பெண்ணாகடம் (பெண்ணாடம்)

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

பெண்ணாகடம் ( பெண்ணாடம்)

தற்போது பெண்ணாடம் என்றழைக்கப்படுகிறது.

விழுப்புரம் - திருச்சி பாதையில் விருத்தாசலத்திற்கு அருகிலுள்ள புகைவண்டி நிலையம். விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் பாதையில் (விருத்தாசலத்திலிருந்து) 17 A.e. தொலைவில் உள்ள தலம். பேருந்து வசதி உண்டு. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் தொழுதூரிலிருந்து 15 A.e. தொலைவில் உள்ளது.

தேவகன்னியரும், காமதேனுவும், வெள்ளையானையும் வழிபட்ட தலம். (பெண் ஆ கடம்) . இவ்வூரில் ஆறாயிர்ம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் 'கடந்தை நகர்' எனப்பெயர் பெற்றதென்பர். ஆழிபுரண்டக்கால் அசையாது அதிகார நந்தி மூலம் பிரளய கால வெள்ளத்தைத் தடுத்த பெருமானின் திருத்தலம்.

இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக்கண்டு மகிழ்ந்த வழிபாடியற்றி வாழ்ந்தனர். மலர் வாராமைகண்டு இந்திரன் காமதேனுவை அனுப்ப அது வந்து, நிலையறிந்து, தானும் இறைவனை வழிபட்டு நின்றது. காமதேனுவைத் தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளையானையை அனுப்ப, அதுவும் வந்து, நிலைமைகண்டு, இறைவனை வணங்கி, அங்கேயே நின்றுவிட, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டுத் தேடிவந்து, நிலைமையறிந்து பெருமானை வழிபட்டான் என்னும் வரலாறு இத்தலத்தில் சொல்லப்படுகிறது. எனவே மேற்சொல்லிய மூவரும் வழிபட்ட தலம் -பெண்ணாகடம் எனப்பெயர் பெற்றதென்பர்.

அப்பர் - சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலம். பணியாளே சிவனடியாராக வரக்கண்டு, நீர் வார்க்கத் தாமதித்த மனைவியின் கையை வெட்டிய கலிக்கம்ப நாயனார் வீடுபேறு பெற்ற தலம். மெய்கண்டாரின் அவதாரத் தலம்.

இறைவன் - சுடர்க்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர்.

இறைவி - ஆமோதனம்பாள், கடந்தை நாயகி, அழகிய காதலி.

தலமரம் - சண்பகம்.

தீர்த்தம் - கயிலைத்தீர்த்தம், பார்வதிதீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு.

இக்கோயிலுக்குத் 'தூங்கானைமாடம்' (கஜப் பிரஷ்டம்) என்பது பெயர்.

சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்றது. ராஜகோபுரம் 5 நிலைகளையுடையது. கோயிலின் முன் வாயிலில் தென்பால் குடவரை விநாயகரைத் தரிசிக்கலாம். மதிலையடுத்து உள்ளே நந்தவனம் உளது. வடபால் வாகன மண்டபம் அதிகாரநந்தி - பெருமிதத் தோற்றத்துடன் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. அழகான் கோபுரம் பல்வகைச் சிற்பங்களும் கொண்டது.

இக்கோபுரவாயிலில் மேல்பக்கச்சுவரின் தென்பால் மெய்கண்டார் கோயில் உள்ளது. நேர் எதிரில் கலிக்கம்ப நாயனார் காட்சி தருகிறார். இந்நாயனார் அவதரித்த தலமிது. மெய்கண்டாரின் தந்தையார் அச்சுத களப்பாளர் இப்பகுதியில் வாழந்தவராவார்.

30 அடி உயரமுள்ள அழகான துவஜஸ்தம்பம் - பக்கத்தில் கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்தி சந்நிதி உள்ளது. உள் நுழைந்தால் பதினாறுகால் மண்டபம்.

மூலவரின் - கர்ப்பக் கிருகத்தின் விமானம் ஐராவதம் வழிபட்டதற்கு அடையாளமாக யானை நிற்பது போல் அமைந்துள்ளது.

மூலலிங்கம் சுயம்பு. சற்று உயரமானது, ஆவுடையார் சதுர வடிவானது. கர்ப்பக்கிருகத்தின் முன்வாயில் தவிர, ஏனைய மூன்று புறங்களிலும் இறைவனைக் கண்டு வணங்குமாறு சன்னல்கள் - பலகணிகள் அமைந்திருப்பது சிறப்புடையது. சுற்றுப்பகுதியில் உற்சவத் திருமேனிகள் காட்சியளிக்கின்றன. மூலஸ்தானத்திற்கு வடபால் கட்டு மலைமேல் சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி உள்ளது. தனிக்கோபுரத்துடன் கூடய கோயில். ஏறுதற்குப் படிகள் உள்ளன. இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம்மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப இக்கோயில் கட்டப்பட்டதென்று ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

நால்வர் சந்நிதிகள், சேக்கிழார், தண்டபாணி உருவங்கள், கோடிவிநாயகர், சோமாஸ்கந்தர், விசுவேஸ்வரர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகளும் உள. கட்டுமலைக்கோயிலின் கீழ்ப்பகுதியில் பிரளயகாலேஸ்வரி அம்மை சிலையுள்ளது. தலமரத்தின்கீழ் சண்டேஸ்வரர் சந்நிதி. அம்மன் சந்நிதி, சுவாமிக்கு வடபாலுள்ளது. சண்டிகேஸ்வரி சந்நிதியுமுள்ளது. ஆலயத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

1. கபிலை தீர்த்தம் - கோயிலை அடுத்து மேற்பால் உள்ளது. காமதேனு, சிவபூசை செய்யும்போது, வழிந்தோடிய பால் நிரம்பி குளமாகியது என்பர்.

2. பார்வதி தீர்த்தம் - கோயிலின் முன் கீழ்த்தசையில் உள்ளது. இதற்குப் பரமானந்ததீர்த்தம என்றும் பெயர் சொல்லப்படுகிறது.

3. முக்குளம் - ஊரின் வடமேற்கில் அமைந்துள்ளது.

4. இந்திர தீர்த்தம் - ஊரின் கிழக்கில் அமைந்துள்ளது.

5. வெள்ளாறு - இந்த ஆற்றில் ஆண்டுதோறும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.

1. தயராசபதி - ஐராவதம் வழிபட்டதால் வந்த பெயர்.

2. புஷ்பவனம், புஷ்பாரண்யம், ஆதிநாளில் மலர்வனமாக விளங்கியதால் வந்த பெயர்.

3. மகேந்திரபுரி. இந்திரன் வழிபட்டதால் வந்த பெயர்.

4. பார்வதிபுரம் - பார்வதி வழிபட்டதால் வந்த பெயர்.

5. சோகநாசனம் - நஞ்சுண்ட இறைவனின் களைப்பைத் தீர்த்த தலமாதலின் வந்த பெயர்.

6. சிவாசம் - இறைவனுக்குகந்த பதி.

இறைவனுக்கு வழங்கும் வேறு பெயர் -

கைவழங்கீசர் -கலிக்கம்ப நாயனாரால் வெட்டுண்ட அவர் மனைவியின் கை மீண்டும் துளிர்க்க அருளிச் செய்த பிரான்.

இராஜகோபுரத்தின் வடபால் உள்ள நடராஜர் கோபுரமுமூ சந்நிதியும் தரிசிக்க அழகானது. உயரமான, கலையழகுடன் கூடிய நடராசர். பக்கத்தில் உமையும் - திருமுறைப்பேழையு ¢ம.

சதுர ஆவுடையாருடன் கூட மூலவர் பெரிய மூர்த்தமாகக் காட்சி தருகின்றனர். அம்பாள் தனிச் சந்நிதி, நின்ற திருக்கோலம். துர்க்கைக்கும் தனிச் சந்நிதி உள்ளது.

ஆண்டுதோறும் சித்திரையில் பெருவிழா நடைபெறுகிறது. சித்திரைச் சதய விழாவில் அப்பர் சுவாமிகள் வைச சமயஞ்சார்ந்து, இறைவனை வேண்டி, சூலமும் இடபக்குறியும் பொறிக்குமாறு வேண்டிப்பெற்ற விழா கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்கு ஆடிமாத உற்சவம் சிறபர்க நடத்தப் பெறுகிறது. ஆவணிமூல விழா, நவராத்திரி, சஷ்டி விழா, தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் முதலிய விழாக்களும் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன. மெய் கண்டாரின் தந்தையான அச்சுத களப்பாளர் பெயரில் ஊருக்கு மேற்கில் 'களப்பாளர்மேடு' என்னும் இடமுள்ளது. அங்குச் சிறிய கோயில் மெய்கண்டாருக்கு உள்ளது. மறைஞான சம்பந்தர் பிறந்த தலமும் இதுவே. இவர் பெயரில் தனி மடம் உள்ளது. சேது மகாராசா இத்திருக்கோயிலில் திருப்பணிகள் செய்ததோடு தேரும் அமைத்துத் தந்துள்ளார். சோழர் காலக் கல்வெட்டுக்கள் பல இக்கோயிலில் உள்ளன. கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் "தூகர்னை மாடமுடைய நாயனார்" என்று குறிப்பிடப்பட்டுகின்றார். கோயிலுக்குப் பொன், பசு, நிலம் முதலியவை விட்ட செய்திகள், கல்வெட்டால் தெரிய வருகின்றன.

ஒடுங்கும் பிணிபிறவி கோடன் றிவை உடைத்தாய

வாழ்க்கையழியத் தவம்

அடங்கும் இடங்கருதி நின்றீரெல்லாம் அடிகளடி

நிழற் கீழாளாம் வண்ணம்

கிடங்கும் மதிலும் சுலாவியெங்குங் கெழு மனைகள்

தோறும் மறையின்ஒலி

தொடங்குங் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை

மாடம் தொழுமின்களே."

(சம்பந்தர்)

"பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்

என் ஆவிகாப்பதற்கு இச்சையுண்டேல் இருங்கூற்றகல

மின்னாரும் மூவிலைச் சூல மென்மேல் பொறி மேவு கொண்டல்

துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச்சுடர்க்கொழுந்தே"

(அப்பர்)

"திருமருவு நாரணனும் பிரமன் ஆதித்தேவருடன்

யாவருந்தந் தெளிவினாலும்

பெருகுபல மறையாலும் அளக்க வொண்ணாப்

பெரிய பராபரமெங்கும் பிறங்குஞ்சோதி

அருள்பரை யினுடன்கூடிப் புவனந்தந்து

மதைக்காத்து மழிக்கின்ற கடந்தையண்ணால்

மருவு பிரளயங்காத்த வள்ளலாகும்

மாதேவன் திருவடியை வழுத்தி வாழ்வோம்".

(திருக்கடந்தைப் புராணம்)

"திருமுகமும் விழிமூன்றும் செய்யவாயும்

செறிநகையும் குழைக்காதும் அமுதவாக்கும்

புருவமுடன் கருங்குழலும் நாசிகண்டம்

புயனான்குமணிப் பூணும் புவனந் தந்த

மருவு திருமணி வயிறும் வயங்கித் தோன்ற

மன்று திருக் கடந்தையரன் வாமமேவும்

அருள்பொழியும் அழகிய காதலி பாதத்தை

அனுதினமும் அன்பொடு வணங்கி வாழ்வாம்."

(திருக்கடந்தைப் புராணம்)

"செய்ய திருக்கடந்தையினில் வணிகர் தங்கள்

திருமரபில் அவதரித்துச் சிவனைநாடி

மெய்யடியார்க் கமுதளிப்பார் பண்டுதம் பால்

வினையேவல் செய்யருவர் மேவக்கண்டு

துய்யதாள் விளக்குதற்கு நீர்விடாத

துணைவிகரந்தனைத் துணித்துத் துணிந்துதாமே

கையதனாலுபசரித்துக் கயிலை சேர்ந்த

கலிக்கம்பர் பதமலரைக் கருதுவோமே."

(திருக்குடந்தைப் புராணம்)

"ஓங்குபுகழ்த் திருக்கடந்தை நகரில் வேளாண்

உயர்குலஞ் செய்பெருந்தவமோருரு வுற்றாங்கு

வாங்குதிரைக் கடலுலகில் வந்து தோன்றி

மாதேவன் திருவடியை மறவாநெஞ்சில்

பாங்குறு நற்பரஞ்சோதி முனிவர் கூறும்

பதிபசுபாசத்திறனிப் பாரோர் தேர்ந்து

தீங்ககலச் சிவஞான போதஞ்சாற்றும்

செய்யமெய்க் கண்டார்தாள் சிரத்தில்வைப்பாம்."

(திருக்கடந்தைப் புராணம்0

"வாய்ந்த புகழ் மெய்கண்டதேவருக்கு

மாணாக்கர் அருணந்தி தேவர்தம் பால்

ஆய்ந்த பலகலையோதித் தமையடைந்த

அருள்பெருகு கொற்றவன் குடியில் வாழும்

காய்ந்தபவத்துமா பதிதேவருக்கு ஞானம்

கவின வுரைத்தருள் செய்யுங் கடந்தைவந்த

ஏய்ந்த தவத்துயர்ந்த மறை ஞான தேவர்

இணைமலர்த்தாளெஞ்ஞான்றும் இறைஞ் சுவாமே"

(திருக்கடந்தைப் புராணம்)

(திருக்கடந்தைப் புராணம் என்னும் இத்தல புராணம் சிவஞானப் பிரான் பிள்ளை என்பவர் இயற்றியது.)

"-பூங்குழலார்

வீங்கானை மாடஞ்சேர் விண்ணென்றகல் கடந்தைத்

தூங்கானைமாடச் சுடர்க்கொழுந்தே.

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. பிரளயகாலேஸ்வரர் (சுடர்க்கொழுந்தீசர்) திருக்கோயில்

பெண்ணாடம் - அஞ்சல்

திட்டக்குடி வட்டம் - கடலூர் மாவட்டம் - 606 105.

(வழி) விருத்தாசலம் R.M.S.

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருநெல்வாயில் அரத்துறை-திருவரத்துறை (திருவட்டுறை)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கூடலையாற்றூர்
Next