திருப்புத்துழர்

திருமுறைத்தலங்கள்

பாண்டிய நாட்டுத் தலம்

திருப்புத்துழர்

மதுரைக்கும் காரைக்குடிக்கும் மத்தியில் உள்ளது. மதுரையிலிருந்தும் காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை முதலிய ஊர்களிலிருந்தும் இத்லத்திற்குப் பேருந்துகள் செல்கின்றன.

(வடாற்காடு மாவட்டத்தில் இதே பெயரில் ஒர் ஊர் உள்ளது - திருப்பத்தூர். இது திருப்புத்தூர். அதனின் இது வேறானது. மக்கள் வழக்கில் இதுவும் திருப்பத்தூர் என்றே வழங்குகிறது. இத்தலம் பசும்பொன் மாவட்டத்தைச் சேர்ந்தது.)

கோயிலுக்கு (ஸ்ரீ தளி) திருத்தளி என்று பெயர். ஊர்ப்பெயர் திருப்பத்தூர்.

இறைவன் - ஸ்ரீ தளீஸ்வரர், ஸ்ரீ தளிநாதர், திருத்தளிநாதர்.


இறைவி - சிவகாமி.


தீர்த்தம் - ஸ்ரீ தளி (திருத்தளி தீர்த்தம்) , சிவகங்கை, (கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது.) விசாலமான பரந்த குளம்.


தலமரம் - சரக்கொன்றை.

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம்.

பெருமான் ஆடியருளிய கௌரி தாண்டவத்தைக் கண்டு இலக்குமி வழிபட்டு இத்தலத்து வேண்டிய பேற்றைப் பெற்றாள். அவள் பெருமானிடம் வேண்டியவாறே இக்கோயில் தொடர்புடைய அனைத்தும் இலக்குமி சம்பந்தமுடையதாகவே ளங்கலாயிற்று. ஸ்ரீ - இலக்குமி. ஆகவே கோயில் ஸ்ரீ தளி, இறைவன் - ஸ்ரீதளீஸ்வரர், தீர்த்தம் - ஸ்ரீ தளிதீர்த்தம் என வழங்கப்படுகின்றது. இத்திருக்கோயில் நீண்ட மதிற்சுற்றை உடைய பெரிய கோயில். முகப்பு வாயில் கிழக்கு நோக்கியது. இராஜகோபுரமில்லை - மண்டபம் மட்டுமே உள்ளது. உள் நுழைந்தால் உள்ள மண்டபத்திற்கு அநபாய சோழன் மண்டபம் என்று பெயர். வலப்பால், திருப்பத்தூர், தமிழ்ச் சங்கம் நடைபெறகின்ற மண்டபம் உள்ளது. இக்கோயிலில் மூன்று பிராகாரங்கள் உள்ளன. வெளிப் பிராகாரத்தில் யானை மண்டபம் உள்ளது. வேப்பமரத்தடி விநாயகர் தரிசனம். எதிரில் மதிலையட்டி நந்தவனப் பகதிகள். கொன்றை மரங்கள் உள்ளன.

அடுத்த உள்பிரகாரத்தில் நுழையும்போது செப்புக் கவசமிட்ட கொடிக்கம்பம் - சற்றுப் பெரிய நந்தி. வாயிலில் சம்பந்தர், அப்பர் பாடல்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமானின் திருக்கோல தரிசனம் மனதிற்கு மகிழ்வூட்டுகின்றது. இங்குள்ள பைரவர் சந்நிதி மிகவும் விசேஷமானது - தனிச் சிறப்பும் தனிச்சக்தியும் வாய்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. தனிக்கோயிலாக அழகிய விமானத்துடன் அமைந்துள்ள இப்பைரவரின் சந்நிதியில் முன்மண்டபம் மருதுபாண்டிய சகோதரர்களால் கட்டப் பட்டது. அவர்கள் இருவரின் உருவங்களும் அம்மண்டபத்தில் உள்ளன. இங்குப் பைரவர் யோகாசன நிலையில் அமர்ந்துள்ளார். இந்திரன் மகன் சயந்தன் வழிபட்டுப் பேறடைந்தான் ஆதலின் அவன் உருவம் சந்நிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது. இப்பைரவப் பெருமானுக்கு நாடொறும் அர்த்தசாமத்தில் புனுகு சார்த்தப்பட்டு வடைமாலை, சம்பாநைவத்தியம் நிவேதிக்கப்படுகிறது. "அர்த்தசாம வழிபாட்டிற்காகக் குருக்கள் மணியடித்து விட்டால் அதற்குப் பிறகு மக்கள் யாரும் பைரவர் சந்நிதிக்குப் போக கூடாது. ஏற்கெனவே சென்றிருப்போரும் விரைந்து தரிசனம் முடித்துத் திரும்பி விடுவர். அர்த்தசாமத்தின்போது குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் மட்டுமே செல்வர். மற்றையோர் எவரும் வரக்கூடாது" என்பது இத்திருக்கோயிலில் இப்பைரவர் சந்நிதியில் தொன்று தொட்டு இருந்துவரும் ஐதீகமாகும்.

சித்திரை முதல் வெள்ளியன்று இவருக்குத் தங்க அங்கி சார்த்தப்படுகிறது. அடுத்த உள்பிராகாரத்தில் சூரியன், மகாலட்சுமி, வீரபத்திரர், உற்சவமூர்த்தங்கள், அகத்தியலிங்கம், மகாவிஷ்ணு, துர்க்கைச் சந்நிதி, கொன்றைமரம் முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராஜசபை மிக அழகாகவுள்ளது. சுவரின் வெளிப்புறத்தில் வண்ணத்தில் பதஞ்சலி முதலானோர் உருவங்கள் எழுதப்பட்டுள்ளன. இங்குப் பெருமான் ஆடும் நடனம் கௌரிதாண்டவமாகும். இச்சபையில் வெளியில் உள்ள சிறப் வேலைப்பாடுடைய ஐந்து கற்றூண்களும் இசைத் தூண்களாக அமைந்துள்ளன. சிற்பங்களைத் தட்டினால் மெல்லிய ஓசை எழுகின்றது.

மூலவர் சந்நிதி முகப்பில் நால்வர் திருமேனிகளும், பொல்லாப் பிள்ளையாரும், நர்த்தன விநாயகரும் ஒருபுறமும், வள்ளி தெய்வயானை உடனாய சுப்பிரமணியர், திருமுறைக்கோயில் மறுபுறமும் உள்ளன. சுதையாலான துவாரபாலகர்கள். உள்ளே விசாலமான மண்டபம் . மூலவர் - சிவலிங்கத் திருமேனி - கிழக்கு நோக்கிய சந்நிதி. சதுரபீடமான ஆவுடையார். அக்கினிக் நட்சத்திரக் காலத்தில் தாராபாத்திரம் வைக்கப்பட்டுகின்றது. "திருத்தளியான்காண் அவன் என் கண்ணுளாளே" - அப்பரின் அமுதவாக்குடன் தரிசிப்போர்க்கு அமைதி கிடைக்கிறது. இங்கும் பிரான்மலையில் உள்ளது போலவே நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன. அம்பாள் ஆலயம் மிகவும் விசாலமானது. கிழக்கு நோக்கிய சந்நிதி. நின்ற திருக்கோலம். சண்டிகேஸ்வரி சந்நிதி உள்ளது. சுற்றி வலம்வர பிரகாரம் உள்ளது. காமிக ஆகமப்படிப் பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோயிலில் வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது. இத்திருக்கோயில் குன்றக்குடி (திருவண்ணாமலை) ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட திருக்கோயிலாகும்.


"பாங்கு நல்ல வரி வண்டிசை பாடத்

தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்

ஓங்கு கோயில் உறைவார் அவர் போலும்

தாங்கு திங்கள் தவழ் புன் சடையாரே".

"மின் காட்டுங் கொடி மருங்கல் உமையாட் கென்றும்

விருப்பவன்காண் பொருப்பு வலிச்சிலைக் கையோன்காண்

நனர்பட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி

நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன் காண்

பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற

புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு

தெனகர்ட்டுஞ் செழும் புறவில் திருப்பத்தூரின்

திருத்தளி யான்காண் அவன் என் சிந்தையானே". (அப்பர்)


-"முற்றுகதி

இத்தூரமன்றி இனித்தூரமில்லையெனப்

புத்தூர் வரும் அடியார் பூரிப்பே" (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. திருத்தளிநாதர் திருக்கோயில்

திருப்பத்தூர் - அஞ்சல் - 623 211

சிவகங்கை மாவட்டம்.




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is கொடுங்குன்றம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருப்புனவாயில்
Next