Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருப்பள்ளியின் முக்கூடல்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருப்பள்ளியின் முக்கூடல்

திருப்பள்ளிமுக்கூடல்

குருவிராமேஸ்வரம்

மக்கள் வழக்கில் 'திருப்பள்ளிமுக்வடல்' என்று இன்று வழங்குகிறது.

பழைய சிவத்தலமஞ்சரிநூலில் இத்தலத்தின் பெயர் 'அரியான்பள்ளி' என்று குறிக்கப்பட்டுள்ளது. (அரிக்கரியான் பள்ளி என்றும் அரியான்பள்ளி என்றும் அக்கால மக்கள் வழங்கி வந்தனராதலின் அரியான்பள்ளி என்று அந்நூலி குறித்தனர்.) ஆனால் இன்று அப்பெயர் மாறி, 'திருப்பள்முக்கூடல்' என்றே வழங்குகிறது. இப்பெயர் சொல்லிக் கேட்டால் இன்றுள்ள மக்களுக்குத் தெரிகிறது. மேலும், இத்தல வரலாறு ஜடாயுவுடன் தொடர்புடையதாதலால் இத்தலத்தை இங்குள்ள மக்கள் "குருவிராமேஸ்வரம்" என்றும் கூறுகின்றனர்.

திருவாரூரிலிருந்து கடைத் தெரு வழியாகக் 'கேக்கரை' ரோடில் வந்து, ரயில்வே லெவல்கிராசிங்கைத் தாண்டி, 'கேக்கரை'யை அடைந்து, அங்கிருந்து அதே சாலையில் 1 A.e. சென்று சிறிய பாலத்தைத் தாண்டி, சிறிது தூரம் சென்று, அங்கு இரண்டாகப் பிரியும் பாதையில் இடப்பக்கமாகச் செல்லும் பாதையில் 1 A.e. சென்றால் ஊரையடையலாம். (கேக்கரை ரோடினை மக்கள் ராமகே ரோடு என்றும் கூறுகின்றனர்) . பேருந்து ஊர் வரை செல்லும். சரளைக்கல் பாதைதான் மிக அதிக அகலமான பேருந்தாக இருப்பினும் செல்வதற்குச் சிரமப்படும்.

ஊர்த் தொடக்கத்திலேயே கோயில் உள்ளது. மூர்க்கரிஷி பூஜித்த தலம், நகரத்தார் திருப்பணியுடன் கோயில் நன்கு பொலிவுடன் காட்சி தருகிறது - கிழக்கு நோக்கிய சந்நிதி. திருவாரூர்க் கோயிலோடு இணைந்தது.


இறைவன் - முக்கோணநாதர், திரிநேத்ரசுவாமி, முக்கூடல்நாதர்.

இறைவி - அஞ்சனாட்சி, மைம்மேவு கண்ணி.

தீர்த்தம் - முக்கூடல் தீர்த்தம், கோயில் எதிரில் உள்ளது.

(இத்தீர்த்தம் திரிவேணி சங்கமத்திற்கு ஒப்பாகச் சொல்லப்படுகிறது) .

(இறைவன் பெயர், சம்ஸ்கிருதப் பெயரை நோக்கத் தமிழில் 'முக்கண்நாதர்'

என்றிருக்க வேண்டும். ஆனால் பேச்சு வழக்கில் சிதைவுற்று தொடர்பே இல்லாமல் 'முக்கோணநாதர்' என்று வழங்குகிறது.

அப்பர் பாடல் பெற்றது.

இக்கோயில் தொடர்பாகச் சொல்லப்படும் வரலாறு-

"ஜடாயு இறைவனை நோக்கித் தவம் செய்து, தனக்கு இறுதி எப்போது என்று கேட்க, இறைவன் அவரைப் பார்த்து, "இராவணன் சீதையை எடுத்து வரும் நேரத்தில் c தடுப்பாய். அப்போது அவன் உன் சிறகுகளை வெட்ட c வீழ்ந்து இறப்பாய்" என்றாராம். அது கேட்ட ஜடாயு "பெருமானே!அப்படியானால் நான் காசி, கங்கை, இராமேஸ்வரம், சேது முதலிய தீர்த்தங்களில் மூழ்கித் தீர்த்தப் பலனை அடைய முடியாமற்போகுமே என் செய்வேன்" என் வேண்ட, இறைவன் முக்கூடல் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் மூழ்குமாறு பணிக்க அவரும் அவ்வாறே

மூழ்கிப் பலனைப் பெற்றாராம். இவ்வரலாற்றையட்டிதான் மக்கள் பேச்சு வழக்கில் இப்பகுதியை 'குருவி ராமேஸ்வரம்' என்று கூறுகின்றனர். இதனால் இத்தீர்த்தமும் திரிவேணி சங்கமத்திற்கு நிகராகவும், இதில் மூழ்குவோர்க்குப் பதினாறு மடங்கு (கங்கை, சேது) தீர்த்த விசேஷப் பலனைத் தருவதால் இத்தீர்த்தம் "ஷோடசசேது" என்றும் சொல்லப்படுகிறது."

கோயிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு விநாயகர், சுப்பிரமணியர் சுதை உருவங்கள் உள்ளன. வாயிலைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம் - உள் நுழைந்ததும் வலப்பால் சூரியன் சந்திரன் திருமேனிகள். தலப்பதிகக் கல்வெட்டுள்ளது.

உள்பிராகாரத்தில் நால்வர், விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. உள் மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி - தெற்கு நோக்கிய நின்ற திருக்கோலம்.

நேரே மூலவர் அழகாகத் தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்கள் முன்பாக உள்ளன. நாடொறும் இருகால வழிபாடே. குருக்கள் வீடு கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது.


"ஆராத இன்னமுதை அம்மமான் தன்னை

அயனொடும் மால் அறியாத ஆதியானை

தாராரும் மலர்க் கென்றைச் சடையான் தன்னைச்

சங்கரனைத் தன்னொப்பார் இல்லான் தன்னை

நீரானை காற்றானை தீயானானை

நீள் விசும்பாய் ஆழ்கடல்கள் ஏழும் சூழ்ந்த

பாரானை பள்ளியின் முக்கூடலானைப்

பயிலாதே பாழே நான் உழன்றவாறே." (அப்பர்)


-"பூவினிடை

இக்கூடன் மைந்த இனிக் கூடல் என்றுபள்ளி

முக்கூடல் மேவியமர் முன்னவனே." (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு முக்கோணநாதர் திருக்கோயில்

திருப்பள்ளி முக்கூடல்

கேக்கரை அஞ்சல் - 610 002 (வழி) திருவாரூர்
திருவாரூர் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is தேவூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  ஆரூர்ப்பரவையுண்மண்டளி
Next