திருச்சிற்றம்பலம் தக்கோலம் என வழங்குதல் திருவூறல் அமைவிடம் சான்றோர் உடைய தொண்டைவள நன்னாடு தீந்தமிழ் நாட்டில் வட அரணாக உள்

திருச்சிற்றம்பலம்
தக்கோலம் என வழங்குதல் திருவூறல்

அமைவிடம்

சான்றோர் உடைய தொண்டைவள நன்னாடு தீந்தமிழ் நாட்டில் வட அரணாக உள்ளது. தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் முப்பது இரண்டனுள் பன்னிரண்டாவது திருத்தலமாக விளங்குவது தக்கோலம் என வழங்கும் திருவூறல்.

அக்காலத்தில் கல்வியில் வல்ல சான்றர்களால் புகழ்படத்தக்க தகுதியைத் தக்கோலம் பெற்றிருந்தது என்பதை முதல் இராசேந்திரன் (A.H. 1012-1044) 18 ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு தக்கோலத்தை கலைத் தக்கோர் புகழ்தலைத் தக்கோலம் என்று குறிப்பிடுவதால் அறியலாம்.

தக்கோலம், வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே 30 கிலோ மீட்டர் தூரத்திலும், அரக்கோணத்திலிருந்து தெற்கே 12 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள அழகிய திருவூர் தக்கோலம்.

கொற்றலை (குசத்தலை) என்று அழைக்கப்பெரும் க்ஷீர நதியின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் பண்டைப் பெருமக்கள் பலவற்றைக் கொண்டதாகும்.

பண்டைப் பெருமக்கள்

A.H. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டு நிலவியல் ஆசிரியர் தாலமி, தாம் இயற்றிய நூலில் தக்கோலத்தை தகோல எனக் குறிப்பிடுகிறார். A.H. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற மிலிந்த பன்கா என்னும் பௌத்த நூலிலும் தக்கோலத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.

அவனி நாரணன் எனும் மூன்றாம் நந்திவர்மன் (A.H. 835-860) ஆட்சியின் போது இங்கிருந்து வாணிகத்தின் மலேயா சென்ற வணிகர்கள், சியாம் நாட்டில் தகோப என்னும் மாவட்டத்தில் புதிய தக்கோலம் என்ற ஊரை உருவாக்கினார். இந்த தக்கோலத்தையே கங்கை கொண்ட சோழனான இராசேந்திரன் கடார வெற்றியின்போது கலைத் தக்கோர் புகழ்தலைத் தக்கோலம் என்று அவனது மெய்க்கீர்த்தி கூறுவதிலிருந்து தக்கோலத்தின் பண்டைப் பெருமை தெரிகிறது.

ஊறல்

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமயக் குறவர் திருஞான சம்பந்தர் திருஊறல் என்று தம் பதிபத்தில் இவ்வூரைக் குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர் ஊறல் என்றும், சுந்தரமூர்த்தி சுவாமி திருஊறல் என்றும் அழைக்கிறார்கள்.

திருஞானசம்பந்தர் அருளிய திருஊறல் திருப்பதிகம்

மாறி லவுணரரணம் அவைமாயவோர் வெங்கனையா லன்று

நீறெழ வெய்தவெங்கள் விமலனிடம் வினவல்

தேற விரும்பொழிலுந் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த

ஊற லமர்ந்த பிரா னொலியார்கழ லுள்குதுமே.

மத்த மதக்கரிவை மலையானமக ளஞ்சவென்று கையால்

மெத்த வுரித்தவெங்கள் விமலின் விரும்புமிடம்

தொத்தல ரும்பொழில்சூழ் வயல் சேர்ந்தொளிர் நாலம் நாளும் நயனம்

ஒத்தலரும் கழனித் திருவூறலை ஊள்குதுமே.

ஏன மருப்பினோடு மெழிலாமையும் பூண்டழகார் நன்றும்

கானமர் மான்மறிக்கை கடவுள் கருதுமிடம்

வான மதிதடவும் ழளர் சேலைகள் சூழ்தழகார் நம்மை

ஊன மறுத்த பிரான் திருவூறலை யுள்குதுமே

நெய்யணி மூவிளைவே னிறைவெண்மழு வும்அனலுமன்று

கையணி கொள்கையினான் கடவு ளிடம் வினவில்

மையணி கண்டமடவார் பலர்வந் நிறைஞ்சமன்னி நம்மை

உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை யுள்குதுமே

எண்டிசை யோர்மகிழ வெழின்மாலையும் போகனமும் பண்டு

சண்டி தொழவளித்தா னவன்றாழு மடம் வினவில்

மையணி கண்டமடவார் பலர்வந் நிறைஞ்சமன்னி நம்மை

உய்யும் வைகைபுரிந்தான் திருவூறலை யுள்குதுமே

கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி

மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தா னிடம்வினவில்

கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை

உண்டபி ரானமருந் திருவூறலை யுள்குதுமே

நீரின் மிசைந்துயின்றோ னிறைநான் முகனுமற்யா தன்று

தேரும் வகைநிமிர்ந்தா னவன்சேரு மிடம்வினவில்

பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்

ஊரு மரவசைத்தான் திருவூறலை யுள்குதுமே

பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மட்டமணர் குண்டர்

என்னு மிவர்க் கருளா ஈசனிடம் வினவில்

தென்னென வண்டினங்கள் செறியார் பொழில் சூழ்ந்தழகார் தன்னை

உன்ன வினைகெடுப்பான் திருவூறலை யுள்குதுமே

கோடலிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச

ஓடு புனல்சடைமேற் கரந்தான் திருவூறல்

நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன

பாடல்கள் பத்தும்வல்லோர் பரலோகத் திருப்பாரே.

என திருஞானசம்பந்தர் திருவூறல் திருப்பதிகம் பாடியருளியுள்ளார்.

ஊரை ஒட்டி ஒடும் விருத்திக்ஷீர நதியில் பசுவின் வயிற்றில் பால் ஊறிச் சுரப்பது போல ஆற்றுப் படுக்கையில் நீர் ஊறிச் சுரப்பதால் ஊறல் என பெயர் பெற்றிருக்கலாம்.

பஞ்சபூத தலங்களுள் அப்புத் தலமான திருவானைக்கா போல தொண்டை நாட்டில் அப்புத் தலமான திருவூறல் விளங்குகிறது.

சிறப்புப் பெயர்கள்

முதல் இராதிராசன் காலத்தில் (A.H. 1018-1054) இரட்டபாடி கொண்ட சோழபுரம் எனவும், முதற் குலோத்துங்கன் காலத்தில் (A.H. 1070-1120) பல்லவபுரம், குலோத்துங்க சோழபுரம் எனவும், காஞ்சிபுரம் தெலுங்குச் சோழர் விசயகண்ட கபாலன் காலத்திலும். (A.H. 1364-1585) வடமுடி கொண்ட சோழபுரம் எனவும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தக்கோலப் போர்

A.H. ஆறாம் நூற்றான்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தின் வடபகுதியை ஆண்டவர்கள் பல்லவர்கள். அவர்கள் ஆட்சியில் தக்கோலம் பெரு வணிக நகரமாக விளங்குகிறது.

பல்லவ அரச மரபினை இறுதியாக ஆண்ட அபராஜித வர்மனிடமிருந்து (A.H. 879-897) தொண்டை நாட்டை முதலாம் ஆதித்தசோழன் (கி.பி.ய 871-907) A.H.890 - இல் வென்றான். இதற்குப்பின் தக்கோலம் சோழர் ஆட்சியின்கீழ் வந்தது.

முதற் பராந்தக சோழனின் (A.H. 907-953) மகன் இராசாதித்தன் திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரில் பாடிவீடு அமைத்து சோழ நாட்டின் வட எல்லையை காத்துவந்தான். அப்போது இராட்டிரக்கூட மன்னனான மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான்.

தக்கோலத்தில் மூன்றாம் கிருஷ்ணன் எனப்படும் கன்னர தேவனுக்கும் இராசேந்திரன் என்பவனுக்கும் கடும்போர் நடந்தது. மூன்றாம் கிருஷ்ணனுக்கு துணையாக கங்க மன்னன் பூதுகன் என்பன் போரிட்டான். இராசாதித்த சோழன் யானை மீது அமர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தபோது, பூதுகன் விடுத்த அம்பு ஒன்று சோழனின் மார்பை துளைத்துச் சென்றது. இராசாதித்தன் வீர மரணம் அடைந்தான். அதனால் ஆனைமேற் துஞ்சினார் என்று இராசாதித்தனை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஏழத்தார இருபத்தைந்து ஆண்டுகள் இராட்டிரக் கூடர்களின் ஆட்சியின் கீழ் தக்கோலம் இருந்தது. அதன் பின்னர் மீண்டும் சோழர்கள் ஆண்டனர். இவ்வாறு சோழர் வரலாற்றில் தக்கோலம் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தைப் பெற்றுள்ளது.

தக்கோலம் - பெயர் காரணம்

தக்கன் என்ற அரக்கன் தான் கொண்ட ஆணவத்தால் தன் தலையை இழுத்து, ஆட்டுதலை பெற்றவனாய் இறைவனை வழிபட்ட நிகழ்ச்சியின் வாயிலாக அருள்புரிய வேண்டி இறைவன் ஒரு திருத்தலத்தையும் தோற்றுவித்தார்.

அந்தத் திருத்தலம் தான் தக்கோலம். இத்தலம் தோன்றுவதற்குக் காரணமான அமைந்ததுதான் தக்கன் நடத்திய வேள்வி.

தக்கன் தன் மகள் தாட்சாயணியை ஈசனுக்கு மணமுடித்தால் தான் ஈசனுக்கே மாமனாராகி அவரைவிட உயர்ந்து விடலாம் எனக் கர்வம் அடைந்தான். இந்நிலையில் தக்கன் ஒரு யாகம் செய்ய எண்ணினான். அதில் கலந்து கொள்ள ஈசனுக்கு அழைப்பு அனுப்பவில்லை. அதன் மூலம் தான் ஈசனை அவமதித்துவிட்டதாக எண்ணினான். தக்கன், தன் கணவருக்கு அழைப்பு அனுப்பவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட தாட்சாயணி, தக்கன் அடையப்போகும் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஈசன் அனுமதி அளிக்காமலே தக்கன் யாகம் செய்யும் இடத்திற்க்கு வந்தாள். ஆனால், தக்கனோ தன் மகள் என்றும் பாராமல் அவமதித்தான். இதைக் கேள்விப்பட்ட ஈசன் கோபம் கொண்டு, தக்கனின் யாகத்தையும், அவனையும் தமது அம்சமாக வீரபத்திரனை அனுப்பி வைத்தார். வீரபத்திர சுவாமி தக்கனின் யாகத்தை அழித்து, அவன் தலையை வெட்டி, அதற்குப் பதிலாக ஆட்டுத்தலை தக்கனுக்குப் பொருத்திவிட்டார். தக்கன் ஆட்டுத்தலை பொருந்திய வீரபத்திரத் திருக்கோயில், இத்திருத்தலத்தின் மையப் பகுதியில் உள்ளது. இங்கு வீரபத்திரரை அடுத்து ஆட்டுத்தலையுடன் தக்கன் நிற்பதையும் காணலாம்.

இந்த தண்டனையைத் தாங்கமுடியாமல் தக்கன் இறைவனிடம் மனம் கசிந்து அழுது வேண்ட, இரக்கம் கொண்ட ஈசன் அவனை நோக்கி தக்கனே, c விருந்தி க்ஷீர நதிக்கரையில் சென்று எம்மை நோக்கி வழிபாடு செய். c வழிபாடு செய்யுமிடத்தில் விநாயகர், விஷ்ணு, பிரம்ம தேவர் ஆகியோரை இருக்கச்செய். உனது வேண்டுகோளுக்கு செவி மருந்து அவர்கள் c வழிபாடு செய்யுமிடத்தில் அமர்ந்து கூர்ந்து கவனிப்பார்கள். அப்போது நான் அருள்புரிகிறேன் என்று திருவாய் மலர்தருளினார். அதன்படியே விநாயகர், விஷ்ணு, பிரம்மதேவர் ஆகியோர் முன்னிலையில் ஆட்டுத் தலையுடனேயே சிவவழிபாடு செய்தான் தக்கன்.

ஈசனின் அனுமதி இல்லாமலே தக்கனின் வேள்விக்கு சென்ற அன்னை தாட்சாயணி அதற்குப் பிராயச்சித்தமாக ஒவ்வொறு தலமாகச் சென்று ஈசனை வழிபாடு செய்து கொண்டு, தக்கன் வழிபாடு செய்து கொண்டிருந்த விருத்த க்ஷீர நதிக்கரைக்கு வந்து சேர்கிறார். தாட்சாயணி இங்குள்ள ஆற்றில் மணலால் சிவலிங்கம் செய்து வழிபடும் போது, வெள்ளம் வர, அன்னை தன் மார்புத்தழுவி லிங்கத்தைக் காப்பாற்றினார். இதன் காரணமாகவே சிவலிங்கத்தின்மீது படிந்த அன்னையின் மார்புத்தழும்புகள் வடுக்களாக இன்னும் இருக்கின்றன. தக்கன், தாட்சாயணி இருவரின் வழிபாட்டில் மனம் இரங்கி ஈசன் தோன்றி இருவருக்கும் அருள்புரிந்தார். தக்கன் ஓலமிட்டு வழிபாடு செய்ததால், தக்கன்+ஓலம்= தக்கோலம் என இத்தலத்திற்குப் பெயர் வந்ததாகப் புராணக்கதை வழங்குகிறது.

திருவூறல் மகாதேவர் கோயில் -தக்கோலம் ஜலகநாதீசுவரர் கோயில்

திருவூறல் மகாதேவர். தக்கோலம் ஜலகநாதீசுவரர் கோயில் எனவும் வழங்கப்படுகிறது. இவ்வூறில் ஏழு சிவாலயங்கள் உள்ளன. அவற்றுள் பழமை வாய்ந்தவை இரண்டு அவற்றுள் ஒன்று ஜலநாதீசுவரர் திருக்கோயில், இவரைத் திருவூறல் மகாதேவர் என்றும் அவைப்பர். மற்றொன்று இதற்கு வடக்கே விருத்த க்ஷீர நதிக்கரையில் அமைந்துள்ள கங்காதீசுவரர் திருக்கோயில், மூன்றாவது சோமநாதீசுவரர் திருக்கோயில், இங்கு ஈசனை வழிபட்டு சந்திரன் கண் பெற்றான். நான்காவது திருமாம்பழநாத ஈசுவரர், ஐந்தாவது பானு ஈசுவரர், ஆறாவது தேவேசுவரர், ஏழாவது எமனீசுவரர் திருக்கோயிலாகும்.

ஜலகநாதீசுவரர் கோயில் அமைப்பு

ஆறு ஏக்கர் நிலப்பரப்பில், 100 அடி உயரமும், மூன்று நிலைகளுடனும், ஐந்து நிலங்களுடனும், ஐந்து கலசங்களுடனும் மேற்கு நோக்கிய கோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது. கோபுரத்தில், மார்கண்டேயனுக்காக ஈசன் காலனைக் காலால் உதைக்கும் காட்சி சிறப்பாக அமைந்துள்ளது.

இக்கோபுரம் விசயநகர அரசின் வீரப்பிரதாப சதாசிவ மகாராயர் ஆட்சியின் போது, சோப கிருது ஆண்டு விருஷய நாயற்றில் அமரபட்சத்தில் துவாதசியும் ரேவதியும் மூலம் பெற்ற நாளில் (A.H.1543) கட்டப்பெற்றதாகவும், அப்போது பூசைக்கு நிலம் விடப்பட்டதாகவும்

திருச்சுற்று மதிர்சுவர் வெளிப்புறம் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

இக்கோயிலின் கல்வெட்டுகளுள் தொன்மையானது, பல்லவ மன்னன் அபராஜித வர்மனின் ஆறாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். அக்கல்வெட்டின் துணை கொண்டு கி.பி.876-இல் இக்கோயில் கற்கோயிலாக கட்டப் பெற்றிருக்கலாம் என அறியலாம்.

கோயில் வெளியில் உள்ள சிறிய மண்டபத்தில் உள்ள அமர்ந்தநிலை சிங்கத்துண்களும், கருவறை நுழைவாயிலில் மேலேயுள்ள சோமாஸ்கந்தர் திருவுருவமும் பல்லவர் காலப் பாணியில் அமைந்துள்ளன. பிற்காலப் பல்லவர்களால் இக்கோயில் கட்டப்பட்டது, என்பதற்குச் சான்றாக இவை அமைந்துள்ளன.

திருவூறல் மகாதேவர்

திருவூறல் மகாதேவர் கருவறை முகப்பில் உள்ள துவாரபாலகர்களின் தோற்றம் அற்புதமாக அமைந்துள்ளது. மூலவர் திருவூறல் மகாதேவர் தீண்டாத் திருமேனி யாகும். இந்த லிங்கத்திருமேனி தட்சணாயன காலத்தில் வெண்ணிறமாகவும், உத்தராயணகாலத்தில் செந்நிறமாகவும் காட்சியளிக்கும். நிறம் மாறினும் வரம் மாறாத வள்ளல் சிவபெருமான்.

அவருடைய இந்த வித்தியாசமான கோலத்தை வேறேங்கும் காணமுடியாது மற்றும் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் வலப் புறத்தில் போக சக்தி அம்மன் வடக்கு நோக்கி வீற்றிருப்பது மற்றொறு சிறப்புஅம்சமாகும்.

தேவகுரு வியாழன் என்பவரது இளவல் உததிமுனிவர், தம்மைந்தர் தீர்க்கதர் என்பவருக்கு ஏற்பட்ட சாபம் நீங்க வழிபட்டது இங்குதான். சந்திரன் தனக்கிருந்த ஷயரோகத்தைப் போக்கிக் கொண்டதும், சூரியன், இயமன் போன்றோர் பூஜித்ததும் இங்குதான்.

உள்பிரகாரத்தின் தென்கிழக்குக் கோடியில் சப்தமாதாக்களின் திருவுருவங்கள் வடக்கு நோக்கி உள்ளன. பக்கத்தில் ஒரு குகைபோன்ற இடத்தில் உததிமுனிவர் வழிபட்டதாகக் கூறப்படும் சிவலிங்கம் உள்ளது.

உள்பிரகாரம் - தேவ கோட்டங்கள்

கருவரையின் தெற்கு கோட்டத்தில் (சுவரில்) உள்ள விநாயகர் தாமரைப் பீடத்தில் அமர்ந்து அருள்புரிகிறார்.

அடுத்துள்ள தட்சணாமூர்த்தியாகிய ஆலமர் செல்வனின் திருக்கோலம் கண்கொள்ளாக் காட்சியாகும். கல் ஆலமரத்தின் அடியில் ஒரு காலை மடித்துப் பீடத்தில் இருத்திக்கொண்டு, வலப்புறக்காலை கீழே தரையில் வைத்திருக்கும் பாவத்தில் யோக தட்சிணா மூர்த்தி அமைந்துள்ளார். வலப்புறக்கரம் ஒன்றில் ருத்ராட்ச மாலையும், இடப்புறக்கரம் ஒன்றில் தாமரை மொட்டும் கொண்டுள்ளார். தலையைச் சற்றே இடப்புறம் சாய்த்து மாணவர்களை அடக்கி யாளும் ஆசிரியப் பாவனையில் உத் கடி ஆசனம் என்ற நிலையில் அமர்ந்து அருள் புரிகிறார். நேரில் அமர்ந்து பேசுவது போன்ற உணர்வை அவர் உருவில் நாம் கானலாம். இந்த அபூர்வ திருக்கோலத்தை வேறேங்கும் கானமுடியாது.

கருவறையின் பின்புறச் சுவரில் திருமால் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். வலக்கால் அடங்கியிருக்க இடக்கால் சற்று மடிந்து கீழே ஊன்றியுள்ளது. வலக்கை ஒன்றில் பிரயோகச் சக்கரம், மற்றோன்று அருள் புரியும் அபயக்கை இடக்கை ஒன்றில் சங்கு, மற்றொறு கை இடப்புறத்தொடையில் படிந்துள்ளது. தலையில் நீண்ட கிரீடம், திருமாலுக்கே உரிய அலங்காரமான ஆடை அணிமணிகளுடன் அமர்ந்துள்ளார்.

கருவறையின் வடக்கில், மூலவர் சந்நிதியிலிருந்து அபிஷே தீர்த்தம் வெளியேருகிற வகையில் கோமுகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குட்டி அரக்கன் மாதிரி நன்றாய் குனிந்து தவழ்திருக்கின்ற பூதகணத்தின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வாய் வழியே நீர் வெளியேருகிறது இந்த உறுவத்துக்கு மேலே இருப்பது நான் முகங்களின் திருக்கோலமாகும். நான்கு முகங்களில் மூன்று தெரியும், ஒன்று பின்புறம் மறைந்திருக்கும். இஙாகுள்ள நான் முகப் பிரமன் கண்டியூர் பிரமனைவிட அழகிய கோலம் கொண்டவர் எனப்போற்றப்படுகிறார்.

தென்முகக் கடவுளும், நான்முகக் கடவுளும் திருமாளும் அமர்ந்திருக்க, துர்க்கை நின்ற கோலத்தில் சாந்த துர்க்கையாகக் காட்சியளிக்கிறார். சிறுத்த இடையில்... மணிக்கழுத்தில் ... விற்புருவங்களில் பிறைநெற்றியில் ... என்று ஒவ்வொர் உறுப்பிலும் உலகத்து அழகையெல்லாம் காணலாம். பிரயோகச் சக்கரம், சங்கு, அபயகங்கை, இவற்றுடன் இடையைச் சற்றே வளைத்து ஒயிலாக நிற்கும் அன்னயைக் காணாத கண்கள் கண்களே அல்ல. உட்பிரகாரத்தின் வடக்கில் ஈசனின் கருவறையை ஒட்டி தெற்கு நோக்கிய சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.

வெளிப்பிரகாரம்

வெளித்திருச்சுற்றில் அன்னை கிருராஜகன்னிகாம்பாள் சந்நிதி வடக்கு நோக்கி உள்ளது. தனிச்சிறப்பாகும். அம்பிகை நின்ற திருக்கோலத்தில் சற்றே ஒசித்த நளினத்தில் புன்முருவல் தவழநிற்பது சிறப்பு அங்கமாகும். அன்னை மூன்று உள்வளைவுகளுடன் கூடிய திரிபங்கி எனப்படும் நிலையில் மேலிரு திருக்கரங்களில் பாசம் - அங்குசம் ஏந்தி, கீழிரு திருக்கரங்களில்

அபயமும், வரமும் அளித்து அருட்காட்சி நல்குகிறார்.

அம்பிகை சந்நிதியின் எதிரே நந்தி இல்லை. பலி பீடத்திற்க்கு முன்னால் சிம்மவாகனம் உள்ளது. தொன்மையான சக்தி பீடம் என்பதற்கான அடையாளம் இது.

வெளித்திருச்சுற்றில் முருகர், விநாயகர் ஆகியோருக்கு தனி கோயில்கள் உள்ளன. கிழக்குத் திசையில் பிரதோஷ நந்தியும் கொடி மரமும் அமைந்துள்ளன.

கங்காதீசுவரர் ஆலையம்

ஜலகநாத ஈசுவரர் ஆலயத்திற்கு வடப்புறமாக சற்று தொலைவில் விருத்த க்ஷீர நதிக்கரையில், கரையையட்டித் தரைமட்டத்திற்க்குக் கீழே உள்ள ஆலையத்தினுள் சென்றால் தெற்க்கு நோக்கியுள்ள வாயிலுடன் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலினுள் நுழைந்து மேற்கு நோக்கித் திரும்ப மகனவல்லி அம்பாள் சந்நிதியும், ஆறுமுகர் சந்நிதியும் உள்ளன. இவற்றைக் கடந்து சென்றால் கிழக்கு நோக்கியுள்ள கங்காதீசுவரர் கருவறையை அடையலாம். அம்பிகையை தரிசித்து விட்டுத்தான் உள்ளே போய் கங்காதீசுவரரை தரிசிக்க வேண்டும். அப்படியோரு வித்தியாசமான அமைப்பாகும்.

கருவறையில் மேற்பகுதியில் உள்ளது. சத்திய கங்கை தீர்த்தம் சதா வந்து கொண்டிருந்தது. இந்த நீர் கோயிலின் உள்நீக்கிச் சென்று, அங்கு சிவலிங்கப் பகுதியைச் சுற்றிச் சென்று, கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள மற்றொறு நந்தியின் வாயின் வழியாக பொய்கையில் விழுகிறது. உததி முனிவர் இப்பொய்கையில் நீராடி, இறைவனுக்கு அபிஷேகம் செய்து தம்மைந்தர்க்கு ஏற்பட்ட சாபம் நீங்கச் செய்தார் எனத் தலவரலாறு கூறுகிறது.

மேலும், இத்திருத்தலத்தில் ஏழு விநாயகர் ஆலையங்கள், ஏழு கிராமதேவதை ஆகியவை உள்ளன. மேலும் ஒரு பெருமாள் கோயிலும் இருந்திருக்கிறது.

ஆடியது ஆலங்காடு
அமர்ந்தது திருவூறல்
மணந்தது மணவூர்

என்ற ஒரு வழக்கும் இப்பகுதியில் உண்டு.

தென்னகத்தில் ஸ்ரீ குருபகவான் சிறப்பாகக் கோயில் கொண்டுள்ள திருத்தலங்கள், மாயவரம், ஆலங்குடி, தக்கோலம், திரிசூலம், கழுகுமலை, பெரியாரவுடையார் கோயில் நாகலாபுரம், கோவிந்தவாடி அகரம் ஆகிய இடங்களில் உள்ளன. பழம்பெருமை வாய்ந்த குருபகவான் சந்நிதிகளில் தக்கோலம் முன்றாவது சந்நிதி என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல வகையாலும் சிறப்புற்ற இத்திருத்தலத் தரிசனம், திருமணம், மட்கட்பேறு, நோயற்றவாழ்வு முதலானவற்றை நிறைவேற்றி அருள்வதால், பக்தர்கள் அதிக எண்ணிக்கையில், வந்து கொண்டிருக்கின்றனர். நாமும் இறைவனை வணங்கி அருள் பெருவோம்வாரீர்.