சநாதன தர்மமே சங்கரர் தரும் நெறி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

“நாய்க்குக் கெட்ட பெயர் சூட்டித் தூக்கில் போடு” (Give the dog a bad name and hang it) என்று ஆங்கிலத்தில் ஒரு வசனம் சொல்வார்கள். நாய் நன்றியறிதலும் விசுவாசமும் உள்ள பிராணி. அதைத் தூக்கில் போடுவதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதனால் அதற்கு ஒரு கெட்ட பெயரைக் கொடுத்துவிட்டு, எவனோ தூக்கில் போட்டான் போலிருக்கிறது!

நவீன நாகரிக சீர்திருத்தக்காரர்கள் நமது தர்ம சாஸ்திரங்களின் விஷயத்தில் இதையேதான் செய்கிறார்கள். யுகாந்திரமாக, இந்தத் தேசத்துக்குப் பரம க்ஷேமத்தைச் செய்துவந்த அந்த தர்மங்களால் ஏதேதோ கொடுமைகள் நேர்ந்ததாகச் சொல்லி, கெட்ட பெயரை உண்டாக்கி, அவற்றைத் தூக்கில் போடப் பார்க்கிறார்கள். நம் சனாதன சாஸ்திரங்கள் வரையறை செய்து தந்த சமூகப் பாகுபாடு (வர்ண தர்மம்) கூடாது என்று சிலருக்குத் தோன்றுகிறது. எனவே, தர்ம சாஸ்திரங்களால் வாஸ்தவத்தில் ஏற்படாத கொடுமைகளை இவர்களாகக் கற்பித்துச் சொல்கிறார்கள். ‘நம் தேசத்தில் இன்னின்னார்தான் இன்னின்ன காரியம் செய்யலாம் என்ற அதிகார பேதத்தால் ஜனங்கள் பிரிந்து பிரிந்து போனார்கள். இதனால் ஹிந்து சமூகத்தில் ஒற்றுமை இல்லை; இதனால்தான் நம்மை அன்னிய தேசத்தார் பல முறை ஜயிக்க முடிந்தது’ என்று சொல்கிறார்கள். இது துளிக்கூடச் சரியில்லை.

பொது எதிரி வந்தபோது நம் தேசத்து ராஜாக்களுக்குள் ஒற்றுமையில்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால் ஜனங்களிடையே பரஸ்பரம் பேதம் இருந்து, அவர்கள் எதிரிக்கு உதவி செய்ததாகச் சொல்வதற்குக் கொஞ்சம்கூட சாட்சியம் இல்லை. பேதங்கள் போகவேண்டும் என்று சொல்கிற இப்போதுதான் உண்மையில் பேதமும் துவேஷமும் உக்கிரமாக இருக்கின்றன. இதற்கு மாறாக, சௌஜன்யத்தையே சமீப காலம்வரை கண்கூடாகப் பார்த்தோம். இரண்டு கிராமங்களுக்கிடையில் ஏதோ ஒரு வயல், வரப்பு, வாய்க்கால் அல்லது கோயில் பற்றிப் பாத்தியதை சண்டை வந்தால், அந்தந்த கிராமத்திலும் உள்ள அக்கிரகார ஜனங்களிலிருந்து சேரி மக்கள் வரையில் எல்லோரும் ஒரு கட்சியாகத்தான் நிற்பார்கள்; இந்தக் கிராமத்தில் உள்ள ஒருவன் தன் ஜாதியைச் சேர்ந்த எதிராளிக் கிராமத்தானோடு சேரவே மாட்டான். கிராமத்து விஷயமே இப்படி என்றால் தேசத்தின் விஷயத்தில் சொல்லவே வேண்டாம்.

சின்னச் சின்ன சமூகங்கள் தங்களுக்குள் கட்டுப்பட்டு ஒழுங்காக இருக்க முடிந்தது. அவரவருக்கும் தங்கள் சமூகத்தைப் பற்றிப் பெருமையே இருந்தது. அவரவரும் தங்கள் விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள தனித்தனி நாட்டாண்மை வைத்திருந்தார்கள். ஒருத்தன் தப்புத்தண்டா பண்ணிவிட்டால் நாட்டாண்மைக்காரர்கள் அவனைத் தங்கள் சமூகத்திலிருந்து பிரஷ்டம் செய்து விடுவார்கள். அவரவருக்கும் தங்கள் சமூகத்தில் கௌரவ புத்தியும், மனமார்ந்த பிடிமானமும் இருந்ததால் பிரஷ்டம் செய்யப்படுவதைப் பெரிய அவமானமாக எண்ணினார்கள். இதுவே அவர்களைத் தப்புத் தண்டாவிலிருந்து தடுக்கும் பெரிய சக்தியாக இருந்தது. இப்போது எல்லா சமூகங்களையும் மனமார்ந்த பிடிமானத்தோடு சேர்த்துப் பிடித்து வைக்க எந்த ஸ்தாபனமும் இல்லை. கட்டுக்கடங்காத ஒரே பெரிய அமைப்பில் இது சாத்தியமும் இல்லை. விளைவு: குற்றங்கள் கூச்சமில்லாமல் நடக்கின்றன; போலீஸின் வேலை அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. சாஸ்திரங்களை எதிர்க்கிறவர்கள் இதை எல்லாம் யோசிக்க வேண்டும்.

எதற்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும்; அதுவே நல்லதும்கூட. எதிர்ப்பு இருந்தால்தான் நம் நிறை குறை சரியாக வெளியாகும். நம்மை ரக்ஷித்துக் கொள்வதில் விழிப்பும் இருக்கும். ஆனால் எதிர்ப்பு என்கிற பெயரில் இல்லாத கெடுதல்களைச் சொல்லி நல்லதைத் தூக்கில் போடக்கூடாது.

இல்லாததைச் சொல்வதற்கு இன்னோர் உதாரணம். நெற்றிக்கு இட்டுக் கொள்வது சிலருக்கு நாகரிகமாக இல்லை. நெற்றிக்கு இடுவதை ‘ஜாதி அடையாளம்’ என்று கெட்ட பெயர் தந்து தூக்கில் போடப் பார்க்கிறார்கள். வாஸ்தவத்திலோ, விபூதி பூசுகிறவர்களில் பிராம்மணரிலிருந்து தீண்டாதார்வரை சகல ஜாதியாரும் உள்ளனர். இப்படியே நாமம் போடுபவரிலும் எல்லா ஜாதியாரும் இருக்கிறார்கள். எல்லாம் விஷ்ணு வடிவமான மண்ணில் தோன்றி மண்ணில் முடிவது என்பதற்கு அடையாளமே திருமண். சரீரம் பஸ்மமான பின்னும் சாசுவதமாக இருக்கிற சிவமயமான பரமாத்மாவிற்கு அடையாளம் திருநீறு. இப்படிப்பட்ட தத்துவச் சின்னங்களை கெட்ட பெயர் சூட்டித் தூக்குபோடலாமா?

பழைய தர்மங்களை எல்லாம் முறிவுபடாமல் காப்பாற்றப் பிரயத்தனப்பட வேண்டும் என்று எங்களுக்கு ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் ஆக்ஞை இட்டிருக்கிறார்கள். அவர் பெயரை நான் வைத்துக் கொண்டிருப்பதால்தான் நீங்கள் இங்கு வருகிறீர்கள். அவருடைய ஆக்ஞையை உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது என் கடமை. ஆக்ஞையைக் காரியத்தில் நிறைவேற்றுவதும், நிறைவேற்றாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். சாஸ்திர வழக்கங்கள், லோக க்ஷேமம், ஆத்ம க்ஷேமம் இவற்றைக் கருதியே வகுக்கப்பட்டவை என்பதையாவது உங்களுக்குப் புரிய வைக்கப் பார்க்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is சாஸ்திரமா? மனசாட்சியா?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  சாமானிய தர்மங்கள் அனைவருக்கும் பொதுவானவை
Next