Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

முருகனின் பூர்வ அவதாரம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளைப் பற்றி ஏதோ கொஞ்சம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். குமாரிலப்பட்டர் பேரைச் சிலராவது கேட்டிருப்பீர்கள். இப்போது யாருக்குமே தெரியாத இன்னொரு ஸுப்ரம்மண்ய அவதாரத்தைப் பற்றிச் சொல்லப் போகிறேன். ரொம்ப சமீப காலம் வரையில் எனக்கே இது தெரியாது.

சரியாகச் சொன்னால், இது சுப்ரம்மண்ய அவதாரம் இல்லை. சுப்ரம்மண்யராக வருவதற்கு முன்னால் அவர் யாராக இருந்தார் என்று இந்தக் கதை சொல்கிறது. இது எப்படி எனக்குத் தெரிய வந்தது என்பதே ஒரு கதை மாதிரிதான்.

*              *             *

வியாஸர் ‘பிரம்ம ஸூத்திரம்’ என்று பரமாத்ம தத்வத்தைப் பற்றி விசாரணை செய்து எழுதியிருக்கிறார். அதில் மூன்றாவது அத்தியாயம், மூன்றாவது பாதத்தில், முப்பத்திரண்டாவது சூத்திரம். “ஒர் அதிகாரத்துடன் அவதரித்தவர்களுக்கு அதிகாரம் உள்ள வரையில் சரீரத்தில் இருப்பு உண்டு” என்று சொல்கிறது. இதற்கு பாஷ்யம் பண்ணும்போது நம் ஆசார்யாள், “பிரம்மாவின் மானஸ புத்திரரான ஸனத்குமாரர்கூட, தானே ருத்திரனுக்கு வரம் கொடுத்துவிட்டு அதற்காக, ஸ்கந்தனாகப் பிறப்பெடுத்தார்” என்று திருஷ்டாந்தமாகச் சொல்லியிருக்கிறார்.

ஸனத்குமாரராவது, பரமேசுவரனுக்கு வரம் தருவதாவது, அதற்காக மறுபடி பிறப்பதாவது, அதுவும் சாக்ஷாத் ஸ்கந்தனாக – இது எந்தப் புராணத்திலிருக்கிறது என்று எனக்குத் தெரியாமல் இருந்தது. பல பண்டிதர்களை விசாரித்துப் பார்த்தும் தெரியவில்லை. ஆஞ்சநேய ஸ்வாமிகளும் ரொம்ப விசாரித்துவிட்டு, பதினெட்டுப் புராணங்களையும் பார்த்துப் தமிழில் சுருக்கிப் போட்டிருக்கிற (ஸ்ரீ வத்ஸ) ஸோமதேவ சர்மாவிடம் இந்தக் காரியத்தைக் கொடுத்தார். சர்மா எனக்கு பிக்ஷை பண்ண வந்தபோது, பெரிய பிக்ஷையாக இந்த ‘டிஸ்கவரி’யைச் சொன்னார். ‘திரிபுரா ரஹஸ்யம்’ என்ற கிரந்தத்தில் மஹாத்மிய காண்டம் முப்பத்தேழாம் அத்தியாயத்தில் இது நீள நெடுகப் பெரிய கதையாகச் சொல்லியிருக்கிறது.

கதைக்கு வருகிறேன்:

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர்.

இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வபப்னம் வந்தது. ஸ்வப்னத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.

விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.

“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்த ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.

ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.

வாக்கு, மனம், சரீரம் மூன்றும் ஒருத்தருக்கு சத்தியத்திலேயே பிரதிஷ்டையாகிவிட்டால், அப்படிப்பட்டவர் உத்தேசிக்காமலே அவருக்கு ஒரு பெரிய சக்தி வந்துவிடும். அதாவது, அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியமாகிவிடும். தவறுதலாகவோ, தெரியாததாலோ அவர் உண்மைக்கு விரோதமாக ஒன்றைச் சொன்னால்கூடத் வாஸ்தவத்தில் அப்படியே நடந்துவிடும்.

பரம சத்தியத்திலேயே ஸ்திரமாக நின்ற ஸனத்குமாரர் எதை நினைத்தாலும் – ஸ்வப்னத்தில் நினைத்தால்கூட – அதுவே சத்தியமாகிவிடும்.

இந்த சமாசாரம் தெரிந்து கொண்ட பின் ஸனத்குமாரர் ஆத்மாராமராக, பரப்பிரம்மத்தைத் தன்னில் தானாக அநுபவித்துக்கொண்டு, பழையபடியே உட்கார்ந்து விட்டார். லோகமெல்லாமே அவருக்கு ஸ்வப்னமாகி விட்டதால் தம் ஸ்வப்னத்தைப் பற்றி நினைக்கவேயில்லை.

ஆனால் இவர் ஸ்வப்னத்தில் நினைத்த நினைப்பு அசத்தியமாக போய்விடக்கூடாதே என்று பரமேசுவரனுகக்கு விசாரம் வந்துவிட்டது. அதனால், இவர் தரிசனத்துக்காகத் தபஸ் பண்ணாதபோதே, அவராகப் பார்வதீ ஸமேதராக இவருடைய ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.

ஸனத்குமாரருக்கோ மரம், மட்டையிலிருந்து சகலமும் ஒரே பிரம்மமாகத்தான் தெரிந்தது. பிரம்மத்தில் உசந்த பிரம்மம் தாழ்ந்த பிரம்மம் என்று உண்டா என்ன? எல்லாம் பிரம்மம் என்ற மாதிரியே பரமேசுவரனும் பிரம்மமாகத் தெரிந்தார். அவரை உபசரிக்க வேண்டும், பூஜை பண்ண வேண்டும் என்ற எண்ணமே ஸனத்குமாரருக்குக் கொஞ்சம் கூட உண்டாகவில்லை. அவர் தம்பாட்டுக்கு உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தார்.

பார்வதீ – பரமேசுவராள் ரொம்ப நேரம் நின்று பார்த்தார்கள். ஒரு பலனும் இல்லை. இப்படி மகா ஞானியாக ஒரு பிள்ளை இருப்பதைப் பார்த்து அவர்களுக்குப் பரமப் பிரீதிதான். இருந்தாலும் ஈசுவரன் பொய்க் கோபத்துடன் ‘ஞானி என்ற அகங்காரம்தானே உனக்கு? நாங்கள் லோகத்தின் மாதா பிதாக்கள் வந்திருக்கும்போது அவமதித்துவிட்டாயே. நான் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டார்

ஸனத்குமாரர் பயந்துவிடவில்லை. அலட்சியமாக, “நீர் சாக்ஷாத் மகா கோபிஷ்டரான ருத்திரராக இருந்து சாபம்தான் கொடும். அது ஆத்மாவைப் பாதிக்காது” என்று சொல்லிவிட்டு நிச்சிந்தையாக இருந்தார்.

‘அடடா, எப்பேர்ப்பட்ட உண்மையான ஆத்ம ஞானி!’ என்று ஈசுவரனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.

இன்னும் கொஞ்சம் பரீட்சை பார்த்து, பூராவும் ஞானி தானா என்று தெரிந்துகொள்வோம் என்று நினைத்து, “அப்பா; உன்னுடைய ஞானத்தை நான் ரொம்பவும் மெச்சுகிறேன். என்ன வேண்டுமானாலும் வரம் கேள். தருகிறேன்” என்றார்.

ஸனத்குமாரர் சிரித்தார். ‘உம் வரத்தை நீரே வைத்துக் கொள்ளும். எதை அடைந்தபின் இன்னொன்று வேண்டும் என்ற ஆசை லவலேசமும் இருப்பதில்லையோ, அப்படிப்பட்ட நிறைந்த நிறைவாக இருக்கிற எனக்கு வரத்தினால் ஆக வேண்டியது கடுகத்தனைக்கூட இல்லை’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

அதற்கும் ஒரு படி மேலே போனார். “பரமேசுவரா! நீ பேசுவதிலிருந்து பார்த்தால் நீதான் வரம், சாபம் இதுகளிலெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கிறதென்று நினைப்பதாகத் தெரிகிறது. அப்படியானால் சரி, உனக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேள். தருகிறேன்” என்றார்.

ஸனத்குமாரர் சொன்னதைக் கேட்டு ஈசுவரனுக்குப் பெருமையாக இருந்தது. நம் குழந்தை நம்மிடம் ‘தாட்பூட்’ செய்தால், நமக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும்? சர்வ லோக மகேசுவரனான அவர் ரொம்பவும் தழைந்து தம்மைச் சிறியவராக்கிக் கொண்டு ஸனத்குமாரரிடம் வரம் கேட்டார். இவருடைய ஸ்வப்னத்தை நிஜமாக்க இதுவே வழி என்று நினைத்துக் கேட்டார்.

“அப்பா! இப்பேர்ப்பட்ட மகா ஞானியான நீ பிரம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறாய். பிரம்மா செய்த பாக்கியம் எனக்கும் கிடைக்கும்படியாக வரம் கொடுப்பாய்! இன்னொரு ஜன்மாவில் நீ எனக்குப் புத்திரனாகப் பிறக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

“ஆஹா, உனக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார் ஸனத்குமாரர்.

ஞானம் வருகிறவரையில்தான் இனிப் பிறவி வேண்டாம் என்று அழுவோம். ஞானம் வந்துவிட்டால் எப்போதும் ஆனந்த ஸாகரம்தான். ஜன்மா கின்மா எல்லாம் அதில் ஒரு சின்னக் குமிழி மாதிரிதான். அது வேண்டும் வேண்டாம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாது.

ஸனத்ககுமாரர் சொல்வதெல்லாம் சத்தியமாகிவிடும் அல்லவா? இப்போது ஈசுவரனை மட்டும் பார்த்ததுதான் ‘உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்றார். அம்பாளையும் சேர்த்து, ‘உங்களுக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்று சொல்லவில்லை.

இதையும் ஸனத்குமாரர் யோசித்துப் பார்த்தார்.

ஸனத்குமாரருக்கும் தாம் பார்வதியை நீக்கி பரமேசுவரனுக்கு மட்டும் பிள்ளையாகப் பிறப்பதாகச் சொன்னதிலும் ஒரு நியாயம் தெரிந்தது. அவருக்கு எவரிடமும் நிர்ப்பயம் தான். அதனால் அந்த நியாயத்தை வெளிப்படையாகவே சொன்னார்.

‘கேட்காதவருக்கு ஒன்றைத் தரக்கூடாது என்று சாஸ்திரம். அந்த நியாயப்படி நீதான் என்னிடம் வரம் கேட்டாயே தவிர, பார்வதி கேட்கவில்லை. ஆகவே, உனக்கு மட்டுமே பிள்ளையாகப் பிறப்பேன். நீ மட்டுமாக என்னை எப்படி உற்பவிக்கச் செய்வாயோ, அப்படிச் செய்துகொள்” என்று ஸ்வாமியிடம் சொன்னார்.

இதைக் கேட்டதும் அம்பாளுக்கு ரொம்ப ஏமாற்றமாக, பரம துக்கமாக ஆகிவிட்டது. லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் அவள் குழந்தைகள்தாம் என்றாலும், இது அந்த ஞானாம்பாளுக்கே தெரியும் என்றாலும், இப்படிப்பட்ட ஒரு பிரம்மஞானி மறுபடியும் பிறக்கிறபோது, அவன் நேராகத் தனக்குப் பிள்ளையாகப் பிறக்கவேண்டும் என்று அவளுக்கும் ஆசையிருந்தது.

இவர் சாஸ்திரத்திலிருந்து நியாயம் காட்டினமாதிரி, அவளும் காட்டித் தர்க்கம் பண்ணினாள். “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லியிருக்கிறது. பதி பிரார்த்திப்பதெல்லாம் பத்தினியையும் உத்தேசித்துத்தான். ஆனதால் நான் தனியாக வரம் கேட்க வேண்டும் என்றில்லை. அவர் கேட்டதாலேயே நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்று ரைட் கேட்டாள்.

ஸனத்குமாரர் யோசித்தார். “அம்மா, நீ சொல்வது நியாயம்தான். இருந்தாலும் நான் ஈசுவரனிடமிருந்து மட்டும் உற்பவிப்பது இன்னொரு தினுசில் எனக்குத் திருப்தி தருவதாகத் இருக்கிறது. எல்லாம் பிரம்மம் என்று எனக்குத் தெரிந்தாலும், அதற்கே நீங்கள் இரண்டு பேரும் எனக்கு இத்தனை ‘டைட்டில்’ கொடுத்தாலும், ஒரு விஷயத்தில் எனக்குப் பக்குவம் வரவில்லை. அதாவது, ஸ்திரீ புருஷ சம்பந்தத்தில் நாம் பிறப்பதாவது, கர்ப்பவாசம் செய்து கீழ்முகமாக ஜனிப்பதாவது என்று இன்னமும் எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. பிரம்ம ஞானிக்கு இப்படி இருக்கக் கூடாததுதான். ஆனால் ஏனோ இருக்கிறதே. அதனால் இதைச் சொல்கிறேன். ஆகையால் நீ பெரிய மனசு பண்ணி, உன் பதி மட்டுமே என்னைச் ஜனிக்கச் செய்வதற்கு அநுமதி தர வேண்டும்” என்றார்.

ஆனால் அம்பாளுக்கு மனசு வரவில்லை.

யோசித்துப் பார்த்துக் கடைசியில் ஒரு ‘ராஜி’ க்கு – ‘காம்ப்ரமைஸு’க்கு – வந்தார்கள்.

ஆதியில் பரமேசுவரன் பஸ்மாசுரனுக்கு வரம் தந்திருந்தார். இந்த வர பலத்தால், அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவர் பஸ்பமாகிவிடுவார். வரம் பலிக்கிறதா என்று பரமேசுவரனிடமே பரீட்சை பார்க்க வந்தான் அசுரன். உடனே அவர் அந்தர்த்தானமாகி விட்டார்.

அந்தச் சமயத்தில் அம்பாள் ஏதோ லீலா நிமித்தம் தன்னுடைய ஸர்வக்ஞத்வத்தை மறைத்துக்கொண்டு சாதாரண ஸ்திரீ மாதிரி இருந்தாள். எனவே, திடீரென்று பரமேசுவரனின் சரீரம் மறைந்ததைப் பார்த்ததும் அவளுக்குப் ‘பகீர்’ என்றது. பதிவிரதா ரத்தினமான அவளால் ஈசுவரனின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அப்போதே அப்படியே உருகிவிட்டாள். யதார்த்தத்திலேயே அவளுடைய சரீரம் உருகி ஒரு ஜலாசயமாக (நீர் நிலையாக) ஆகி விட்டது. அதுதான் சரவணப் பொய்கை.

பிறகு பஸ்மாசுரன் மறைந்து ஸ்வாமி சரீரத்துடன் வந்ததும், அம்பாளும் தன் திவ்விய தேகத்தை எடுத்துக் கொண்டாள். இருந்தாலும் அவளுடைய பதிவிரதா தர்மத்துக்கும் பிரேமைக்கும் அடையாளமாக சரவணப் பொய்கையையும் அழியாமலிருக்கும்படியாக அநுக்கிரகத்தாள். சரவணம் சாட்க்ஷாத் இவள் சரீரம்தான். அது இப்போது நினைவுக்கு வந்தது.

அதனால், ஸனத்குமாரர் அடுத்த ஜன்மாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.

இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜஸின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை. அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார். “ஆனானப்பட்ட என்னாலேயே தாங்க முடியாத உக்ர ஜ்வாலையை அந்தச் சின்னப் பொய்கை எப்படித் தாங்கும்?” என்று கங்கை அவரைக் கேட்டாள். அவர், “சரவணம் என்பது சாக்ஷாத் பராசக்தியின் சரீரமாகும். அது ஒன்றாலேயே ஈசுவர தேஜஸை தாங்க முடியும்” என்றார்.

இதன்படியே கங்கை செய்ய, சரவணபவனாக முருகன் அவதரித்தான். பிறகு ஸனத்குமாரர் கண்ட ஸ்வப்னப்படி தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகி, அசுரர்களை ஸமூலம் இருந்த இடம் தெரியாமல் சம்ஹாரம் செய்து சர்வ லோகங்களையும் ரக்ஷித்தான் இந்த சரவணபவன். அவருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் இதுவே ஷடக்ஷரி, ஆறெழுத்து என்று மகாமந்திரமாக இருக்கிறது. சரவணமாக இருக்கும் அம்பாளின் மகிமை!

ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். ‘சகல வேதங்களையும், இதிஹாச புராணங்கள், சகல சாஸ்திரங்கள், தேவ வித்யை, பிரம்மவித்யை, பூத வித்யை, நக்ஷத்திர வித்யை என்று ஒன்று பாக்கியில்லாமல் எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன். ஆனால், இதனாலெல்லாம் வெளி சமாசாரங்கள், மந்திரங்களைத்தான் தெரிந்து கொண்டேனே யொழியத் தன்னைத் தெரிந்து கொள்ளவேயில்லை. ஆத்மாவை அறியாததால் துக்கத்தில்தான் இருக்கிறேன். நீங்கள்தான் என்னைத் தூக்கி அக்கரை சேர்க்க வேண்டும்’ என்றார் நாரதர். ஸனத்குமாரர், “ஆத்மா எங்கேயோ இருக்கிறது என்று தேடிப்போக வேண்டியதில்லை. கீழும் மேலும், முன்னும் பின்னும், வலது பக்கமும் இடது பக்கமும் எல்லாம் ஒரே ஆத்மாதான். அதைப் பற்றியே ஒருத்தன் தியானித்து தியானித்து, அதுவாகவே ஆகிவிட்டால், அப்புறம் அதிலேயே அவன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறான். உண்மையான ஸ்வராஜ்யம் தன்னைத்தானே ஆண்டு கொள்கிற இந்த நிலைதான். இவன்தான் ‘ஸ்வராட்’ – உண்மையான சக்கரவர்த்தி. இந்த உத்தம நிலையை அடைய முதலில் ஆகார சுத்தியில் ஆரம்பிக்க வேண்டும். பிறகு படிப்படியாக சித்தசுத்தி உண்டாகி, மனசு நன்றாக தியானத்தில் நிலைத்து நின்று, எல்லாக் கட்டுக்குள் தெரித்து விழுந்து, ஆத்ம ஸ்வரூபமாகவே இருப்பான்” என்று வழிகாட்டினார். ‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்; அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.

இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முருகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது.

சாந்தோக்ய அவஸ்தா (‘அவஸ்தா’ என்றால் நிலை) தான் ஜெண்டவஸ்தா (Zend Avesta) என்ற பார்ஸி மதக்கிரந்தத் தொகுப்பாயிருக்கிறது. பார்ஸி மதம், முழுக்க முழுக்க அக்னி வழிபாடுதான். ஸெளராஷ்டிர தேசக்காரர் ஒருத்தர் அதை ஸ்தாபித்தவர். ‘ஸெளராஷ்டிரர்’ என்பதே ‘ஜொரொதஸ்த்ரர்’ (Zorothustra) என்றாகியிருக்கிறது. ‘ஸெளரம்’ என்றால் சூரிய சம்பந்தமானது. சூரியன், அக்னி, காயத்ரி மூன்றும் சம்புவின் விசேஷ ரூபங்கள் என்று ஆசார்யாள் ‘பிரசனோத்தர ரத்ன மாலிகை’யில் சொல்கிறார். திருவண்ணாமலையில் அக்னி ஸ்வரூபமாகவே ஈசுவரன் இருக்கிறார். சிவாக்னிதான் முருகன்.

மலையாளத்தில் தீபத்தில் அம்பாளை ஆராதித்து, ‘பகவதி சேவை’ என்கிறார்கள். ஜொலிக்கிற ஞானாக்னியான வேலாயுதத்தை ‘சக்தி சக்தி’ என்றே சொல்கிறோம்.

வேதமே முக்கியமாக அக்னி வழிபாட்டு மதம்தான். ‘அக்னி’ என்ற வார்த்தையோடுதான் வேதம் ஆரம்பிக்கிறது. அக்னி காரியமே ‘ஔபாஸனம்’ என்பது. ‘உபாஸனைக்கு’ இடமாவது ‘ஔபாஸனம்’. உபாஸனை என்றாலே அக்னி காரியம் தான் என்றாகிவிட்டது. ஔபாஸனை நான்கு வர்ணத்துவருக்குமே உண்டானது.

முக்கியமான உபாஸனையான அக்னி காரியத்துக்கு சுப்ரம்மண்யர் அதிதேவதையாக இருப்பதால்தான், அவரை விட்டுவிட்டுப் ‘பஞ்சாயதன பூஜை’ என்பதில் பிள்ளையார், சூரியன், மகாவிஷ்ணு, அம்பாள், ஈசுவரன் ஆகிய ஐவரை மாத்திரம் ஆராதிக்கச் சொல்வதாகத் தோன்றுகிறது. முருகன் நம் மதஸ்தரால் நிச்சயம் ஆராதிக்கப்பட வேண்டியவர் என்பது, பஞ்சாயதனத்தை மறுபடியும் உயிர்ப்பித்த அதே பகவத் பாதாள் ஸ்தாபித்த “ஷண்மத”ங்களில் முருக வழிபாடான “கௌமார”மும் ஒன்று என்பதிலிருந்து உறுதியாகிறது.

தற்காலத்தில் அக்னி காரியம் குறைந்து, மூர்த்தி பூஜை அதிகமாகியிருக்கிறது. சுப்ரம்மண்ய சம்பந்தமான புராணங்கள், ஸ்தோத்திரங்கள், திருப்புகழ் ஆகியன நிறையப் பிரசாரமாகி, பழனி, திருச்செந்தூர், திருத்தணி முதலான க்ஷேத்திரங்களின் உத்ஸவாதிகள், ஜனங்களை ரொம்பவும் வசீகரித்து வருகின்றன. ஆனதால், பஞ்சாயதன பூஜையிலும் சுப்ரம்மண்யரைச் சேர்த்துக் கொண்டுவிடுவது உத்தமமாகும்.

ஆசார்யாள் “ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்” என்று ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். அதில் “மயூராதிரூடம்” என்று ஆரம்பிக்கிற சுலோகத்தில் “மஹீ தேவ தேவம்” என்கிறார். “மஹீதேவர்” என்றால் பிராம்மணர். இவர்களால் பூஜை செய்யப்பட வேண்டியவர் சுப்ரம்மண்யர் என்கிறார்.

“சுப்ரம்மண்யர் தமிழ்க் கடவுள்தான்; வேதத்தில் இல்லாதவர்” என்று சிலர் சொல்வதைக் கேட்டு, வைதிகமானவர்கள் அவரை உபாஸிக்காமல் இருந்துவிடக்கூடாது என்றே இதைச் சொல்கிறேன்.

இதே புஜங்கத்தில், திருச்செந்தூரில் கடலோரத்தில் விளங்கும் ஷண்முகநாதரைப் பார்த்து, “பராசக்தி புத்திரனே! சமுத்திரக் கரையில் நிற்கிற நான் சம்சார சமுத்திரத்தின் அக்கரைக்குப் பக்தர்களைக் கடத்துவிக்கிறேன். அலைகளெல்லாம் சமுத்திரத்தில் மடங்கி விழுந்து, ஒடுங்கிவிடுவதைப்போல், என் சந்நிதிக்கு வருகிறவர்களின் ஆபத்துக்கள் கஷ்டங்கள் எல்லாம் ஒடுங்கியே போகும் என்பதைக் காட்டுகிறாய்” என்று மனசு உருகும்படி பாடியிருக்கிறார். “குகனைத் தவிர இன்னொரு தெய்வம் எனக்குத் தெரியவில்லை. தெரியவே இல்லை” (ந ஜானே ந ஜானே) என்கிறார்.

‘கடலிலே அலைகள் எழும்பி, அதிலேயே லயிக்கிற மாதிரி, சகல ஜீவ ஜகத்தும் பரம சத்தியமாக என்னிடம்தான் தோன்றி, என்னிடமே முடிகின்றன’ என்ற ஞானோபதேசத்தைத் திருச்செந்தூர் முருகன் சொல்லாமல் சொல்கிறார். நாரதருக்கு ஞானோபதேசம் செய்த ஸனத்குமாரரிடம் ஈசுவரனே தழைந்து வரம் கேட்டு, ஞான ஸ்கந்தனாக அவரைப் பெற்று, மறுபடியும் அவரிடம் தழைந்து ஞானோபதேசம் (பிரணவ உபதேசம்) வாங்கிக் கொண்டார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is அக்கினியில் அடங்கிய அவதார புருஷர்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  சகல மார்க்க நிறைவான சரவணபவன்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it