அம்பர்பெருந்திருக்கோயில்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

அம்பர்பெருந்திருக்கோயில்

அம்பர், அம்பல்

தற்போது மக்கள் வழக்கில், அம்பர், அம்பல் என்று வழங்குகிறது. நெடுஞ்சாலைத் துறையினரின் ஊர்ப்பலகையில் "அம்பல்" என்றே எழுதப்பட்டுள்ளது. அம்பர் மாகாளத்திலிருந்து அதே சாலையில் மேலும் 1 A.e. சென்றால் சாலையோரத்தில் உள்ள இக்கோயிலையடையலாம். கோயில் வரை பேருந்து செல்லும்.

கோச்செங்கட்சோழனின் கடைசி திருப்பணியாகச் சொல்லப்படும் இஃது மாடக்கோயிலாகும். பிரமன் வழிபட்ட தலம். சோமாசிமாறநாயனார் வசித்தபதி.

இறைவன் - பிரமபுரீஸ்வரர்.

இறைவி - சுகந்த குந்தளாம்பிகை, பூங்குழலம்மை.

தலமரம் - புன்னை.

தீர்த்தம் - பிரமதீர்த்தம்.

சம்பந்தர் பாடல் பெற்றது.

ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது - பழமையானது. உள்ளே சென்றால் விசாலமான இடைவெளி, சுதையாலான பெரிய நந்தி உள்ளது. இடப் பக்கத்தில் உள்ள கிணறு "அன்னமாம் பொய்கை" என்று வழங்குகிறது. பக்கத்தில் சிவலிங்க மூர்த்தம் உள்ளது. பிரமன் இக்கிணற்றுத் தீர்த்தத்தில் நீராடி, பக்கத்தில் உள்ள சிவலிங்கமூர்த்தியை வழிபட்டு அன்ன வடிவம் பெற்ற சாபம் நீங்கப்பெற்றார் என்பது வரலாறு.

படிக்காசு விநாயகர் சந்நிதியில் அடுத்தடுத்து மூன்று சிறிய விநாயக மூர்த்தங்கள் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, ஜம்புகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. நின்றதிருமேனி. சந்நிதிக்கு வெளியில் இருபுறமும் ஆடிப்பூர அம்மன் சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன. வலம் முடித்துப் படிகளேறி மேலே சென்றால் சோமாஸ்கந்தர் சந்நிதியும் மறுபுறம் விநாயகர், கோச்செங்கட்சோழன், சரஸ்வதி, ஞானசம்பந்தர், அப்பர் ஆகிய மூலத்திருமேனிகளும் உள்ளன. துவாரபாலகர்களையும் விநாயகரையும் வணங்கிச் சென்று சிறியவாயில் வழியாக உள்ளிருக்குமூ மூலவரைத் தரிசிக்கலாம். மூலவரின் பின்னால் சோமாஸ்கந்தர் காட்சியளிக்கின்றார்.

வலப்பால் நடராசசபை. இக்கோயிலில் அம்பலவாணர் மூர்த்தங்கள் மூன்று உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர்.

உற்சவமூர்த்தங்களுள் (1) பிரம்மாவுக்கு காட்சிதந்த சுவாமி, நந்தியுடன் நின்றிருக்கும் பெரிய மூர்த்தம் 2) பிரம்மா 3) நால்வர் ஆகியவை தரிசிக்கத்தக்கன.

மாசிமக நாளில் திருவிழா நடைபெறுகிறது. இத்தலத்திற்கு மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் தலபுராணம் பாடியுள்ளார்.


"சுங்கணி குழையினர் சாமம் பாடுவார்

வெங்கனல் கனல்தர வீசியாடுவர்

அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்

செங்கணலிறை செய்த கோயில் சேர்வரே." (சம்பந்தர்)

(செங்கணலிறை - கோச்செங்கட்சோழன்)

-கூட்டாக

"கருவம்பர் தம்மைக் கலவாத மேன்மைத்

திருவம்பர் ஞானத் திரட்டே". (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில்

அம்பல் - அஞ்சல் - (வழி) பூந்தோட்டம் - S.O.

நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம். 609 503































 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is கோட்டாறு
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  அம்பர்மாகாளம்
Next