நாகைக்காரோணம்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

நாகைக்காரோணம்

நாகப்பட்டினம்

சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை முதலிய பல ஊர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. தஞ்சை - நாகூர் இருப்புப் பாதையில் உள்ள இருப்புப்பாதை நிலையம். சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கிய நகரம். நாகப்பட்டினம் நாகூர் இரண்டும் ஒன்றையன்று அடுத்து உள்ளன. நாகர்கள் என்ற வகுப்பினர்கள் குடியேறி வாழ்ந்ததால் இப்பகுதி நாகப்பட்டினம் என்று பெயர் பெற்றது. (கடற்கரையை அடுத்துள்ள ஊர் - பட்டினம்) துறைமுகப்பட்டினம். உரோமானிய, சீனவாணிகம் பண்டைநாளில் இத்துறைமுகம் வாயிலாக நடந்து வந்தது. பிறநாட்டு வணிகர்கள் இத்தலத்தில் வந்து நிறைந்திருந்தனர் என்று தெரிகின்றது. நாகப்பட்டினம் என்பது மருவி 'நாகை' என்று வழங்கலாயிற்று. புண்டரீக முனிவரை இறைவன் தன் மேனியில் ஆரோகணம் செய்து கொண்ட பெருமை பெற்ற பதி.

சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. அகத்தியருக்குத் திருமணக் காட்சியருளியதும், அதிபத்தநாயனார் அவதரித்ததுமாகிய சிறப்பு கொண்ட தலம். ஆதிபுராணம், சிவராஜதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் என்பன இதற்குரிய வேறு பெயர்கள். ஆதிசேஷன் பூஜித்ததாக வரலாறு. ஊர் - நாகப்பட்டினம். கோயில் - காரோணம்.

இறைவன் - காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்.

இறைவி - நீலாயதாக்ஷி.

தலமரம் - மா.

தீர்த்தம் - 1) புண்டரீக தீர்த்தம் (கோயிலின் மேற்கில் உள்ளது.)

2) தேவ தீர்த்தம் (முக்தி மண்டபம் அருகில் உள்ளது.)

தியாகராஜா - சுந்தரவிடங்கர்.

நடனம் - தரங்கநடனம்.

மூவர் பாடல் பெற்றது.

ஊர் நடுவே கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. வாயில் நுழைந்ததும் சிறப்பு மூர்த்தியாகிய நாகாபரணப் பிள்ளையாரைத் தரிசிக்கலாம். பலிபீடம் நந்தி உள்ளன. சுதையாலான பெரிய நந்தி. ஐந்துநிலை கோபுரத்தைக் கடந்தால் ராஜதானி மண்டபம் - கவசமிட்ட கொடிமரம் பலிபீடம் நந்தி உள்ளன.

பிராகாரத்தில் அதிபத்த நாயனார், வல்லபகணபதி, அகோர வீரபத்திரர், ஆத்மலிங்கம், பிள்ளையார், பழனியாண்டவர், இடும்பன் சந்நிதிகள் உள்ளன. வலம்முடித்து ராஜதானி மண்டபம் சென்றால் விநாயகர், ஆறுமுகர் (வள்ளி தெய்வயானையுடன் மயில்மீதமர்ந்துள்ள பெரியமூர்த்தி) , காசி விசுவநாதர், பைரவர் சந்நிதிகளைத் தரிசிக்கலாம். இம்மண்டபத்தில் வலப்பால் நீலாயதாக்ஷி (கருந்தடங்கண்ணி) சந்நிதி உள்ளது - நின்ற திருக்கோலம்.

துவாரபாலகரைக் கடந்து ஒருபுறம் உள்ள விநாயகரையும் மறுபுறம் உள்ள அதிகார நந்தியையும் தொழுது உட்சென்றால், சூரியன், அறுபத்துமூவர், மாவடிப்பிள்ளையார், வெண்ணெய்ப் பிரான், அருணாசலேஸ்வரர், பைரவர், கஜலட்சுமி ஆகியோரைத் தொழலாம். நவக்கிரகங்களுள் சனீஸ்வரர் தனியே உள்ளார். நவக்கிரகங்கள் வரிசைக்கு மூன்றாக மூன்று வரிசைகளில் ஒரே திசையை நோக்கி - சுவாமியை நோக்கியவாறு உள்ளன.

நடராஜசபையைத் தொழுது உள்வலமுடித்துப் படிகளேறிச் சென்றால் மண்டபத்தில் வலப்பால் உற்சவமூர்த்தங்கள் 1) பிட்சாடனர் 2) நடராஜர் 3) சிவகாமி 4) காட்சிநாயகர் ஆகியவை வரிசையாக உள்ளன.

துவாரபாலகரைத் தொழுது வாயிலைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம் - நெற்றிப்பட்டத்துடன் அழகாகக் காட்சி தருகின்றார் - பெரிய பாணம் - காயாரோகணர். பின்னால் தனிமாடத்தில் இறைவன் இறைவி திருக்கோலமுள்ளது. மூலவருக்குப் பக்கத்தில் தியாகராஜா சந்நிதி. சுந்தரவிடங்கர் - பாராவாரதரங்க நடனம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரமன், துர்க்கை, அர்த்தநாரீசுவரர், பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன.

நாடொறும் ஆறுகால பூஜைகள் காமிக ஆகமப்படி நடைபெறுகின்றன. வைகாசி விசாகத்தில் விழா. நாகைக்காரோணத் தலபுராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பாடியுள்ளார்கள். அதிபத்த நாயனாருக்கு இறைவன் அருள்செய்த விழா ஆவணியில் நடக்கிறது, அந்நாயனார் வாழ்ந்த இடம் - செம்படவர்சேரி - தற்போது நம்பியாங்குப்பம் என்று வழங்குகிறது.

இத்தலத்தில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோயில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். முதலாம் இராஜஇராஜன் காலத்திய கல்வெட்டொன்று இக்கோயிலுக்கு உள்ளது. டச்சு கவர்னர் ஒருவர் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்த செய்தியைச் சானம் ஒன்றின் மூலம் அறிகின்றோம்.


"ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள்நல்கிச்

சேணினற்வர்க் கின்னஞ் சிந்தை செய வல்லான்

பேணி வழிபாடு பிரியா தெழுந் தொண்டர்

காணுங்கடல் நாகைக் காரோணத்தானே." (சம்பந்தர்)


"நிறைபுனல் அணிந்த சென்னி நீள்நிலா அரவஞ்சூடி

மறையலிபாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்

கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட

இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பமாமே." (அப்பர்)


"பத்தூர் புக்கிரந்துண்டு பலபதிகம் பாடிப்

பாவையரைக் AP பேசிப் படிறாடித்திரிவீர்

செத்தார்தம் எலும்பு அணிந்து சேஏறித்திரிவீர்

செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கொரு நாள் இரங்கீர்

முத்தாரம் இலங்கி மிளிர் மணி வயிரக்கோவை

அவை பூணத் தந்தருளி மெயக்கினிதா நாளும்

கத்தூரி கமழ்சாந்தும் பணித்தருள வேண்டும்

கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே." (சுந்தரர்)


'தடிகடற் புகுதல் போலச் சைவமாம் கடலிற் புக்கு

முடிவலை வீசல் போல முதிர்பத்தி வலையை iC

நெடியமீன் கவர்தல் போல நிராமய உமையோர் பாகத் (து)

அடிகளாம் மீனக் வர்ந்த அதிபத்தர்க் கன்பு செய்வாம்' (தலபுராணம்)


திருப்புகழ்

ஓலமிட்டு ரைத்தெழுந்த வேலைவட்ட மிட்டவிந்த

ஊர்முகிற்ற ருக்களன்றும் அவராரென்

றூமரைப்ர சித்தரென்றும் மூடரைச்ச மர்த்தரென்றும்

ஊனரைப்ர புக்களென்றும் அறியாமல்

கோலமுத்த மிழ்ப்ரபந்த மாலருக்கு ரைத்தனந்த

கோடியிச்சை செப்பிவம்பில் உழல்நாயேன்

கோபமற்று மத்துழன்ற மோகமற்று னைப்பணிந்து

கூடுதற்கு முத்தியென்று தருவாயே

வாலைதுர்க்கை சத்தியம்பி லோககத்தர் பித்தர்பங்கில்

மாதுபெற்றே டத்துகந்த சிறியோனே

வாரிபொடடெ ழக்ரவுஞ்சம் வீழநெட்ட யிற்றுரந்த

வாகை பொற்பு யப்ரசண்ட மயில்வீரா

ஞாலவட்ட முற்றவுண்டு நாகமெத்தை யிற்றுயின்ற

நாரணற்க ருட்சுரந்த மருகோனே

நாலுதிக்கும் வெற்றிகொண்ட சூரபத்ம னைக்களைந்த

நாகபட்டி னத்தமர்ந்த பெருமாளே.

க்ஷேத்திரக்கோவை பிள்ளைத் தமிழ்

தாணுமா லயனுடன் மயேசுரர் சதாசிவர்

சச்சிதா னந்தசாந்தர்

தந்தநவ சத்தியருள் போகாங் மூர்த்திகள்

தருமட்ட வித்தியேசுரர்

பேணுமெழு கோடிமா மந்திரே சுரரைந்தும்

பேதமா மாகேசுரர்

பேதமொன் றில்லாத நந்திமா காளர்சொல்

பிருங்கியுட னைங்கரத்தோன்

பூணிடபர் நீள்கௌரி தண்டியெண் திசைநாதர்

போற்றுந்த சாயுதங்கள்

பூமண்ட லத்திலுள தெய்வங்கள் வேதங்கள்

புகழ்கொண்ட தேவர்முனிவர்

காணவரு சிவராச தானியெனம் நாகைவரு

கந்தசுவா மிவருகவே

கைகண்ட அடியார்பணி மெய்கண்ட வேலவன்

கருணையங் கடல்வருகவே. -ஸ்ரீசிதம்பரமுனிவர்


-"தூத்தகைய

பாகைக்காரென்னும் பணிமொழியார் வாழ்த்தோவா

நாகைக் காரோண நயந்தோனே." (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்

நாகப்பட்டினம் - அஞ்சல்

நாகப்பட்டினம் வட்டம் - மாவட்டம். 611 001.


Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருச்சாத்தமங்கை
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  சிக்கல்
Next