Page load depends on your network speed. Thank you for your patience.

Loading...

நாமங்கள் குறைவாக வரும் நூல் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

வேடிக்கையாக, ஆச்சர்யமாக ஒன்று: டைட்டிலில் த்ரிபுரஸுந்தரியின் பேரை நேராகச் சொல்லாத இந்தப் புதுமை, ஸ்தோத்ரத்தின் முழு டெக்ஸ்டிலும் தொடர்ந்து வந்திருக்கிறது! நூறு ச்லோகத்திலும் ஒரு இடத்தில்கூட த்ரிபுரஸுந்தரி என்றோ வெறும் ஸுந்தரி என்றோகூட வரவேயில்லை! இந்த ரூபபேதத்துக்கே இன்னம் சில பேர்களும் உண்டு. சிவனுடைய அநேக ரூப பேதங்களில் ஒன்றான நடராஜாவுக்கே ஸபாபதி, சிதம்பரநாதன், சித்ஸபேசன், தாண்டவராயன் என்றெல்லாம் பேர்கள் இருக்கிற மாதிரி த்ரிபுரஸுந்தரிக்கு லலிதாம்பா, ராஜராஜேச்வரி, காமாக்ஷி, காமேச்வரி என்றெல்லாம் பேர்கள் உண்டு. அந்தப் பேர்களிலேயும் எதுவுமே ‘ஸெளந்தர்ய லஹரி’யில் ஒரு இடத்தில்கூட வரவில்லை!

அடுத்தாற்போல் ‘சிவாநந்த லஹரி’யை எடுத்துக் கொண்டால் ஈச்வரனுக்கே என்று இருக்கப்பட்ட சிவ, பரமசிவ, ஸதாசிவ, சம்பு, சங்கர, பசுபதி, மஹாதேவ, கிரிச, ஸாம்ப முதலான நாமாக்களில் எதுவாவது ஒன்று ஒவ்வொரு ச்லோகத்திலும் வந்திருக்கும். அப்படி ஒன்றில் இல்லாவிட்டால்கூட ஈடுகட்டுகிற மாதிரி இன்னொன்றில் இரண்டு, மூன்று நாமாக்கள் வந்துவிடும். ரொம்ப ஜாஸ்தி வருவது சம்பு. ‘சம்போ’, ‘சம்போ’ என்று கூப்பிட்டு அநேக ச்லோகங்கள் பண்ணியிருக்கிறார். அடுத்தபடி ஜாஸ்தி வருவது பசுபதி, சிவ முதலிய நாமாக்கள். சிவனுக்கென்று ப்ரத்யேகமாக இல்லாமல் எந்த தெய்வத்துக்கும் பெயர் மாதிரிச் சொல்லும் ஸ்வாமி, விபு முதலான பதங்களும் கொஞ்சங் கொஞ்சம் வருகின்றன.

ஆனால் வித்யாஸமாக ‘ஸெளந்தர்ய லஹரி’யில் ஸுந்தரி வித்யைக்கு அதி தேவதையாக இருக்கப்பட்டவளின் ப்ரத்யேக நாமாக்கள் எதுவும் வரவில்லை! அம்பாளின் மற்ற ரூபபேதங்களுக்கு இருக்கப்பட்ட நாமாக்களும் ரொம்பவும் கொஞ்சமாகவே வருகின்றன. இருப்பதற்குள் ஜாஸ்தி வருவது கிரிஸுதா, ஹிமகிரிஸுதா என்ற பேர்கள். சிவா, பவானி, உமா, ஸதி, பார்வதி, சண்டி முதலான பேர்கள் ஒன்று இரண்டு இடங்களில் வருகிறது. அம்பாள், அதாவது பரமேச்வரனுடன் அபின்னமாக இருக்கப்பட்ட பராசக்தியின் பிரத்யேகப் பெயர் என்று சொல்ல முடியாமல் எந்த ஸ்த்ரீ தெய்வத்திற்கும் சொல்கிற ஜனனி, மாதா, அம்பா, தேவி என்ற பேர்கள் ஓரளவுக்கு வருகின்றனவென்றாலும் அதெல்லாமும் கொஞ்சம்தான். ப்ரத்யேகப் பெயர், பொதுப்பெயர் எதுவுமே இல்லாமல் தான் ரொம்ப ச்லோகங்கள் இருக்கின்றன.

நாம ரஸம் அதிகம் வந்துவிட்டால் கவிதா ரஸத்தை அடித்துக்கொண்டு போய்விடுமென்றே, இந்த ஸ்தோத்ரம் கவிதா ரஸ ப்ரதானமாகவே இருக்கணுமென்று அம்பாள் ஸங்கல்பமாயிருந்து, நாமாக்களுக்கு ரொம்ப இடம் கொடுக்காமல் ஆசார்யாளை பாடப் பண்ணினாளோ என்னவோ?

‘சிவ: சக்த்யா‘ என்று [நூறு ச்லோகங்களில் முதலாவது] ஆரம்பிக்கிறபோது அம்பாளின் பரம தாத்பர்ய நாமாவான ‘சக்தி’ என்பது வந்துவிடுகிறது. சைவம், வைஷ்ணவம் மாதிரி அம்பாள் மதத்துக்கு ‘சாக்தம்’ என்றே பேர். ‘சக்தியினுடையது’ என்றே அதற்கு அர்த்தம். ப்ரஹ்மத்தின் சக்திக்குத்தான், அதாவது ‘பவ’ருக்கு, ‘எனர்ஜி’க்குத்தான் அம்பாள், அம்பாள் என்று பேர் சொல்கிறோமாதலால் சக்தி என்பதுதான் அவளுடைய ஸாரபூதமான நாமா. அந்தப் பேர் ஆரம்ப ச்லோகத்திலேயே வந்துவிடுகிறது. அப்புறம் வரவில்லை*1.

ஒரு ஸ்த்ரீக்கு மூன்று பருவங்களில் மூன்று விதமான உறவுகள் முக்கியமாயிருக்கின்றன. முதலில் ஒரு தாயார்-தகப்பனாருக்குப் பெண்ணாக இருக்கிறாள். அப்புறம் பதிக்குப் பத்னி. அதற்கும் அப்புறம் குழந்தைகளுக்குத் தாயார். நம் ஸ்தோத்ரத்தில் ரொம்பவும் கொஞ்சமாகவே நாமாக்கள் வந்தாலும் இந்த மூன்றையும் விட்டுவிடவில்லை. அம்பாளை ஸாக்ஷாத் பரமேச்வர பத்னியாகவும், நம் அத்தனை பேருக்கும் தாயாராகவும் அதில் சொல்லியிருப்பது அவ்வளவு விசேஷமில்லை. தேவிபரமான எந்த ஸ்துதியிலும், எந்த பாஷையிலுள்ளதானாலும், இந்த இரண்டை நிறையச் சொல்லியிருக்கும். ஆனால் ஸெளந்தர்ய லஹரியில்தான், அதன் அநேகப் புதுமைகளில் ஒன்றாக, இந்த இரண்டைவிட அவளைப் புத்ரியாகச் சொல்லும் நாமாக்களே அதிகம் வருகிறது!

பர்வதராஜன் புத்ரி என்பதால் கிரிஸுதா, ஹிமகிரிஸுதா, சைலதனயா, தரணிதரகன்யா, பார்வதி என்றெல்லாம் பேர்கள் வருகின்றன. தான் பிறந்த மலை வம்சத்துக்கே அவள் வெற்றிக்கொடி என்ற அர்த்தத்தில் ‘நகபதி பதாகா’, ‘துஹிநகிரி வம்ச த்வஜபடி’ என்றெல்லாங் கூடப் பேர்கள் வருகின்றன. ஸர்வலோக ஜனனி, வாஸ்தவத்தில் அந்த ஹிமவானுக்கும் தாயாரானவள், தானும் குழந்தையாக வந்த அதிசயத்தை நினைத்து, அம்மாவைக் குழந்தையாக்கி அநுபவிக்கிற பாவத்தில் [ஆசார்யாள்] இந்தப் பேர்களை அதிகம் சொன்னார் போலிருக்கிறது.

தெய்வத்தைப் பல பாவங்களில் வழிபடுவதில் நாம் குழந்தையாகவும் தெய்வம் தாயாகவோ, அல்லது தந்தையாகவோ இருப்பதற்கு ‘அபத்ய’ பாவம் என்று பேர். ஞானஸம்பந்தர் அப்படிப் பாடினவர்தான். இன்னொரு கோடியில் தெய்வத்தைக் குழந்தையாக்கி நாம் தாயாக, தந்தையாகக் கொஞ்சுவதற்கு வாத்ஸல்ய பாவம் என்று பெயர். பெரியாழ்வார் அப்படி நிறையப் பாடியிருக்கிறார். த்ரிபுரஸுந்தரி குழந்தையம்பாள் இல்லை. தேவர்கள் பண்ணிய யாகத்தில் ஞானாக்னியான சிதக்னியில் தோன்றுகிறபோதே கல்யாண வயஸு அடைந்த யுவதியாக அவதரித்தவள் த்ரிபுரஸுந்தரி. பாலாதான் குழந்தை அம்பாள். அதனால் ஸ்தோத்ரத்தின் ‘டெக்ஸ்டி’ல் அம்பாளை பத்னியாக, மாதாவாக, மஹாசக்தியாக எல்லாந்தான் வர்ணித்திருக்கிறது. இருந்தாலும் வாத்ஸல்யம் விட்டுப்போகப் படாதென்றே அவள் பேரைச் சொல்கிற இடங்களிலாவது, இருப்பதற்குள் நிறைய புத்ரி என்று சொல்லணுமென்றே இப்படிப் பேர்கள் போட்டார் போலிருக்கிறது! ஆசார்யாளே பண்ணினது அந்த பாகம்தான் என்று பல பேர் நினைக்கிற உத்தராங்கம் [பிற்பகுதி] முதல் ச்லோகத்தில் கேசாதி பாத வர்ணனை ஆரம்பிக்கிறபோதே ”ஹிமகிரிஸுதே!” [”பனி மலை மகளே!”] என்று குழந்தையாகத்தான் கூப்பிடுகிறார். அடுத்ததில் ”சிகுர நிகுரும்பம் தவ சிவே” என்று சிவ பத்னியாகச் சொல்லியிருக்கிறார். ஸ்தோத்ரத்தை முடிக்கும்போது கடைசி ச்லோகத்தில் தாயாராக ”ஜனனி” என்று கூப்பிட்டு ”உன்னுடையதேயான வாக்காலான இந்த ஸ்துதி உனக்கே அர்ப்பணம் — த்வதீயாபிர்-வாக்பிஸ்-தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்” என்கிறார். புத்ரியாய் ஆரம்பித்துப் பத்னியாகக் கொண்டுபோய்த் தாயாராக முடித்திருக்கிறார்.

தாயாராகச் சொல்லும்போது ‘அம்பா’, ‘மாதா’ என்று ஏதோ ஒன்று, இரண்டு இடத்தில் சொல்லியிருந்தாலும் ”ஜனனி”, ”ஜனனி” என்றே நிறையச் சொல்லியிருக்கிறார். ஸகலமும் ஜனித்தது அவளிடம்தான், ஸகல ஜனங்களும் அவள் குழந்தைகளே என்பது மனஸில் பதிந்து நிற்பதற்காகவே ‘ஜனனி’ பதப்ரயோகம் பண்ணியிருக்கலாம்.

பூர்வார்த்தமான [முதற் பாதியான] ஆனந்த லஹரியின் கடைசி ச்லோகக் கடைசி வரியில் ஈச்வரனையும் அம்பாளையும் சேர்த்துச் சொல்கிறபோதும் ”ஜனக-ஜனனி” என்றே சொல்லியிருக்கிறது. மாதா-பிதா என்பதைவிட ஜனக-ஜனனிக்கு விசேஷம் இருக்கிறது. என்னவென்றால், மாதா, பிதா என்கிற வார்த்தைகளுக்கு ‘ரூட்’ வெவ்வேறாக இருக்கிறது. அதனால் அர்த்தங்களும் வேறாய் இருக்கின்றன. ‘மாதா’ என்றால் ‘தனக்குள்ளே அடக்கிக் கொண்டிருப்பவள்’. ‘பிதா’ என்றால் ‘பரிபாலிக்கிறவர்’. ஜனக, ஜனனி என்ற வார்த்தைகள்தான் ஒரே ‘ரூட்’டில் பிறந்தவை. ‘பிறப்பிப்பது’ என்று அர்த்தம் கொடுப்பதான ‘ஜன்’ என்ற ஒரே ‘ரூட்’டில் அந்த இரண்டு வார்த்தைகளும் உண்டாயிருக்கின்றன…

இந்த ஸ்தோத்ரத்தில் அம்பாளுடைய பெயர்கள் ரொம்பவும் குறைச்சலாகவே வருகின்றனவென்று சொல்லிக் கொண்டிருந்தேன். இது திவ்ய நாமாக்களிடம் எத்தனை கௌரவமும் பயபக்தியும் காட்ட வேண்டுமென்று நமக்குத் தெரிவிப்பதாகவுமிருக்கிறது. ஏதோ கிளிஞ்சலை வாரியிறைக்கிற மாதிரி நாமாக்களை அள்ளி வீசிவிடாமல் ரத்னத்தைக் கொஞ்சூண்டு கண்ணில் காட்டிவிட்டு ஜாக்ரதைப்படுத்தி விடுவதுபோல்தான் நாம ரத்னத்தையும் அதன் மதிப்பறிந்து லேசாகக் காட்டி ரக்ஷிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறதாக வைத்துக் கொள்ளலாம். பதியின் பெயரை, குருவின் பெயரை சொல்வார்களா? அந்த மாதிரி! ‘ஆனால் இது அம்மான்னா? அம்மாவிடம் ஸ்வாதீனம் எடுத்துக் கொள்ளலாமே?’ என்றால், ‘அம்மா என்று எத்தனை அன்பும் உரிமையும் எடுத்துக்கொண்டாலும் மரியாதை கெட்டுப் போகப்படாது; இந்த அம்மா ப்ரேமை மயமான அம்மா மட்டுமில்லை. மஹாசக்தி படைத்து ஸர்வலோகங்களையும் அடக்கியாள்கிற ராஜராஜேச்வரியாயும் இருக்கிறவள் – ஸஹஸ்ர நாமத்திலேயே ‘ஸ்ரீ மாதா’ என்றவுடனேயே அடுத்த நாமாவாக ‘ஸ்ரீ மஹாராஜ்ஞி’ [மஹாராணி], ‘ஸிம்ஹாஸனேச்வரி’ என்று அவளுடைய அதிகார தோரணையைச் சொல்லும் பேர்கள்தானே வருகின்றன? அந்த ராஜ மரியாதை கெட்டுப் போகப்படாது’ என்று காட்டவே அதிகமாகப் பேர் சொல்லவில்லை என்று தோன்றுகிறது. ரொம்பவும் அத்யாவசியம் தவிர ராணி சொல்வதில்லை; ‘ஹெர் மெஜஸ்டி’ என்றுதான் சொல்கிறது!*2


*1அம்பிகையை அழைப்பதாக இல்லாமல் அவளது மந்திர அக்ஷரங்களைக் குறிப்பிடுவதான 32-ம் ச்லோகத்தில் ‘சக்தி’ என்ற பதம் வருகிறது.

*2தேவி மந்திரங்களில் மிகப் புகழ் பெற்றவைகளிலும் அவளது நாமம் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அனைத்து மக்களையும் கவரும் தலைப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  'ஆனந்த லஹரி'பற்றி
Next