குடமூக்கு

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

குடமூக்கு ( கும்பகோணம்)

மயிலாடுதுறை - தஞ்சைக்கு இடையிலுள்ள பெரிய தலம். சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சிதம்பரம் முதலிய பல ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் நிரம்பவுள்ளன. இத்தலம், சென்னை - திருச்சி மெயின்லயனில் உள்ள இருப்புப்பாதை நிலையம்.

"கோயில் பெருத்தது கும்பகோணம்" என்னும் முதுமொழிக்கேற்ப எண்ணற்ற கோயில்களையுடையது. சைவம் வைணவம் ஆகிய இருசமயப்புகழும் கொண்டது.

இலக்கியத்தில் குடமூக்கு என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது. உலகப்புகழ் பெற்ற மகாமக உற்சவம்

நடைபெறும் தலமும் மகாமகதீர்த்தம் உள்ளதும் இத்தலமே. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் இவ்வுற்சவத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வந்து மகாமகக் குளத்தில் நீராடுவர், இக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவில், நான்கு கரைகளிலும் 16 சந்நிதிகளையுடையதாய், நடுவில் 9 கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது.

பேரூழீக்காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் அந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது. இத்தலத்தில் பதினான்கு கோயில்களும் பதினான்கு தீர்த்தங்களும் உள்ளன. குருசிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது.

மகாமக உற்சவநாளில் கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் (கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி,) - நவகன்னியர்களாக வந்து நீராடியதால் 'கன்னியர் தீர்த்தம்' என்றும் பெயர் பெற்றது.

"பூமருவும் கங்கைமுதல் புனிதமாம் பெருந்தீர்த்தம்

மாமகந்தான் ஆடுதற்கு வந்து வழிபடுங்கோயில் (பெரியபுராணம்)

கும்பகோணத்தில் குடமூக்கு - கும்பேசுவரர் கோயில்.

குடந்தைகீழ்க் கோட்டம் - நாகேசுவர சுவாமி கோயில்.

குடந்தைக் காரோணம் - சோமேசர் கோயில் என வழங்கப்படுகிறது. மூர்க்கநாயனார் தொண்டு செய்து வாழ்ந்த தலம். ஏமரிஷி பூசித்தபதி.

தலவரலாற்றின்படி -

1) அமுதகும்பம் வைத்திருந்த இடம் - கும்பேசம்.

2) அமுதகும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - சோமேசம்.

3) அமுதகும்பத்தில் சார்த்தியிருந்த வில்வம் இடம் - நாகேசம்.

4) அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் - அபிமுகேசம்.

5) பெருமான் அமுதகுடத்தை வில்லால் சிதைத்த இடம் - பாணபுரேசம் (பாணாதுறை)

6) கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த பூணூல் சிதறிய இடம் - கௌதமீசம். என வழங்கப்படுகின்றன.

மகாமகத் தீர்த்தக் கரையில் சுற்றிலும் பிரமதீர்த்தேசம், முகுந்தேசம், தனேசம், ரிசபேசம், பாணேசம், கோனேசம், பக்தேசம், பைரவேசம், அகத்தீசம், வியாகேசம், கங்காதரேசம், பிரமேசம், முத்ததீர்த்தேசம் முதலிய ஆலயங்கள் உள்ளன. இந்நகரிலுள்ள 14 தீர்த்தங்களில் தடாகங்கள் 7, கிணறுகள் 3, காவிரித்துறைகள் 4 ஆகும். மகாமகக்குளத் திருப்பணியும் அதைச்சுற்றிப் பதினாறு சிவாலய விமானங்களையும் அமைத்த மகான், அச்சுதப்ப நாயக்க மன்னனி ¢ அமைச்சரான கோவிந்த தீக்ஷிதர் ஆவார். இவர் தன் துலாபாரத்தங்கத்தைக்கொண்டே

இத்திருப்பணிகளையெல்லாம் செய்திருக்கிறார். கும்பேசுவரர் கோயிலில் இவருடைய வடிவம் உள்ளது.

சுமார் 300 வருஷங்களுக்கு முன்பு இவரால் நிறுவப்பட்டதே ராஜா வேத பாடசாலை. இவருக்கு அந்த காலத்தில் ஐயன் என்று பெயர். கும்பகோணத்திலுள்ள ஐயன்தெரு இவர் பெயரால் ஏற்பட்டது. தஞ்சாவூரிலுள்ள ஐயன் தெரு, ஐயங்குளம், பசுபதி கோவிலுக்கு அடுத்த ஐயம் பேட்டை, திருவாரூக்கு மேற்கிலுள்ள மணக்கால் ஐயம்பேட்டை போன்ற இடங்களெல்லாம் இவருடைய பெயரால் அமைந்தவை. கல்விச்சாலையைத் தவிர இவர் தர்ம நூல்களில் சொல்லப்பட்ட எல்லா மகாதானங்களையும் செய்தார். மகாதானபுரம், திருவிடைமருதூரிலும், மாயூரம், திருவெண்காடு முதலிய ஊர்களிலுமுள்ள மகாதானத் தெருக்கள், திருவையாறு, தஞ்சை வெண்ணாற்றங்கரை, திருவலஞ்சுழி, கும்பகோணம், திருவிடைமருதூர், மாயூரம் முதலிய இடங்களில் நதி தீரத்தில் ஜோடியான விமானங்களையுடைய புஷ்ப மண்டபங்களும் இவர் கைங்கர்யமே. கும்பகோணத்தில் ராஜா பாடசாலைக்கு அடுத்து யாக சாலைத்தெரு இவருடைய வேள்விச் சாலை. திருவிடைமருதூர் புத்யோத்ஸவ வெள்ளி ரதமும், வெள்ளி ரிஷப வாகனமும் இவருடைய திருப்பணி. அநேகமாகச் சோழர்களுக்குப்பின் ஆலயத் திருப்பணிகளை எல்லாம் திருத்தியமைத்தவர் இந்த மகான். கும்பகோண க்ஷேத்திர மாகாத்மியத்தின் முடிவில் ஒரு சிறு சுலோகம் தென்படுகிறது.

அதாவது -

கோவிந்ததீக்ஷிதோ நாம மஹாநாஸீத் கலௌ யுகே

தேந ஷோடசலிங்காநி ஸ்தாபிதாதி ஸரோவரே

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் திருமடம் உள்ள இத்தலத்தில் பல கோயில்கள் இருப்பினும் பிரதானமானது அருள்மிகு. கும்பேசுவரர் கோயிலேயாம். இதவே தலைமைக் கோயில்.

இறைவன் - கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர்.

இறைவி - மங்களாம்பிகை.

தலமரம் - வன்னி.

தீர்த்தம் - ஆதிவிநாயகர்.

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

கிழக்கு நோக்கிய சந்நிதி. பிரதானகோபுரம் ஒன்பது நிலைகளையுடையது. தெற்கு நீங்கலாக ஏனைய மூன்று திசைகளிலும் மூன்று கோபுரங்கள். கோயிலுக்கு மூன்று பிராகாரங்கள். முற்றவெளி விநாயகரையும் தண்டபாணியையும் தொழுது வாயிலைக் கடந்தால் வலப்பால் லட்சுமி நாராயணப் பெருமாள் தரிசனம். நேரே கவசமிட்ட கொடிமரம் - முன் மண்டபம் - மங்களவிலாச மண்டபம் - அலங்கார மண்டபம் என்றெல்லாம் வழங்கப்படுகிறது. வேலைப்பாடமைந்த தூண்களையுடையது.

மண்டபத்தில் இடப்பால் திருஞானசம்பந்தரின் திருவெழு கூற்றிருக்கை, தேர்வடிவில் வண்ணச்சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. வலப்பால் நவக்கிரக சந்நிதி. வல்லப விநாயகரைத் தொழுது உட்செல்கிறோம்.

அறுபத்துமூவர் திருமேனிகள் அற்புதத் தரிசனம். அடுத்து உற்சவ மூர்த்தங்கள் - வீரபத்திரர், சப்தகன்னியர், அஷ்டலிங்கங்கள் முதலிய சந்நிதிகள். வலப்பால் சோமாஸ்கந்தர் காட்சி. வலஞ்சுழி விநாயகரும், மகாலிங்கேசுவரலும் இங்கேயும் தரிசனம் தருகின்றனர். பிட்சாடனர், சண்முகர், கார்த்திகேயர், சிவலிங்கமூர்த்தங்கள். அன்னபூரணி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் திருமேனிகளைத் தொழுது, அம்பாளையும் சேர்ந்து வலமாக வருகின்றோம்.

மங்களாம்பிகை சந்நிதி - தொழும்போதே சாந்தத்தையும் மன நிறைவையும் தருகின்ற வகையில் அழகாக அமைந்துள்ளது. பெயருக்கேற்ற திருக்கோலம்.

அடுத்து, 'அமுதகடத்தை வில்லாலடித்துச் சிதறச்செய்த மூர்த்தியாக - கிராதகோலத்தில் இறைவன் காட்சி தருகிறார் - பைரவர், மூன்று திருவடிகளுடன் ஜ்வரஹரேசுவரர் சாஸ்தா, பக்கத்தில் கோவிந்ததீக்ஷிதர் அவருடைய மனைவியார், சந்திர சூரியகர்கள் முதலிய சந்நிதிகளைத் தொழுதவாறே படியேறிச் செல்லும்போது நடராசசபை தரிசனம். வாயிலைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம்.

கும்பேசுவரர் - சிவலிங்கத் திருமேனி. பருத்து - சற்று சாயந்த பாணம் - திருமேனி (பிருதிவி) மணல் லிங்கமாதலின் தங்கக்கவசம் சார்த்தப்பட்டுள்ளது. பாணத்தின் உச்சி கும்பத்தின் வாயைப் போலவுள்ளது. புனுகுசட்டம் சார்த்தப்படுகிறது. நாடெறும் ஆறு கால பூஜைகள். 1722ல் இருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ மஹாதேவந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பணிகளைச் செய்துள்ள இத்திருக்கோயில் இப்போதும் அம்மரபு வழியில் ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தில் கும்பகோணம் பொன்விழாக் கமிட்டியார் மூலமாக ரு 15 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து 24.11.1985ல் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

இத்தலத்தில் உள்ள வைணவத் திருக்கோயில்களுள்,

1) அருள்மிகு. சாரங்கபாணிப் பெருமாள் கோயில்.

2) அருள்மிகு. சக்ரபாணிப் பெருமாள் கோயில்.

3) அருள்மிகு. இராமசாமி கோயில்.

4) அருள்மிகு. வரதராசப் பெருமாள் கோயில்.

முதலியவை சிறப்புடையன. திருக்குடந்தைப்புராணம் - தலபுராணம் மகாவித்வான். மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் பாடியுள்ளார்.

அரவிரி கோடனீடலணி காவிரி யாற்றயலே

மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழும்

குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா

இரவிரி திங்கள்சூடி யிருந்தானவ னெம்மிறையே. (சம்பந்தர்)

பூவ ணத்தவன் புண்ணயி னன்ணியங்

காவ ணத்துடை யானடியார்களைத்

தீவணத்திரு நீறு மெய் பூசியோர்

கோவ ணத்துடை யான்குட மூக்கிலே. (அப்பர்)

திருக்குடந்தைப்புராணம்

பூமேய வாரணனும் நாரணனும்

வாரணனும் பொற்பூ மாலைத்

தேமேய விண்ணவரும் நண்ணவரும்

பசுமுலதாஞ் சிறப்பு நல்கி

மாமேய குடமூக்கி னிடமூக்கின்

பார்கருணை வடிவின் மேய

பாமேய புகாதி கும்பேசர்

தாமரைத்தாள் பணிந்து வாழ்வாம்.

எண்ணிய அனைத்தும் எண்ணியாங்கெய்த

எண்ணிய அடியவர்க் கருளும்

புண்ணியமுதலே பூரணப் பொருளே

போக்கருஞ் சுடர்ப்பெரு விளக்கே

தண்ணிய சாந்தரூபியே நாளும்

தவாதமந் திராசன வாழ்வே

மண்ணியமணியே வளமலி குடந்தை

மக்ளையே நின்தாள் போற்றி.

மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியது

"தானே தனக்குச் சரியாய

தாயே வருக உரைக்க வினை

தடிவாய் வருக நினைக்க முத்தி

தருவாய் வருக மலர் பொதிந்த

கானே புரையும் கருங்கூந்தற்

கவுரி வருக மெஞ்ஞானக்

கரும்பேவருக அருள்பழுத்த

கனியேவருக தெவிட்டாத

தேனே வருக ஆனந்தத்

திருவே வருக பெருவேதச்

செல்வி வருக எங்கள் குல

தெய்வம் வருக உருகுநர்உள்

மானே வருக இமயவரை

வனிதாய் வருக வருகவே

மறைவாழ்த் தொலிசால் திருக்குடந்தை

மடந்தாய் வருக வருகவே (திருப்புகழ்)

மாலைதனில் வந்து வீதிதனில் நின்று

வாசமலர்சிந்து குழல்கோதி

வாரிருதனங்கள் பூணொடுகுலுங்க

மால்பெருகி நின்ற மடவாரைச்

சாலைவழி வந்து போமவர்கணின்று

தாழ் குழல்கள் கண்டு தடுமாறித்

தாகமயல் கொண்டு மாலிருளழுந்தி

சாலமிகு நொந்து தவியாமல்

காலையிலெழுந்து னாம்மெமொழிந்து

காதலுமைமைந்த எனவோதிக்

காலமுமுணர்ந்து ஞானவெளிக்கண்கள்

காண அருளென்று பெறுவேனோ

கோலமுடனன்று சூர்படையின்முன்பு

கோபமுடினின்ற குமரேசா

கோதையிருபங்கின் மேவவளர்கும்ப

கோண நகர்வந்த பெருமாளே

-நிலஞ்சுழியா

தோணத்தில் வந்தோனுடன்றுதித்து வாழ்கும்ப

கோணத்திற் றெய்வ குலக்கொழுந்தே (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. கும்பேசுவரர் திருக்கோயில்.

கும்பகோணம் - அஞ்சல் - 612 001

கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.









 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவலஞ்சுழி
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  குடந்தைக் கீழ்க்கோட்டம்
Next