காரடையார் நோன்பின் மகிமை உ லகில் உள்ள எல்லா நாடுகளிலும், ஆன்மீகத்தில் சிறந்த நாடாக, பலம் மிகுந்த நாடாக இந்தியா கருதப்படுவது ஏன் என்று சிந்தித்தால் நமக்குக் கிடைக்

காரடையார் நோன்பின் மகிமை

லகில் உள்ள எல்லா நாடுகளிலும், ஆன்மீகத்தில் சிறந்த நாடாக, பலம் மிகுந்த நாடாக இந்தியா கருதப்படுவது ஏன் என்று சிந்தித்தால் நமக்குக் கிடைக்கும் பதில், பாரத தேசம் ஒரு புண்ணிய பூமி, கர்ம பூமி பல ஆலயங்கள் நிறைந்த நாடு என்று கூறுவார்கள். அது மட்டுமல்ல:நமது நாட்டுப் பெண்கள் இல்லங்களிலும், ஆலயங்களிலும் ஆற்றிய ஆன்மீகப் பணியும் ஒரு காரணம். நமது நாட்டு வரலாற்றில்

ஆன்மீக பக்கத்தை புரட்டினால் ஆண்கள் புரிந்த ஆன்மீகச் செயல்கள், மற்றும் அதிசயச் செயல்கள் போல சற்றும் குறையாமல், ஏன் சற்று அதிகமாகவே பெண்கள் ஆற்றியுள்ளனர். அப்படி ஒரு ஆன்மீகச் சாதனை புரிந்தவர்களில் சாவித்திரி தேவியும் ஒருவர். அவர் புரிந்த சாதனையே இன்று கொண்டாடப்படும் காரடையார் நோன்பிற்கு காரணம். அதனுடைய வரலாற்றை நாம் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

மத்திர தேசம் என்ற நாட்டை ஆண்டு வந்த அசுவபதி என்ற ராஜாவிற்கு குழந்தை இல்லை என்ற கவலை. ஒரு நாள் நாரதர் அங்கு வந்த போது, அவரிடம் தன் குறையை சொல்ல, நாரதர் சாவித்திரி தேவியை நினைத்து பூஜை, ஹோமங்கள் செய்தால் வழி பிறக்கும் என்று சொல்லி மறைந்தார். ராஜாவும் அவர் சொன்னபடியே செய்தார். அந்த ஹோமம் செய்த அக்னி குண்டத்திலிருந்து, ஜெகத்ஜோதியாய் தேவியவள் வந்தாள். பிரம்மதேவன் அனுப்பியதால் இங்கு வந்தேன். இப்போது உனக்கு மகன் இல்லை. இனிமேல் உண்டாகும். c செய்த தவத்திற்கு பலனாக நானே கன்னிகையாய் வந்து அவதரிப்பேன் என்று சாவித்திரி தேவி சொல்லி மறைந்தாள்.

சிறிது நாட்களுக்கப் பிறகு தேவி அவள் சொன்னபடியே அரசனின் பட்ட மகிஷியான மாளவியின் வயிற்றில் சாவித்திரி தேவி பிறந்தாள். அவள் வளர்ந்து பருவ மங்கையானதும் அவளுக்கு திருமணம் செய்ய நினைத்தார்கள். அவளுடைய அழகிற்கு ஈடாக எந்த அரச குமாரனும் இல்லை, என்பதால் அசுவபதி ராஜா, தன் மகளிடம்''நீயே உன் தோழிமாரோடு சென்று உனக்கேற்றவனைக் தேர்ந்தெடுத்து வா''என்று சொல்லி அனுப்பினார்.

சாவித்திரி தேவியும் தேசமெங்கும் ஆராய்ந்தும் கிடைக்காமல் இருந்தபோது, நாட்டை இழந்து காட்டில் வசிக்கும் சாலுவ தேசத்து அதிபதியின் மகனை (சத்தியவான்) வனத்தில் கண்டாள். தன் தந்தையிடம் வந்து தன் விருப்பத்தைத் தெரிவித்தாள். அப்போது அங்கு வந்த நாரதர் அதைக் கேட்டுக் கலங்கினார். காரணம் என்ன என்று ராஜா கேட்டதற்கு நாரதர் சொன்னார். '' அந்த சத்தியவான் ஒரு வருடத்தில் மரணம் அடைந்து விடுவான் '' என்று. ராஜா தன் மகளிடம் '' c வேறு ஒருவரை வரித்து '' வா என்று சொன்னார். ஆனால் சாவித்திரியோ மனதில் ஒருவரை வரித்த பின்பு-வேறு ஒருவரைத் தேடுவது பதிவிரதம் கெட்டுவிடும். அவரையே தான் நான் மணப்பேன் என்று உறுதியாகக் கூறிவிட்டாள்.

நாரதர் அரசனிடம், சாவித்திரி அவள் மன திடத்தாலே எமனையும் வெற்றி பெறுவாள் என்று சொல்ல, அரசரும் அவள் விருப்பப் படியே காட்டிற்கு சென்று சத்தியவானிடம் கன்னிகா தானம் செய்து விட்டு வந்தார். காட்டில் சாவித்திரி பதிவிரதா தர்மத்திற்கு ஒரு குறையும் இல்லாமல் கணவனோடு கானகத்தில் வாழ்ந்து வந்தாள். கணவனுடைய மரண தேதியை அறிந்து இருந்ததால், கடுந்தவம் செய்தாள், கௌரி நோன்பு இருந்தாள். காமாக்ஷி தேவியை நோக்கி கடுந்தவம் இருந்தாள்.அந்த பங்குனி முதல் நாள் வந்தது. கடும் நோன்பு இருந்து உணவு இல்லாமல் இருந்தாள். காட்டில் விறகு கொண்டு வர கணவனுடன் சென்றாள். விறகு பிளக்கும் போது கணவன் உயிர் துறந்தான். சாவித்திரி தன் கணவனின் உயிரை மீட்க சபதம் கொண்டாள். கணவனுக்கு ஈமைக்கிரியைகள் செய்ய உறவினர்கள் வந்தபோது செய்ய அவள் அனுமதிக்கவில்லை. சாவித்திரி தனது கணவனின் உடலுடன் காட்டில் தனியாக அவன் உயிரை மீட்க காமாட்சி தேவியை நோக்கி பூஜித்தாள். பூஜையை தொடர்ந்து நடுவே எமன் தோன்றி ''உன்னுடைய பூஜைகள் அனைத்தும் வீண். உயிர் பிரிந்தது பிரிந்ததுதான்''என்று சொல்லியும் அவள் தன் விரதத்தை கைவிடவில்லை. காட்டில் கிடைத்த பூக்களையும், பழங்களையும் வைத்து பூஜித்தாள். அம்மைக்கு அமுது படைக்க விரும்பினாள். காடுகளில் ஏதும் கிடைக்காததால் அங்கே கிடைத்த களிமண்னை அடையாகவும், கள்ளிப் பாலை வெண்ணெயாகவும் பாவித்து பூஜை செய்தாள்.

எமதர்மன், சத்தியவான் உயிரை எடுத்துவிட்டுச் சென்று கொண்டிருந்தார். சாவித்திரி விடாமல் பின் தொடர்ந்து சென்றாள். எமன் அவளைப் பார்த்து ''என்னை ஏன் தொடருகிறாய்?''என்று கேட்க ''என் கணவன் உயிர் வேண்டும்''என்றாள். வேறு எதை வேண்டுமானாலும் கேள் தருகிறேன், என்ற எமனிடம் ''எனக்கு நூறு பிள்ளைகள் வேண்டும்''என்று வரம் கேட்க, ''தந்தேன் அம்மா உனக்கு''என்றார். தொடர்ந்து அவரைப் பின் தொடர்ந்து உங்கள் வரம் ''பலிக்காமல் போகலாமா!கணவனில்லாமல் எப்படி உங்கள் வரம் எனக்கு பலிதமாகும்?தரும தேவனுடைய வாக்கு பொய்யாகலாமா?''என்றாள். எமதேவனுக்கு அப்போது தான் சாவித்திரி தேவியின் மதி நுட்பம் புரிந்தது. சாவித்திரியின் பூஜைகளையும், மதி நுட்பத்தையும் மெச்சி உள்ளங்குளிர்ந்து, கணவனுடைய உயிரைப் தந்ததோடு, இழந்த ராஜ்ஜியத்தையும் அளித்தார்.

இவ்வாறு காலனையே கதி கலங்க வைத்து போராடி வெற்றி பெற்றதற்கு, சாவித்திரியம்மன் செய்த கௌரி நோன்பு தான் காரணமாகும். அப்படி சாவித்திரி செய்த பூஜையே இன்று நாம் அனைவரும் செய்யும் காரடையார் நோன்பு ஆகும். மாசி முடிந்து பங்குனி தொடங்கும் சமயம் அன்றைய தினம் சுமங்கலிகள் பூஜை செய்தால், அவர்களுடைய கணவரைப் பிரியாமல், தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள் என்பதே அந்த நோன்பின் மகத்துவம்.

காட்டில் சாவித்திரி படைத்த மண் அடையை வெல்ல அடையாகவும், கள்ளிப்பாலை வெண்ணெயாகவும் நாம் அன்னைக்கு படைக்கிறோம். பூஜையின்போது ''உருகாத வெண்ணெயும், ஒரடையும் நான் உனக்கு தருவேன். கணவனை பிரியாத வரம் வேண்டும்''என்று சுமங்கலிகள் அனைவரும் காரடையார் நோன்பு எனும் பூஜையை செய்தால் சாவித்திரி போல திடமான மனதையும், கொண்ட கொள்கையில் உறுதியும் காமாட்சி அன்னையின் அருளையும் பெறுவார்கள் என்பது உறுதி.