Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

குடவாயில்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

குடவாயில்

குடவாசல்.

மக்கள் வழக்கில் குடவாசல் என்று வழங்ககின்றது. திருவாரூரிலிருந்து 16 A.I. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 15 A.e. தொலைவிலும் இத்தலம் உள்ளது.

கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து வருவதற்குப் பேருந்துகள் உள்ளன. ஊர் - குடவாயில். கோயில் - குடவாயிற் கோட்டம். கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் மேற்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளதால் குடவாயில் என்னும் பெயர் பெற்றது.

உலகப் பிரளய காலத்தில் இறைவன், உயிர்கள் அனைத்தையும் அமிர்தகுடம் ஒன்றிலிட்டு அக்குடத்தின் வாயிலில் (முகத்தில்) சிவலிங்கமாக இருந்து காத்தார். (அமிர்ததுளி விழந்த இடம். அமிர்த தலமாயிற்று, அமுதநீர் தேங்கிய இடம் அமிர்த தீர்த்தமாயிற்று. உயிர்களைக் காத்தமையால் கோ - நேசர் - கோணேசர் ஆயினார்.) காலம் செல்லச் செல்ல குடத்தின் வாயிலில் லிங்கத்தின்மீது புற்று முடியது. புற்றால் மூடியிருந்த அமிர்த குடத்தைக் கருடன் தன் மூக்கினால் பிளந்து வெளிப்படுத்தியதால் இறைவனக்கு வன்மீகாசலேசர், கருடாத்ரி எனப்பெயர்கள் வழங்கலாயின தன் முக்கால் பிளந்து வெளிப்படுத்திய கருடன், இறையருளால் இக்கோயிலைக் கட்டி வழிபட்டார் என்பது வரலாறு. சூரியன் வழிபட்டமையால் 'சூரியேசுவரர்' என்றும், பிருகுமுனிவர் வழிபட்டதால் 'பிருகநாதர்' என்று சுவாமிக்குப் பல பெயர்களுண்டு. தாலப்பிய முனிவர் இத்தலத்து மந்தார மரத்தின் கீழிருந்து தவஞ்செய்ததாக வரலாறு.

குடத்திலிட்டுக் காத்த உயிர்களை, மீண்டும் படைப்புக் காலத்து வெளிப்படுத்தத் தொடங்கிய போது குடம் மூன்றாக உடைந்து, முதற்பாகமாகிய அடிப்பாகம் விழுந்த இடத்தில் இறைவன் திருமேனி கொண்டார். அதுவே குடமூக்கு எனப்படும் கும்பகோணம் (ஆதிகும்பேசம்) ஆகும். அடுத்து நடுப்பாகம் விழுந்த இடமே கலைய நல்லூராகும். குடத்தின் முகப்பு பாகம் விழுந்த இடமே குடவாயிலாகும் என்பது தலவரலாறு.

இத்தலத்து திருண பிந்து முனிவர் வழிபட, இறைவன் காடசி தந்து அவருடைய உடற்பிணியைத் தீர்த்தருளியதாகவும் வரலாறு. இத்தலத்திற்குப் பக்கத்தில் சுற்றிலும் திருச்சேறை, கரவீரம், பெருவேளூர், தலையாலங்காடு, கடுவாய்க்கரைப்புத்தூர், கொள்ளம்பூதூர், நாலூர் மயானம் முதலிய தலங்கள் உள்ளன. கதலிவனம், வன்மீகா சலம் என்பன தலத்திற்குரிய வேறு பெயர்கள்.

இத்தலம் சங்ககாலச் சிறப்பும் பழைமையும் வாய்ந்தது.சோழன் கோச்செங்கணான், சேரமான் கணைக்கால் இரும் பொறையை வென்று, அவனை இக்குடவாயிற் சிறைக் கோட்டத்தே சிறை வைத்தான் என்னும் செய்தி புறநானூற்றால் தெரிகிறது. இதனால் அன்றைய குடவாயில், சோழப்பேரரசின் சிறைக்கோட்டமாக இருந்ததெனத் தெரிகின்றது. குடவாயில் கீரத்தனார், குடவாயில் நல்லாதனார் போன்ற புலவர்கள் பாடியுள்ள பாடல்கள் அகநானூறு முதலிய சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.

அகநானூற்றில் வரும் செய்தி ஒன்றால், சங்ககாலத்தில் குடவாயில் சோழர்களின் கருவூல நிலையமாக இருந்த தென்று அறிய முடிகிறது. கல்வெட்டுச் சிறப்பு உடைய தலம் இஃது. மூன்று கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கல்வெட்டில், இறைவன் பெயர் 'குடவாயில் உடையார்' என்றும், இறைவி பெயர் 'பெரிய நாச்சியார்' என்றும், கோயிலின் பெயர் 'பெருந்திருக்கோயில்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் சனிபிரதோஷம் வாய்ந்ததாகும்.


இறைவன் - கோணேசுவரர்.

இறைவி - பெரியநாயகி.

தலமரம் - வாழை.

தீர்த்தம் - அமிர்ததீர்த்தம். கோயிலுக்கு எதிரில் உள்ளது.

இதன் கரையில் ஆதிவிநாயகர் சந்நிதி உள்ளது.

சம்பந்தர் பாடல் பெற்ற பதி.

பேருந்துச் சாலையை அடுத்துக் கோயில் உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதி. கோயில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது. ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்சமூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

உள்நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி. கோயில் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்சமூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

சண்டேசுவரர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. நடராஜசபை அழகானது. நடராஜப் பெருமானின் அவிர்சடை அழகு நம் மனத்தை விட்டகலாது. பெருமானின் திருமேனியில் பீடத்தில் 10 -11 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் "களக்காடுடையார் மாலை தாழ்மார்பன்" என எழுதப்பட்டுள்ளது. இத்தொடரில் எழுத்துக்களுடன் மத்தியில் இருகரங் வப்பிய அடியவர் ஒருவரின் உருவமும் உள்ளது.

இராஜராஜ சோழனின் காலத்துக் கலைப்பாணியை உடைய இத்திருமேனி இத்தலத்திலிருந்து 8 A.e. தொலைவில் உள்ள களக்காட்டில் வாழ்ந்த 'மாலைதாழ் மார்பன்', என்பவரால் வடித்து வழங்கப்பட்டதென அறிகிறோம். சந்நிதிக்கு வெளியில் பக்கவாட்டிலுள்ள காசி விசுவநாதர் சந்நிதியில் சிவலிங்கத் திருமேனி செம்மண் நிறத்தினது. இருபத்து நான்கு படிகளைக் கடந்து மேலே சென்றால் மூலவரை - கோணேசுவரரைத் தரிசிக்கலாம். மேற்கு நோக்கிய சந்நிதி. பெரிய சிவலிங்கத் திருமேனி, மன நிறைவான தரிசனம். கம்பீரமான தோற்றம் - திருமேனியில் கருடன் தீண்டி வழிபட்ட சுவடுகள் உள்ளன.

இத்தலத்திலுள்ள ஏகபாதர் உருவம் - அரி அயன் மூவரும் ஒற்றைத் திருவடியில் ஒரு வடிவாய் நிற்கும் சிற்பம் ஏகபாத்திரமூர்த்தி மிகவும் அற்புதமானது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. அம்பிகையே பிருகத்துர்க்கையாக வழிபடப் பெறுவதால் கோயிலில் தனி துர்க்கையில்லை, தலபுராணம் உள்ளது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழா ஆண்டுத் திருப்பணித் திட்டத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு அவர்களின் அருளாசியால் 27-6-85ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இத்தலத்தில் உள்ள கோணேசர் வார வழிபாட்டுக் கழகம் ஆலயத்தின்பால் மிக்க பற்று கொண்டு பணிகளையும் வழிபாட்டையும் செய்து வருகின்றது. மாசி மகத்தில் பெருவிழா நடைபெறுகின்றது.

"பொன்னொப் பவனும் புயலொப் பவனும்

தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்

கொன்னற் படையான் குடவாயில் தனில்

மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே." (சம்பந்தர்)

கோணேசர் துதி

"சீர்கொண்ட வெளி முகடு கடந்தண்டத்

தப்பாலாய்ச் சித்தாந்தத்தின்

வேர்கொண்ட பேரொளியாய்ச் சின்மயமா

யகண்டமாய் விமலமாகிப்

பேர்கொண்ட நாதமாய் விந்துவா

யைந் தொழிலம் பிறங்கச் செய்து

பார்கொண்ட குடவாயி லமர்ந்த கோ

ணேசர் பதம் பணிந்து வாழ்வோம்." (தலபுராணம்)

பெரியநாயகி துதி

"பரையாகி இச்சா ஞானங் கிரியை

அதிகாரப் பான்மையெய்திப்

புரைதீர்ந்து விந்து மோகினி யடுமா

னனைத்துலகும் பொருந்தச் சார்ந்து

கரை தீர்க்குஞ் சமய வித சத்தியமாய்க்

காணமுக்கட் கடவுளாகித்

தரைமேவும் குடவாயில் வரும் பெரிய

நாயகிதாடலைமேற் கொள்வாம்." (தலபுராணம்)

திருப்புகழ்

"அயிலார் மைக்கடு விழியார் மட்டைக

ளயலார் நத்திடு விலைமாதர்

அணைமீதிற் றுயில் பொழுதே தெட்க

ளவரேவற் செய்து தமியேனும்

மயலாகித்திரி வதுதானற்றிட

மலமாயைக் குண மதுமாற

மறையால் மிக்கருள் பெறவே யற்புத

மதுமாலைப் பத மருள்வாயே

கயிலாயப் பதியுடையாருக் கொரு

பொருளே கட்டளை யிடுவோனே

கடலோடிப்புகு முதுசூர் பொட்டெழ

கதிர்வேல் விட்டிடு திறலோனே

குயிலாலித்திடு பொழிலே சுற்றிய

குடவாயிற் பதி உறைவோனே

குறமாதைப் புணர் சதுராவித்தக

குறையா மெய்த் தவர் பெருமாளே.

-நிலைகொள்

தடவாயில் வெண்மணிகள் சங்கங்கள் ஈனும்

குடவாயில் அன்பர் குறிப்பே." (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. கோணேசுவரர் திருக்கோயில்

குடவாசல் - அஞ்சல் - 612 601

குடவாசல் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is தலையாலங்காடு
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருச்சேறை
Next