Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

பெருவேளூர்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

பெருவேளூர்

மணக்கால் ஐயம்பேட்டை

கும்பகோணம் - குடவாசல், திருவாரூர்ப் பேருந்துச் சாலையில், மணக்கால் என்ற இடத்தில் இறங்கி, இடப்புறமாக 1/2 A.e. சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். பழைய நூல்களில் இத்தலம் 'காட்டூர் ஐயம்பேட்டை' என்று குறிக்கப்பட்டுள்ளது. முருகன் வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுவதால் 'வேளூர்' என்றும், 'பெருவேள்' என்பவன் வாழ்ந்த இடமாதலின் 'பெருவேளூர்' என்றும் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகின்றது. வாயுவுக்கு ஆதிசேடனக்குமிடையே நடந்த போட்டியில் வந்து விழுந்த கயிலைச் சிகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

மோகினி வடிவம் எடுத்த திருமால், அவ்வவார நோக்கம் நிறைவேறிய பின்பு இறைவனை வழிபட்டுத் தன் ஆண்வடிவினைப் பெற்ற தலம் என்பர். திருமால் கோயில் ஆலயத்துள் உள்ளது. பிருங்கி, கௌதமர் ஆகியோர் வழிபட்ட தலம். கோச்செங்கட்சோழனின் திருப்பணியாலான மாடக்கோயில். இத்தலத்திற்கு அருகில் திருவளிமர், கரவீரம், தலையாலங்காடு, எண்கண் முதலிய தலங்கள் உள்ளன. சிறிய கிராமம்.


இறைவன் - அபிமுக்தீஸ்வரர், பிரியாஈஸ்வரர்.

இறைவி - அபின்னாம்பிகை, ஏலவார்குழலி.

தலமரம் - வன்னி.

தீர்த்தம் - சரவணப் பொய்கை. கோயிலின் பின்புறமுள்ளது.

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம்.

ராஜகோபுரம் மூன்று நிலைகளோடு, திருப்பணி முடிந்து அழகோடு காட்சியளிக்கிறது. கிழக்கு நோக்கிய சந்நிதி. கோபுரத்துள் நுழைந்ததும் கொடிமர விநாயகர் - வெள்ளை விநாயகர் காட்சியளிக்கிறார். நந்தி, பலிபீடம் மட்டும் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர் சந்நிதிகள், பக்கத்தில் வைகுந்த நாராயணப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. இச்சந்நிதியில் மூல, உற்சவத் திருமேனிகள் உள்ளன. வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியை அடுத்து அம்பாள் சந்நிதி சனிபகவான், க்ஷேத்திரபைரவர், சூரியன், நால்வர், மகாலிங்கம், சரஸ்வதீசர், ஜம்புகேஸ்வரர், ஐராவதீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், துர்க்கை முதலிய சந்நிதிகள் உள்ளன.

தரிசித்துப் படிகள் ஏறி மேலே சென்றால் நேரே சோமாஸ்கந்தர் சந்நிதி. வலப்பால் திரும்பி, வாயில் நுழைந்தால் நேரே நடராஜ சபை உள்ளது. இம்மண்டபம் 'வெளவால் நெத்தி மண்டபம்' அமைப்புடையது. மண்டபத்தில் தூணில் துவார கணபதி உள்ளார். துவார பாலகர் உருவங்கள் இருபுறமும் உள. மூலவர் - சுயம்பு. சதுர ஆவுடையார். மூலவருக்கு நேர் எதிரில் சாளரம் வைக்கப்பட்டுள்ளது. கோஷ்ட மூர்த்ங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், மிருகண்டு மகரிஷி துர்க்கை முதலியோர் உள்ளனர். துர்க்கைச் சந்நிதி தனிச் சந்நிதியாகவுள்ளது. சண்டேசுவரர் உருவம் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. அம்பாள் சந்நிதி - அமர்ந்த நிலை - வீராசனம். அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் அழகிய தரிசனம். இத் தலத்தில் சஷ்டி விழா சிறப்பாக நடைபெறுகிறது. தலபுராணம் உள்ளது.

மறப்பிலா அடிமைக்கண் மனம்வைப்பால் தமக்கெல்லாம்

சிறப்பலரிர் மதில்எய்தசிலை வல்லார் ஒருகணையால்

இறப்பிலார் பிணியில்லார் தமக்குஎன்றும் கேடிலார்

பிறப்பிலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. (சம்பந்தர்)


"விரிவிலா அறிவினார்கள் வேறோரு சமயஞ்செய்து

எரிவினாற் சொன்னாரேனம் எம்பிராற்கு ஏற்றதாகும்

பரிவினாற் பேரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை

மருவிநான் வாழ்த்தி உய்யும் வகையது நினைக்கின்றேனே." (அப்பர்)


"ஏகன் அநேகன்என விளங்கி எங்குந் தமதுதிருவுருவாம்

யோக ஞானநிஷ்கள உருஅருவன் சகல வடிவமதாய்

பாகம் பிரியாதருள் பெற்ற பாவைமகிழப் பெருவேளூர்

நாகமதந்மேற் பிரியா நாதன் திருத்தாள் வணங்குவாம்." (தலபுராணம்)


"- உருக்க

வருவேளூர்மாவெல்லா மாவேறுஞ்சோலைப்

வெருவேளூர் இன்பப் பெருக்கே" (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில்

மணக்கால் ஐயம்பேட்டை - அஞ்சல்

(வழி) திருவாரூர் - 610 104.

குடவாசல் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.


Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவிளமர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  தலையாலங்காடு
Next