“பரமாசார்யர்” : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘தேசிக’ போடும் வழக்கம் சைவ மடாலயங்களிலும் இருக்கிறது. ஆதீனகர்த்தர்களை ‘தேசிக பரமாசார்ய ஸ்வாமிகள்’ என்று சொல்கிறார்கள். நம் அத்வைத ஸம்ப்ரதாயத்தில் ‘பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய’ என்று மடாதிபதியைச் சொல்வதுபோல ‘தேசிக பரமாச்சார்ய’ என்பது பல சைவ மடங்களில் வழக்கமாயிருக்கிறது. ‘பரமாசார்யார்’ என்று ஒரு மரியாதையின் பேரில் குருஸ்தானத்திலிலுள்ள எந்த ஸ்வாமியாரையும் சொல்லலாம் தான். நம்முடைய நேர் ஆசார்யருக்கு ஆசார்யராக இருப்பவரையும் பரமாசார்யார் என்று சொல்லலாம். ஆனால் இங்கேகூட ‘பரமாசார்யார்’ என்றில்லாமல் ‘பரமகுரு’ என்று சொல்வதே இந்த [காஞ்சி] மடத்து ஸம்ப்ரதாயம். குரு அவருடைய குருவான பரம குரு, குருவுக்கும் குருவான பரமேஷ்டி குரு, பரமேஷ்டி குருவுக்கும் குருவான பராபர குரு என்று ‘குரு’ ஸம்பந்தப்படுத்தி சொல்வதுதான் இங்கே ஸம்ப்ரதாயம். ஆகையால் எப்போதாவது இந்த மடத்து ஸ்வாமிகளைப் பரமாசார்யார் என்று சொல்லலாமென்றாலும், அதையே முக்யமான பேர் மாதிரிச் சொல்வது அஸாம்ப்ரதாயிகமாக [ஸ்ம்பிரதாயத்திற்கு மாறாக]த் தோன்றுகிறது. நீண்ட நாள் வழக்கத்தில் ‘பரமாசார்ய ஸ்வாமிகள்’ என்று சைவ மட ஆதீனகர்த்தர்களையே இந்தத் தமிழ் தேசத்தில் சொல்லி வந்திருப்பதால், ஒரு ஸ்மார்த்த மடாதிபதிகளை அப்படியே முக்யமாகச் சொல்வது ‘டெக்னிக’லாக ஸரியில்லை என்று தோன்றுகிறது. ‘ஹிஸ் எக்ஸெலன்ஸி’, ‘ஹிஸ் ஹைனஸ்’, ‘ஆனரபிள் ஜஸ்டிஸ்’ ஆகியவை இன்னின்னாருக்குத்தான் போடுவது என்று குறிப்பிட்டு வைத்திருக்கிற மாதிரி மடாதிபதிகளில் எந்த ஸ்ம்ப்ரதாயஸ்தரை எப்படிச் சொல்ல வேண்டும் என்று பார்த்துப் பண்ணினால் தேவலையோ என்பதால் சொன்னேன். மடாதிபதியைப் பொறுத்த மட்டில் அவர் ஞானியாயிருந்தால் எந்தப் பெயரில் சொன்னாலும் ஸரி, ஒரு பெயரும் சொல்லாவிட்டாலும் ஸரி என்றுதான் இருக்கவேண்டும். ஆனாலும் சிஷ்யர்களான ஜன ஸமூஹத்தைப் பொறுத்தமட்டில் இன்னொரு ஸம்ப்ரதாயத்திற்கு நெடுங்கால வழக்காக இருந்து வரும் பெயரில் தங்களுடைய ஆசார்ய பீடத்திலிருப்பவரைச் சொல்லக் கூடாது என்று தெரிந்திருப்பது நல்லது என்பதற்காகச் சொன்னது!*

‘பரமாசார்ய’வோடு ‘தேசிக’வும் ஆதீனகர்த்தர்களின் பிருதமாகச் சேர்ந்திருக்கிறது. அதைத்தான் முக்யமாகச் சொல்ல வந்தேன்.


* சீடர்கள் மரபு பேணவேண்டும் என்ற ஸ்ரீசரணர்களின் உளக்குறிப்பறிந்த பக்தர்கள் அவர்களை ‘பரமாசார்யார்’ எனக் கூறாமல், ‘மஹா பெரியவாள் (பெரியவர்கள்)’ அல்லது ‘மஹா ஸ்வாமிகள்’ என்றே கூறுகிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ' தேசிக ' பதத்தின் சிறப்புக்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  தேசிக ரூபத்தில் தேவி
Next