திருச்செம்பொன்பள்ளி

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருச்செம்பொன்பள்ளி (
செம்பனார் கோயில் )

மக்கள் செம்பனார் கோயில் என்று வழங்குகின்றனர்

1) மயிலாடுதுறையிலிருந்து பொறையாறு செல்லும் பேருந்துப் பாதையில் உள்ளது.

2) மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது. 10 A.e. தொலைவு.


இறைவன் - சொர்ணபுரீஸ்வரர், தேவப்பிரியர், சுவர்ணலட்சுமீசர், செம்பொன்பள்ளியார்.

இறைவி - மருவார்குழலி, புஷ்பாளகி, தாக்ஷ£யணி, சுகுந்தகுந்தளாம்பிகை, சுகந்தவனநாயகி.

தீர்த்தம் - சூரிய தீர்த்தம், காவிரி.

தலமரம் - வன்னி, வில்வம் (சுவாமி அம்பாள் சந்நிதிகளிடையே வன்னியும் வடக்குச் சுற்றில் வில்வ மரமும் உள்ளன.)

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

வசிட்டர், அகத்தியர், பிரமன் இந்திரன் குபேரன் வழிபட்ட தலம்.

கோயில் அழகுறச் சோலை நடுவே அமைந்துள்ளது. நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தேவஸ்தான வளைவைப் பின்பற்றிச் சென்றால் கோயிலை அடையலாம். கிழக்கு நோக்கிய ஆலயம். கோயிலுக்குப் பக்கத்தில் தீர்த்தம் உளது.

இத்தலம் தாக்ஷ£யணிக்கு அருள்புரிநத்தும், வீரபத்திரர் தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.

இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்றும் பெயருண்டு. இந்திரன் நீராடி வழிபட்டு விருத்திராசுரனைக் கொல்ல வச்சிராயுதம் பெற்ற தலம். இதனால் இந்திரபுரி என்றும் பெயர். கந்தபுரி என்ற பெயருமுள்ளது.

கிழக்கு நோக்கிய திருவாயில். கோச்செங்கட்சோழன் திருப்பணி. கீழே பதினாறும் இதழ்களையுடைய தாமரை போன்ற ஆவுடையில் மூலவர் - இலிங்கத் திருமேனி - சுயம்பு மூர்த்தமாகக் காட்சி தருகிறார். வட்டவடிவமான ஆவுடையார் உள்ள திருமேனி திருமாலாலும், சதுர வடிவுடைய ஆவுடையாருள்ள திருமேனி பிரமனாலும் பூசிக்கப்பட்டதாகும்.

அர்த்த மண்டபத்தில் துவாரபாலகர்கள் உளர். ஸ்தபன மண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராஜர், சந்திரசேகர் முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன. இங்குள்ள பிடசாடனத் திருக்கோலம் மிகப்பழைமையானது. மகாமண்டபத்தில் விநாயகர், சூரிய சந்திர லிங்கங்கள், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. தெற்குச்சுவரில் துறவி ஒருவரோடும் அமைச்சர் ஒருவரோடும் நின்று வழிபடும் அரசனின் உருவம் உள்ளது.

தேவி சந்நிதி தனியே உள்ளது. தெற்கு நோக்கிய சந்நிதி. இத்தலத்திற்கு தென்மேற்கேயுள்ள பறியலூரில் தந்தையான தக்கன் செய்த வேள்விக்குச் செல்லும் கோலத்தில் மேற்கு நோக்கியிருப்பதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது. அம்பிகைக்கு ஆலயத்தின் தென்மேற்கில் சப்தகன்னிகையர் கோயில் உள்ளது. மேற்கில் தலவிநாயகர் - பிரகாசப் பிள்ளையார் உள்ளார். மற்றும் வனதுர்க்கை, விசுவநாதர், சீனிவாசப்பெருமாள், சிபிகாட்சிநாதர் எனப்படும் மான்மழுவேந்திய சிவபெருமான், உருத்திராக்கமாலையும் சக்தி ஆயுதம் தரித்த நான்கு கைகளையுடைய பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி, ஜோஷ்டாதேவி, வீரபத்ரர், சூரியர், பைரவர், முதலிய மூர்த்தங்களும் ஆலயத்தில் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்கள். இந்திர கணபதி, தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், துர்க்கை. சித்திரை மாதம் 7ஆம் நாள் முதல்18ஆம் நாள் முடிய சூரிய ஒளி சுவாமிமீது படுவதாகச்சொல்லப்படுகிறது. இந்நாள்களில் விடியற்காலையில் சூரிய வழிபாடு நடைபெறுகிறது.

இக்கோயிலில் சோழர் காலத்திய ஆறுகல்வெட்டுக்கள் உள்ளன. இவை மூன்றாம் குலோத்துங்க சோழன், ராஜாதிராஜ சோழ தேவர், தஞ்சை சரபோஜி மன்னர் காலத்தியவை.

நவக்கிரக தோஷத்திற்கு இத்தல வழிபாடு சிறந்த பரிகாரமாக இன்றும் சொல்லப்படுகிறது. இக்கோயிலின் அமைப்பு முறை ஜேஷ்டாதேவியின் பிரதிஷ்டை முதலியவைகளைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது இக்கோயில் A.H. 879-907 வைர அரசாண்ட முதலாம் ஆதித்த சோழன் செய்த திருப்பணியாகக் கருத இடமுண்டு என்னும் செய்தி இவ் ஆலயத் தலவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழா திடடத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. 24.6.1999ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

இத்தலத்தில் துர்க்கை வழிபாடு விசேஷமானது.

இவ்வூரில் 8.2.1965ல் தோற்றுவிக்கப்பட்ட 'மணிவாசக மன்றம்' மிகச் சிறப்பான தெய்விகப் பணிகளைச் செய்து வருகிறது. கடந்த 35 ஆண்டுகளாக வெள்ளிக்கிழமை தோறும் வார வழிபாடு மன்றம் வாயிலாக நடைபெறுகிறது. நால்வர் பெருமக்களின் குருபூஜைகளை நடத்துதல், மணிவாசகர் குருபூஜையைச் சிறப்பாக ஆண்டு விழாவாகக் கொண்டாடுதல், பள்ளிக் குழந்தைகட்குப் பரிசளித்தல், தல வரலாறு பதிகங்கள் வெளியிடுதல், தலயாத்திரை மேற்கொள்ளல் முதலிய பணிகளை மன்றம் சிறப்பாகச் செய்து வருகிறது. இம் மன்றத்தின் பெரும் முயற்சியால் செம்பொன்பள்ளிக் குடமுழுக்கு 24.6.1999ல் சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பிரதோஷ வழிபாடுகளும் நன்கு நடைபெற்றுவருகின்றன. இம்மன்றத்தின் செயலர் கவிக்குரிசில் "தென்னவன்" என்று புகழப்படும் திரு. C. தட்சிணாமூர்த்தி அவர்கள் "மருவார் குழலி விருத்த மணி மாலை" பாடி அதை மன்றம் 1978ல் வெளியிட்டுள்ளது.

'செம்பனார் கோயில் மணி வாசக மன்றம்' அப்பகுதியில் மிகச் சிறந்த பணிகளைச் செய்து வருகிறது. மன்ற அன்பர்களின் மேலான ஒத்துழைப்பு பாராட்டப்பட்ட வேண்டியதாகும். பேராசிரியர் திரு. தா.மா.வெள்ளைவாரணம் அவர்கள் சிறப்புத் தலைவராக இருந்து மணிவாசக மன்றத்தை நெறிப்படுத்தி, அனைவரும் போற்றத்தக்க வகையில் நடத்திச் செல்கின்றார்.

"மருவார் குழலி மாதொர் பாகமாய்த்

திருவார் செம்பொன் பள்ளி மேவிய

கருவார் கண்டத் தீசன் கழல்களை

மருவா தவர்மேல் மன்னும் பாவமே". (சம்பந்தர்)

"தந்தையும் தாயுமாகித் தானவன் ஞானமூர்த்தி

முந்திய தேவர்கூடி முறைமுறை இருக்குச் சொல்லி

எந்தை c சரணம் என்றங் (கு) இமையவர் பரவிஏத்தச்

சிந்தையுள் சிவமதானார் திருச் செம்பொன் பள்ளியாரே". (அப்பர்)

க்ஷேத்திரக்கோவை பிள்ளைத்தமிழ்

தேசுமிகு தேவர்களில் ஒருவன் c இந்த்ராதி

தேரெல்லாம் கூடியே

சிவபரப் பிரமம் இவனே என்று பூசித்த

செம் பொற் பதாம் புயத்தோன்

வாச மரைரோனைமுன் குட்டியே சிறைவைத்து

மண்டு மண்டம் படைத்தோன்

மாலும் அயனும் தேடி அடிமுடிகள் காணாத

வளர் பரஞ் சோதி மைந்தன்

தாசரடியார் தாசன் என இருந்திட முனைத்

தன் பெருமை யறியாமலே

தனை ஒத்த பேரெனப் பிள்ளை விளையாட்டினைத்

தருமிளம் பருவத்தினால்

ஆசையோடழைத் தனன் எங்கள் குமரேசனுடன்

அம்புலீ ஆடவாவே

அழகு செம்பொன் பள்ளி ஆறானனத்துடன்

அம்புலீ ஆடவாவே. (சிதம்பர முனிவர்)

-நெறிகொண்டே

"அன்பள்ளி யோங்கும் அறிவுடையோர் வாழ்த்துஞ் செம்

பொன்பள்ளி வாழ் ஞான போதமே". (அருட்பா)

மருவார் குழலி விருத்த மணிமாலை

"வினைகள் தீரவும் வியன் புகழ் சேரவும்

வேண்டிய யாவும் விரைவில் கூடவும்

மனைவி மக்களும் வீடும் நாடும்

மங்கலம் பொங்கவும் மதிப்பில் உயரவும்

தினமுனை நினைந்துந் தொழுவார் எவர்க்குந்

திருவைத்தந்தே வளத்தை அருள்வாய்

நனவிலும் கனவிலும் தோன்றும் என்றன்

ஞானாம்பிகையே குழலி அம்மே."

(கவிக்குரிசில் - "தென்னவன்")

(செயலர் - மணிவாசக மன்றம் - செம்பனார் கோயில்.)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்

செம்பனார் கோயில் - அஞ்சல் - 609 309

தரங்கம்பாடி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.






















 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருப்பறியலூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருநனிபள்ளி
Next