Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருவிற்குடி

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருவிற்குடி

(1) மயிலாடுதுறை - திருவாரூர் பேருந்துச் சாலையில், வெட்டாறு தாண்டி, கங்களாஞ்சேரிக்குப் பிரியும் வலப்புறப் பாதையில் திரும்பி, நாகூர் - நாகப்பட்டினம் சாலையில் சென்று, விற்குடி புகைவண்டி, நிலையத்தை (ரயில்வே கேட்டை) தாண்டி, விற்குடியை அடைந்து, 'விற்குடி வீரட்டேசம்' என்னும் பெயர்ப் பலகை காட்டும் பாதையில் இடப்புறமாகத் திரும்பி 2 A.e. சென்று, இடப்புறமாகப் பிரியும், ('வலப்பாறு' பாலத்தைத் கடந்து) சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.

(2) நாகூர், நாகப்பட்டினத்திலிருந்து காரைக்கால் வழியாகத் திருவாரூருக்குச் செல்லும் பேருந்தில் வந்து, விற்குடியில் கூட்ரோடில் இறங்கி 1. A.e. சென்றும் கோயிலை அடையலாம். கோயில்வரை பஸ், கார் செல்லும். ஊரின் தென்புறம் விளப்பாறும் (ரக்த நதி) வடபுறம் பில்லாலி ஆறும் பாய்கின்றன.

அட்ட வீரட்டத்தலங்களுள் ஒன்று. சலந்தரனை சம்ஹரித்த தலம். சலந்தரனின் மனைவியான பிருந்தையை திருமால் துளசியாக ஏற்ற தலம். நகரத்தார் திருப்பணி பெற்று, கோயில் அழகாகவுள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதி. கோயிலுள் நுழையும்போது மூலவர் சந்நதி நேரே தெரிகின்றது.

நல்ல கட்டமைப்புள்ள கற்கோயில்.

இறைவன் - வீரட்டானேஸ்வரர்.

இறைவி - ஏலவார்குழலி, பரிமள நாயகி.

தலமரம் - துளசி.

தீர்த்தம் - 1) சக்கரதீர்த்தம் (கோயிலின் முன்னால் உள்ளது) .

- 2) சங்குதீர்த்தம் (கோயிலின் பின்புறம் உள்ளது) .

சம்பந்தர் பாடல் பெற்றது.

ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. நல்லபடித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம். தீர்த்தக்கரையில் விநாயகர் கோயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலப்புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச்சிற்பம் அழகாகவுள்ளது.

வெளிப்பிராகாரத்தில் பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள்பிராகாரத்தில் வலமாக வரும்போது மகாலட்சுமி, வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் பள்ளியறை, பைரவர், சனிபகவான், தனிக் கோயில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்நிதி, ஞானதீர்த்தமென்னும் கிணறு, பிடாரி முதலிய சந்நிதிகள் உள்ளன. சலந்தரனைச் சம்ஹரித்தமூர்த்தி - 'ஜலந்த்ரவதமூர்த்தி - தலச்சிறப்பு மூர்த்தி (உற்சவத்திருமேனி) தரிசித்து மகிழ வேண்டிய ஒன்று. வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். ஏனையகரங்களில் மான்மழு ஏந்தி, ஒருகை முத்திரை தாங்கியுள்ளது. அழகான ஐம்பொன் திருமேனி - வலமாக வந்து நேரே சென்றால் மூலவர் சந்நிதி.

முன்னால் இடப்புறம் அம்பாள் சந்நிதி. தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் அமைந்த நான்கு திருக்கரங்கள். எதிரில் நந்தி உள்ளது. அம்பாள் சந்நிதியின் எதிரில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரு ராசிகளம் உரிய கட்டமைப்பில் அமைக்கப்ட்டுள்ளன. அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம், ஒரு பெண் தாங்குவது போன்ற அமைப்பில் உள்ளது மண்டபத்தின் இடப்பால் நடராஜ சபை. எதிரில் (தெற்கு) வாயிலும் சாளரமும் உள்ளன. பக்கத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

துவார பாலகரைத் தொழுது, தூவர கணபதி, சுப்பிரமணியரை வணங்கியுட் சென்றால் மூலவர் தரிசனம். மூலவர் - சுயம்பு. சதுர ஆவுடையார், மூர்த்தியின் பாணம் உருண்டையாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக, பிரம்மா, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் ஆகியோர் உளர் .சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

கோயிலின் கீழ்ப்பால் மயாளேஸ்வரர் கோயில் உள்ளது. மக்கள் "மெயஞ்ஞானேஸ்வரர் கோயில்" என்றழைக்கின்றனர்.

"வடிகொள் மேனியர் வானமாமதியினர் நதியினர் மதுவார்ந்த

கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினருடை புலியதளார்ப்பர்

விடையதேறும் எம்மான் அமர்ந்தினிதுறை விற்குடி வீரட்டம்

அடியராகி நின்றேத்தி வல்லார்தமை அருவினை அடையாவே."

(சம்பந்தர்)

"திருவும் உரைமகளும் நிறைசெம்பொன் மணிமாடம்

மருவும்மொரு திருவிற்குடி வளமுற்றிடு தளியின்

வருவாரருள் பெறவே தரவய வீரட்டநாதன்

இருதாள் மலரெழில் நாள் மலர் இட்டுப் பணிவோமே." (தனிச்செய்யுள்)


"சலமுடைய சலந்தரன்றன் உடல்தடிந்த நல்லாழி

நலமுடைய நாரணற்கு அன்று அருளியவாறு என்னேடீ

நலமுடைய நராணன்தன் நயனம் இடந்து அரனடிக்கீழ்

அலராக இட வாழியருளினன்காண் சாழலோ." (திருவாசகம்)


-"பண்புடனே

எற்குடியானங்கொண்டிருக்க மகிழ்ந்தளித்த

விற்குடியின் வீரட்டமேயவனே." (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. வீரட்டானேசுவரர் திருக்கோயில்

திருவிற்குடி - அஞ்சல் 610101

(வழி) கங்களாஞ்சேரி

நாகப்பட்டினம் வட்டம் - மாவட்டம்.


Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருப்பனையூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it