Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருமருகல்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருமருகல்

திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள தலம். திருவாரூர் நன்னிலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன.

'மருகல்' என்பது ஒருவகை வாழை. இது 'கல்வாழை' என்றும் சொல்லப்படுகிறது. இதைத் தலமரமாகக் கொண்டதாதலின் இத்தலம் 'திருமருகல்' என்று பெயர் பெற்றது.

கோச்செங்கட்சோழன் கட்டிய மாடங்ககோயில்களள் (யானையேறாப் பெருங்கோயில்களுள்) இதுவும் ஒன்று. பாம்பு கடித்து இறந்த செட்டி மகனை, ஞானசம்பந்தர் 'சடையாய் எனுமால்' பதிகம் பாடி எழுப்பியருளிய தலம். இவ்வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்தில் திருஞானசம்பந்தர் வரலாற்றில் சேக்கிழார் பெருமான் மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார். இவ்வரலாற்றுச் சிற்பம் கதையில் இராஜ கோபுரத்தில் இடம் பெற்றுள்ளது.

இறைவன் - மாணிக்கவண்ணர், ரத்னகிரீஸ்வரர்.

இறைவி - வண்டுவார்குழலி, ஆமோதாளகநாயகி.

தலமரம் - (மருகல் என்னும் ஒருவகை) வாழை.

தீர்த்தம் - இலக்குமி தீர்த்தம் (அ) மாணிக்கதீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் உள்ளது) .

சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடியது.

இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் புதுப்பொலிவுடன் திகழ்கின்றது. எதிரில் திருக்குளம் நீராழி மண்டபத்துடன் உள்ளது. கரையில் முத்து விநாயகர் சந்நிதி.

வாயில் கடந்து உட்சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. இடப்பால் மேடையுடன் வன்னி மரம் உள்ளது. இம்மரத்தினடியில்தான் ஞானசம்பந்தர், விஷந்தீர்த்து எழுப்பிய செட்டி மகனுக்கும், செட்டிப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

படிகளேறி முன் மண்டபத்தையைடந்தால் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. தலப்பதிகக் கல்வெட்டு இடப்பாலுள்ளது. சனி பகாவன் சந்நிதி உள்ளது. மேலேறிச் சென்றால் நேரே சோமாஸ்கந்தர் சந்நிதி. பக்கத்தில் மாணிக்கவண்ணர் சந்நிதி உள்ளது. இருபுறமும் விநாயகரும், செட்ப் பிள்ளையும், பெண்ணும் உள்ளனர்.

மூலவர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு மூர்த்தி எனப்படுகிறது. கிழக்கு நோக்கியது. எடுப்பான தோற்றம் - சதுர ஆவுடையார். 'மடையார் குவளை மலரும் மருகல் உடைய' பெருமானை மனமாரத் தொழுதபாடி வணங்குகிறோம். உள்பிராகாரத்தில் அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ,பராசரலிங்கம் விநாயகர் சுப்பிரமணியர் மதலிய சந்நிதிகள் உள்ளன. தலமரம் - வாழை, வளர்கின்றது.

நடராஜ சபையின் வாயிலில் பதஞ்சலி, வியாக்ரபாதர் உருவங்கள் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. நவக்கிரக சந்நிதியும், பைரவர் சூரியன் திருவுருவங்களும், ஒரேபீடத்தில் அமைந்துள்ள செட்டி மகன், செட்டிப் பெண் மூலத்திருவுருவங்களம், பக்கத்தில் ஞானசம்பந்தர் மூலமேனியும் அடுத்தடுத்துள்ளன.

வெளிச்சுற்றில் சப்தமாதாக்கள், விநாயகர், சௌந்தரநாயகி, மருகலுடையார் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகக் கணபதியும், தட்சிணாமூர்த்தியும், லிங்கோற்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். அம்பாள் சந்நிதியில் குசகேது மன்னன் வரலாறும், ஞானசம்பந்தர் விடந்தீர்த்த வரலாறும் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. நாடொறும் ஐந்து கால பூஜைகள். நடைபெறுகின்றன.

சித்திரையில் பெருவிழா, இவ்விழாவில் ஆறாம் நாள் திருவிழா விடந்தீர்த்த ஐதீகமாகவும், ஏழாம் நாள் விழா செட்டிமகன், செட்டிப் பெண் திரக்கல்யாணமகாவும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் உள்ள தெற்கு வீதியின் கோடியில் விடந்தீர்த்த விநாயகர் கோயில் உள்ளது. பக்கத்தில் உள்ள மடமே வணிகன், செட்டிப்பெண், படுத்துறங்கிய இடம். இங்கு விஷம் தீர்ந்ததால் இங்குள்ள பிள்ளையார் 'விடந்தீர்த்த பிள்ளையார்' என்ற

பெயருடன் விளங்குகிறார். இதனால் இன்றும் அவ்வீதியில் பாம்பைக் காண்பது அரிது என்றும், பாம்பு கடிப்பது இல்லை, கடித்து இறப்பதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

விடந்தீர்த்த விநாயகரின் இருபுறமும் உள்ள விநாயகர்கள், சீராளன் (சிறுத்தொண்டரின் மகனார்) வழிபட்டவை என்று சொல்லப்படுகிறது. முன்பு மடமாக இருந்த இடத்தில் தற்போது அலுவலகம் உள்ளது. இப்பகுதிதான் சீராளம் படித்த இடம் என்றும், இதன்பின் உள்ள குளம், சீராளன் குளம் என்றும் அழைக்கப்படுகிறது.

(இத்தல வரலாற்றில் வரும் 'வைப்பூர்' என்பது காவிரிப்பூம்பட்டினத்தையடுத்துள்ள உரேயாகும் என்பர்) . அருகாமையில் உள்ள தலம் திருச்செங்காட்டங்குடி.


"சடையாய் எனுமால் சரண் c எனுமால்

விடையாய் எனுமால் வெருவா விழுமால்

மடையார் குவளை மலரும் மருகல்

உடையாய் தகுமோ இவள் உள்மெலிவே." (சம்பந்தர்)


"பெருகலாந்தவம் பேதமை தீரலாம்

திருகலாகிய சிந்தை திருத்தலாம்

பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்

மருகலானடி வாழ்த்தி வணங்கவே." (அப்பர்)


-"ஏச்சகல

விண்மருவினோனை விடநீக்க நல்லருள்செய்

வண்மருகன் மாணிக்க வண்ணனே." (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்

திருமருகல் - அஞ்சல் - 609 702

நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருச்செங்காட்டங்குடி
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருச்சாத்தமங்கை
Next