இரு ச்லோகங்களின் ஸாரம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இதுவரை நான் சொன்னது, ஒருவேளை சொல்லாமல் விட்டுப் போனது, எல்லாவற்றுக்கும் சேர்த்து [‘சரீரம் த்வம்”, “மநஸ்த்வம்” என்ற] இந்த இரண்டு ச்லோகங்களின் gist (ஸாராம்சம்) என்னவென்றால்: அம்பாள்தான் ஈச்வரனின் சரீரமாயிருக்கிறாள். சரீரம் என்றால் ஸ்தூலமானது மட்டுமில்லை. பரம ஸூக்ஷ்மமான மனஸும் அதில் சேர்ந்ததுதான். ஒரு ச்லோகம் ரொம்ப ஸ்தூலமாக “சரீரம் த்வம்” என்று ஆரம்பிக்கிறது. இன்னொன்று “மனஸ் தவம்” என்று அதி ஸூக்ஷ்மத்தில் ஆரம்பிக்கிறது. இதை நம்முடைய மனஸ் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அல்லது ஆகாசாதி பஞ்சபூதங்களுக்கும் காரணமாக அவற்றைக் கல்பித்த மஹத் என்ற மஹா மனஸ் என்றும் வைத்துக் கொள்ளலாம். அந்த மூலமான மனஸிலிருந்து ஸூக்ஷ்மமான ஆகாசம் உண்டாகிறது. அது மேலும் மேலும் ஸ்தூலமாகிக் காற்று, அக்னி, ஜலம், மண் எல்லாம் வந்தன. “இதெல்லாமும் நீதான்” என்கிறார். “நீ இல்லாமல் வேறு வஸ்து எதுவுமே இல்லை” என்கிறார்: த்வயி பரிணதாயாம் நஹி பரம் . “சம்பு என்ற உயிருக்கு நீ சரீரம் என்று சொன்னாலும், உயிர்-உடல் என்ற பேதமில்லாமல் ஒன்றாக இருந்ததும் நீதான். நீயேதான் விச்வம் என்ற சரீரமாகப் பரிணமித்தாய் – த்வம் ஏவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விச்வவபுஷா“.

இங்கே ராமாநுஜ ஸித்தாந்தம் மாதிரி உயிர்-உடம்பு என்ற வித்யாஸம், அதாவது த்வைதம், த்வனித்தாலும் “சிதானந்தாகாரம்” என்று முடிப்பதால் எல்லாம் அத்வைதமாகி விடுகிறது. ஸச்சிதானந்தத்தில் என்னதான் ஸத்தைவிட்டுச் சிதானந்தங்களைப்பிரிகிற மாதிரிக் காட்டினாலும் மூன்றும் சேர்ந்து ஒன்றுதான். ஒரு தித்திப்பு பக்ஷணத்துக்கு ரூபம் இருக்கிறது, வாஸனை இருக்கிறது, ருசி இருக்கிறது என்றால் இந்த மூன்றில் ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியுமா? சிதானந்தம் என்று ஞான மூலமாயும், ஆனந்த மூலமாயும் சொல்லப்படும் அம்பாள் ஸத்தாகவும் இருக்கிற அத்வைதந்தான். மூலமான பரமஞானமும், பரமானந்தமும் ஸத் என்ற ஆதாரமில்லாமல் எப்படியிருக்க முடியும்? இந்த ஞானத்தையும் ஆனந்தத்தையும் வெளிப்பட அநுபவிக்கவே, அல்லது இந்த ஞான ஆனந்த அநுபவங்களை ஜீவ லோகக் குழந்தைகளும் பெறுவதற்காக வெளியிலே காட்டுவதற்கே, ஒன்றாக இருப்பவள் இரண்டு மாதிரி சிவயுவதி என்ற பா வத்தைத் தாங்கி சிவன் என்ற பதியோடு சேர்ந்திருக்கிறாள் என்கலாம். ‘சிவயுவதி பா வேன’ என்பதால் இது பாவனைதான். வாஸ்தவத்தில் சிவனும் அவளும் ஒன்றுதான். விச்வ சரீரமும் அதன் உயிரான அம்பாளும் ஒன்றுதான். அந்த அம்பாளும், அவளையே சரீரம் மாதிரி ஆக்கிக் கொண்டிருக்கிற ஸத்தின் மூர்த்தியான அந்த சிவனும் ஒன்றுதான். அத்வைதம்தான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is சேஷ-சேஷீ   : உடைமையும் உடைமையாளரும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  சக்ரங்களில் சிவ-சக்தி
Next