Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

கொடிமாடச் செங்குன்றூர்

திருமுறைத்தலங்கள்

கொங்கு நாட்டுத் தலம்

கொடிமாடச் செங்குன்றூர்

திருச்செங்கோடு

தற்போது திருச்செங்கோடு என்று வழங்கப்படுகின்றது. சேலம், ஈராடு, நாமக்கல் முதலிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். (ஈரோட்டிலிருந்து 18 A.e. நாமக்கல்லிருந்து 32 A.e.)

சிவத்தலமாகயிருப்பினும் இது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தலமாகும். மலைமீது கோயில் உள்ளது. மேலமாட வீதியிலிருந்து பார்த்தால் இம்மலையே பார்ப்பதற்கு நாகம் போன்றிருப்பதால் நாகாசலம் நாககிரி என்றும் பெயர்.

"நாகாசல வேலவ" என்பது கந்தர் அநுபூதித் தொடர். அர்த்த நாரித்தலம். மலை சிவந்தநிறமாக இருப்பதால் செங்கோடு என்றும் பெயர். தெய்வத்திருமலை, நாகமலை, உரசகரி எனப் பல பெயர்களுண்டு.

இறைவன் - அர்த்தநாரீஸ்வரர்.

இறைவி - பாகம்பிரியாள், முருகன் - செங்கோட்டு வேலவர்.

தலமரம் - இலுப்பை.


சம்பந்தர் பாடல் பெற்றது.

மலைமீதிருந்து பார்த்தால் காவிரி ஆறு தெரியும். கோயிலுக்குச் செல்ல மலைமீது 1200 படிகள் ஏறவேண்டும். படிக்கட்டுக்களில் பாம்பு உருவங்கள் உள்ளன. ஓரிடத்தில் நீளமான பாம்பு வடிவத்திலேயே (20 அடி நீளம்) ஏறும் வழி அமைந்துள்ளது. ஏறிச் செல்லும்போது குரங்குகளின் தொல்லைகள் உண்டு.

வழியில் பல தீர்த்தங்களும் உள்ளன. இப்படிகளுள் 60 ஆம் படி மிகச்சிறப்பு வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால் அது நீதிமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை இருந்ததாம். இத்தலத்தைப் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் உள்ளன. மலையேறி ஐந்தடுக்குள்ள ராஜகோபுரம் கடந்து, கீழிறங்கி, இறைவன் சந்நிதிக்குச் செல்லுமுன் செங்கோட்டுவேலவர் சந்நதி அழகான நின்ற திருவுருவம். கிழக்கு நோக்கிய சந்நிதி. வலக்கையில் மேலே ஊன்றி இடக்கையை இடுப்பில் ஊன்றியவாறு நிற்கின்ற நிலையைக் கண்டால் நிச்சயமாக அந்த அழகை அனுபவிக்க 'நாலாயிரம் கண்கள் தேவை'. உணர்ந்த அநுபவித்த, ஏக்கவெளிப்பாடே அருணகிரிநாதரின் வாக்கு என்பதை நேரில் அறியலாம். வெள்ளைப் பாஷணத்தில் ஆன சுயம்பு மூர்த்தி. உளிபடாதது விடங்கம் - அடியில் சதுரபீடம். சுவாமியின் நெற்றில் பள்ளம் - சந்தனத்தை அப்பியுள்ளார்கள் திலகமாக, தலையில் ஜடாமகுடம் இடக்கையில் சேவற்கொடி, சந்நிதி முன்பு ஒருபுறம் விநாயகர், மறுபுறம் அருணகிரிநாதர், நக்கீரர்சிலையும் உள்ளது. தெய்வத் திருமலைச் செங்கோட்டு வேலவன் சந்நிதி தரிசனமே தெய்விகந்தான். எதிரில் உள்ள வேளாளக்கவுண்டர் மண்டபத்தூண் ஒன்றில் வீரபத்திரர் உருவம் தத்ரூபமாக உள்ளது. சிற்பக்கலையழகு வாய்ந்தது. மற்றொன்றில் அர்ச்சுனன் தவக்கோலம், வேடன், குருவிக்காரியின் வடிவங்கள் முதலியன மிக அழகாக வடிவாக்கப்பட்டுள்ளன.

செங்கோடனின் உற்சவத் திருமேனி கிருத்திகை நாள்களில் தங்கக் கவசம் சார்த்தி, தங்கமயிலேறித் தங்கக்காவடியுடன் புறப்பாடு நடைபெறுகின்றது. திருமுறைத்தலமான இஃது அர்த்தநாரீஸ்வரத் தலமாகும். அர்த்தநாரீஸ்வரர் மூலவர் - நின்ற திருமேனி - (இலிங்க வடிவமில்லை) மேற்கு நோக்கிய சந்நிதி, மூலவர் உருவ அமைப்பு அற்புதமாக உள்ளது. ஒரு பாதி புடவை - ஒரு பாதி வேஷ்டி அலங்காரம். பெண்பாகத்தில் ஜடை. முழுவடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது. இந்தக் கோலத்திலேயே அலங்காரத்துடனேனேய (மூலவர்) காட்சி தருகின்றார். திருவடியின்கீழ் குளிர்நத் நீர் சுரக்கின்றது. இது தேவ தீர்த்தம் எனப்படுகிறது. இத்தீர்த்தப் பிரசாதம் நாடொறும் வரும் அன்பர்க்கு வழங்கப்படுகிறது. அமாவாசை நாள்களில் இத்தீ §ர்த்தம் 3,4 அண்டாக்களில் சேகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. மூலவர் முன்னால் மரகதலிங்கமும், பிருங்கி மகரிஷியின் உருவமும் உள்ளது.

அர்த்தநாரீஸ்வரர் உற்சவத் திருமேனி மிக அற்புதமாகவுள்ளது. ஆண்பக்கத்தில் (வலம்) கையில் தண்டாயுதம், பெண்பக்கத்தில் (இடம்) கை இடுப்பில் வைத்த அமைப்பு, மார்பில் பெண் பக்கத்தில் கொங்கை, திருவடிகளில் ஒன்றில், சிலம்பு மற்றொன்றில் கழல், கண்களில் கூட ஆண், பெண் பாக வேறுபாடு ஒரு மயிரிழையில் அகலமாகவும் குறுகலாகவும் காட்டப்பட்டுள்ளன.

கேதராகௌரி, மரகதலிங்கத்தைப் பூஜித்து, இறைவனின் பாகத்தை பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது. கேதாரகௌரி உற்சவத்திருமேனி உள்ளது. சிலாரூப தக்ஷிணாமூர்த்தி அழகுடையதாகத் திகழ்கிறது. ஆதிகேசவப் பெருமாள் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கிய சந்நிதி. ஸ்ரீ தேவி, பூதேவியுடன் உற்சவத் திருமேனியும் உள்ளது. இச்சந்நிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும். கோயில் நல்ல நிலையில் அமைந்துள்ளது. மேலிருந்து நோக்கின ஊர் முழுவதையும் நன்கு காணலாம்.

இத்தலத்திற்கு வீரகவிராஜபண்டிதரால் பாடப்பட்ட தலபுரணாம் உள்ளது. ஊரின் நடுவில் சுகந்த குந்தாம்பிகை சமேத கயிலாசநாதர் கோயில் உள்ளது.

திருஞான சம்பந்தர் கொங்கு நாட்டுத் தல யாத்திரையில் முதலில் இப் பதியை வணங்கி, பின்பு சில ஊர்களுக்குச் சென்று விட்டுத் திரும்பவும் பதியை இங்கு வந்தபோது, அவருடன் வந்த அடியார்களை 'நளிர்சுரம்' பற்றி வருத்த 'அவ்வினைக் கிவ்வினை' என்னும் பதிகம்பாடி, 'தீவினைவந்தெம்மைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்' என ஆனையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.

இத்தலத்தில் முதலாம் இராஜராஜன், சுந்தரபாண்டியத் தேவர், மைசூர் கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இத்தலத்துச் சொல்லப்படும் ஒரு செய்தி - இங்கு வாழ்ந்த குணசீலர் என்ற புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டார். பாண்டிப்புலவரேறு என்பவர்.

"சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாடததென்னே" - என்று பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடினார் அப்போது, சிறுவனாக வந்த வேலவன் "அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகன்ம் கொத்துமென்றே" - எனப்பாட்டினை முடித்து அப்புலவரைத் திரும்பிப் போகும்படிச் செய்தார் என்ற செய்தி, இம்மலையடிவாரத்தில் நிகழ்ந்ததாகுமென்று பேசப்படுகிறது. வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது. வீரகவிராஜபண்டிதர் எழுதிய தலபுராணம் உள்ளது. வண்ணச்சரபம் அவர்களும் பத்துப் பதிகங்கள் பாடியுள்ளார்.


"வெந்த வெண்ணீ றணிந்து விரிநூல் திகழ்மார்பினல்ல

பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்தருளிக்

கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பவரே. (சம்பந்தர்)


"அவ்வினைக் கிவ்வினையாமென்று சொல்லும்ஃதறிவீர்

உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே

கைவினை செய்தெம்பிரான் கழல் போற்றது நாமடியோம்

செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்". (சம்பந்தர்)


"கூகா வென என்கிளை கூடியழப்

போகாவகை மெய்ப்பொருள் பேசியவா

நாகாசல வேலவ நாலுகவித்

தியாகா சுரலோக சிகாமணியே". (கந்தர் அநுபூதி)


"சேந்தைனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளிக்

காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்

சாந்துணைப் போதும் மறவாதவர்க்கொரு தாழ்வில்லையே".


"தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே

வை வைத்த வேற்படை வானவனே மறவேன் உனையான்

ஐவர்க் (கு) இடம்பெறக் காலிரண்டு ஒட்டி அதிலிரண்டு

கை வைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே".


"மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு

மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்

சேலார் வயல் பொழில் செங்கோடனைச் சென்று கண்டுதொழ

நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே".

(கந்தர்.அலங்காரம்)


திருப்புகழ்

அன்பாக வந்து உன்றாள் பணிந்து

ஐம்பூத மொன்ற நினையாமல்

அன்பால் மிகுந்து தஞ்சாரு கண்க

ளம்போருகங்கள் முலைதானும்

கொந்தே மிகுந்து வண்டாடி நின்று

கொண்டாடுகின்றன குழலாரைக்

கொண்டே நினைந்து மன்பேதுமண்டி

குன்றா மலைந்து அலைவேனோ

மன்றாடி தந்த மைந்தா மிகுந்த

வம்பார் கடம்பை யணிவோனே

வந்தே பணிந்து நின்றார் பவங்கள்

வம்பே தொலைந்த வடிவேலா

சென்றே யிடங்கள் கந்தா எனும் பொ

செஞ்சேவல் கொண்டு வரவேணும்

செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த

செங்கோட மர்ந்த பெருமாளே.


-"செம்மையுடன்

அங்குன்றா தோங்கும் அணிகொள் கொடிமாடச்

செங்குன்றூர் வாழுஞ்சஞ்சீவியே". (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்.

திருச்செங்கோடு 637 211 நாமக்கல் மாவட்டம்.


Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருநணா
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  வெஞ்சமாக்கூடல்
Next