யாத்ராஸ்தானம் - காஞ்சிபுரம்

திருமுறைத்தலங்கள்

யாத்ராஸ்தானம் - காஞ்சிபுரம்

ஸ்ரீ சந்த்ர மௌளீச்வராய நம
ஸ்ரீ சங்கர பகவத் பாதாசார்ய பரம்பரை
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி,
ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் ஸ்ரீ மடம் ஸமஸ்தானம்

 

பார்க்கெல்லாம் திலகமாகிய பாரதநாடு கோயில்கள் சூழ்ந்த திருநாடு. இந்நிலைதனை இன்றும் தமிழகப்பகுதியில் அனுபவித்து மகிழலாம். தனிமனிதப் பெருவாழ்விற்கும் கட்டுக் கோப்புடைய சமூக வாழ்விற்கும் ஆணிவேராக அமைந்திருப்பவை இக்கோயில்கள். ஆகவேதான் இக்கோயில்களுக்கு யாத்திரை சென்று வருவது ஒரு புனிதச் செயலாகப் போற்றிவரப்படுகின்றது. இறையனுபூதி பெற்ற பெருமக்களும் இப்பணியில் மூழ்கித்திளைக்கின்றனர். இத்துறையில் தனியிடம் வகிப்பவர்கள் சம்பந்தர் - அப்பர் - சுந்தரர் - மணிவாசகர் ஆகியோர். இவர்கள் யாத்திரை சென்று கண்டு களித்துப் பாடிமகிழ்ந்த திருத்தலங்கள்தாம் திருமுறைத் திருத்தலங்கள் ஆகும். காலங்கடந்த இத்தலங்களின் வரலாற்று நூல்களே தலபுராணங்கள் எனப்படுபவை.

உதவிக்காக யாரையும் எதிர்பாராது அவ்வத்தலங்களைப் பற்றிய நுண்ணிய சிறப்புச் செய்திகள் பலவற்றையும் தெரிந்து கொண்டு, இத்தலங்களுக்கு யாத்திரை சென்று இறைவனை வழிபட்டு - தலப்பதிகம் பாடி - செய்திகளின் உண்மையுணர்ந்து மகிழ்ந்திடும் வகையில் ஒரு நூல் வேண்டும் என்ற ஸ்ரீ பரமாசார்யாளின் ஆக்ஞைக்கிணங்க, நம் ஸ்ரீ மடத்து ஆஸ்தானத்தமிழ்ப் புலவர், செஞ்சொல்மணி - புலவர் பு. மா. ஜயசெந்தில்நாதன் அவர்கள், அரிதின் முயன்று யாத்திரை சென்று படைத்துள் திருமுறைத்தலங்கள் என்னும் நூல் மூன்றாவது பதிப்பாக திருவாசக, திருவிசைப்பாத்தலுங்களுக்கும் உரிய தலவிவரங்களையும் கொண்டு ஒரே நூலாக வெளிவருவது கண்டு மகிழ்கிறோம்.

தல அமைவிடம் - பேருந்துத்தடம் - அஞ்சல்முகவரி - கோவில் விமானம் மூர்த்தி தீர்த்தம் இவைகளது சிறப்பம்சங்கள் - செவிவழிச் செய்திகள் - கல்வெட்டுச் செய்திகள் - தலபுராணவரலாறு - தலபுராணப்பாடல் - திருமுறைப்பாடல் - அருட்பா - தலங்களின் இலக்கிய வழக்குப் பெயர்கள் முதலிய பலப்பல விவரங்களுடன் தன்னிறைவடிந்து சிறப்பாக விளங்குமூ இந்நூலை ஆஸ்திக அன்பர்கள் பெருமளவில் பயன்படுத்தி நன்மையடையவும், நூலாசிரியர் மேன்மேலும் அருள் நூல்களை படைத்து நமது பண்டைய பெருமையைத் துலக்கிப் பெரும் பயன் எய்தவும் ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ர மௌளீச்வரர் அருள்வேண்டி ஆசீர்வதிக்கின்றோம்.


  Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  நாராயண ஸ்ம்ருதி
Next