Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

வேட்டக்குடி

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

வேட்டக்குடி

காரைக்காலுக்குப் பக்கத்தில் உள்ளது. தரங்கம்பாடி - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில், புதுவை மாநில எல்லையில் நுழைந்து 'பூவம்' கிராமத்தைத் தாண்டி, 'வரிச்சுக்குடி' என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து பிரியும் கிளைப்பாதையில் 2 A.e. சென்றால் இத்திருக்கோயிலை அடையலாம். வரிச்சுக்குடியில், இக்கிளைப்பாதை பிரியும் இடத்தைக் காட்டும் - திருவேட்டக்குடி என்னும் பெயர் தாங்கிய - கைகாட்டி உள்ளது. சாலை ஓரத்தில கோயில் உள்ளது. பேருந்தில் கோயில் வாயில்வரை செல்லலாம். அருச்சுனன் வந்து தவஞ்செய்ய, இறைவன் வேட வடிவத்தில் வெளிப்பட்டு அருள் செய்ததாகப் புராண வரலாறு சொல்கிறது. கோயில் அமைந்துள்ள பகுதி 'கோயில் மேடு' என்றழைக்கப்படுகிறது.

இறைவன் - சுந்தரேஸ்வரர், திருமேனியழகர்.

இறைவி - சௌந்தரநாயகி, சாந்தநாயகி.

தீர்த்தம் - தேவதீர்த்தம், கோயிலுக்கு எதிரில் உள்ளது.

தலமரம் - புன்னை, தற்போது இல்லை.

சம்பந்தர் பாடல் பெற்ற பதி.

ஊர் நடுவே கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தில் சிற்பங்கள் அதிகமாக உள்ளன. உள்ள விசாலமான இடம். செப்புக் கவசமிட்ட கொடிக்கம்பம் - முன்னால் விநாயகர்

சந்நிதி. பிராகார வலம் வரும் போது- சித்தி விநாயகர் சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோயிலும் தனியே உள்ளது. பக்கத்தில் புன்னை வனநாதர் சந்நிதி உள்ளது. கஜலட்சுமி சந்நிதி, சாஸ்தா சந்நிதிகளும் நால்வர், பைரவர், சூரியசந்திரர்களும் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணா மூர்த்தியும், துர்க்கையும் உள்ளனர். படிகளேறிச் சென்று மூலவரைத் தரிசிக்கலாம். மூலவர் - சிவலிங்கத் திருமேனி. கிழக்கு நோக்கி சந்நிதி.

சற்று உயரமான மூர்த்தி. தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றது - அழகான மூர்த்தி. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. வேடனாக வந்த தலமூர்த்தி, வேடுவச்சியாக வந்த அம்பாள் ஆகிய (வேடரூபர், வேடநாயகி) திருமேனிகள் சிறப்பானைவை. வேடரூபர் கையில் வில்லேந்திக் கம்பீரமாகக் காட்சி தருகிறார். சோமாஸ்கந்தர், பிரதோஷநாயகர் திருமேனிகளும் நன்றாக உள்ளன. கோயில் நல்ல பராமரிப்பில் உள்ளது. நான்கு கால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் மாசி மகத்தில் பெருவிழா நடைபெறுகிறது. மாசிமகத்தன்று திருமேனியழரான சுவாமி வேட மூர்த்தியாகக் காட்சி தந்து கடல் நீராடுகிறார். இது 'கடலாடுவிழா' என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் வந்து அவதரித்தாகப் புராண வரலாறு கூறுவதால் இக்'கடலோடு விழாவை கடலோர ஊர்களில் (அக்கம்பேட்டை, மண்டபத்தூர், காளிக்குப்பம்) வாழும் மீனவர்கள் ஏற்று நடத்துகிறார்கள். மாசிமகத்தில் இக்கோயில் தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.

"தோத்திரமா மணலிலிங்கம் தொடங்கி ஆனிரையின் பால்

பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சதேதி பரிந்தருளி

ஆத்தமென மறை நால்வர்க் கறம்புரி நூலன்றுரைத்த

தீர்த்த மல்கு சடையோரும் திருவேட்டக் குடியாரே." (சம்பந்தர்)

"உருமேனி பலவகையென்றுரைத் திடினு மறிவுறலால்

கருமேனி யுடையரென்றுங் கனகம்பால் செம்பவள

தருமேனி யுடையரென்றுஞ் சாற்றருள் கூருருவருவாந்

திருமேனி யழகர்தாள் சிந்தனைசெய் தேத்துவோம்." (தலபுராணம்)

"சங்குவளைக் கரத்தாளச் சராசரமெலாமீன்ற தாயை நீரில்

தங்குவளைச் செவியாளைச் சைவல மாங் சூழலாளைத் தாழ்வில்லாளைப்

பொங்குவளைப் புயத்தாளைப் பொருப்பரையன் அளித்தருளும் புதல்வி தன்னை

அங்குவளை விழியானை அரனிடத்தில் அமர்வாளை அன்பிற்றாழ்வாம்."

(தலபுராணம்)

-வற்கடத்தும்

வாட்டக்குடி சற்றும் வாய்ப்பதே யில்லையெனும்

வேட்டக்குடிமேவு மேலவனே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. சுந்தரேசுவரர் திருக்கோயில்

திருவேட்டக்குடி - வரிச்சிகுடி அஞ்சல்

(வழி) கோட்டுச்சேர் 609 610

காரைக்கால் வட்டம் - புதுவை மாநிலம். 


 


 

 
 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கடவூர் மயானம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருத்தெளிச்சேரி
Next