நந்தனார் : உண்மையை வென்ற கற்பனை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

நந்தனாரைப் பற்றிச் சொன்னதால், கதை கற்பனை என்று எழுதுவதே எப்படி அதாரிடி மாதிரி ஆகி, அதுவே நிஜமென்று நம்பும்படி ஏற்பட்டுவிடுகிறது என்பதற்கும் சான்று காட்டிவிடுகிறேன். உங்களில் நந்தனார் கதை தெரிந்த எல்லாரும் அவர் ஒரு ஈவிரக்கமில்லாத ப்ராம்மணப் பண்ணையாரிடம் படாத பாடு பட்டவர் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் வாஸ்தவத்தில் அறுபத்து மூவர் சரித்திரங்களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற நந்தனார் கதையில் அந்த வேதியர் பாத்திரமே கிடையாது. பெரிய புராணத்தில் ‘திருநாளைப் போவார் நாயனார் புராணம்’ என்ற தலைப்பில் வருகிற நந்தனாருடைய கதையைப் பார்த்தால் தெரியும். அவர் எந்தப் பண்ணையாரிடமும் சேவகம் பண்ணியவரில்லை. தம் தம் குலாசாரப்படி தொழில் செய்யும் எல்லா ஜாதிக்காரர்களுக்குமே அந்தக் காலத்தில் ராஜமான்யமாக நிலம் சாஸனம் செய்யப்பட்டிருக்கும். நன்றாக எல்லை கட்டிய அந்த நிலத்துக்குத் “துடவை” என்று பெயர். அப்படிப்பட்ட “பறைத் துடவை”யை நந்தனாரும் பெற்றுத் தம்முடைய ஸொந்த நிலத்தில் பயிரிட்டு வந்ததாகத்தான் பெரிய புராணத்தில் வருகிறது. தீண்டாதவர்கள்தான் வாத்தியங்களுக்கான தோல், வார், தந்தி, மாட்டு வயிற்றிலிருந்து எடுக்கும் கோரோசனை முதலியவற்றில் வியாபாரம் பண்ணுவது. இவரோ பிறந்ததிலிருந்து மறந்தும் சிவ சிந்தனை தவிர வேறே இல்லாதவர் என்று சேக்கிழார் சொல்லியிருக்கிறார். அதனால் நிலத்திலிருந்து கிடைப்பதை மட்டும் ஜீவனோபாயமாக வைத்துக் கொண்டு தோல், வார், தந்தி எல்லாம் தம்முடைய அன்புக் காணிக்கையாகவே சிவன் கோயில்களில் வாசிக்கும் பேரிகை, வீணை முதலானவற்றுக்காகக் கொடுத்தாராம். ஸ்வாமியின் கந்தோபசாரத்துக்கே கோரோசனையும் இலவசமாகக் கொடுப்பாராம். இப்படி க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகப் போய்க்கொண்டே அவர் சிவத்தொண்டு செய்துவந்ததாகத்தான் மூல நூலான பெரிய புராணத்திலிருக்கிறதே தவிர ஒரு கொடுங்கோல் ப்ராம்மணனிடம் அடிமைப்பட்டு ஒரே இடத்தில் கட்டிப் போட்டாற்போலக் கிடந்தாரென்று இல்லை.

கொடுங்கோல் ப்ராமணனை ஸ்ருஷ்டி பண்ணியதும் ஒரு ப்ராம்மணர்தான் – போன நூற்றாண்டில் இருந்த கோபாலகிருஷ்ண பாரதி என்கிற பெரியவர். நம்முடைய மதிப்பு மரியாதைக்குரிய உரிய பெரியவர். சிவ பக்தியில் ஊறியவர். கேட்கிற எவருடைய நெஞ்சத்தையும் அந்த பக்தியில் கரைக்கும்படியான உசந்த பாட்டுகள் கவனம் செய்தவர். கடைசிவரை ப்ரம்மச்சாரியாகவே வாழ்ந்து மஹா சிவ ராத்ரி புண்யகாலத்தில் ஸ்வாமியோடு கலந்து விட்டவர். அவர் ஏழை எளியவர்களிடம் ரொம்பவும் இளகின ஸ்வபாவத்துடன் இருந்திருக்கிறார். அதோடு நல்ல நாடக உணர்ச்சி, உணர்ச்சியைப் பாட்டாக்கித் தரும் ஸாமர்த்யம் எல்லாமும் படைத்தவராக இருந்திருக்கிறார். அவர் நாளில் அந்தச் சீமையில் மிராஸ் பண்ணும் ப்ராம்மணர்களில் ஒருத்தர் இரண்டு பேர் உழவு செய்யும் ஆள்காரர்களை ரொம்பவும் கொடுமைப் படுத்தியதையும், அப்படியும் அந்த எளிய ஜனங்கள் எதிர்த்துச் சண்டை போடாமல், ‘இப்படித்தான் நம் ஜன்மா’ என்று ஸஹித்துக்கொண்டு இருந்து வந்ததையும் அவர் பார்த்தார். ஏற்கெனவே அவருக்கு எந்த ஜாதியாரானாலும் பக்திச் செல்வத்தைக் குறைவறப் பெற்று ஈச்வரனுடனேயே இரண்டறக் கலக்கும் உன்னத நிலைவரை போய்விட முடியும் என்று காட்டும் ‘திருநாளைப்போவார்’ சரித்ரத்தில் தனியான ஈடுபாடு இருந்திருக்கிறது. அந்த நினைப்பும் அவர் நேரில் கண்ட நிலவரமும் அவருடைய நாடகத் திறமையில் ஒன்றாகச் சேர்ந்து வேதியர் பாத்திரத்தை ஸ்ருஷ்டிக்கப் பண்ணிவிட்டது. ‘பறைத் துடவை’ பெற்றிருந்த நந்தனாரை அந்த வேதியரின் கூலியாளாக ஆக்கி அவரிடம் கொடுமைப்படுவதாகக் கதையை அழகாக ஜோடித்து மேலே மேலே ஸீன்களைக் கற்பனைப் பண்ணி ‘நந்தன் சரித்ரக் கீர்த்தனை’ யாகப் பாட வைத்து விட்டது. அப்புறம் கதாகாலக்ஷேபக்காரர்கள், காந்தீய தேசாபிமானிகள் எல்லாரும் அதை விசேஷமாக ப்ராபல்யப் படுத்தியத்தில் மூலமான பெரிய புராணத்துத் திருநாளைப்போவார் கதையே எடுபட்டுப்போய் இதுதான் நந்தனார் கதை என்றே ஆகியிருக்கிறது. இது “பார்ப்பான் கொடுங்கோல்” என்று வசைமாரி பாடுகிறவர்கள், “இதோ பாருங்கள், ஒரு ஐயரே கொடுக்கும் ப்ரூஃப்” எனறு காட்டுவதில் கொண்டு விட்டிருக்கிறது!

அந்தக் காலத்தில் மஹா வித்வான் மீநாக்ஷிஸுந்தரம் பிள்ளை தமிழறிஞர்களில் முக்கியமான ஸ்தானம் வஹித்தவர். அவர் ப்ராம்மணரில்லை. ஆனாலும் குறுகிய ஜாதி நோக்கில் பார்க்காமல் நடுநிலையாகப் பார்த்தார். பார்த்து, ‘என்ன தான் கல்பனா சக்தி. எளிய ஜனங்களிடம் அநுதாபம் இருந்தாலும் இப்படி ஒரு மூலக் கதையை — சைவத் திருமுறைகளிலேயே முடிவானதாக வைத்துக் கொண்டாடப்படும் ப்ரமாண நூலான பெரிய புராணக் கதையை — மாற்றியிருப்பது சரியில்லை எனறு முடிவு பண்ணிவிட்டார். விஷயம் தெரியாமல் அவரிடமே சிறப்புப் பாயிரம் வாங்கவேண்டுமென்று கோபாலக்ருஷ்ண பாரதி போனார். வீடுதேடி வந்த பிராம்மணரிடம் தப்பெடுக்க வேண்டாமென்று நினைத்து, “நீங்கள் இதை முக்யமாக ஸங்கீத நாடக பாணியில் அமைத்திருக்கிறீர்கள். எனக்கோ ஸங்கீதம் பிடிக்காது. தமிழ்ப் புலமை, சிவ பக்தி ஆகியவற்றோடு நல்ல ஸங்கீத வித்வத்தும் உள்ள எவரிடமாவது நீங்கள் பாயிரம் வாங்குவதுதான் பொருத்தம்” என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஆனாலும் தம்மிடம் தமிழ் கற்றுக் கொண்டிருந்த (உ.வே) ஸ்வாமிநாதையர் போன்றவர்களிடம் மனஸில் இருந்ததைச் சொன்னார். அதனால்தான் இப்போது உங்களுக்கு நான் இந்தக் கதை சொல்ல முடிகிறது.

அப்போதைக்கு பாரதி திரும்பிப் போனாலும் மறுபடியும் வந்தார். “பண்டித-பாமர ரஞ்ஜகமாக நீங்கள் எழுதியிருக்கிற இந்த நூல் தானே ப்ரஸித்தி அடையும். என் பாயிரம் அவச்யமேயில்லை” என்று சொல்லிப் பிள்ளை அவரை அப்போதும் திருப்பியனுப்பி விட்டார்.

இப்படி பாரதி பல தடவை நடையாக நடந்து பிறகு ஒரு தடவை நடுமத்யான வேளையில் வந்தார். அப்போது வீட்டுக்குள்ளே பிள்ளை ச்ரம பரிஹாரம் பண்ணிக் கொண்டிருக்கிறாரென்று தெரிந்தது. அவர் எழுந்திருந்து வருகிறபோது வரட்டும் என்று வாசல் திண்ணையில் பாரதி உட்கார்ந்து விட்டார். உட்கார்ந்தவர் தன்னையறியாமல் நந்தன் சரித்ர கீர்த்தனங்கள் பாட ஆரம்பித்தார். உள்ளே அரைத் தூக்கமாயிருந்த பிள்ளையின் காதில் பக்தி பாவம், ராக பாவம் இரண்டும் பூர்ணமாக இருந்த அந்தப் பாட்டுக்கள் விழுந்ததும் அவரும் அதில் ஆகர்ஷணமாகி விட்டார். அந்தப் பாட்டுகளில் இலக்கணப் பிழைகள் — ‘வழு’ என்பது — இருப்பதாகவும் ஏற்கெனவே அவருக்கு இரண்டாவது குறை. இப்போது, பாடியவருடைய பக்தி ப்ரவாஹத்தில் அந்த வழுவெல்லாங்கூட அடித்துக்கொண்டு போய்விட்டாற்போலத் தோன்றிற்று. அந்த ப்ரவாஹத்தைத் தடைப்படுத்த வேண்டாமென்றே, அவர் தொடர்ந்து தூங்குகிற மாதிரி இருந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

“வருகலாமமோ?” என்ற பாட்டுக்கு பாரதி வந்தார்.

ஏற்கெனவே அந்த வார்த்தையே இலக்கண சுத்தமில்லை என்று பிள்ளை கண்டித்திருக்கிறார். “வருகை-போகை என்று உண்டு; வருதல்-போதல் என்றும் உண்டு; அவை இலக்கண சுத்தமான ப்ரயோகங்கள். இரண்டுமில்லாமல் இதென்ன ‘வருகல்’? ஆரம்ப வார்த்தையே ஸரியாயில்லையே! ‘வரலாமோ?’ என்றாலே ஸரியாயிருக்குமே!” என்று சொல்லியிருக்கிறாராம்.

ஆனால் இப்போது, நந்தனார் தூரத்திலிருந்து சிதம்பரம் கோவிலை தர்சனம் பண்ணி, ஒரு பக்கம் பக்தியிலே தாபமான தாபம். இன்னொரு பக்கம் தன்னுடைய பிறவியை நினைத்துத் தயக்கமான தயக்கத்தோடு, கண்ணுக்குத் தெரியாத நடராஜாவை மனக் கண்ணால் பிடித்து நிறுத்தி வைத்து, கண்ணுக்குத் தெரியும் அந்த ஸந்நிதானத்துக்குத் தானும் வரலாமா, வரலாமா என்று என்றைக்கோ உருகி உருகிக் கேட்டதை, அதே தாபத்தோடு பாரதி உருக்கமாகப் பாடிக் கேட்டவுடன் மீநாக்ஷிஸுந்தரம் பிள்ளைக்கு இலக்கணப்பிழை, திருமுறையை மாற்றிய பிழை எல்லாம் மறந்து போய் விட்டதாம். ‘இப்பேர்ப்பட்ட பக்த சிகாமணி நாம் திரும்பத் திரும்ப விரட்டியடித்தும் பாயிரத்துக்காக ‘வருகலாமோ?’ என்று நம்மிடமே கேட்காமல் கேட்பதுபோல் பண்ணி விட்டோமே!’ என்று ரொம்பவும் பச்சாத்தாபப் பட்டுக் கொண்டு வாசலுக்கு ஓடி வந்தாராம். ‘வருகலாமோ’ அவரையும் வரவழைத்து விட்டது! அவரிடமிருந்து பாயிரத்தையும் வரவழைத்து விட்டது!

“தங்களை நடையாக நடக்க வைத்ததை மனஸில் வைத்துக் கொள்ளக்கூடாது. மற்ற விஷயங்கள் எப்படியானாலும் உள்ளம் உருகி சிவபக்தி பண்ணுபவரென்று இன்று தெரிந்து கொண்டேன்; மற்றவர்கள் உள்ளமும் பக்தியால் உருகும்படிப் பண்ணும் சக்தி பெற்றவர் என்றும் தெரிந்து கொண்டேன். அப்படிப்பட்டவரின் விருப்பத்தை நான் மறுக்கக்கூடாது. சிறப்புப் பாயிரம் தருகிறேன்” என்று சொல்லி அப்படியே கொடுத்தாராம்.

ஆனாலும் மற்றவர்களெல்லாம் மூலக்கதைக்கு பாரதி புதுரூபம் பிரமாதமாகக் கொடுத்துவிட்டாரென்றே முக்யமாய்ப் புகழ்ந்தார்களென்றால், பிள்ளையோ அந்த அம்ஸத்தைப் பற்றி பாராட்டாகவோ, மாற்று அபிப்ராயமாகவோ எதுவும் சொல்லாமல்தான் அந்தப் பாயிரத்தை ஆக்கியிருக்கிறார். ஸ்வாமிநாதய்யரின் “கோபாலக்ருஷ்ண பாரதியார் சரித்ர”த்தில் பாயிரப் பாட்டு போட்டிருக்கிறது.

பிள்ளை முதலில் நினைத்ததில் — முடிவுவரை அதை மாற்றிக் கொள்ளத்தான் இல்லை; அப்படி நினைத்தத்தில் — ஸாரம் இருக்கிறது என்று இப்போது நன்றாகத் தெரிகிறது. தற்காலத்தில் நந்தனார் கதை என்றால் முதலில் ஸினிமா, ட்ராமா எதையாவது பார்த்துத் தெரிந்து கொள்ளத்தான் போவார்கள். இதெல்லாமும் பாரதி பாடியதையே இன்னமும் ஸ்ட்ராங்காகச் சொல்வதாகத்தான் இருக்கும். காலக்ஷேபத்திற்குப் போனாலும் ஏறக்குறைய இப்படியே இருக்கும். இலக்கியமாகப் பார்த்து தெரிந்த கொள்ள வேண்டுமென்று நினைப்பவர்களிலும் அநேகமாக எல்லோரும் நந்தன் சரித்திரக் கீர்த்தனையைத்தான் பார்ப்பார்களே தவிர [பெரிய புராணத்திலுள்ள] ‘திருநாளைப் போவார் புராண’த்தை யாராவது புரட்டுவார்களா என்பதே ஸந்தேஹம். திருநாளைப்போவார்தான் நந்தனார் என்பதுகூடத் தெரிந்திருக்குமா என்று யோசனையாயிருக்கிறது. நான் ‘டெஸ்ட்’ பண்ணியே பார்த்திருக்கிறேன். இங்கே வருகிறவர்களில் சின்ன வயஸுக்காரர்கள், வயஸானவர்கள், வெவ்வேறு ஜாதிக்காரர்கள் என்று பலதரப்பட்டவர்களிடம் விளையாட்டாக நந்தனார் பற்றிப் பேச்சுக் கொடுத்துப் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து, ஸகலமான பேரும் வேதியரிடம் நந்தனார் கஷ்டப்பட்ட கதையைத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்; அதையே நிஜமாக நடந்த கதையாக நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டிருக்கிறேன்.

சரித்ரமாகவோ, ‘அதாரிடி’யில் அதற்குக் குறைவில்லாததாக மதிக்கப்படும் ஜீவித சரித்ர புராணமாகவோ இருக்கிற ஒன்றைப் பிற்கால ஆராய்ச்சியாளர் எனப்பட்டவர்கள், அல்லது இலக்கிய கர்த்தர்கள் தங்களுடைய அபிப்பிராயப்படி ரூபம் பண்ணினால் எப்படி மூலமான உண்மைகளே அடிபட்டுப் போய்விடுகின்றன என்று காட்ட வந்தேன். ‘பொயடிக் லைஸென்ஸுக்கு [கவி சுதந்திரத்திற்கு] ஏதாவது வரம்பு இருந்தால் தேவலையோ என்று தோன்றுகிறது ……

நாவலரின் புஸ்தகத்தில் நாயன்மார்களை ஆதிசைவர், சுத்த வைதிக ப்ராமணர், மாமாத்திர ப்ராமணர், க்ஷத்ரியர், வைசியர், வேளாளர், புலையர் என்று வரிசைப்படுத்திப் பட்டியல் கொடுத்திருக்கிறது என்பதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். சுத்த வைதிக வ்ருத்தி போய்விட்டாலும் க்ஷத்ரியர்களுக்கு மேலே ஸ்தானம் கொடுக்கும்படியாக மாமாத்திர ப்ராமணர்கள் இருந்திருப்பது அதிலுள்ள ‘ஆர்டரி’லிருந்து தெரிகிறதென்று காட்ட வந்தேன். அந்த வகுப்பைச் சேர்ந்தவர்தான் பூர்வாச்ரமத்தில் பரஞ்ஜோதியாயிருந்து பிறகு சிறுத்தொண்டரானவர்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is மாமாத்திர பரஞ்ஜோதி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  படைத்தலைவர் பக்தித் தொண்டரானார்
Next