அதம பட்சப் பரிகாரம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

இப்போதிருக்கிற சமூக அமைப்பு முழுதும் மாறுகிறதோ, மாறவில்லையோ—அதை மாற்ற முடியுமோ, முடியாதோ—வேத ரக்ஷணத்தையே ஜீவனமாக வைத்துக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம் என்றைக்கும் இருந்து கொண்டிருக்கும் படியாக நாம் பண்ண வேண்டும். பிராம்மண ஜாதி என்று ஒன்று இருக்க வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. தனியாக இப்படி ஒரு ஜாதி சுயநலத்துக்காக இருந்து ஒன்றும் ஆகவேண்டாம். லோக க்ஷேமத்துக்காகத்தான் அது இருக்க வேண்டியிருக்கிறது. இந்த லோக க்ஷேமத்துக்காகத்தான் வேத சப்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வேத சப்தங்கள் இருந்தால்தான் லோகம் முழுக்க க்ஷேமமாக இருக்கும் என்று நான் சொல்லுகிறேன். அதனால் இனிமேலாவது ஒரு பிராமணன்கூட வேதம் தெரியவில்லை என்று இருகக்கூடாது என்கிறேன். பிராம்மணர்கள் மறுபடி வைதிகத்துக்குத் திரும்புவது ஒன்றுதான் இப்போது ஏற்பட்டிருக்கிற இத்தனை கோளாறுகளும் தீருவதற்கு ஒரே பரிகாரம் என்கிறேன்.

குறைந்தபட்சமாகச் சொல்கிறேன்; இப்போதுள்ள பிராமணர்களுக்கு இதற்கான தைரியமோ, தியாக புத்தியோ இல்லாவிட்டாலும், போனால் போகிறது. உங்களால் வேத அத்யயனத்துக்குத் திரும்ப முடியாவிட்டாலும், உங்கள் குழந்தைகளையாவது அதில் திருப்பியாக வேண்டும் என்கிறேன். அடுத்த தலைமுறையில் வேதம் தெரியாத பிராம்மணன் ஒருத்தன்கூட இருக்கவேகூடாது; அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்கிறேன்.

லௌகிகத்தில் இத்தனை அசௌகரியப்பட்ட பின்னும், “ஐயையோ, நம் குழந்தைகளை வெறும் வைதிகமாக்குவதா?” என்று நீங்கள் நினைத்து, இப்போது நீங்கள் அநுபவிக்குற சௌக்கியம் என்று நினைக்கப்படுகிற வாழ்க்கை முறையிலேயே உங்கள் சந்ததிகளும் இருக்க வேண்டும் என்று நினைத்தால், இன்னும் ஒரு படி இறங்கி வருகிறேன். உத்தியோகத்துக்காக தற்போதைய படிப்பில் உங்கள் குழந்தைகளை விட்டு, அவர்களைப் பிற்பாடு வேதரக்ஷணமே ஜீவன கர்மம் என்றில்லாமல், வேறு தொழிலில் விட்டால்கூடத் தொலைகிறது; இப்படிப் புதுமுறைப் படிப்புப் படிக்கிற காலத்திலேயே, எட்டு வயசுக்குள் உபநயனத்தைச் செய்து, அப்புறம் சுமார், பத்து வருஷம் தினமும் சாயங்காலம் ஒரு மணி வேத அத்யயனம் செய்வதற்கு ஏற்பாடு பண்ணுங்கள். இதையாவது பண்ணுங்கள் என்கிறேன். ஒவ்வொரு பிராமண வீட்டுக் குழந்தைக்கும் இந்த ஏற்பாடு செய்தாக வேண்டும். இப்படி வீட்டுக்கு வீடு சிக்ஷை சொல்லி வைக்க இப்போது வாத்தியாரே கிடைக்க மாட்டார். அந்த லக்ஷணத்தில் நாம் இருக்கிறோம். இதனாலும் மற்ற பொருளாதார சௌகரியங்களை உத்தேசித்தும் பேட்டைக்குப் பேட்டை ஒரு பொது இடத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் வேத வகுப்பு நடத்துங்கள். கூட்டுறவு அடிப்படையில் (co-operative basis) இப்படிச் செய்வதால் வசதியில்லாத ஏழை குழந்தைகளுக்கும்கூட வேத சிக்ஷை பெற சௌகரியம் ஏற்படும். பத்து வருஷங்களில் சிறுகச் சிறுக இப்படிக் கற்பதால் மந்திர பாகம் நிறைய மனப்பாடமாவதோடு மட்டுமின்றி, பிரயோகத்திலும்கூட, அதாவது உபாகர்மா முதலிய வைதிக கர்மாக்களைத் தாங்களே செய்து கொண்டு மற்றவர்களுக்கும் செய்விக்கிறதற்கும்கூடத் தேர்ச்சி உண்டாகிவிடும். இவ்வாறு பிரயோகத்தை ஏன் சேர்த்துக் சொல்கிறேன் என்றால், வைதிகச் சடங்குகளை அவரவர்களே செய்து கொள்ள முடியும் என்றால்தான் எதிர் காலத்தில் புரோஹிதர்கள் என்றே ஒரு தொழிற்காரர்கள் இல்லாவிட்டாலும்கூட சமாளித்துக் கொள்ள முடியும். புரோஹிதம் செய்வதே ஜீவனோபாயம் என்று வருங்காலத்தில் யாராவது பிள்ளைகளை விட்டுவைப்பார்களா என்று கேட்கிற நிலை வந்துவிட்டதால், இந்த ஏற்பாடு அவசியமாகிறது.

இப்படியாக வேத சப்தங்கள் லோகத்தில் என்றும் நிலைத்திருக்கும்படியாகச் செய்வதில் எல்லோரும் இதயப்பூர்வமாக முனைந்து நின்று காரியத்தில் இறங்க வேண்டும். இது இப்போதுள்ள ஜன சமூகம் முழுவதற்கும், பிராம்மண ஜாதிக்கு மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக் கூடிய சகல ஜாதிகளுக்கும், அது மட்டும் அல்ல, சமஸ்த லோகத்திலும் உள்ள அத்தனை கோடி ஜீவராசிகளுக்கும் க்ஷேமம் உண்டாவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய கடமை. தெய்வத்தால் விதிக்கப்பட்ட கடமை. அதுவே தெய்வீகமான கடமையும் (divine duty) ஆகும்.

இப்போதிருப்பவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்பது மட்டுமின்றி, வருங்காலத்தில் வருபவர்களுக்கு நாம் மகா துரோகத்தைச் செய்து பாபத்தைச் சேர்த்துக் கொள்ளாமலிருக்கவும் இந்தக் காரியத்தை அவசியம் செய்தாக வேண்டும். “இந்தக் காலத்திலேயே வேதத்தை எவனும் லக்ஷியம் செய்யவில்லை. வருங்காலத்தில் யார் சீந்தப் போகிறார்கள்? இப்போது இதற்காகப் பெரும்பாடுபட்டு என்ன பிரயோஜனம்” என்று சிலருக்குத் தோன்றலாம். அப்படி எனக்குத் தோன்றவில்லை. சக்கரம் சுற்றிக் கொண்டேயிருக்கும்போது, கீழே போனது மேலே வரத்தான் செய்யும். இப்போது இத்தனை நவநாகரிகம் தலைவிரித்தாடுவதாலேயே இதன் உச்சத்துக்குப் போனபின் கீழே இறங்கித்தான் ஆக வேண்டும். நவீனத்தில் ஏதோ சௌக்கியம் இருப்பதாக நினைத்து இப்போது அதில் போய் விழுந்திருக்கிறோம். போகப் போக இதைப் பூர்ணமாக அநுபவித்துவிட்ட பிறகு இதிலே வாழ்க்கை நிறைவே இல்லை. உண்மையில் அசௌக்கியத்தைத்தான் உண்டாக்கிக் கொண்டோம் என்று தெரிந்துதானாக வேண்டும். அமெரிக்காவின் உதாரணம் ஒன்று போதும். ஜனங்களுக்குத் தாங்கள் நிறைவோடு இல்லை என்று ஒரே சூன்ய உணர்ச்சிதான் வந்திருக்கிறது. நவீன சுகாநுபவத்தால் வருகிற நிம்மதியின்மையைத் தொலைத்துவிட்டு, மறந்து விட்டு இருக்க வேண்டும் என்று தவிக்கிறார்கள். புத்திசாலிகளாக இருக்கிறவர்கள் நம்முடைய வேதாந்தம், யோகம், பஜனை இவைகளுக்கு வருகிறார்கள். மற்றவர்களும் எப்படியாவது இந்த இந்திரிய சுகத்தை மறந்திருக்கிற மட்டும் விசேஷம் என்றே ஏகப்பட்ட மாத்திரைகளை (tranquiliser) வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, அப்படியே தூங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.

இந்த ஸ்திதி நம் தேசத்திலும் வரக்கூடியதுதான். லௌகிக சுகத்தில் இன்னும் ஏதோ பாக்கியிருக்கிறது என்கிற வரைக்கும் அதையும்தான் பார்த்து விடுவோமே என்று ஓடிக் கொண்டிருந்தாலும், அப்புறம் கடைசியில் அநுபவித்து, “அடடா, இதுவும் சாசுவதமாக பிடித்து வைத்துக் கொள்ள முடியாமல் மறைந்துபோகிற சௌக்கியம்தான்” என்று பிரத்தியக்ஷமாகத் தெரிந்துவிட்டபின், நித்திய சுகத்தைத் தருகிற அத்யாத்ம விஷயங்களுக்கு ஜனங்கள் திரும்பத்தான் நினைப்பார்கள். அப்போது அவர்கள், இதுவரை சமூகத்துக்கு நிம்மதியைத் தந்த பழைய வைதிக மார்கத்தையே மறுபடி பூரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற போது, அவர்களுக்கு வேத அத்யயனம் செய்வதற்கே இடமில்லை என்கிற நிலையில், இந்தத் தலைமுறையைச் சேர்த்த நாம் சங்கிலியைக் கத்தரித்துப் போட்டிருந்தால் அது எத்தனை பெரிய துரோகம்?

அதற்கென்ன, அதுதான் இத்தனை புஸ்தகங்கள் இருக்கின்றனவே? வேதமந்திரங்கள், யாகங்கள் முழுவதையும் நம்மவர்களும், மற்ற தேசத்துக் காரர்களும் ஆதியோடந்தம் ஆராய்ச்சி பண்ணி வால்யூம் வால்யூமாக எழுதி வைத்திருக்கிற புஸ்தகங்கள் இருக்கின்றனவே? அவற்றைப் பார்த்து வருங்காலத் தலைமுறைகள் வேதத்தைத் தெரிந்து கொள்ளட்டுமே என்று கேட்கலாம். இதற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும்.

அது தவிர அஸ்திவாரத்திலேயே இன்னொரு பெரிய கேள்வி இருக்கிறது. அதற்கு நான் இதுவரை பதில் சொல்லவில்லை. அதையும் சொல்லியாக வேண்டும். அது என்ன கேள்வி என்றால், “வேத சப்தம் லோகத்தை ரக்ஷிக்கும் என்றால் என்ன அர்த்தம்? ஏதோ மந்திரங்கள் என்றால் அவையெல்லாம் சில ஒலிகள். அவை வார்த்தை வார்த்தையாக இருக்கின்றன. அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் இருக்க வேண்டும். அவை ரொம்பவும் உயர்ந்த அர்த்தமாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும் அந்த அர்த்தத்தைப் படித்தும் தெரிந்து கொண்டு விடலாமே. வேதத்தை எதற்காக ஒரு கூட்டம் வாழ்நாள் முழுவதும் வாயால் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? இப்படிச் சொல்லுவதற்காகவே ஒரு கூட்டம் எப்போதும் இருக்க வேண்டும் என்றால் எதற்காக? வேதத்தின் அர்த்தம் மங்காமல் இருக்க வேண்டும் என்றால், அதற்குப் புஸ்தகங்கள் இருக்கின்றன. புஸ்தகத்திலிருப்பதைக் காப்பாற்றுவதற்கென்றே பாரம்பரியமாக ஒரு ஜாதி இருக்க வேண்டிய அவசியமில்லையே. அவரவரும் புஸ்தகத்தைப் பார்த்துத் தத்துவங்களைத் தெரிந்து கொள்ளலாமே. ஆனால் அர்த்தத்தை மட்டும் சொல்லாமல் வேத சப்தம் இதுவரைக்கும் வந்திருக்கிற கிரமத்தில் மாறாமல் இருக்க வேண்டும். சப்தத்தை வாயால் சொல்லி ரட்சிக்க ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்று சொல்வது ஏன்?” என்பதுதான். இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is பொருப்பாள் யார் ? பரிகாரம் என்ன ?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலலாக வேண்டும்
Next