Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருவெண்பாக்கம் - பூண்டி (நீர்த்தேக்கம்)

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

திருவெண்பாக்கம் - பூண்டி (நீர்த்தேக்கம்)

திருவள்ளூரிலிருந்து செல்லப் பேருந்து வசதியுள்ளது. பூண்டி நீர்த்தேக்கம் - அணைப்பகுதி - மக்கள் சுற்றுலா இடமாகவும் திகழ்கின்றது. பழைய கோயில் திருவிளம்பூதூரில் இருந்தது. இவ்வூர் குசஸ்மலையாற்றின் கரையில் இருந்தது. திருவிளம்பூதூருக்குப் பத்ரிகாரண்யம் என்றும் பெயர். (இலந்தை மரக்காட்டுப் பகுதி) சுந்தரருக்கு ஊன்றகோலை இறைவன் அளித்தருளிய தலம். 11ஆம் நூற்றாணைடைச் சேர்ந்த இக்கோயில் பல கல்வெட்டுக்களையும் கொண்டிருந்தது.

சென்னையின் குடிநீர்த்தேவையைப் போக்க, குசஸ்தலையாற்றில் அணையைக்கட்ட 1942ல் அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக அணைகட்ட நிலப்பகுதிகளை எடுத்துக் கொண்டபோது அப்பகுதியில் திருவிளம்பூதூரும் அடங்கிற்று. வெண்பாக்கம் தற்போது பூண்டி நீர்த்தேக்கமாகவுள்ளது. ஆகவே அப்போதைய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திரு எம். பக்தவத்சலம் அவர்கள், அப்போதைய அறநிலையத்துறை ஆணையராக இருந்த திரு. உத்தண்டராமப் பிள்ளை அவர்கள் ஆகியோரின் பெருமுயற்சியால் திருவிளம்பூதூர் கோயில் அங்கிருந்து எடுக்கப்பட்டு, தற்போதுள்ள இட்த்தில் - பூண்டியில் புதிய கோயிலாகக் கட்டப்பட்டு 5-7-1968 அன்று கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. இச்செய்தி பற்றிய குறிப்பு கல்லிற்பொறித்து அம்பாள் சந்நிதி வாயிலில் பதிக்கப்பட்டுள்ளது. சுந்தரர் பாடிய பதிகம் உள்ளது. திருமுல்லை வாயில்பணிந்து, பின்பு, இங்கு வந்த சுந்தரர், அடியார்சூழ ஆலயம் சென்று 'கோயில் உளாயோ' என்று விண்ணப்பிக்க, இறைவன் ஊன்றுகோலை அருளிச்செய்து 'யாம் உளோம் போகீர்' என்றார். அதுகேட்ட சுந்தரர் 'பிழையுளன பொறுத்திடுவர்' என்னும் பதிகம் பாடிப் போற்றினார். பின்னர் இங்கிருந்து பழையனூர் சென்றார்.

இறைவன் - ஆதாரதண்டேஸ்வரர், ஊன்றீஸ்வரர்.

இறைவி - தடித் கௌரி அம்பாள், மின்னொளியம்மை.

சுந்தரர் பாடல் பெற்றது.

கோயில், சாலையோரத்தில் உள்ளது. ராஜகோபுரமில்லை, முகப்பு வாயில் உள்ளது, உள்ளே நுழைந்ததும் நேரே அம்பாள் சந்நிதி உள்ளது - தெற்கு நோக்கியது. வெளிப்பிராகாரம் புல்தரை. சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. கொடிமரமில்லை. நந்தி பலிபீடங்கள் உயரத்தில் உள்ளன. வாயிலுள் நுழைந்ததும் கல்மண்டபம் - அழகான கட்டமைப்புடையது. இடப்பால் சூரியன், சந்நிதியும் நவக்கிரக சந்நிதியும் உள்ளன. வலப்பால் நால்வர், பைரவர், அருணகிரிநாதர் சந்நிதிகள். பக்கத்தில் பிரதோஷ நாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வயானை, சோமாஸ்கந்தர் முதலிய உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுளள்ன. மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி - மின்னொளியம்மை கோயில் தெற்கு நோக்கிய சந்நிதியாக உள்ளது. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். கண்பார்வையை இழந்த சுந்தரர், வெண்பாக்கத்தை நோக்கி வரும்போது அம்பாள் மின்னலைப் போன்ற ஒளி அளித்து வழிகாட்டி மறைந்தனளாம். நேரே மூலவர் தரிசனம். வாயிலின் இருபுறத்திலும் துவாரகணபதியும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். மூலவர் சிவலிங்கத் திருமேனி ஆவுடையார் தாழ உள்ளது. எதிரில் நந்தி, வலக் கொம்பொடிந்துள்ளது. கண் வேண்டிய சுந்தரருக்கு இறைவன், கண்ணைத்தராமல் ஊன்றுகோலை அளித்த போது, சுந்தரர் கோபங்கொண்டு அக்கோலை வீசியெறிய அக்கோல்பட்டு நந்தியின் கொம்பொடிந்து போனதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது. நந்தியின் பக்கத்தில் கண்ணிழந்த நிலையில் இறைவனை நோக்கியவாறு சுந்தரர் திருமேனி நின்ற நிலையில் உள்ளது.

மூலவரின் பின்னால் சுவாமி அம்பாள் பஞ்சலோகத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. உள் பிராகாரத்தில் விநாயகர், வள்ளிதெய்வயானை சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் தனித்தனிக் கோயில்களாக உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.

திருவிளம்பூதூர் கோயிலில் இருந்த கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு இக்கோயிலில் பதிக்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுக்கள் முதலாம் இராசராசன் காலத்தியவை. கல்வெட்டில் இறைவன் பெயர் 'ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஈக்காட்டுக் கோட்டத்துப் பெருமூர் நாட்டு உடையார், திருவுளோம் போகி உடைய நாயனார்', என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக்களில் (1) சந்தி விளக்கு வைத்த நிபந்தம் (2) பூஜைக்கு நிலம் வைத்த நிபந்தம் (3) சுவாமி அமுதுக்கு நிலம் விடப்பட்ட நிபந்தம் முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

சிவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள் (திங்கட்கிழமைகள்) ஆருத்ரா முதலிய விசேஷ கால வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோயில் திருவேற்காடு அருள்மிகு கருமாரியம்மன் தேவஸ்தானத்துடன் இணைந்தது.

கோயிலுள் வெளிப்பிராகாரப் பகுதியிலேயே பூஜை செய்யும் சிவாசாரியார் வீடு உள்ளது.

இப்புதிய கோயிலின் நலனில் பெருமுயற்சி கொண்டு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்வித்துச் செம்மைப்படுத்தியவர் சென்னை மினர்வா டுடோரியல் கல்லூரி நிறுவனராக இருந்த திரு. ஏ.என். பரசுராமன் அவர்கள் ஆவார். அவர் ஆர்வமும் அயரா உழைப்பும் இக்கோயிலின் வளர்ச்சியில் பெரும் பங்காகும். பூண்டி அரங்கநாத முதலியார் என்ற பெருமகனார் வாழ்ந்தது இப்பதியே.

"பிழையுளன பொறுத்திடுவார் என்றடியேன் பிழைத்தக்கால்

பழியதனைப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய்

குழைவிரவு வடிகாதா கோயில் உளாயோயென்ன

உழையுடையானுள்ளிருந்து உளோம் போகீ ரென்றானே".

"செய்வினை யன்றறியாதேன் திருவடியே சரணென்று

பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திட c வேண்டாவோ

பையரவா இங்கிருந்தாயோ என்னப் பரிந்து என்னை

உய்யஅருள் செய்யவல்லானும் உளோம் போகீர் என்றானே".

"மான்திகழும் சங்கிலியைத் தந்துவரு பயன்கள் எல்லாம்

தோன்ற அருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெலாம்

ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தாயோ என்ன

ஊன்றுவதோர் கோல் அருளி உளோம் போகீர் என்றானே"

(சுந்தரர்)

-'தேசூரன்

கண்பார்க்க வேண்டுமெனக் கண்டு ஊன்றுகோல் கொடுத்த

வெண் பாக்கத்து அன்பர் பெறும் வீறாப்பே".

(அருட்பா)

"வாழி திருவூன்றீசன் வாழியுமை மின்னொளியாள்

வாழி திருநாவலூர் வன்றொண்டர் - வாழி திரு

வூன்றீச னாலயமும் போற்றும் பணி செய்தோர்

தோன்றுகவே பத்திநெறி யெங்கும்".

(தனிப்பாடல்)

அஞ்சல் முகவரி -

அ.மி. ஊன்றீஸ்வரர் திருக்கோயில்

பூண்டி (நீர்த்தேக்கம்) - அஞ்சல் - 602 023

(வழி) திருவள்ளுர், திருவள்ளுர் மாவட்டம்.

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருப்பாசூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கள்ளில் - திருக்கள்ளம், திருக்கண்டலம்
Next