Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

பக்தியே பெரிய லக்ஷ்மி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

“இதைத்தா, அதைத்தா,” என்று நாம் பிரார்த்திக்க வேண்டியதே இல்லைதான். நம் யோக்கியதைக்கு என்ன தரவேண்டும் என்று அம்பாளுக்கே தெரியும். இருந்தாலும் நடைமுறையில் இப்படி விவேகத்தோடு இருக்க முடிய மாட்டேன் என்கிறது. “இது வேண்டும். அதுவேண்டும்” என்பதற்காகத்தான் பிரார்த்தனை செய்கிறோம்.

யோசித்துப் பார்த்தால் இதை அடியோடு தப்பு என்று சொல்ல முடியவில்லை. கீதையில் பகவான் பக்தர்களை நாலு தினுசாகப் பிரித்துச் சொல்கிறார். அதிலே மோக்ஷத்தை விரும்பி உபாஸிக்கிற சாதகன், அந்த மோக்ஷ லட்சியத்தையே பிடித்துவிட்ட ஞானி ஆகிய இரு சாராரைச் சொன்னதோடு பகவான் நின்றுவிடவில்லை. நோய் நொடி முதலான துன்பங்கள் நீங்குவதற்காகப் பிரார்த்திக்கிறவன், பொருளை வேண்டிப் பிரார்த்தனை பண்ணுகிறவன் ஆகிய இரு சாராரைக்கூடச் சேர்த்துக் கொள்கிறார். இம்மாதிரி லௌகிக சௌக்கியத்துக்காக வழிபடுகிறவர்கூடத் தன்னை பூஜிப்பதாக பகவான் ஒப்புக் கொள்கிறார். பகவானே ஒப்புக்கொண்ட விஷயத்தை நாம் ஆட்சேபிப்பதற்கில்லை.

ஆனால், கீதா சாஸ்திரம் முதலிய எந்த ஞான நூலாகட்டும், சமய கிரந்தமாகட்டும், இகலோக சௌக்கியங்களைத் தள்ளிவிட்டு, சாசுவதமான பேரின்பத்தைத்தான் நாடவேண்டும் என்பதை லட்சியமாக வலியுறுத்துகின்றன. அப்படியானால் பகவானே முரண்படப் பேசுகிறாரா? அப்படி அர்த்தமில்லை. லௌகிக காரியங்களை எடுத்த எடுப்பில் யாராலும் விட்டுவிட முடிகிறதில்லை. ஆனாலும் இந்த நிலையில் இருக்கிற போதுகூட, “எல்லாம் நம்மாலேயே முடியும், நாம் நினைத்ததை எல்லாம் நாமே ராஜாவாக நடத்திக் கொள்ள முடியும்’ என்று நினைத்துவிடாமல், ‘நமக்கு மேலே ஒரு மகா சக்தி இருக்கிறது. அதற்குச் சக்தி இருப்பதோடு கருணையும் இருக்கிறது. நாம் தழைத்து வேண்டினால் அது அநுக்கிரகம் பண்ணும்’ என்கிற நம்பிக்கை இருந்தால், அது விசேஷம்தானே? பணம் வேண்டும், வீடு வேண்டும், பதவி வேண்டும் என்றெல்லாம் பிரார்த்தனை செய்கிறபோதுகூட, இப்படி ஒரு மகா சக்தியிடம் நம்பிக்கை வைத்து, அதனிடம் நம் அகங்காரத்தையெல்லாம் தாழ்த்திக் கொண்டு நிற்கிறோம் அல்லவா? அந்த மட்டில் இது நாஸ்திகத்தைவிட எத்தனையோ சிலாக்கியம்தானே? முதலில் ஏதேதோ வஸ்துக்களுக்காகப் பகவானிடம் போகிறோம். பூஜை, ஆலய தரிசனம், ஸ்தோத்திரம், ஜபம் என்று செய்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக இதுகளில் பிடிப்பு உண்டாக உண்டாக, மற்ற வஸ்துக்களில் பிடிப்புக் குறைகிறது. கடைசியில் பகவானுக்காகவே பகவானைப் பக்தி பண்ண வேண்டும் என்கிற ருசி பிறக்கிறது.

அதனால்தான் லக்ஷ்மீ கடாக்ஷத்தை விரும்பியே பக்தி செலுத்துகிறவர்களைக்கூட, ‘அர்த்தார்த்தி’ என்று தனியாகச் சொல்லி, தன்னை பூஜிப்பவனாக பகவான் ஒப்புக் கொள்கிறார்.

“ஆசைக்கோர் அளவில்லை” என்றார்கள். முக்கியமாக செல்வம் வேண்டும் என்கிற ஆசைக்கு எல்லையே இல்லாமல் போய்விடுகிறது. இதனால்தான் அனர்த்தம் எல்லாம் வந்து விடுகிறது. ஞானம் வேண்டும், குணம் வேண்டும் என்றெல்லாம் பிரார்த்திக்கிறவர்கள் எங்கேயாவது துர்லபமாக இருப்பார்களோ என்னவோ? லக்ஷ்மீகடாக்ஷத்திற்கு மட்டும் பிரார்த்திக்காதவர் இல்லை. இதிலே எந்தக் கோடீஸ்வரனுக்காகவது திருப்தி வந்திருக்குமா என்றால் அதையும் காணோம்.

சௌக்கிய அநுபோகம் அதிகமாக ஆக, ஞானம் வேண்டும் என்ற எண்ணம் குறைந்து கொண்டே போகிறது. இதனால்தான் லக்ஷ்மி இருக்கிற இடத்தில் ஸரஸ்வதி இருப்பதில்லை என்று பொதுவில் வசனம் வந்துவிட்டது. இதற்கு வேடிக்கையாக ஒரு காரணம் தோன்றுகிறது. சாதாரணமாக மாமியாரும் மாட்டுப் பொண்ணும் ஒரே இடத்தில் ஒத்து இருக்க மாட்டார்கள். மஹாவிஷ்ணுவும், பிரம்மாவும் தகப்பனாரும் பிள்ளையும் ஆகிறார்கள் என்றால், அப்போது மஹா லக்ஷ்மியும் ஸரஸ்வதியும் மாமியார் – மாட்டுப் பெண் ஆகிறார்கள். இவர்கள் சேர்ந்து சௌஜன்யமாக இருக்க மாட்டார்களே! அதனால்தான் பொதுவில் லக்ஷ்மீ கடாக்ஷம் இருக்கிற இடத்தில், ஸரஸ்வதீ கடாக்ஷம் இருப்பதில்லை. அல்லது இதையே நல்லபடியாகச் சொல்லலாம். மாமியாரிடம் உள்ள மகா மரியாதை காரணமாகவே அவள் இருக்கிற இடத்தில் தான் முந்திரிக்கொட்டை மாதிரி தெரியக்கூடாது என்று ஸரஸ்வதி ஒதுங்கிப் போவதாகவும் சொல்லலாம்.

இதெல்லாம் வேடிக்கையாகச் சொல்கிற பேச்சு. வாஸ்தவத்தில் இருக்கிறது ஒரு பராசக்திதான். அவள்தான் எந்தெந்த சமயத்தில் எந்தெந்த விதமாக அநுக்கிரகம் செய்து பக்குவத்தைத் தரவேண்டுமோ அப்படிச் செய்வதற்காக மகாலக்ஷ்மியாக, ஸரஸ்வதியாக, ஞானாம்பிகையாக வருகிறாள். ஏதோ ஒரு ரூபத்தில் பக்தி என்று வைத்துவிட்டால் போதும். அப்புறம் நடக்க வேண்டியதை அவளே பார்த்துக் கொள்வாள். இந்தப் பக்திதான் நமக்குப் பெரிய செல்வம். அதுவே பெரிய லக்ஷ்மி.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is மஹான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  நவராத்திரி நாயகியர்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it