பாற்சொரிந்த அடையாளக் கோடும் உள்ளன.

ஆமாத்தூர்ச் செல்வனை ஆமளவும் வழிபட ஆத்மசாந்தி கிடைக்கின்றது. கோஷ்டமூர்த்தங்களாக (1) சர்ப்பக்கோவணத்துடன் அழகான பிட்சாடனமூர்த்தி (2) தட்சிணாமூர்த்தி (3) இலிங்கோற்பவர் (எதிரில் சஹஸ்ரலிங்கம் உள்ளது) பிரம்மா (எதிரில் சிவதுர்க்கை சிலை உள்ளது) (5) துர்க்கை ஆகியோர் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.

அம்பாள் கோயில் எதிரில் உள்ளது. மேற்கு நோக்கியது. பிராகரத்தில் சந்நிதி ஏதுமில்லை. கொடிமரம் பலிபீடம் சிம்மம் உள. உள் வாயிலின் வண்ணச் சுதையில் துவாரபாலகியர் உருவங்கள் உள்ளன. அம்பாள் - முக்தாம்பிகை அற்புதமான அழகு. வரப்பிரசாதி அம்மன். அம்பாள் சந்நிதிக்கு நுழையும்போதே வலப்பால் மூலையில் வட்டப்பாறை அம்மன் சந்நிதி (அம்பாளின் சாந்நிதிய்ரூபம்) உள்ளது. தற்போது இச் சந்நிதியில் சிவலிங்கமே உள்ளது.

வட்டப்பாறை அம்மன் சந்நிதி இங்குப் பிரசித்தமானது. இங்கு அம்பாள் சந்நிதியில் இருந்து பொய் சத்தியம் செய்தால் அவர்களைப் பாம்பு தீண்டிவிடும் என்பது அசையாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. இது தொடர்பாகச் சொல்லப்படும் வரலாறு வருமாறு -

"அண்ணன் ஒருவன் இளையவனான தன் தம்பியை ஏமாற்றிச் சொத்தினைத் தனக்குச் சேர்த்துக் கொண்டான். வயது வந்து உண்மையறிந்த தம்பி அண்ணனைச் சென்று தனக்குரிய சொத்தைத் தருமாறு கேட்டான் - மறுக்கவே பஞ்சாயத்தைக் கூட்டினான். அண்ணன் மறுக்கவே அவர்களும் வட்டப்பாறை அம்பாள் சந்நிதியில் செய்து தருமாறு கூறினர். அண்ணன் இதற்கென ஒரு சூழ்ச்சி செய்தான், தம்பியின் சொத்தால் பெற்ற மதிப்பைச் திரட்டிப் பொன்வாங்கி அதைத் தன் கைத்தடியில் பூணுக்குள் மறைத்து வைத்துக் கொண்டான். அத்தடியுடன் அவைக்கு வந்து, தம்பியிடம் தடியைத் தந்துவிட்டு, அம்பாள் சந்நிதியில் இருகைகளாலும் 'தன்னிடம் தம்பியின் சொத்து ஏதுமில்லை, எல்லாம் அவனிடமே உள்ளது' என்று சத்தியம் செய்து கொடுத்தான். சூழ்ச்சியறியாத அனைவரும் வேறுவழியின்றி அவனைத் தம்பியுடன் அனுப்பிவிட்டனர். திரும்பப் பெற்றுக் கொண்ட தடியுடன் சென்ற அண்ணன், இங்கிருந்து 9 A.e. தொலைவிலுள்ள தும்பூர் நாகம்மன் கோயிலை அடைந்தபோது வாய் மதங் கொண்டு, தம்பியைத் திட்டியதோடு, தன்னைத் தெய்வ சக்தி அம்பாள் சக்தி ஏதும் செய்து விடவில்லை என்று அம்பாளையும் சேர்த்துத் திட்டினான். அப்போது கரும்பாம்பு ஒன்று தோன்றி அவனைக் கடித்துச் சாகடித்தது" என்று வரலாறு சொல்லப்படுகிறது. அவ்வாறு கடித்துச் சாகடித்த இடத்தில் இன்றும் பெரிய நாகச்சிலை ஒன்றுள்ளது.

இந்நிகழ்ச்சியை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் முத்தாம்பிகை அம்பாளின் மார்பில் பாம்பின் வால் - சிற்பம் - உள்ளது. தரிசிப்போர் நேரிற் காணலாம். அம்பாளுக்குச் செய்து அலங்காரம் செய்யப்படும் வெள்ளிக் கவசத்திலும் 'சர்ப்பத்தின் வால்' செதுக்கப்பட்டுள்ளது - தரிசிக்கலாம்.

அம்பாள் நல்ல அழகான தோற்றம். அபயகரம் ஒன்றும், தொடைமீது வைத்த மற்றொரு கரமுமாக மற்ற இரண்டில் தாமரையும் நீலோற்பலமுங்கொண்டு நான்கு கரங்களுடன் கூடிக் காட்சிதருகிறாள்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாப் பணித்திட்டத்தில் இக்கோயிலின் சுவாமி, அம்பாள், விநாயகர், முருகுன் விமானங்கள் தற்போது திருப்பணிகள் செய்யப்பட்டு 10-9-1987 -ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. (பிரதோஷ வழிபாட்டு மன்றம் சிறப்பாக நடைபெறுகிறது.)

நாடொறும் நான்கு கால பூஜைகள். பங்குனியில் பெருவிழா நடைபெறுகிறது. தலபுராணம் உள்ளது. இத் தலத்துள்ள கல்வெட்டு ஒன்றின் மூலம், இக்கோயிலில் கால சந்திகள் தோறும் தேவாரத் திருப்பதிகம் ஓதுதற்குக் குருடர்களை நியமித்து அவர்களை ஆதரித்த அரிய செய்தி தெரியவருகின்றது. வண்ணச்சரபம் அருள்மிகு. தண்டபாணி சுவாமிகளின் சமாதி இத் தலத்தில் கோயிலுக்குச் சற்றுத்தள்ளி, அமைதியானதொரு இடத்தில் உள்ளது.

'கௌமார நிச்சயம்' செய்த பெருமான் இவராதலின் இவ்விடத்தில் சமாதிக் கோயிலில் ஆறுமுகப் பெருமான் சந்நிதி உள்ளது. சுவாமிகளின் சிலாரூபம் நின்ற நிலையில் கையில் தண்டூன்றிய கோலத்தொடு, தலை மாலையுடனும் கோவணத்தொடும் காட்சிதருகின்றது. உற்சவத் திருமேனியும் உள்ளது. பக்கத்தில் உள்ள தோட்டத்தில் சமாதி உள்ளது. 5-7-1898-ல் சுவாமிகள் ஞானசமாதி கொண்டார். இவருடைய மரபினரால் இச்சமாதிக் கோயிலும், இங்குள்ள நூலகமும் இவ்விடமாகிய கௌமார மடாலயமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. சாதுக்கள் சிலர் உள்ளனர். திருக்கோயிலைக் காணச் செல்வோர் இவ்விடத்தையும் கட்டாயம் தரிசித்து வர வேண்டும்.

"மாறாத வெங்கூற்றை மாற்றி, மலைமகளை

வேறாக நில்லாத வேடமே காட்டினான்

ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்

கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே" (சம்பந்தர்)

'வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று

வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்

கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்

கடியதோர் விடையேறிக் காபாலியார்

சுண்ணங்கள் தாங் கொண்டு துதையப் பூசித்

தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற

அண்ணலார் போகின்றார் வந்து காணீர்

அழகியரே ஆமாத்தூர் அரையனாரே."

(அப்பர்)

"பொன்னவன் பொன்னவன் பொன்னைத் தந்தென்னைப் போகவிடா

மின்னவன் மின்னவன் வேதத்தினுட் பொருளாகிய

அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்

என்னவன் என்னவன் என்மனத்து இன்புற்றிருப்பனே."

(சுந்தரர்)

தண்டபாணி சுவாமிகள் துதி

"அகம்புற என்றுள சமயம் ஆறிரண்டும்

தனதுருவத் (து) அங்கமாக் கொண் (டு)

உகந்து கொலை புலையிஞ்சை யிலார் சொலுந்தே

வெல்லாமும் ஒப்பித் தொண்டர்க் (கு)

இகம்பர முற்றுள போகங் கடந்த முதற்

கதி வழி காட்டிடச் சேயாகித்

திகழ்ந்த தண்டபாணி திருப்புகழ் முருக

தாசன் இரு திருத்தாள் போற்றி."

'-சூர்ப்புடைத்த

தாமாத்தூர் வீழத் தடிந்தோன் கணேசனோடும்

ஆமாத்தூர் வாழ் மெய்அருட் பிழம்பே.'

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. அபிராமேஸ்வரர் திருக்கோயில்

திருவாமாத்தூர் - அஞ்சல் - 605 602.

விழுப்புரம் வட்டம் - விழுப்புரம் மாவட்டம்.

 
 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is புறவார்பனங் காட்டூர் (பனையபுரம்)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவண்ணாமலை
Next